ஜாதித் தலைவர்களுக்கு தோழர் ஓவியா கேள்வி
காதல் - ஜாதி மறுப்புத் திருமணங்களை உங்கள் ஜாதிப் பெண்கள் எதிர்க்கிறார்களா?
 
ஈரோடு மாநாட்டில் ‘புதிய குரல்’ ஓவியா தனது உரையில் வன்னியப் பெண்களோ, கொங்குவேளாளர் பெண்களோ, தங்களுக்கு ஜாதி மறுப்புக் காதல் திருமணங்களில் உடன்பாடில்லைஎன்று ஏன் கூறவில்லை? உங்களின் ஜாதி வெறியை ஏன் பெண்கள் மீது திணிக்கிறீர்கள் என்று கேட்டார்.
 
மனுசாஸ்திர எரிப்பு விளக்க மாநாடு என்கின்ற தலைப்பிலே இந்த மாநாடு நடைபெற்றுகொண் டிருக்கிறது. இந்த இரண்டு தினங்களாக, இந்த எரிப்பு ஏன் என்பதை விளக்குகின்றவிதமாக இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டி மன்றங்கள்நடைபெற்றிருக்கின்றன. எனவே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்ற நம்முடையநண்பர்களுக்கு, எதற்காக இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பாக எழுதப்பட்டமனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும் என்கின்ற வினாவுக்கு பதில் கிடைத்திருக்கும், ஆனால்அவ்வாறு இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஏராளமான பொது மக்களுக்கு அது ஒருபெரிய வினாவாக இருக்கும் இப்போது யார் மனுசாஸ்திரத்தை படித்துக்கொண்டிருக்கிறார்கள்? இப்பொழுது யார் மனுசாஸ்திரத்தை எங்கே வைத்திருக்கின்றார்கள்?

மக்கள் மறந்து விட்ட ஒரு விசயத்தை, இவர்கள் ஏன் வலிய நினைவுப்படுத்தி, அதற்குபிறகு அதை எதிர்த்து ஒரு பிரச்சாரத்தை செய்து, அதன் பிறகு அதனை எரிப்போம் என்றுசொல்கிறார்கள் என்று பல்லாயிரக்கணக்கான கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும்.இன்னும் சிலர், இவர்கள் நன்கு விபரம் தெரிந்தவர்கள் அவர்கள் கேட்கக் கூடும் இப்பொழுதுஎந்த பார்ப்பனர், தாழ்த்தப்பட்ட வரை வந்து தாக்கி கொண்டிருக்கிறார் ? தருமபுரி யிலேதாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியவர்கள் பார்ப்பனர்களா? இவர்கள் ஏன் இன்னும் அவர்களைதிட்டிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் பெரும்பகுதியினர் இங்கு இல்லவே இல்லை;பாதிப் பேர் டெல்லிக்கு போய் விட்டார்கள்; மீதிப் பேர் அமெரிக்காவுக்கே போய் விட்டார்கள்;இருப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்; என்றுபல்வேறு விதமான கேள்விகள் கேட்கக் கூடும்.
 
நண்பர்களே ! இராமன் என்ற கதாபாத்திரம் இன்று இல்லை; ஆனால் அந்த இராமன் சீதைக்குவரைந்த கோடு இருக்கின்றதே அந்த கோடு எல்லாப் பெண்கள் வாழ்விலும் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கின்றது. எனவே தான் இன்னும் பெண்கள் இங்கு தாலி போன்றஅணிகலன்களை அணிந்து கொண்டிருக்கிறார்கள். மனுசாஸ் திரத்தை இன்று எல்லோரும்படிக்காமல் இருக்க லாம்; மனுசாஸ்திரம் என்ன சொல்கிறது ? ‘ஒரு பெண் இளமையிலேதந்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்; பருவத்திலே கணவனுக்கு கட்டுபட்டு இருக்கவேண்டும்; வயதான பின் தன்னுடைய மகனின் காவலில் இருக்க வேண்டும்’ என்றுசொல்கிறது. இன்று உங்கள் வீட்டு பெண்ணோ அல்லது எங்கள் வீடுகளில் உள்ளபெண்களோ இந்த மனுசாஸ்திரத்தை படித்திருக்கக் கூடிய வாய்ப்பு கிடையாது. ஆனால்இந்த மனு சாஸ்திரம் சொல்லுகின்ற விசயம் வாழ்க்கையில் இருக்கிறதா - இல்லையா ?கடைபிடிக்கப்படுகிறதா - இல்லையா ?

