ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள பன்னாரி மாரியம்மன் கோயிலில் தீமிதி நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கோயிலில் ஒரு முறை அந்தியூர் செல்வராசு என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தீ மிதித்த போது கலைஞர் காட்டுமிராண்டித்தனம் என்று அதைத் துணிவோடு சுட்டிக் காட்டினார். நேற்று முன் தினம் நடந்த அதே கோயில் ‘தீமிதி’யில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எல்.பி. தர்மலிங்கம், பக்தி பரவசத்தோடு தீமிதித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர், முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. கே.கே.காளியப்பன், காவல் துறை அதிகாரி சோனல் மிஸ்ரா (இவர்தான் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய அதிகாரி), அறநிலையத் துறை ஆணையர் பத்மநாபன் என்று அரசு அதிகாரிகளும் தீ மிதித்துள்ளனர். தீ மிதிப்பது எனும் மூட நம்பிக்கைக்கு உரமூட்டி வளர்ப்பதுதான் அரசு அதிகாரிகளின் வேலையா? பெரியார் ஆட்சி நடப்பதாகக் கூறிக் கொண்டு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரே, தீக்குழியில் இறங்கியுள்ளாரே?

அந்தியூர் செல்வராசைக் கண்டிப்பது போல் - கலைஞர் இவரையும் கண்டிப்பாரா? விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். மதச்சார்பற்ற அரசின் அதிகாரிகளோ, மூட நம்பிக்கையின் தூதுவர்களாக செயல்படுகிறார்கள்! வெட்கக்கேடு!

‘தலித்’ ஓதுவாருக்கு அவமதிப்பு

அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது - சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள அகத்தீசுவரன் கோயில். இந்தக் கோயிலில் தேவாரம் பாடும் ஓதுவாராக - தலித் சமூகத்தைச் சார்ந்த கதிர்வேல் நியமிக்கப்பட்டார். அரசு இசைக் கல்லூரியில் முறையாக தேவாரம் பயின்று, தமிழில் முதுகலைப் பட்டம், கருநாடக இசையில் சான்றிதழ் பெற்றவர் கதிர்வேலு. ஓதுவார் பணியில் முதல் முதலாக தமிழ்நாட்டுக் கோயிலில் நியமனம் பெற்றுள்ள தலித் இவர் தான்.

முதலில் இவரின் சாதி தெரியாத பார்ப்பன அர்ச்சகர்கள் மரியாதையுடன் நடத்தினர். சாதி தெரிந்த பிறகு அவமதிப்புக்குள்ளாக்கப்படுகிறார். அறநிலையத் துறையும் பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறதாம். கர்ப்பகிரகத்துக்கு வெளியே நின்று, ஒரு தலித் தேவாரம் பாடுவதையே பொறுக்காத பார்ப்பன அர்ச்சகர்கள், கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிப்பார்களா? அறநிலையத்துறை இதில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் கேள்வி.

கொள்ளைக்கு துணைப் போவதா?

தமிழ்நாட்டில் மொத்தம் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அரசு கவுன்சிலிங் மூலம் நிரப்பப் படுகின்றன. இந்த தனியார் கல்லூரிகளில் அரசு கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் நீதிபதி இராமன் குழு, ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக கட்டணத்தை நிர்ணயித்தது. இதுவே மிக அதிகமான கட்டணம்.

ஆனால் தனியார் கல்லூரிகளோ, ரூ.4 லட்சம் கட்டினால் தான் அனுமதி என்று கூறி விட்டன. எப்படியோ முதல் வருடம் கடன் வாங்கி, பெற்றோர்கள் ரூ.4 லட்சம் கட்டணத்தை செலுத்தினர். இரண்டா மாண்டு கட்டணம் கட்ட முடியவில்லை. அரசுக்கு பெற்றோர்கள் மனுப்போட்டும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து தனியார் கல்லூரி நிறுவனங்கள், உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டன. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு, நீதிமன்றத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு தமிழ்நாடு அரசு துணை போவது சமூகநீதியா? அன்றாடம் தமிழக அரசுக்கு ‘சமூக நீதியில்’ அறிவுரையும் வாழ்த்துரையும் வழங்கிக் கொண் டிருக்கும் ‘வீரமணியார்கள்’ இந்தக் கொள்ளையைப் பற்றி மவுனம் சாதிப்பது ஏன்? அவர்களும், இப்படி கல்வி வியாபாரம் நடத்துவதாலா?

சிப்பாய் கலகம் ‘சுதந்திர’ப் போராட்டமா?

பிரிட்டிஷாரை எதிர்த்து 1857களில் நடந்த சிப்பாய் கலகம், முதல் சுதந்திரப் போராட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. அது மதக் கலவரமே தவிர, சுதந்திரப் போராட்டமல்ல என்றார் பெரியார். இப்போது மத்திய அரசு முதல் சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படும், அந்தப் போராட்டத்தின் 150வது ஆண்டை கோலாகலமாகக் கொண்டாட பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக முதன்முதலில் குறிப் பிட்டவர் காரல் மார்க்ஸ் தான். இந்தியா வில் இந்தப் போராட்டத்தின் உண்மை யான பின்னணி பற்றி துல்லியமாக அறியும் வாய்ப்பு அவருக்கு இல்லை.

1674 ஆம் ஆண்டிலிருந்தே தென்ன கத்தில் ஆங்காங்கே கலவரங்கள், போராட்டங்கள் வெடித்திருந்தாலும், அவை எல்லாமுமே இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டம் அல்ல. அண்மையில் ‘தென்னிந்திய வரலாற்று காங்கிரஸ்’ டில்லியில் கூடியது. அதில் பிரபலமான 6 சரித்திர ஆய்வாளர்கள் பங்கேற்று, 1857-லும், அதற்கு முன்பும் நடந்த கலவரங்கள், சுதந்திரத்துக்கான போராட்டமல்ல என்று அறிவித்துள்ளனர்.

அப்போது, இந்தியா என்ற நாடே உருவாகவில்லை. பல்வேறு நாடுகளாக, பிரிந்திருந்தது. எனவே அப்போது நடந்த கலவரங்களை இந்தியாவுக்கான சுதந்திரப் போராட்டம் என்று கூற முடியாது.

ஒவ்வொரு கலவரத்துக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று அந்த சரித்திர ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இதையே பெரியார் கூறியபோது, பார்ப்பனர்கள் - ‘தேச விரோதி’ என்றார்கள். இப்போது வரலாற்று ஆசிரியர்களே கூறும்போது, வாய்மூடிக் கிடக்கிறார்கள். இது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை ‘இந்து’ ஞாயிறு இதழில் (மார்ச் 25) வெளி வந்திருக்கிறது.