jnu students manuதிராவிடர் விடுதலைக் கழகம் 2013, ஏப்ரல் 14 அன்று தமிழ்நாடு முழுதும் பொதுவிடங்களில் மனுசாஸ்திரத்தை தீயிட்டுக் கொளுத்தியது. அன்று கழகத் தோழர்கள் நடத்திய மனுசாஸ்திர எதிர்ப்பை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. அதே மனுசாஸ்திர எரிப்பு இப்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் நடந்திருக்கிறது. மார்ச் 8 - சர்வதேச மகளிர் நாளில் மனுசாஸ்திரத்தை தீயிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் என்பதுதான், குறிப்பிடப்பட வேண்டியதாகும். ‘ஜெ.என்.யூ.’ பல்கலைக்கழகத்தின் அகில் பாரத் வித்யத்தி பரிஷத் துணைத் தலைவர் ஜட்டின் கோரயா, அதே அமைப்பின் பிரதீப் நர்சஸ் உள்ளிட்ட மாணவர்கள் கன்யாகுமார் மீது தேசத் துரோக சட்டத்தை பா.ஜ.க. அரசு ஏவியதற்குப் பிறகு, பரிஷத்திலிருந்து விலகி விட்டார்கள். அரியானாவிலிருந்து ‘ஜெ.என்.யூ.’வுக்கு படிக்க வந்த இந்த ‘தலித்’ மாணவர்களை கன்யாகுமார் கைதும், அய்தராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா மரணமும் மிகவும் பாதித்துவிட்டன. பரிஷத்தின் ‘இந்துத்துவா’ கொள்கை, ‘தலித்’ விரோதமானது என்ற முடிவுக்கு வந்தவர்கள், அதிலிருந்து விலகி மனுஸ்மிருதிக்கு தீயிட்டனர்.

பல்கலைக்கழக பேராசிரியர் பத்ரி நாராயணன் இது குறித்து கூறுகையில், “தலித் இளைஞர்கள் ‘இந்துத்துவா’ முழக்கத்தில் கவரப்பட்டாலும், ஒரு எல்லைக்கு மேல் அதில் தங்களை இணைத்துக் கொள்ள முடியாது. இந்து மதத்தின் ஜாதி அமைப்பு நீடித்திருக்கும் வரை ‘இந்துத்துவ’ அரசியல் வளரவே முடியாது. தலித் மாணவர்கள் இந்துத்துவ அரசியலிலிருந்து விலகி வெளியேறத்தான் செய்வார்கள்” என்றார்.

பரிஷத்திலிருந்து விலகியுள்ள மாணவர் நர்வால், “தலித் மக்களுக்கும், பெண்களுக்கும் எதிரான மனுஸ்மிருதியை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகக் கண்டிக்காத வரை, நாங்கள் எப்படி அந்த அமைப்பில் நீடிக்க முடியும்?” என்று ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

1927இல் சுயமரியாதை இயக்கமும், புரட்சியாளர் அம்பேத்கரும், தற்போது திராவிடர் விடுதலைக் கழகமும் மனுசாஸ்திரத்துக்கு எதிராக தொடங்கி வைத்த எதிர்ப்பு, இப்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை பற்றி எரியத் தொடங்கிவிட்டது!

Pin It