மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்ம பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி :

இந்த நாட்டை சோஷலிச நாடு என்று இன்றைக்கும் அரசியல் சட்டத்தில் வைத்திருக் கிறார்கள். பேர் என்னவோ பெரிய பேரு ‘சாவரின்  சோஷலிஸ்ட் செக்யூலர் டெமாக்டரிக் ரிபப்ளிக்’(Sovereign Socialist Secular Democratic Republic) தான் நம்முடையது, இதுல ஒன்று கூட இங்கே இல்லை என்பது வேறு.  உலக வங்கித்தான் ஆணையிடு கிறது. சேவை துறைகளுக்கு செலவு செய்யாதே, மருத்துவம் வேண்டாம், கல்வி வேண்டாம், அதுக்கு எல்லாம் செலவு செய்யாதே, சாவரின் எங்கு இருக்கு? எவனோ முடிவு செய்கிறான். மதச் சார்பின்மை பற்றி பேசவேண்டியதே இல்லை. செக்யூலர் நாடா இது?சேது சமுத்திர திட்டத்தில் ஒரு வழக்கு வந்தது, வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து கேட்கிறது. ஏதோ ராமர், பாலம் கட்டினா ராம், இது உண்மையா என்று தேசிய வரலாற்று ஆய்வு மையத் திடம் உச்சநீதிமன்றம் கேட்கிறது. என்.சி.எச்.ஆர்.கிட்ட கேட்கிறார்கள், அவங்க ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கிறார்கள், இது மனிதனால் கட்டப்பட்டது இல்லை, நாட் மேன் மேட் (not man made), ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்று சொன்னார்கள். அந்த கதா பாத்திரம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை அந்த பாலம், மனிதனால் கட்டபட்டது இல்லை, இயற்கையாக உண்டான மணல் திட்டு என்று சொல்கிறார்கள். இப்படிச் சொன்னவுடனே என்ன செய்திருக்க வேண்டும் ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார்களே என்று பாராட்டினார்களா? இந்த காங்கிரஸ் அரசு, இரண்டு அதிகாரிகளையும் சஸ்பெண்ட் பண்ணி விட்டது. அவர்கள் ஜாக்கிரதையாக சென்னார்கள் எங்களுக்கு இந்த ராமனும், ராமயணமும், இந்து சமுதாயத்தில் எவ்வளவு இரண்டற கலந்து இருக்கிறது என்பதை அறிந்து தான் மிகுந்த மரியாதையோடு இதை சொல்ல வேண்டியிருக் கிறது என்று சொல்லிவிட்டுதான் சொன்னார்கள், சும்மா கூட சொல்லவில்லை, அப்ப இந்த அரசுகள் எங்க செக்யூலராக இருக்கிறது, பகுத்தறிவோடு, அறிவு மனப்பான்மையை வளர்ப் பதற்காக இருக் கிறது என்பதற்காக சொல்கிறேன். சோஷலிஸ்ட் அரசு என்று சொல்கிறான். இதற்கு ஆவடியிலே காங்கிரஸ் மாநாட்டில் 1956இல் போட்டார்கள், மாநாட்டில் தான் காங்கிரஸ் அந்த கருத்தை ஏற்று கொண்டது. அப்புறம் 20 வருடம் ஆகிவிட்டது. 1956ல் ஒரு அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவந்து சோஷலிஸ்ட் என்ற சொல்லை ஒரு அரசியல் சட்ட திருத்தத்தின் வழியாகத் தான் சேர்த்தார்கள் 1976ல் மாநாடு போட்டு, தீர்மானம் போட்டு நாடாளு மன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து செய்யப்பட்ட அந்த சோஷலிசத்தை நரசிம்மராவ் காலத்தில் சத்தம் இல்லாமல் ஒழித்து விட்டார்கள். சோஷலிசம் எங்கே இருக்கிறது.

முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்டு விட்டு, தொழிலாளர் சட்டங்கள் செல்லாது என்று சொல்லிவிட்டு சோஷலிசம் என்ற சொல்லை இன்னும் வைத்திருக்கிறார்கள். நம்ம ஊர் அக்ரகாரத்தில் குடியிருந்த பார்ப்பனர்கள், இங்கு மக்கள் எழுச்சி வந்து உழைக்கும் மக்களுடைய எழுச்சி அல்லது தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருடைய மான உணர்வு கிளர்ந்து எழுந்த பின்னால் நகரத்திற்கு போனான்; அரசு பணிகளை பிடித்தார்கள். அரசு பணிகளில் இடஒதுக்கீடு வந்தவுடனே தனியார் துறைக்கு போனார்கள், இப்போது பன்னாட்டு நிறுவனங்களில் உட்கார்ந்து கொண்டு மீண்டும் அவர்கள் செல்வாக்கு செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கான திட்டங்களை தீட்டி கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் மையமாக அவர்கள் தான் ஒவ்வொன்றிலும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய திட்டங்களாக இருந்தாலும், அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் பிரச்சனையாக இருந்தாலும், மிக சாதாரணமாக தூக்கி எறிகிறான். பக்கத்து கேரளா வில் அப்படி ஒரு சிக்கல் வந்தது. ஒரு தாழ்த்தப் பட்டவரை அர்ச்சகராக நியமித்தார்கள். உடனே வழக்கு போனது, மாவட்ட நீதி மன்றத்திற்கு போனார்கள் ராகேஷ் என்ற ஒரு தாழ்த்தப் பட்டவரை கோயில் அர்ச்சகராக நியமிக்கிறார்கள் தேவஸ்வம் போர்டு  - நியமிக்கிறது. மாவட்ட நீதிமன்றம் நியமித்தது சரிதான் என்று சொல்கிறது. திரும்பவும் அடுத்த வழக்கை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றார்கள் அவர்களும் சரிதான் என்று சொல்கிறார்கள். மீண்டும் அதை உச்சநீதி மன்றத்திற்கு கொண்டு சென்றார்கள். உச்சநீதி மன்றத்திலும் சரிதான் என்று சொல்கிறார்கள் பரவாயில்லையே உச்சநீதிமன்றத்தில்கூட இப்படிப் பட்ட கருத்துள்ள வர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் கருதக்கூடும். தீர்ப்பு சொன்ன நீதிபதிகளில் ஒருவர் தமிழ்நாட்டுகாரர்; ஒருவர் கர்நாடகத்து காரர்; பழைய சென்னை மாகாணத்துக்காரர். துரைசாமிராஜு என்கிற நீதியரசர் டி.ராஜு அவர் தமிழ்நாட்டை சார்ந்தவர். ராஜேந்திரபாபு என்பவர் பிறப்பால் கன்னடராக இருந்தாலும், படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் படித்து சட்ட கல்லூரியில் படித்த ஒரு பகுத்தறிவாளர் அவர். அவங்க இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு சொன்னார்கள், அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால் அதுதான் பெரியது, மற்ற எதுவாக இருந்தாலும் அதற்கு எதிராக இருந்தாலும் அது செல்லாது என்று சொன்னார்கள். அதே உச்ச நீதி மன்றத்தில் தான் இப்போது தமிழ்நாடு வழக்கு இருக்கிறது. ஏன் இதில் தீர்ப்பு வாங்க முடியவில்லை என்றால் வடநாட்டுக்காரன் உட்கார்ந்து இருக்கிறான். அவர்களுக்கு இந்த முற்போக்குச் சிந்தனை நீதித் துறையில் இல்லை. அதனால் தான் இப்போது தலைமை நீதிபதியாக வந்திருக்கிற நம்முடைய சதாசிவம் அவர்கள் சொல்லியிருக் கிறார்கள், எல் லோருக்கும்  இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.

