இந்திய மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் வழங்கப்பட்ட ராஜபக்சே பட காலண்டர் எரிப்புப் போராட்டம் 19.1.2011 புதன் காலை 11 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இந்தியாவில் 23 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டைக்கு அருகிலுள்ள அமராவதி நகரிலுள்ள சைனிக் பள்ளியும் ஒன்று. தமிழ்நாட்டிலுள்ள ஒரே ஒரு சைனிக் பள்ளி இதுதான். இந்தப் பள்ளியில் பயிலும் 650 மாணவர்களுக்கு அமராவதி சைனிக் பள்ளியின் சார்பாக அச்சிட்ட மாத காலண்டரும், ஒட்டு மொத்த சைனிக் பள்ளிகளின் சொசைட் டியால் இராணுவ அமைச்சகத்தின் மூலம் அச்சிட்ட மாதக் காலண்டரும் வழங்கப்பட்டு இருக்கிறது. அமராவதி பள்ளியில் அச்சிட்ட காலண்டரில் அந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளுடன் கூடிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்திய இராணுவ அமைச்ச கத்தின் சார்பாக வழங்கப்பட்ட நாட்காட்டி யில் ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு பள்ளிகள் வீதம் 12 மாதங்களுக்கு 24 பள்ளிகளில் கடந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது.

அதில் ஏப்ரல் மாதத்தில் அசாம் மாநிலத்தில்ராஜ்பாரா அருகிலுள்ள கோல்பாரா பள்ளியின் சிறப்பாக, அப் பள்ளி யின் மாணவர் ஒருவன் இனவெறியன் ராஜபக்சேவுடன் கை குலுக்குவதுபோன்ற படத்தை அச்சிட்டு உள்ளனர். மேலும் Everything is possible (எல்லாம் சாத்தியம்) என்று அப் பள்ளிக்கான சொற்றொடரை அச்சிட்டு உள்ளனர். எல்லாம் சாத்தியம் என்பது அப்பள்ளிக்கான குறிச் சொல்லாக இருந்தாலும், தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேவே அந்த வாக்கியத்திற்கு உதாரணமாக காட்டி இருந்த விதம் தமிழர்களை கொல்வது சாத்தியம். தமிழர்களை அழிப்பது வீரச் செயல். தமிழர்களின் அழிவு உதாரணத்திற்கு உரியது என்பதைக் காட்டுவதாக இருந்தது. மீண்டும் மீண்டும் கொலைகாரன் ராஜ பக்சேவை இந்திய காங்கிரஸ் அரசு அங்கீகரித்துக் கொண்டே இருக்கிறது - சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டே இருக்கிறது என்பதை உலகுக்கு அம்பலப்படுத்தும் வகையில் கடந்த 13.01.2011 அன்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அதில், “தமிழர்களை கொன்று குவித்ததை இந்தியா அங்கீகரித்து பாராட்டி மகிழ்வதையே இது காட்டுகிறது. இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்ட சோக நிகழ்வி லிருந்து உலகத் தமிழர்கள் மீள முடியாத நிலையில் ராஜ பக்சே படத்தைப் போட்டு தமிழக மாணவர்களின் வீடுகளில் வைக்கச் சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்து இருந்தால் கைது செய் கிறார்கள். ஆனால், உலக நாடுகளால் சர்வதேசப் போர் குற்றவாளி என ஒதுக்கப்பட்ட ராஜபக்சே படத்தை இந்திய இராணுவமே அச்சிட்டு வழங்குவது எந்த வகையில் நியாயம்? “சைனிக் பள்ளி மாணவர்களுக்கு கொடுத்த காலண்டரை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் ராஜபக்சே படத்துடன் கூடிய காலண்டர்களை 19.1.2011 அன்று உடுமலைபேட்டையில் பெரியார் திராவிடர் கழகம் எரிக்கும்” என்று கழகப் பொதுச்செயலாளர்  கு. இராம கிருட்டிணன் அறிவித்தார்.

கழகத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டை அமராவதி நகர் சைனிக் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பகுதியே காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது அவர்களுடைய கடுமையான சோதனையைக் கடந்தே எந்த வாகனங்களும் செல்லும் நிலை ஏற்பட்டது.

மத்திய காங்கிரஸ் அரசின் - சோனியா அரசின் தமிழின விரோதப் போக்கை வெளிப்படுத்த கழகம் போராட் டத்திற்கு தயாரானது. ஆதரவு சக்திகளை அணி திரட்டியது.  அறிவித்தபடி, 19.1.2011 புதன் கிழமை காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கியது. காலை முதலே உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு காவல் துறை யினர் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். திருப்பூர், கோவை மாவட்ட கழகத் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமை வகித்தார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன், பா.ம.க. நகரச் செயலாளர் காந்தி செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் முருகன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் பாபு இராசேந்திர பிரசாத், ஆதித் தமிழர் பேரவை ஒன்றியச் செயலாளர் ஈழவேந்தன், புரட்சிப் புலிகள் மாவட்டச் செயலாளர் ப. முருகானந்தம், கழக மாவட்டத் தலைவர் சு. துரைசாமி ஆகியோர் முன்னிலையில் தொடங்கிய போராட் டத்தில்  கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன் ஆகியோர் பேசினர். 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உணர்ச்சிப்பூர்வமாக முழக்கமிட்டு இந்திய அரசின் தமிழின விரோத போக்கை அம்பலப்படுத்தினர். போராட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கு. இராம கிருட்டிணன் பேசும் போது:

