இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத் தின் முன்னாள் தலைவர் கோபாலகிருட்டிணன், அணுமின் உற்பத்திக்கு அவர் எதிரானவர் அல்ல; ஆனாலும், கூடங்குளம் மின் திட்டத்தில் ஆபத்துகள் சூழ்ந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி எச்சரித்து வருகிறார். ஒரு விஞ்ஞானியின் இந்த ‘அபாய அறிவிப்பை’ திட்ட ஆதரவாளர்களும் ஆட்சியாளர்களும் அலட்சியப்படுத்தி வரு கிறார்கள். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு கடந்த வாரம் கோபாலகிருட்டிணன் அவர்களின் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், அவர் கூறியுள்ள பல்வேறு கருத்துகளில் முக்கியமான ஒன்றை சுட்டிக் காட்ட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு கருவிகளை வழங்கியது ரஷ்ய நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், 2012 பிப்ரவரியில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் பெயர் செர்ஜிஷடோல்வ். அவரைக் கைது செய்தது ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை. குற்றச்சாட்டு என்ன தெரியுமா? அணுமின் திட்டத்துக்குத் தேவையான மூலப் பொருள்களை மலிவான விலையில் தரக் குறைவாக வாங்கி, தரம் கொண்டதாக ஏமாற்றி, அதிக விலை நிர்ணயித்து, விலை வித்தியாசத்தை அந்த அதிகாரி சுருட்டிக் கொண்டார் என்பதே குற்றச்சாட்டு. இப்படி தரக் குறைவான எந்திரங்களை உதிரிப் பாகங்களை விற்றதாகக் கூறப்படும் காலத்தில்தான் இந்தியாவில் கூடங்குளம் முதல், இரண்டாம் அணு உலைகள் நிர்மாணிக்கப்பட்டன. பல்கேரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளும் இந்த ஊழலால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, பல்கேரியாவும், சீனாவும் விழித்துக் கொண்டு, தங்கள் நாட்டுக்கு ரஷ்யா வழங்கிய உதிரிப் பாகங்கள் தரக்குறைவாக இருப்பதைக் கண்டறிந்து, சந்தேகங்களையும் விளக்கங்களையும் கேட்கத் தொடங்கிவிட்டன. தரக்குறை வான பொருட்கள் அணு ஆபத்துகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதை ரஷ்யாவின் புலனாய்வு செய்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து எந்திரம், உதிரிப்பாகங்களை வாங்கிய நாடுகள், உடனடியாக உற்பத்தியை முழு வீச்சில் நிறுத்தி, மறுசோதனை களை நடத்த வேண்டும் என்ற குரல், ரஷ்யாவி லிருந்தே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்நாட் டின் ‘ஈக்கோ டிஃபென்ஸ்’ என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொறுப் பாளர் (விளாடிமிர்ஸ்லிவ்யாக்) - இந்த ஆபத்தை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதலாம் திட்டப் பிரிவு உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஏற்பட்ட நீண்டகால தாமதம் இதுதான் என்பது இப்போது தெரிகிறது. ஆனால், இந்த உண்மைகள் மூடி மறைக்கவே முயற்சிகள் நடக்கின்றன.

இந்தப் பிரச்சினை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு ஆணையம் அளித்த பதில்தான் விசித்திர மானது. “கருவிகளை வாங்கும் உரிமைகள், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் இல்லை” என்பதுதான் ஆணையத்தின் பதில். அணுசக்தி தொடர்பான மற்றொரு அமைப்பு இந்திய அணுசக்திக் கழகம் (என்.பி.சி.அய்.எல்.) அந்த நிறுவனம் ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட நபர் குறித்தோ, அவரது நிறுவனம் குறித்தோ எந்தத் தகவலும் தங்களுக்குத் தெரியாது என்று பதில் கூறிவிட்டது. இந்தக் கூற்றுகள் உண்மை தானா?

இந்திய அரசுக்கு இந்த உண்மைகள் தெரியும். அதனால்தான் ஊழல் அதிகாரி கைது செய்யப் பட்ட பிறகு அணுசக்தித் துறையின் சிறப்பு செயலாளர் ஏ.பி.ஜோஷி என்ற பார்ப்பனர் தலைமையில் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்றை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்தது. மாஸ்கோவில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கும் அங்கே செயல்படக்கூடிய இந்திய அணுசக்தித் துறை அதிகாரிகளுக்கும் ரஷ்யாவையே உலுக்கிய இந்தக் கைது பற்றித் தெரிந்தப் பிறகே, அவர்கள் இந்திய அரசுக்கு தகவல் தந்து, அதன் பிறகே இந்தியா, இந்த நிபுணர்கள் குழுவை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஜோஷி தலைமையில் அதிகாரிகள் வந்த செய்தி இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக இணைய தளத்தில் பதிவாகியுள்ளது. கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் முதல் இரண்டு பிரிவுகளில் இந்த எந்திரங்கள், உதிரிபாகங்கள் நிறுவப்பட்டப் பிறகே ஊழல் வெளியே வந்ததால், இந்திய அரசு, இந்த உண்மைகளை வெளிவராமல் தடுப்பதில் அதீத அக்கறை காட்டுகிறது. அதிர்ச்சி யான இந்த உண்மைகளை வெளிப்படுத்திய விஞ்ஞானி கோபாலகிருட்டிணன் இவ்வாறு எச்சரிக்கிறார்.

“கூடங்குளம் - முதல், இரண்டாவது பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தரம் இல்லாத கருவிகள் - உதிரி பாகங்கள், மூலப் பொருட்களின் ஆபத்துகளை இப்போது மூடி மறைக்கலாம். ஆனால் உலை சில காலம் இயங்கும் நிலையில் அதனால் பேரழிவுகள் சந்திக்க நேர்ந்தால், உண்மைகள் வெளியே தெரிந்துவிடும். எனவே இந்த திட்டத்தின் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார், விஞ்ஞானி கோபாலகிருட்டிணன். விஞ்ஞானியின் எச்சரிக்கை மணி ஆட்சியாளர்கள் காதில் கேட்குமா? அல்லது, அவரையும் தேச விரோதிகள் பட்டியலில் சேர்த்துவிடப் போகிறார்களா?

Pin It