உங்களுக்கு தெரியும் சென்ற வாரம் டெல்லியிலே, ஒரு பேருந்திலே ஒரு பெண் பாலியல்வன்முறைக்கு - கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, ரோட்டிலேதூக்கியெறியப்பட் டிருக்கின்றார்; அந்த குற்றவாளிகளை பிடித்து விட்டார்கள்; பிடித்துவிசாரிக்கிறார்கள், விசாரிக்கின்ற போது அதிலே ஒரு குற்றவாளி பதில் சொல்கின்றான்…. ‘இரவு ஒன்பது மணிக்கு மேல் ஒரு பெண், ஒரு வாலிபனோடு வெளியில் வருகிறாள் என்றுசொன்னால் அந்த பெண்ணுக்கு நாங்கள் தண்டனை கொடுக்க நினைத்தோம் எனவேஅவ்வாறு செயல்பட்டோம்’ என்பதாக ஒரு குற்றவாளி தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்கின்றான். தோழர்களே, நான் கேட்கிறேன் …. ஒரு பெண் இரவு ஒன்பது மணிக்கு மேல்வெளியில் வந்தால், அவள் குற்றவாளியா என்று – ஒரு பெண் ஒரு வாலிபனோடு தனியாகவெளியே வந்தால் அவள் யாருடைய பாலியல் இச்சைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடியவளாக இருக்கலாம் என்று அந்த இளைஞனுக்கு சொல்லிக் கொடுத்தது யார் ? அந்தஇளைஞன் எப்படி அந்த விதமான மனநிலையை பெற்றான் ?
 
ஒரு சில நாட்களுக்கு முன்னால் பெங்களூரிலே ஒரு சம்பவம் நடைபெற்றது; சில பெண்கள்,சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டிலே தங்களுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடிக்கொண்டிருந் திருக்கிறார்கள்; அந்த வீட்டிற்குள் ஒரு இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள்,உள்ளே சென்று, அந்த இளைஞர்களை அடித்து வெளியே இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.அந்த செய்தி வெளியே வந்த பொழுது, அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் மிகத் தெளிவாகஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள், அது என்னவென்று சொன்னால் …. ‘அவர்கள் இந்துகலாச்சாரத்தை மீறுகிறார்கள் - இந்து கட்டுப் பாடுகளை மீறுகிறார்கள், அவர்களை நாங்கள்நிச்சயமாக தண்டிப்போம்; இந்த தண்டனைக்காக சட்டம் எங்களை தண்டிக்குமேயானால்,அந்த தண்டனையை நிச்சயமாக நாங்கள் அனுபவிக்கிற தியாகமாக எடுத்துக்கொள்வோம்’என்று அவர்கள் அறிவிப்பு விடுகிறார்கள். அந்த கலாச்சாரம் ஒரு தனிப்பட்ட வீட்டிற்குள்ளேசென்று, அவர்கள் நடவடிக்கையிலே தலையிட்டு, இது கலாச்சாரத்தை சீரழிக்கிறது,உன்னுடைய வீட்டிற்குள் நீ இருக்கும் பொழுது கூட, இந்த மாதிரி விதமான உடைகளைதான் அணிந்திருக்க வேண்டும் – இந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்கின்ற இந்தகலாச்சார வரையறைகளை, சொல்லிச் சென்றது யார் ? இந்த வரையறைகளை மக்கள்மனதில் ஏற்றியது யார் ? இதைத் தான் நாங்கள் மனுசாஸ்திரமாக பார்க்கின்றோம்.
 
மனுசாஸ்திரம் என்பது இப்பொழுது ஒரு நூல் வடிவில் நம்மிடையே இல்லாமல்இருக்கலாம்; ஆனால் மனுசாஸ்திரம் என்பது இங்கு அனை வருடைய மனங்களிலும்எழுதப்பட்டுவிட்டது என்பது தான் இங்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய அபாயமாகஇப்பொழுது நம்முன் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக, பழ.கருப்பையா அவர்கள்,இந்த நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கு நின்று, வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர்; அவர்தன்னுடைய ஜாதி சமுதாய மாநாட்டிலே போய் உரையாற்றுகிறார்; என்ன உரையாற்றுகிறார்? ‘நம்முடைய சமுதாயத்தவருடைய இரத்தம் மிகவும் புனிதமானது, நம்முடையசமுதாயத்தவருடைய குணங்கள் மிகவும் மேன்மையானவை, இந்த உன்னதங்களை நாம்காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், நம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வேறுயாரையும் கலப்பு திருமணம் செய்து கொள்ளக் கூடாது, அப்படி கலப்புத் திருமணங்கள் செய்துகொள்வார்கள் என்று சொன்னால் அவர்களை, நாம் நம்முடைய சமுதாயத்தில்இருந்து தள்ளி வைத்துவிட வேண்டும்’ என்று அவர் பேசினார்.

