வேதகால பார்ப்பனச் சடங்குகள் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு நிறுவனங்களும் துணை போய் மதச்சார்பின்மை கொள்கையை குழித் தோண்டி புதைக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகள்.

காவிரியில் நீர் இல்லை; காவிரி நீரை கருநாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் முறையாக தர மறுப்பதால் விவசாயம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி

விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகி யிருக்கிறது.  டெல்லியில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யப் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கும் நதி; விவசாயத்துக்கு ஆதாரமானது என்பதால் தமிழர்கள் காவிரியைப் போற்றுகிறார்கள். தமிழ் இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. ஆனால் பார்ப்பனர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. காவிரி வற்றினாலும் விவசாயிகள் மாண்டாலும் ‘காவிரி புஷ்கரம்’ நடத்தவே துடிக்கிறார்கள்.

அது என்ன ‘காவிரி புஷ்கரம்’? 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறதாம் ‘காவிரி புஷ்கரம்’. குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இராசியிலிருந்து மற்றொரு ‘இராசி’க்கு இடம் பெயர்கிறானாம். ஒவ்வொரு நதிக்கும் ஒரு ‘இராசி’ உண்டாம். இந்த ஆண்டு ‘குரு’ பகவான் கன்னிராசியிலிருந்து ‘துலாம்’ ராசிக்கு இடம் பெயர்கிறானாம். காவிரி துலாம் இராசியாம். இது 144 ஆண்டுக்கு ஒரு முறை வருமாம். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி ஓடும் ‘துலாக் கட்டம்’ பகுதிதான். இதற்கான புண்ணியமான பகுதியாம். ‘புஷ்கரத்தில்’ காவிரியில் நீராடினால் கங்கையில் நீராடுவதற்கு சமமான ‘புண்ணியம்’ கிடைக்குமாம். இப்படி எல்லாம் கூறுவது காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரி.

காஞ்சி மடத்தில் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியிடம் ‘சண்டை’ போட்டுக் கொண்டு சங்கராச்சாரியிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ‘தண்டத்தை’ மடத்திலேயே விட்டுவிட்டு இரவோடு இரவாக 1987ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி காணாமல் போனார் ஜெயேந்திரன். கடைசியில் அவர் கருநாடக மாநிலம் ‘தலைக்காவிரி’யில் இருந்தார் என்பதை காவல் துறை கண்டுபிடித்தது. அதைத் தொடர்ந்து காஞ்சி மடத்துக்கும் ஜெயேந்திரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று “மகாபெரியவாள்” சந்திரசேகர் அறிவித்தார்.

1983ஆம் ஆண்டு  மே 27ஆம் தேதி காஞ்சி மடத்தில் 13 வயதே நிரம்பிய விஜயேந்திரனை தனது வாரிசாக உரிய வேத சடங்குகளுடன் நியமித்து அறநிலையத் துறைக்கும் அறிவித்து விட்டார்., அதற்குப் பிறகு  அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் போன்ற மேலிட பார்ப்பனர்கள் தலையிட்டு சமாதானம் பேசி மீண்டும் ஜெயேந்திர சரசுவதியை மடத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். தலைக் காவிரியில் அன்று தலைமறைவாகி யிருந்த அதே ஜெயேந்திரன்தான் இப்போது ‘காவிரி புஷ்கரம்’ நடத்த தனது தலைமையில் குழு அமைத்திருக்கிறார்.

செப்டம்பர் 12 முதல் 24 வரை தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் காவிரியில் 13 நாள்கள் ‘புஷ்கரம்’ நடத்துகிறார்களாம். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் இதற்கு நிதி உதவி செய்வதோடு விழாக் குழுவிலும் அதிகாரிகள் பங்கேற்று செயல்படுகிறார்கள். சங்கராச்சாரியின் ‘புஷ்கரம்’ குழுவில் மயிலாடுதுறையில் தி.மு.க.வின் முன்னணி பிரமுகர் ஒருவரும் இடம் பெற்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பதையும் வெட்கத்துடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக் கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் ‘புஷ்கரத்தில்’ பங்கேற்று ‘புண்ணியம்’ தேடப் போகிறாராம்.

‘துலாம் இராசிக்கு’ சொந்தமான காவிரி ஏன் தண்ணீர் இராசியில்லாமல் வறண்டு போய் கிடக்கிறது? 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் வருகிறது என்று எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?

கருநாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய காவிரியை தடுத்து நிறுத்திய ‘இராசி’ எது? காவிரியின் ‘துலாம்’ இராசிக்கு சனி பகவான் குடிபெயர்ந்த பிறகாவது தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வந்து சேருமா? நதிகளுக்கு உள்ள ‘இராசி’கள் கடலுக்கும் உண்டா? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்தக்  கேள்விக்கும் அறிவியல் ரீதியான பதில் கிடைக்காது.

சைவ மடாதிபதியான திருப்பனந்தாள் ஆதீனம், ‘புஷ்காரத்துக்கு’ வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடையாது என்று கூறியிருக்கிறார். துணிவுடன் வெளி வந்திருக்கும் ஆதீனத்தைப் பாராட்டுகிறோம்.

‘காவிரி’யை வேதத்துக்குள் அடக்கி அதற்கும் மதச் சாயம்பூசும் கேலிக் கூத்துகள், மதச் சார்பற்ற ஒரு நாட்டில் அரங்கேறிக் கொண்டிருப்பதும், அதற்கு அரசு எந்திரங்கள் நிதி உதவிசெய்வதும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள்.

காவிரி நீர்உரிமைப் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்படாத சங்கர மடம், காவிரி புஷ்கரம் கொண்டாடி, பல கோடி ரூபாயை பாழடிப்பது விவசாயிகளை அவமதிப்பதாகும்.

வேதகாலப் பார்ப்பனிய திமிரை அப்படியே காப்பாற்றுவதே அதன் நோக்கம்.

‘பார்ப்பன ஆதிக்கம் எல்லாம் பழைய கதை’ என்று பேசுவோர், இந்த ‘புஷ்கரம்’ கூத்துகளை திரும்பிப் பார்க்கட்டும்.

Pin It