மனிதர்கள் அனைவருமே நட்சத்திரத்தின் குழந்தைகள் என்று அறிவியல் கூறுகிறது. எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது, இந்த அறிவியல் கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்பு விசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்து கொண்டே இருக்கின்றது.

நட்சத்திரத்திற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல, கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள் நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள் இணைந்து ‘பெரிலியம்’ என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் ‘கார்பன்’ உருவாகிறது.

புதிதாக தோன்றிய அணுக்களின் இணைப்பு மேலும் தொடர்கிறது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராண வாயு (ஆக்சிஜன்) உருவாகிறது. இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு மெக்னீசியம் அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச் சேர்க்கைகள் நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில் உற்பத்தியாகிறது.

நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார் கோடி டிகிரி வெப்பத்தில்தான் இந்த அணுச் சேர்க்கைகள் நடக்க முடிந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்துதான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில்தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில் இருப்பவை நட்சத்திரங்களில் உற்பத்தியானவை. தனிமங்களின் அட்டவணையில் இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யுரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால் நட்சத்திரங்களுக்குள் தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட தொழிற்சாலை போல நின்று விடுகிறது. பிறகு எப்படி அவை உருவாகின?

மனிதர்கள் அனைவருமே நட்சத்திரத்தின் குழந்தைகள் என்று அறிவியல் கூறுகிறது. எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது, இந்த அறிவியல் கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

அந்த முதல் தலைமுறை சூரியன் தன் வாழ்நாட்கள் முடிந்தபின் அதி பயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவர். இதனை, அப்படி வெடிக்கும்போது உண்டாகும் அதி பயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச் சேர்க்கையால் இணைந்து இரும்பிற்கு மேல் அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும்போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக் கூட்டங்களை ‘நேபுல்லா’ என்றழைப்பர்.

இந்த நேபுல்லா என்ற வாயுக் கூட்டத்தில் நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும். பிரசவ மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும் தெரியும். குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று. அதேபோல பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக் கூட்டங்களை காணும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த வாயுக் கூட்டத்தில் ‘நட்சத்திரங்கள்’ பிறக்கப் போகின்றன என்று தெரியும்.

காரணம், ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் நமது சூரியனைப் போல உருவாகும். நட்சத்திரன் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும், அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால் எறியப்பட்டு இவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுக்களிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன. சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென் றால், சூரியன் உருவாகும்போது உண்டான கோள்களைப் போல தோன்றியது தான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றி வரும் அந்தப் பாறை களில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒரு தடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால், அந்த கோள் நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய் சேர்ந்துவிடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.

பூமியில் உள்ள சத்துக்களை எடுத்து விளையும் பயிர்களைத் தின்று வளரும் மிருகங்களையும், அந்த மிருகங்களையும் பயிர்களையும் உண்டு வளரும் நாமும் அடிப்படையில் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள்தான். இனி யாராவது நம்மைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால்,

எந்தவித ஐயமுமின்றி ‘நான் நட்சத்திரத்திலிருந்து வருகிறேன்’ என்று கூறலாமல்லவா? நட்சத்திரத்தின் உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம் அதன் பிள்ளைகள் அல்லவா? நாம் அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா? ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, புவியின் பல பகுதிகளுக்கு பரவிச் சென்ற மனிதம், ஒரு மாபெரும் குடும்பம் என்பதை இந்த அறிவியல் உண்மை மீண்டும் நிரூபிக்கின்றதல்லவா? ஒரு தாய் மக்களிடையே ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் கலவரங்களும், போர்களும் வேண்டுமா?

ஒரு காலத்தில் குகைகளில் கற்களை மட்டுமே ஆயுதமாய் உபயோகித்து வாழ்ந்த காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையைப் பார்த்து நாம் கேவலமாக இப் போது சிரிக்கின்றோம். அவர்கள் அறியாமல் செய்த தவறு அது. நாகரிகம் நன்கு வளர்ந்த இந்த காலத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் சண்டையிடும் நம்மைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் ‘படித்த முட் டாள்கள்’ எனக் கூறி எள்ளி நகையாடுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

- ஜெயச்சந்திரன் (‘கீற்று’ இணையதளத்திலிருந்து)

Pin It