அதன் பிறகு, உங்களுக்கு நன்கு தெரியும், சென்னை மகாபலி புரத்திலே நடந்த கூட்டத்தில், பாட்டாளி மக்கள்கட்சியினுடைய காடுவெட்டி குரு பேசுகிறார், அவர் என்ன பேசுகிறார் … ‘எங்க ஜாதிப்பெண்ணை வேறு எவன் கட்டினாலும், அவனை நாங்கள் வெட்டுவோம்’ என்று பேசுகிறார்.இந்தப் பேச்சுகளை நான் பழ.கருப்பையாவின் பேச்சாக - காடுவெட்டி குருவின் பேச்சாக -அதன் பிறகு இதனை நியாயப்படுத்துகிற மருத்துவர் இராமதாஸ் அவர்களுடைய பேச்சாகதனித் தனியாக பார்ப்பது அல்லாமல், இவற்றை ஒட்டு மொத்தமாக சேர்த்து பார்த்தால்,அதற்கு கிடைக்கின்ற விடை தான் மனுசாஸ்திரம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இவர்களை இப்படி சிந்திக்க வைப்பதும், இவர்களை இப்படி பேச வைத்திருப்பதும்,இவர்களை இப்படி எண்ண வைத்திருப்பதும் மனுசாஸ்திரமாக இருக்கின்றது.

இந்த மனுசாஸ்திரம் தான் மனிதர்களை மேலிருந்து கீழாக அடுக்கி, பிரிக்கிறது. அப்படிபிரிப்பதோடு மட்டுமல்லாமல், இன்னாருக்கு இது தான் தொழில் என்று வரையறுப்பதாகஇருக் கின்றது. இங்கு ஜாதி என்பது, இரண்டு விசயம், ஒன்று அது பிறப்பின் வழியாகவருகிறது எனவே மாற்றப்பட முடியாதது; இன்னொன்று ஒவ்வொரு ஜாதியும் ஒருதொழிலோடு பிணைக்கப்பட்டிருக் கிறது. இன்றைக்கு கூட இந்த தொழில் பிணைப்பு என்பது,எந்த அளவிற்கு அடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது. அதுமிகப் பெரிய அளவிலே நாம் அடிப்படைகளை மாற்றிவிட்டோம் என்று சொல்ல முடியாது, இருந்தாலும் அந்த முடிச்சு கொஞ்சம் அவிழ்க்கப் பட்டிருக்கிறது.

‘ஜாதி என்பது பள்ளிக்கூடத்தில் கேட்பதனால தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது - பள்ளிக்கூடத்துல ஜாதிகேட்பதினால தான் ஜாதி காப்பாற்றப்படுகிறது’ என்று நிறையப் பேர் சொல்றாங்க. ஆனால்இன்று வெளிப்படையாக அறிவிக்கின்றார்கள் ஜாதியை மறுத்த திருமணங் களை தடைசெய்ய வேண்டும் என்று. இங்கே பொங்கலூர் மணிகண்டன் என்ற நபர் சொல் கிறார்,அவருடைய பேச்சை மிக நன்றாக கவனிக்க வேண்டும்; இங்கே நிறைய தாய்மார்கள்வந்திருக்கிறார்கள், தயவுசெய்து பெண்களாகிய நீங்கள் அருள்கூர்ந்து இதனைக் கவனியுங்கள், ‘இந்த மண்ணிலே இருந்து பெரியாரியத்தையும், மார்க்சியத்தையும்,அம்பேட்கரியத்தையும் வெளி யேற்ற வேண்டும்’ என்று சொல்லுகின்றார். அதோடுமட்டுமல்ல அவர் தொடர்ந்து சொல்லு கின்றார் …. ‘இந்த மண்ணில் பெண்களுக்குசொத்துரிமையைத் தடை செய்ய வேண்டும்’ என்று. ஆக அவர்களுடைய சிந்தனை எப்படிபெண்ணடிமைத்தனத்தோடு ஆழமாக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் சொல்லுகிறார்கள்… ‘எங்கள் வீட்டுப் பெண்களை அவர்கள்கூட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள்’ இவங்களுக்கு பிரச்சனை பெண்களை கூட்டிக்கொண்டு போவதால் வருவது அல்ல. அப்படி வருவதாக இருந்தால் அந்த பிரச்சனைபெண்களிடம் இருந்து வந்திருக்குமே !
 