“இந்திய இராணுவம் நடத்துகின்ற சைனிக் பள்ளியில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சர்வதேசப் போர்க் குற்றவாளி ராஜபக்சேவின் படத்தைப் போட்டு மாத நாட்காட்டியை வெளியிட்டு இருக்கின்றார்கள். தமிழ் மாணவர்களின் வீட்டிலே வைக்கச் சொல்லி இருக்கின்றார்கள். எனவே, பெரியார் திராவிடர் கழகம், ஒத்த அமைப்பு களுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். பல்வேறு கட்சிகளின் சார்பாக உடுமலைப்பேட்டையில் அந்தக் காலண்டரை எரிக்கும் போராட்டத்தை நடத்துகின் றோம். அந்தக் காலண்டரை திரும்பப் பெறாவிட்டால் அடுத்தகட்டமாக இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துவோம்! தலைநகர் டெல்லியிலும் நடத்துவோம்!” என்று கூறினார். பிறகு சைனிக் பள்ளியின் காலண்டரை தீ வைத்து உயரமாக தூக்கிப் பிடித்துக் கொண்டார். அதைப் பறிக்க காவல் துறையினர் முயன்று கொண்டிருந்தனர்.

அப்போது கழகத் தோழர்கள் நாட்காட்டி நகல்களுக்கு தீ வைத்தனர். அதனைத் தடுக்க காவல் துறையினர் தோழர்களிடம் இருந்து காலண்டர் நகலைப் பறிக்க முயன்ற போது காவல்துறைக்கும் கழகத் தோழர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்தப் பகுதியே பரபரப்பாக இருந்தது. காவல்துறை கழகத் தோழர் ஒருவரிடமிருந்து தீ வைத்த காலண்டரை பறிப்பதற்குள் வேறொரு தோழர் காலண்டர் நகலை பற்ற வைத்து விடுவார். இப்படியாக 15 நிமிடங்களுக்கு மேலாக சைனிக் பள்ளியின் ராஜபக்சே காலண்டர் ஆங்காங்கே எரிந்து கொண்டே இருந்தது.

இறுதியில் கழகத் தோழர்களையும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த தோழர்களையும் கைது செய்தனர். 192 தோழர்கள் கைதாகி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். மண்டபத்தில் மதிய உணவிற்குப் பின் திருப்பூர் தியாக ராசன் பாடல்கள் பாடினார். அனைத்து கட்சிகளைச் சார்ந்த தோழர்களும் பேசினர். காவல் துறையினரின் ஏற்பாட் டிலேயே பொதுக் கூட்டம் ஒன்று நடந்து முடிந்தது. போராட் டத்தில் கலந்து கொண்ட தோழர்களை வாழ்த்தி, அனைத் திந்திய விவசாயிகள் சங்க துணைச் செயலாளரும், கள் இயக்கத்தின் தலைவருமான நல்லுசாமி பேசினார். முன்னிரவு 7 மணிக்கு அனைத்துத் தோழர்களும் விடுவிக் கப்பட்டனர். கலந்து கொண்ட கழகத் தோழர்களுக்கும் மற்ற இயக்க தோழர்களுக்கும் திருப்பூர் மாவட்ட கழகச் செயலாளர் கா. கருமலையப்பன் நன்றி கூறினார்.  போராட்டத்தில் பங்கு கொண்ட தோழர்கள்: ம.தி.மு.க. சார்பில் உடுமலை நகரச் செயலாளர் லோகநாதன், உடுமலை ஒன்றிய செயலாளர் வி. இராஜசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தொழிற்சங்க செயலாளர் திருவாரூர் தியாகராசன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், ஆதித் தமிழர் சனநாயகப் பேரவை மாநில அமைப்பாளர் பவுத்தன். கழகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொள்ளாச்சி இரா. மனோகரன், மாநில தகவல் தொடர்பாளர் ந. பிரகாசு, கோவை தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் வேலு, மாவட்ட செயலாளர் கா.சு. நாகராசன், மாவட்ட பொருளாளர் சூலூர் குமரவேல், கோவை வடக்கு மாவட்டத் தலைவர் இராமசாமி, மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு, கோவை மாநகரத் தலைவர் கோபால், படிப்பகப் பொறுப்பாளர் சா. கதிரவன், திருப்பூர் மாநகரத் தலைவர் முகில்ராசு, பல்லடம் ஒன்றியச் செயலாளர் விஜயன், பல்லடம் நகர அமைப்பாளர் ஜெகதீசு, நகரச் செயலாளர் சூரி. ஆறுமுகம், உடுமலை நகரத் தலைவர் யாழ். நடராசன், ஒன்றியச் செயலாளர் கோ. விசுவநாதன், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் நா. கதிரவன், ஒன்றியச் செயலாளர் சு. சிவானந்தம், ஒன்றிய துணைச் செயலாளர் மா. மோகன், உடுமலை நகர துணைச் செயலாளர் சிவசங்கர், பொள்ளாச்சி நகரச் செயலாளர் வே. வெள்ளிங்கிரி ஆனைமலை ஒன்றியச் செயலாளர் சம்பத், ஆனைமலை நகரச் செயலாளர் அரிதாசு, அவினாசி சோமு, அன்னூர் ஜோதிராம், அவினாசி ஒன்றிய அமைப்பாளர் சேவூர் செந்தில் குமார் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை உடுமலை நகரச் செயலாளர் இரா.பாக்கியநாதன், நகரத் தலைவர் யாழ். நடராசன், ஒன்றியச் செயலாளர் கோ. விசுவநாதன், நகர துணைச் செயலாளர் சிவசங்கர், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் நா. கதிரவன், ஒன்றியச் செயலாளர் சு. சிவானந் தம், துணைச் செயலாளர் மா.மோகன், காரத்தொழுவு மயில்சாமி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.  