அரசியல் சட்டத்தில் ஆயிரம் எழுதி வைத் திருப்பார்கள் நாம் கேட்காவிட்டால் நடைமுறை படுத்த மட்டார்கள். 340 என்று ஒரு பிரிவை எழுதி வைத்தார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு ஆணையத்தை அமைத்து பட்டியல் எடுத்து  அவர்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் தீட்ட வேண்டும் என்பது அந்த திட்டம். அதில் ஒன்றுமே செய்யவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து அம்பேத்கர் அவர்கள், தான் பதவி விலகியபோது கூறிய பலகாரணங்களில் ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டுக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறது. ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டது எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தையும் சொல்லி விட்டுதான் பதவியை துறந்தார்.  அவரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று நமது ஆட்கள் சுலபமாக சொல்லிவிடுவார்கள், ஏன் பிற்படுத்தபட்டவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வில்லை என்று கண்டித்து பதவி விலகினார் அதுவும் ஒரு காரணம், அதற்கு பின்னர் அவசரமாக ஒரு குழுவை நியமித்தார்கள் காகா கலெல்கர் கமிஷன் என்று, வேறு வழியில்லாமல் ஒரு பார்ப்பனர் தலைமையில் குழு போட்டார்கள், இந்து கோயிலில் என்ன பூஜை செய்வது என்று முஸ்லீம் தலைமையிலே குழு போட்ட மாதிரி பிற்படுத்தபட்டோர் பற்றி ஆய்வதற்கு அவரை போட்டார்கள், அவர் கடைசியா அறிக்கையில் சொன்னார், இந்த ஜாதி அடிப்படையில் எல்லாம் தருவது சரியல்ல என்று ஒரு கடிதம் கொடுத்தார். அறிக்கை எல்லாம் எழுதி விட்டு கடைசியாக கடிதம் ஒன்று எழுதினார். ஜாதி அடிப்படையில் எல்லாம் தரக்கூடாது என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். அடுத்த குழு 80ம் ஆண்டுதான் வந்தது.  78ம் ஆண்டு குழு போட்டு 80ம் ஆண்டு அறிக்கை கொடுத்தார்கள். நடைமுறைபடுத்து வதற்கு 13 வருடம் ஆகிவிட்டன. அரசியல் சட்டத் தில் எழுதப்பட்டது நடைமுறைக்கு வருவதற்கு 43 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதே போன்று 312 என்று ஒரு பிரிவு எழுதி வைத்திருக்கிறார்கள். மாவட்ட நீதிபதியும் அதற்கு மேலான பதவிகளிலும் தேர்வு செய்வதற்கு தனியாக ஒரு நீதித் துறை ஆணையம் நியமிக்க வேண்டும் அது சுதந்திரமான அமைப்பு அது தேர்ந்தெடுத்து நீதிபதிகளை நியமிக்கும் என்று அந்த சட்டப் பிரிவு கூறுகிறது. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அரசு இதற்கு ஒத்து கொள்ளவில்லை, நடைமுறைப்படுத்தவில்லை. எவ்வளவு நாள் ஆகிவிட்டது. 50இல் சட்டம் அமுலுக்கு வந்து இன்றைக்கு 63 ஆண்டுகள் கடந்த பின்னாலும் நீதித்துறை நியமனங்களை அவர்களே விடாமல் வைத்திருக்கிறார்கள். ஒரு மலையாள பழமொழி சொல்வார்கள் பெட்டி திருட்டு போய் விட்டால், நாயர் சொன்னாராம் கவலைப்படாதே, சாவி உன்கிட்டதானே இருக்கிறது என்று. பெட்டி தூக்கிபோனால் என்ன அதில் தானே பணம் இருக்கிறது, உடைத்து எடுக்கமாட்டார்களா, இவர் சொன்னாராம், சாவி என்னிடம் தானே இருக்கிறது என்று கிண்டலுக்காக ஒரு பழமொழி சொல் வார்கள். இவர்கள் சொல்கிறார்கள், இனி என்னமோ செய்து கொள். தீர்ப்பு சொல்வது நான் தானே பார்த்து கொள்கிறேன் என்று, நீ என்ன சட்டம் எழுதினாலும் சரி, என்ன திட்டம் கொண்டு வந்தாலும் சரி தீர்ப்பு நான் சொல்லிக் கொள் கிறேன், சாவியை அவர்கள் கையில் இன்னும் வைத் திருக்கிறார்கள். அந்த சாவியை பிடுங்குவது என்பது தான் பார்ப்பனிய அதிகாரத்தைப் பறிப்பதாகும் புரட்சியாளர் அம்பேத்கர் கூட ஒரு அழகான வார்த்தையை சொன்னார்கள். சாஸ்திரங்களின் அதிகாரங்களை அடக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