இது வரை பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று அந்தந்த ஜாதி தலைவர்கள் தான் அறிக்கைகொடுக்கிறார்களேயொழிய, எந்த ஜாதி பெண் ணும் அப்படி ஒரு அறிக்கையை தரவில்லை.ஆக இவ்வளவு கல்வி – வேலைவாய்ப்பு வளர்ந்திருக்கிற ஒரு சூழலில், இதனைசொல்லுவதற்கு கூட உங்கள் சமூகத்தில் படித்த பெண்கள் யாருமே இல்லையா ? அல்லதுஅவர்களை பேசவிட நீங்கள் இன்னும் தயாராக இல்லையா ? அவர்களை பேச விட்டால்,உங்கள் பெண்களை சொல்லச் சொல்லுங்கள் எங்களுக்கு கல்வி வேண்டாம், சொத்துரிமைவேண்டாம், எங்களுக்கு விரும்பிய மாப் பிள்ளையைத் திருமணம் செய்துகொள்கிற உரிமைவேண்டாம் உங்கள் ஜாதி தான் வேண்டும் என்றும் வன்னிய ஜாதிப் பெண்களை சொல்லச்சொல் லுங்கள் –- கொங்கு வேளாளக் கவுண்ட பெண் களைச் சொல்லச் சொல்லுங்கள், அந்தபெண்கள் சொல்கிறார்களா என்று பார்ப்போம். (கைதட்டல்)
 
என்னிடம் இந்த தருமபுரி நிகழ்வுகள் குறித்து - ஜாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்தஅறிக்கை களை தலைவர்கள் பகிரங்கமாக வெளியிடுவது குறித்து பலர் கருத்து கேட்டபோது நான் சொன்னேன், ஜாதி மீண்டும் உயிர்ப்பித்து விட்டதா என்று கேட்டபோது நான்சொன்னேன், “நிச்சயமாக இல்லை, பெண்கள் படித்துக் கொண் டிருக்கிறார்கள் ஒருபோதும்இதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்; இவர்களுடைய கனவு ஒருபோதும் நனவாகாது.இது சாகப் போகிற நாகம்; கடைசியாக படம் எடுத்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, சாவதற்கானஒரு ஆட்டமாக இருக்க முடியுமேயொழிய, இவர்கள் எவ்வளவு தான் சொன்னாலும்இனிமேல் பெண்களைக் கட்டுப் படுத்த இந்த ஜாதிகளால் முடியவே முடியாது” என்றுசொன்னேன். அதுமட்டுமல்ல; ஜாதி அமைப்பினுடைய அஸ்திவாரத்தில் -–அந்த அஸ்திவாரமாக கட்டப்பட்டிருப்பது வேறு எதுவும் அல்ல, பெண்களுடைய கல்லறை தான். அந்தஜாதி அமைப்பை உடைக்க வேண்டும் என்று சொன்னால், அது பெண்களால் மட்டும் தான்முடியும். பெண்கள் தலைமையெடுத்து ஜாதி ஒழிப்புப் போரை நடத்துகின்ற போதுதான் அது சாத்தியம் ஆகும். அதனால் தான் பெரியார் சொன்னார், திருமணங்களை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட வேண்டிய காலம் வரவேண்டும் என்று சொன்னார்.