மடத்துக்குளம் ஒன்றியத்தில் தெரு முனைக் கூட்டங்கள்

24.12.2010 அன்று தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்தில் கழகத்தின் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

24.12.2010 அன்று மாலை 5 மணிக்கு காரத்தொழுவு, உடையார் பாளையம் பகுதியில் காரத்தொழுவு கிளை அமைப்பாளர் மயில்சாமி தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் தொடங்கியது. உடுமலை நகரத் துணைச் செயலாளர் சிவசங்கர் ‘ஜாதகம் வாஸ்து’ குறித்து உரையாற்றத் தொடங்கியதுமே மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. அவரது பேச்சு மக்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்தது. பிறகு தோழர் சிற்பி இராசன் நடத்திய ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி கூடியிருந்த மக்களை ஆர்வத்துடன் கவனிக்க வைத்தது.

தொடர்ந்து உரையாற்றிய பொள்ளாச்சி மனோகரன், சமுதாயத்தில் நிலவும் மூட நம்பிக்கைகள் அவற்றை ஒழிக்க பெரியார் செய்த தொண்டுகள் குறித்த உரையை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். பிறகு ஒன்றிய துணைச் செயலாளர் மா.மோகன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிகழ்ச்சியை முடித்தவுடன் மக்கள் “இன்னும் சிறிது நேரம் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்” என்று கூறினர்.  ஒன்றிய செயலாளர் சு. சிவானந்தம், கிளை அமைப் பாளர் மயில்சாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

கடத்தூர்

அடுத்து இரவு 7 மணிக்கு கடத்தூரில் கிளை செயலளார் வே. அய்யப்பன் தலைமையில் பொதுக் கூட்டம் துவங்கியது. ஒன்றிய துணை செயலாளர் மா.மோகன் தொடக்க உரையாற்ற, சிவசங்கர் சமுதாயத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை விரிவாக மக்களிடத்தில் எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பொள்ளாச்சி இரா. மனோகரன், சமுதாயத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளை ஒழிக்க பெரியார் நடத்திய போராட்டங்கள், இன்றைய சூழலில் பெரியார் இயக்கத்தின் தேவைகள் குறித்து நீண்ட உரையை நிகழ்த்தினார். அவரின் பேச்சு மக்களிடத்தில் நிலவும் மூட நம்பிக்கைகள், சாதீயம் போன்றவற்றை உடைத்தெறியும் வகையில் அமைந்தது. கூடியிருந்த இளைஞர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்தியது.

அவருக்குப் பின் தோழர் சிற்பி இராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை தொடங் கினார். அவர் நிகழ்த்திய தந்திரக் காட்சிகளையும், அதற்கு அவர் அளித்த விளக்கங் களையும் மக்கள் கரவொலி எழுப்பி, வரவேற்று விழிப்புணர்வடைந்தனர். பிறகு மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் நா. கதிரவன் நன்றி கூற நிகழ்ச்சி முடிவடைந்தது. கடும் பனி பொழிவிற்கு இடையே இரவு 10மணி வரை மக்கள் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்தனர். பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கதிரவன், அய்யப்பன், சரவணன், மணி கண்டன், கார்த்திக், பழனிச்சாமி, இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி பிரகாசு, திருப்பூர் மாவட்ட செயலாளர் கா. கரு மலையப்பன், உடுமலை நகரத் தலைவர் யாழ்.  நடராசன், உடுமலை ஒன்றியச் செயலாளர் கோ. விசுவநாதன், உடுமலை நகரப் பொருளாளர் வேல் முருகன், இரமேசு, அரிதாசு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Pin It