உலக குத்துச் சண்டை வீரர், மூன்றுமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற முகம்மது அலி, அமெரிக்காவில் மரணமடைந்துவிட்டார். அமெரிக்காவில் கருப்பர் இனத்தில் பிறந்தவர். ஹெவி வெயிட்சாம்பியனாக குத்துச் சண்டை போட்டியில் வெற்றிகளைக் குவித்தாலும், குத்துச்சண்டையிலேயே அவர் மூழ்கிக் கிடக்கவில்லை. கோடி கோடியாய் பணம் குவிப்பதையே நோக்கமாகக் கொள்ளவில்லை. வியட்நாம் மீது போர் தொடுத்த அமெரிக்கா, முகம்மது அலியை இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அலி அதை ஏற்க மறுத்தார். அது தனது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என்றார். அதோடு நிற்கவில்லை; “வியட்நாமியர்களை நான் ஏன் எதிர்க்க வேண்டும்? அவர்கள் என்னை ‘நீக்ரோ; கறுப்பன்’ என்று இழிவுபடுத்தவில்லையே?” என்று திருப்பிக் கேட்டார்.

இராணுவத்தில் சேர மறுத்ததால் அமெரிக்க அரசு அலிக்குக் கிடைத்த விருதுகள் பதக்கங்களை முடக்கியது. அவர் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்தது. அவரது கடவுச் சீட்டு முடக்கப்பட்டது. நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 10000 டாலர் அபராதமும் விதித்தது. நாட்டுக்காகப் போராட மறுத்த கோழை என்று தூற்றினார்கள். அதே நேரத்தில் தனது மனசாட்சியின் நேர்மைக்காக பல மில்லியன் டாலரை தியாகம் செய்தவர் என்று மனித உரிமையாளர்கள் பாராட்டினர்.

முதல் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றபோது ‘ஒலிம்பிக் கறுப்பர்’ என்று வெள்ளையர்கள் ஏளனம் பேசினர். பல உணவு விடுதிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தன. தனக்குக் கிடைத்த ஒலிம்பிக் மெடலை ஓஹியோ நதியில் தூக்கி வீசியதாக அலி தனது சுய சரிதையில் கூறுகிறார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கேசியஸ் மார்குலஸ் கிளே. அப்போது அவர் கிறிஸ்துவ மதத்தில் இருந்தார். கிளே 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நிலப் பிரபு, வெள்ளையர். இவரது குடும்பம் பாரம்பர்யமாக கருப்பர்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி வைத்திருந்தது. கிளே இதை ஏற்கவில்லை. தனது குடும்பத்தில் அடிமைகளாக இருந்த 40 கருப்பர்களை விடுதலை செய்தார். அதன் நினைவாகவே அலிக்கும் அந்த வெள்ளைக்காரர் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் அதை வெள்ளையர் பெயர் என்பதால் அலி ஏற்கவில்லை. இஸ்லாமியராக மாறிய பிறகு, தன்னை ‘முகம்மது அலி’யாக்கிக் கொண்டார்.

அமெரிக்க அரசின் தடையை நீதிமன்றம் வழியாக போராடி நீக்கிக் கொண்ட அலி, இடையில் போட்டிகளில் பங்கெடுக்காத 3 ஆண்டுகளில் அவர் பல மில்லியன் டாலர்களை இழந்தார். இலட்சியத்துக்கு கொடுத்த விலை அது. இந்தியாவிலும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் பார்ப்பனர்களின் விளையாட்டு. கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களிலும் பெரும்பாலோர் பார்ப்பனர்களே. கோடியில் புரண்டாலும் மேலும் மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் தூதுவர்களாக விளம்பர மாடல்களாக பணத்தை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாடுகிற நாட்டையும் பைத்தியமாகி நிற்கும் அவர்களது இரசிகர்களையும் ஏமாற்றி போட்டியாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தோற்கிறார்கள். இதற்கு ‘மேட்ச் ஃபிக்கிங்’ என்று பெயரே வந்து விட்டது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து உலகப் புகழை எட்டிய முகமது அலிக்கு இருந்த சமூகம் பற்றிய கவலைகளை இந்த பார்ப்பனர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?

நிச்சயமாக முடியாதுதான்!

Pin It