திருமணம் என்பதே ஒரு பெண், ஒரு ஆணுக்கு வாரிசை பெற்றுத் தருவதற்கான ஒரு ஏற்பாடுதான்.இன்றைக்கு மாதிரி ‘ஜனடிக் தியரி’யெல்லாம் அன்றைக்குக் கிடையாது. ஒரு குழந்தைஇன்னாருடைய குழந்தை என்று கண்டுபிடிப்பதற்கான அறிவியல் சாதனங்கள் எதுவும் அந்தகாலத்தில் கிடையாது. அப்படி ஒரு காலத்தில் ஒரு பெண்ணை, முழுமையாக ஒரு ஆணுக்கு,சிறைபடுத்தினாலே அல்லாமல் ஒருவன் ஒரு பிள்ளையை, இது தான் எனக்கு பிறந்தபிள்ளை என்று சொல்லுவதற்கான எந்த முகாந்தரமும் இல்லாத ஒரு காட்டுமிராண்டிகாலத்து கண்டு பிடிப்பு தான், இந்த பெண்ணை ஒரு ஆணுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும்திருமண அமைப்பு. விரும்பியோ, விரும்பாமலோ நாம் இன்னும் அந்த அமைப்பில்தான்வாழ்ந்துகொண்டிருக்கிறோம், நான் மறுக்கவில்லை. உலகம் முழுவதும் கல்யாணம் என்றஇந்த முறை இருக்கின்றது.
 
ஆனால் நம்முடைய நாட்டில் மட்டும்தான் ஒரு பெண் அவள் ஜாதியில் பிறந்த ஆணோடுமட்டும்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கூடுதல் நிபந்தனை இருக்கின்றது. இந்த கூடுதல்நிபந்தனை என்பதே எதற்காக விதிக்கப்பட்டது என்று சொன்னால், அந்த நிபந்தனைவிதிக்கப்படா விட்டால் இந்த ஜாதியை ஆண்களால் ஒரு போதும் காப்பாற்ற முடியாது. ஆகஜாதியை காப்பாற்றுவது என்பது இந்த ஆண்களின் கைகளில் இல்லை; ஜாதியைகாப்பாற்றுவது என்பது பெண்ணடிமை தனத்தில் இருக்கின்றது என்பதற்காகவே இப்படி ஒருஅமைப்பை நிலைநிறுத்திவிட்டான். இவர்கள் இன்று எவ்வளவுதான் பாடுபட்டாலும் சரி,நிச்சயமாக படித்து வேலைக்கு போய் சுதந்திரக் காற்றை அனுபவித்துவிட்ட பெண், இனி ஒருபோதும் அந்த ஜாதிய இருளுக்குள் போவதற்கு சம்மதிக்க மாட்டாள்.
 
நான் இங்கு கூடியிருக்கின்ற இளைஞர் களைப் பார்த்து சொல்கின்றேன், எனக்குமிகவும் மகிழ்ச்சி, இன்று நாங்கள் ஏராளமான இளைஞர்களை இந்த மாநாட்டிலேபார்க்கின்றோம்; எங்களுக்கு இருந்த வருத்தமெல்லாம் இன்று போனது போல்இருக்கிறது; இவ்வளவு இளைஞர்கள் இருக் கின்றார்கள் என்று சொன்னால், ஒருதலை முறையை நாம் கைப்பற்றிவிட்டோம் என்கின்ற பெருமிதம் நமக்குள் வருகின்றது. இவர்கள் இருக்கின்றார்கள், இனி இந்த தமிழ்ச் சமுதாயத்தை, காடுவெட்டி குருக்களால் அல்லது மருத்துவர் இராமதாஸ் போன்றோரால் இந்தமாதிரியான பிற்போக்கு கருத்துக்களுக்குள் வழிநடத்திவிட முடியாது - இவர்கள் காப்பாற்றுவார்கள்.–இந்த படை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை, இன்றைய பேரணியும், இந்த நிகழ்ச்சியும் எங்களுக்கு தந்தன. (கைதட்டல்)
 