தி அத்தாரிட்டி ஆப் சாஸ்திராஸ் என்று சொல் கிறார். ஏன் என்றால் அந்த சாஸ்திரத்தின் மீதுதான் நம்மை நம்ப வைத்து பேசுவார்கள், அது எல்லாம் வேதம் சொல்லியது, கடவுள் சொல்லியது, புராணம் சொல்லியது, நம்மாள் சொல்றான், அணு கூட வேதத்தில் தான் இருக்கு என்பான். எல்லாமே வேதத்தில் தான் இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள், அந்த காலத்திலேயே விமானம் விட்டார்கள் என்பார்கள். அதைபோல இன்னும் சொல்லிக்கொண்டு அதை நம்முடைய அறிவார்ந்த மடையர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.  நம் மூளையில் மதத்தின் பேரால் நம்மை நம்ப வைக்கிறார்கள். பெரியார் சொல்லுவார், ஒருவன் ரயிலில் ஏறினால் இந்த இடத்தில் ஏறியபோது ஆள் இல்லை என்றால் நீட்டி படுத்துக்கொள்வான் சரி, அடுத்த ஸ்டேஷனில் அவரும் டிக்கெட் வாங்கி கொண்டுதான் ஏறுவார். இடம் கொடுக்க இவனுக்கு மனசே வராது தட்டி எழுப்பி, தூங்கற மாதிரி நடிச்சி தூக்கி கீழேபோட்டு உட்கார்ந்தால் ஒழிய உட்கார முடியாது, ஒரு ஸ்டேஷனுக்கு முன்னாலே ஏறியவனுக்கே இடம் விடுவதற்கு மனது வரவில்லையே. இந்த பார்ப்பனர்கள் 2000ம் வருடம் கால் நீட்டி படுத்து இருக்கிறார்களே விடுவார்களா? என்று. அப்போது நாம் தூக்கிப் போடுவதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு துறையும், துறைதோறும், துறை தோறும், நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டும் ஆய்ந்து பார்க்கவேண்டும் போகிற போக்கில் நாம் கருத்தை சொல்லிவிட்டு அதை ஏற்றுக்கொண்டு போய் விடக்கூடாது என்பதை எல்லாம் சொல்வதற்கு தான் இந்த பயணம்.

பிஜேபியை பற்றி சொன்னார்கள் அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, அப்போதுதான் மண்டல் பரிந்துரையை நிறைவேற்றவேண்டும் என்று சொல்லப்பட்ட காலம். வாஜ்பாய் வந்தார். ஜென்டில்மேன் பொலிட்டிசியன்  என்று நம்மவர்களே சான்றிதழ் எல்லாம் கொடுத்து வைத்திருக்கிறோம். ஜென்டில்மேன் அவர் வந்தவுடனே என்ன செய்தார். மத்திய அரசு பணி யாளர்களுக்கு ஓய்வு வயதை 58ல் இருந்து 60தாக மாற்றினார். ஏன் ரிடையர் ஆனால் தானே நீங்கள் வேலைக்கு வருவீர்கள். இன்னும் இரண்டு வருடம் எங்க ஆளே இருப்பார்கள். இப்ப நம்ம அம்மா ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது, ஆசிரியர்கள் எல்லாம் தகுதியானவர்களாக இருக்கவேண்டும். தேர்வு எழுதி இதுலே, 60 சதவீதம் வாங்கினால்தான் ஆசிரியர், அதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தால் போதும். திருப்பி தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை இல்லை. இப்போது தேர்வு எழுதி அதில் 60ம் வாங்கவேண்டும் என்ற நிலை. சமூக நீதிக்கு நாம்தான் வழிகாட்டியவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். தமிழ்நாடு தான் வழி காட்டி அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு 8.3 விழுக்காடு என்று வந்தது 1943இல், தமிழ்நாட்டிற்கு இடஒதுக்கீடு 1921லே வந்துவிட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடம் 14 என்று மாற்றப்பட்டது. 