“தலித் ஆண்கள் இடைநிலை ஜாதி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பிறகு, சொத்து கேட்டு மிரட்டுகிறார்கள். காதலித்த பெண்களை கை கழுவி விடுகிறார்கள்” என்று மருத்துவர் ராமதாஸ் கூறி வரும் குற்றச்சாட்டு உண்மையல்ல என்பது ஆய்வுபூர்வமாக மறுக்கப்பட்டுள்ளது. மதுரையி லுள்ள ‘எவிடென்சு’ தொண்டு நிறுவனம், இது பற்றி நடத்திய ஆய்வில், இடைநிலை ஜாதி ஆண்களால் திருமணம் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்ட தலித் பெண்களே அதிகம் என்றும், 80 சதவீத தலித் பெண்கள் வன்னியர் உள்ளிட்ட இடைநிலை ஜாதியைச் சார்ந்தவர்களால் திருமணம் செய்து ஏமாற்றப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஜனவரி 2009-லிருந்து டிசம்பர் 2012 வரை, 17 மாவட்டங்களில் நடந்த ஜாதி மறுப்பு திருமணங்கள் பற்றிய தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிகள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழியாக தகவல்கள் பெறப்பட்டன. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 84 பெண்களில் பாதிக்கப்பட்ட தலித் பெண்கள் தான் அதிகம். 67 தலித் பெண்கள் இடைநிலை ஜாதி கணவர்களால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டவர்கள். இதில் 32 பெண்கள் ‘பறையர்’ ஜாதியையும், 20 பெண்கள் ‘பள்ளர்’ ஜாதியையும், 13 பெண்கள் அருந்ததியர் ஜாதியையும் சேர்ந்தவர்கள். ஏமாற்றப்பட்ட தலித் அல்லாத பெண்கள் 17 பேர் மட்டுமே. 3 பேர் வன்னியரையும், 2 பேர் நாடார்களையும் மற்றும் 3 பேர் கவுண்டர், முதலியார், நாயுடு ஜாதிகளைச் சார்ந்த ஆண்களால் கைவிடப்பட்டவர்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

தலித் பெண்களை ஏமாற்றி நாடகத் திருமணம் நடத்தும் இடைநிலைச் ஜாதியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், பிணையில் எளிதாக விடுதலையாகாமல் தடுக்க, சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் எவிடென்சு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

 

Pin It