மனுசாஸ்திரம் என்பது, ஒரு நூலை எரிக்கின் றோம் என்று சொன்னால், பெரியாருடைய இயக்கம் - இது வன்முறையை தேடாத இயக்கம்–- இந்த இயக்கம் வன்முறையை நாடாதஇயக்கம் அதனால் தான் இந்த திராவிடர் விடுதலைக் கழகம் இன்று கூட எதை தேர்ந்தெடுக்கிறது என்று சொன் னால், மனுசாஸ்திரம் என்ற நூலை எரிப்பதை தேர்ந்தெடுக்கின்றது. அதனுடைய பொருள் என்னவென்று சொன்னால், ஜாதிய மோதலுக்கு தீர்வு, மீண்டும் திருப்பி தாக்கிக் கொண்டிருப்பது அல்ல என்று பொருள்; அதற்கு மாறாக அந்த தத்துவதை நீ மாற்றி எழுது; இந்த மோதலுக்கு எது காரணமாக இருக்கின்றதோ, இந்தமோதலை நடத்துகின்ற கருத்தியல் எதுவாக இருக்கின்றதோ அந்த கருத்தியலை தாக்கிஅழிக்க வேண்டும். அப்படி அழிப்பதற்கு முடிவு செய்தால், பிற்போக்குத்தனங்கள் தானாகஅந்த நிலையிலே மாறிவிடும், அதுமட்டுமல்ல நண்பர்களே, இந்த அமைப்புக்கானமூலமுடிச்சு என்பது, இன்னும் கூட இந்த வர்ணாசிரம அமைப்பிலே முடிச்சுண்டுகிடக்கின்றது.
 
இப்போது சமீபத்திலே கூட, இங்கே இதே இயக்கத்தினால் இன்னொரு போராட்டம்முன்னெடுக்கப்பட்டது. (குறிப்பு : தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய போராட்டம்-ஆர்) ஒருவர் மீண்டும் சீரங்கத்திலே பிராமணாள் கபே என்று பெயர் வைத்தார்; அப்பொழுதுநடைபெற்ற விசயம் என்னவென்று சொன்னால், பிராமணாள் கபே என்பதை எதிர்த்து மாற்றவேண்டும் என்று சொன்னபோது, நம்முடைய நண்பர்கல் சிலருக்குக் கூட ஏன் பிராமணாள்கபே என்று வைக்கக் கூடாது? தேவர் ஹோட்டல் என்று வைக்கிறார்கள்; நாடார் ஹோட்டல்என்று வைக்கிறார்கள்; செட்டியார் ஹோட்டல் என்று வைக்கிறார்கள்; செட்டிநாடுரெஸ்டாரண்ட் என்று வைக்கிறார்கள், இப்படி வைக்கும் போது ஏன் அவருடைய ஜாதிபெயரில் பிராமணாள் கபே என்று மட்டும் வைக்கக் கூடாது ? என்று நிறைய நண்பர்கள்நம்மிடமே கேட்டார்கள், எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது; எவ்வளவு தூரம் திராவிடர்இயக்கப் பிரச்சாரம் பின்னடைந்துவிட்டது என்று எண்ணி நான் வருத்தப்பட்டேன்.

பிராமணாள் என்பது ஜாதி பெயர் அல்ல; அவர்கள் ஐயர் ஹோட்டல் – ஐயங்கார் ஹோட்டல்என்று வைத்தால், அது அவர்களுடைய ஜாதி பெயர்; ஆனால் பிராமணாள் என்பது வர்ணத்தைகுறிக்கிறது. அப்படி வர்ணத்தை குறிப்பதனால் நமக்கு என்ன தடை என்று சொன்னால், அந்தசொல் பிராமணாள் என்று ஒரு பிரிவினரை சொல்லுகின்ற பொழுதே, சூத்திரர்கள் என்று அடுத்தப் பிரிவினரை சொல்லுகின்றது. இதைத்தான் பெரியார் அவர்கள் கேட்டார்கள்…. ‘ ஒருவீதியிலே ஒரு வீட்டிலே மட்டும் இது பத்தினிகள் வாழுகின்ற வீடு என்று எழுதிப் போட்டால், மற்ற வீட்டில் இருப்பவர் களுக்கு என்ன பொருள் ? அப்படி எழுதி போட் டால் அடுத்த வீட்டுக்காரன் விளக்கமாறை எடுத்துப் போய் அடிப்பானா – அடிக்க மாட் டானா?’ என்று பெரியார் அவர்கள் கேட்டார்கள். அது போல்தான், நான் பிராமணன் என்று ஒருவர் சொல்லிக் கொள்வாரேயானால், நீ சூத்திரன் என்கின்ற மறை பொருள் அதற்குள் ஒளிந்துகொண்டிருக்கின்றது.
 