1947இல் ஆனால் மற்ற மாநிலங்களில் 12.5 இடம் தான் கேட்டுக் கொண்டு இருந்தார்கள் அவங்க கோரிக்கை 12.5தான் இப்படி பல முன்னேற்றங்களை பல சாதனைகளை செய்தது தமிழ்நாடு.  ஆனால் இந்த நாட்டில் தான் இட ஒதுக்கீடு எல்லாம் கிடையாது தகுதி அடிப் படையில் மட்டும் தான் 60 மார்க் 150 மதிப் பெண்ணுக்கு 90 வாங்கினால்தான் நீ ஆசிரியராக முடியும். அதனால் தான் தோற்று போனவர்கள் எல்லாம் அதில் வெற்றி பெற முடியாதவர்கள் எல்லாம் தனியார் பள்ளியில் வேலையில் சேர்ந்து 1185 மார்க் வாங்கி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 60 மார்க் வாங்கிகொண்டு போனவர்கள் எல்லாம், சராசரியாக அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் வாங்கியது, 1140 தான், தனியார் பள்ளிகளில் 1180 சராசரி முதல் மதிப்பு, தகுதியில்லை என்று நீ சொல்லி தோற்றுப் போன வர்கள்தான். அங்கபோய் படிக்க வைத்திருக் கிறார்கள் தனியார் பள்ளிகளில்.

அரசு பணி என்பது நினைவில் இருந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சட்ட புத்தகத்தை பார்க்கலாம், பக்கத்து சீட்டில் கேட்கலாம், அதிகாரிகளிடம் கேட்கலாம், எழுதி கேட்கலாம், இரண்டு மணி நேரத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லை, 7 நாட்களில் கூட செய்யலாம், 10 நாட்களில் கூட செய்யலாம், காசு வரவில்லை என்றால் அடுத்த மாசம் கூட தள்ளிவைக்கலாம், அந்த அரசு பணிக்கு போவற்கு நினைவில் இருந்து தேர்வு எழுதுவதை ஏன் தகுதியாக வைக்கிறார்கள் என்றுதான் நாம் கேட்கிறோம். அரசு பணிக்கு என்ன தகுதி வேண்டும். அவனுக்கு அந்த மக்களை உணர்ந்து, அந்த மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவேண்டும். அது இருந்தால்போதும். இல்லை. நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு பெரியார் அடிக்கடி சொல்லுவார், காவல்துறைக்கு என்னையா வேண்டும் தகுதி, உடல் வலு மட்டும் இருந்தால் போதாது, உள்ளத்தில் துணிவு வேண்டும், ஒரு திருடனை பிடிக்கவேண்டும் என்றால் துணிச்சலும் இருக்கவேண்டும், உடலில் வலுவும் இருக்கவேண்டும். அது தானே வேண்டும். அதற்கு கல்வியில் வந்து அதிக மதிப்பெண் வாங்கி யிருக்கவேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. திருடன் ஓடுகிறபோது நான் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி பர்ஸ்ட் கிளாஸ் சொன்னா நிக்க மாட்டான் என்பார் பெரியார். நீ துரத்திப் பிடிக்க ஓடுவதற்கு உனக்கு சக்தி இருக்கவேண்டும். பிடிச்சா உதைச்சா, திருப்பி அடிப்பதற்கு தைரியம் வேண்டும். பிடிப்பதற்கு தைரியம் வேண்டுமே தவிர பி.எஸ்-சி., கெமிஸ்ட்ரி பர்ஸ்ட் கிளாஸ் என்று சொன்னால் திருடன் நிக்கமாட்டான் என்று பெரியார் சொல்வார். வேலைக்கு என்னவேண்டுமோ அந்த தகுதியை விட்டுவிட்டு நீ 60மதிப்பெண் வாங்க வேண்டும் 90 மதிப்பெண் வாங்க வேண்டும் என் பதும், பக்கத்து மாநிலத்தில் ஆந்திராவில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 50, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 40, மாற்று திறனாளிகளுக்கு 40 மதிப்பெண்கள் என்று வைத்திருக்கிறார்கள். சில வளராத வடக்கு மாநிலங் களில் கூட 60, 55, 50 என்று வைத்திருக்கிறார்கள். எப்படி அர்ச்சகர் வழக்கை இழுத்துப் போடுவதை போலத் தான் ஆசிரியர் தேர்விலும் நடந்து கொள் கிறார்கள், ஏன் என்றால் தகுதியில் வந்தவர்களை வேண்டுமானால் போடு, பொதுப் போட்டி இடங் களிலே போடு அவர்களை எல்லாம்.