தாழ்த்தப்பட்ட மக்களின் மீது இதற்கு முன்னால், எத்தனையோ முறை ஜாதிய கலவரங்கள் -தாக்குதல்கள் - மோதல்கள் நடைபெற்றிருக் கின்றன. ஆனால் அப்போதெல்லாம் எந்த ஒருதலைவரும், வெளிப்படையாக முன்வந்து, இது சரிதான் - இந்த ஜாதிக்காரர்கள் மாறவேண்டும் என்பதான ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் இந்த முறை ஜாதிவேண்டும் ஜாதி கட்டுமானம் வேண்டும் என்ற அறிவிப்புகளை தருகிறார்கள். இது குறித்துஒரு பார்ப்பன சங்கத் தலைவரிடம் கேட்டபோது… ‘தருமபுரி கலவரத்தை நான்ஆதரிக்கவில்லை, ஆனால் ஜாதி என்கின்ற அமைப்பு ஒரு நல்ல அமைப்பு, அது நீடித்திருக்கவேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்’ என்று அவர் வெளிப்படையாக பேட்டிகொடுக்கிறார். இந்த தேக்கம் ஏன் ஏற்பட்டது என்று சொன்னால், திராவிட இயக்கத்தினுடையபிரச்சாரத்தில் - அதனுடைய வேகத்தில் நாம் ஒரு தேக்க நிலையைஅனுமதித்திருக்கிறோம்; இன்னொரு புறம் தேவையில்லாமல், எந்த திராவிட இயக்கம் இந்தமக்களை தலை தூக்கி விடவும் - கைதூக்கி விடவும் அயராது பாடுபட்டதோ, அந்த திராவிடஇயக்கம் தேவையில்லாத விமர்சனங்களுக்கும் - தாக்குதல் களுக்கும் தொடர்ந்துஆளாக்கப்பட்டு வந்தது. அதனுடைய விளைவை நாம் இன்று சந்திக்கின் றோம்.
 
பார்ப்பனிய கருத்துக்கள் இங்கு செத்துவிட வில்லை; அது இன்னும் உயிரோடுஇருக்கின்றது. ஜாதி என்ற அமைப்பை நாம் சீர்குலைக்காமல் - ஜாதி என்ற அமைப்புக்குமுடிவு கட்டாமல், நாம் ஜாதிய மோதல்களுக்கு முடிவுகட்டிவிட முடியாது. எனவேநம்முடைய இறுதி இலக்கு என்பது ஜாதி ஒழிப்பு என்பதாக இருக்க வேண்டும். இங்குதிரண்டிருக்கின்ற, இளைஞர் சமுதாயத்திற்கு நான் சொல்கின்றேன்… செய்தால் ஜாதி மறுப்புதிருமணம் மட்டுமே செய்வோம் என்கின்ற உறுதி மொழி யோடு நீங்கள் செல்லுங்கள்;சொந்த ஜாதிக்குள் செய்கின்ற திருமணங்களை வேறு வழியில்லாமல் - அதி தீவிர காதல்வயப்பட்டிருந்தால் மட்டும் அனுமதியுங்கள் மற்றபடி அது காதலுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பதற்காக, முடிந்தால் அதையும் கூட விட்டுவிடுங்கள் தப்பில்லை. ஆனால் வேறு ஜாதியில் மட்டுமே திருமணம் செய்யுங்கள்.

ஒரே ஜாதி திருமணத்தை தடைசெய்யவேண்டும்; நியாயமாக சொல்லப் போனால், இந்த நாட்டிலே தீண்டாமை ஒழியவேண்டும் – ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன் னால், ஒரே ஜாதி திருமணங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்கின்ற குரல் இளைஞர்களிடையே இருந்து வரவேண்டும்,அப்படிப்பட்ட ஒரு உணர் வோடு இங்கு கூடியிருக்கக் கூடிய இளைஞர்கள் ஒன்றுதிரளவேண்டும்; ஜாதி ஒழிப்பிற்காக நீங்கள் செய்கின்ற மாபெரும் பணி என்பது, ஜாதி மறுப்புதிருமணமாகத் தான் இருக்க முடியும்; அந்த ஜாதி மறுப்புத் திருமணத்தை, பெண்ணடிமைஒழிப்புத் திருமணமாகவும், இங்கு நடைபெற்றது போல தாலி போன்ற அடிமை சின்னங்கள்இல்லாமல் நடத்துங்கள்; மீண்டும் சுயமரியாதை திருமணங்கள் இந்த மண்ணிலேபெருகட்டும்; அந்த உணர்வோடு நாம் இந்த மாநாட்டிலே இருந்து விடைபெற்று செல்வோம்.

தொகுப்பு: கோகுலகண்ணன்

Pin It