திறந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக போடு அது இல்லை, தேர்ச்சி அடைந்தாலும் நீ பிற்படுத்தப்பட்டோர் இடத்திலேதான் இருப்பாய், தாழ்த்தப்பட்டோர் இடத்தில்தான் நீ நியமிக்கப் படுவாய், அப்ப என்ன அர்த்தம், 69 போக மீதி 31 பெரிய ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் மட்டும் அந்த இடம் என்று சொல்லி இவர்களாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இத்தனை சதியும் அதில் இருக்கிறது என்பதை  நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். புரியவிடாமல் நம்மை கட்சி என்றும், கட்சி ஆதரவு, ஜாதி ஆதரவு என்று ஏதோ நம்மை கொண்டு போகிறது. இதை எல்லாம் நாம் மீண்டும் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்பதும், ஒவ்வொரு துறையிலும் பார்ப்பனரின் சூழ்ச்சியில் இருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, நமக்கான உரிமைப் பெறுவதில் நாம் முன்னேற வேண்டும் என்பதும் இந்த பயணத்தின் நோக்கமாக நாம் எடுத்திருக் கிறோம்.

எல்லா செய்திகளையும் பேசிவிட முடியாது என்றாலும்கூட சுட்டிகாட்டுவதற்கே சில செய்தி களை மட்டும் உங்களிடத்திலே வைத்திருக்கிறோம். நாம் இன்னும் ஏமாந்து விடக்கூடாது, நமக்காக அற்புதமான தலைவர் பெரியார் நமக்கு கிடைத்தார். துறைதோறும் நமக்கு அதைபற்றி பேசியிருக்கிறார். எல்லா துறைகளிலும் நம்முடைய உரிமையை பற்றி அவர் பேராடியிருக்கிறார். வழி காட்டியிருக்கிறார். நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அவர் சொன்னதை யாவது தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டாமா, அவர்களால் வளர்ச்சியடைந்தவர்கள் அதை பற்றி சிந்திக்க வேண்டாமா, புரட்சியாளர் அம்பேட்கர் கடைசி நாட்களில் சொன்னார், நான் எனது சமூகத்து மக்கள் கல்வி பெற்று அரசு பணிகளுக்கு வந்து விட்டால் சமூகத்தைப் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்தேன். அவர்கள் தங்கள் வயிற்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வெம்பிப் போனார் இறுதி நாட்களில். அப்படியே தமிழர் களாகிய நாமும் இருந்துவிடக்கூடாது நாம் அறிவு பெற்று, நாம் புரிந்துகொண்டதை நம்முடைய உணர்வுகளை நம்முடைய எழுச்சியை நம்முடைய புரிதலை சமூக மேம்பாட்டிற்கு, சமூக மக்களுடைய மேம்பாட்டிற்கு உரிமை வாழ்விற்கு உதவவேண்டும் பார்ப்பன சூழ்ச்சியை முறியடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு முடிக்கிறேன்.

செய்தி: மன்னை. இரா.காளிதாசு

Pin It