நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர்களின் கருத்து கேட்டு உருவாக்கப்படும் ஈழ விடுதலை சாசனத்தை அமெரிக்காவில் மே மாதம் முரசறைய இருக்கிறது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் வாக்கெடுப்பு வழியாக தேர்வு செய்த உறுப்பினர்கள், அமைச்சர்களைக் கொண்ட அமைப்பு ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ ஆகும். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்பது ஈழத்துக்கான நிழல் அரசு (Government in exide) அல்ல. விடுதலைக்கு போராடிய நாடுகள் ஏதேனும் ஒரு நாட்டின் ஆதரவோடு, அந்நாட்டிலிருந்து நிழல் அரசை அறிவித்த வரலாறுகள் உண்டு. தமிழ் ஈழம் என்ற இறையாண்மை கொண்ட நாடு இனிமேல்தான் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு எந்த ஒரு நாடும் ஏற்பு வழங்காத நிலையில் ‘நிழல் அரசு’ என்பதற்கு மாற்றாக ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கான ஒரு போராட்ட அமைப்பு; அமையப் போகும் தமிழீழத்துக்கான அரசு அல்ல என்பதை இந்த அமைப்பின் பிரதமர் வழக்கறிஞர் உருத்திர குமாரன் தெளிவுபடுத்தியுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவளிக்கும் தோழமை மய்யம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த தோழமை மய்யத்தின் சார்பில் கடந்த 18.4.2013 அன்று சென்னையில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.

தோழமை மய்யத்தின் சார்பில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஈழத்தில் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை விளக்கும் ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன உறுப்பினரான வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கி மற்றொரு நியமன உறுப்பினரான பேராசிரியர் சரசுவதி மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இந்த 40 நிமிட ஆவணப்படம் சென்னை கருத்தரங்கில் திரையிடப்பட்டது. ‘ஈழம் மண்ணில் எரியும் நெருப்பாய் தமிழ்ப் பெண்கள்’ என்ற இந்த ஆவணப் படத்தை ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட எழுத்தாளர் சூரிய தீபன் பெற்றுக் கொண்டார்.

கருத்தரங்கின் மற்றொரு முக்கிய நிகழ்வு தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் பற்றியதாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ‘தமிழீழ சுதந்திர சாசனம்’ ஒன்றை வெளியிடவிருக்கிறது. எதிர்வரும் மே 15 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை அமெரிக்காவில் பென்சில்வேனியா நகரில் நிகழ இருக்கும் மாநாட்டில் இந்த பிரகடனம் முரசறையப்படவிருக்கிறது. இந்த பிரகடனம் உலகத் தமிழர்களின் கருத்துகளைக் கேட்டு, அதனடிப்படையில் உருவாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்காக உலகத் தமிழர்களின் கருத்துகளைக் கோரும் 34 கேள்விகளைக் கொண்ட கேள்விக் கொத்து தயாரிக்கப்பட்டு உலகத் தமிழர்கள் அனைவரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டு வருகின்றன. இந்த ‘சுதந்திர சாசனம்’ நாடு கடந்த தமிழீழ அரசின் அறிவிப்பு அல்ல. மாறாக உலகத் தமிழர்களின் ஒருமித்த கருத்தாகும். இதே போன்ற சுதந்திர சாசனத்தை(Freedom Charter)தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளும் முரசறைந்துள்ளன என்பது வரலாறு.

இதன் நோக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த விடுதலை சாசனம் விடுதலை வேட்கைக்கான குறியீடாகும். மக்கள் தங்களுக்கான விடுதலையை கோருவதற்கான உரிமையை வலியுறுத்துவதோடு தங்களுக்காக அரசினை அமைக்கவும் ஆட்சி நடத்துவதற்கான ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. இப்படி ஒரு சுதந்திர சாசனத்தை உலக நாடுகள் முன் ஆவணமாக முன் வைக்கப்படுவதால் சுதந்திரத்துக்கான பயணத்தை முன்னெடுப்பதற்கான செயல்முறைக்கு இது ஒரு தொடக்கப் புள்ளியாகிறது.

முள்ளி வாய்க்கால் படுகொலைக்குப் பிறகு தமிழீழ மக்கள் தங்களிடம் மண்டியிடுவார்கள் என்று சிங்கள அரசு எதிர்பார்த்தது. ஆனால், தமிழீழ மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்பதை செயல்பூர்வமாக உணர்த்தி வருகிறார்கள். சர்வதேச நாடுகளும், ‘தமிழீழ நாடு’ கனவாகிவிட்டது என்று கூறி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளைத் திணிக்க முயன்று வருகின்றன. தாயக தமிழ் ஈழத்தில் ராணுவத்தினர் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களின் ‘சுதந்திர வேட்கை’யை வெளிப்படுத்திட இயலாதவர்களாக உள்ளனர். இதைப் பயன்படுத்தி ‘தமிழீழ அரசு’ உருவாக்கத்தைத் தடுத்திடவே சர்வதேச நாடுகள் முயற்சிக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு இருப்பதால் தமிழீழத்தை வலியுறுத்துகின்றனர் என்றும், இலங்கை அரசின் கீழ் வாழும் மக்களின் நெருக்கடிகளையும் ஆபத்துகளையும் கவனத்தில் கொண்டு சிங்கள தேசத்துடன் சமரசமாகப் போய்விடுவதே நல்லது என்றும் சிலர் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.

இத்தகைய திசை திருப்பும் முயற்சிகளுக்கு எல்லாம் இந்த சுதந்திர சாசனம் உரிய பதிலாக அமைகிறது. சிலர் கூறுவதுபோல் தமிழீழத் தனியரசு கோரிக்கை இப்போது ஏதோ திடீரென்று வரலாற்று வெற்றிடத்திலிருந்து உருவாகியது அல்ல. சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழர்களுக்கான தேசத்தின் உரிமையை, இருப்பை ஏற்க மறுத்து, எப்போது இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியதோ, அன்றே உருவானதுதான் இந்த விடுதலை. அதன் வரலாற்றுத் தொடர்ச்சியே இந்த சாசனம். தமிழர்களின் தனித்துவமான ‘இறையாண்மையை’ சிங்கள ஆட்சியாளர்களும் ஏற்கவில்லை. சிங்கள அரசும் ஏற்கவில்லை. எனவே, இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் சிங்கள அரசின் நிலையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் எந்த அர்த்தமுள்ள அதிகாரப் பங்கீட்டை அனைத்துலக சமூகம் ஏற்படுத்தினாலும் அதை சிங்களப் பேரினவாதம் முறியடிக்கும். இதுவே வரலாறு கற்றுத் தந்த பாடம். இந்த வரலாற்றுப் பாடத்தை புறந்தள்ளிவிட்டு இலக்கையும் செயல்பாட்டையும் நிர்ணயிக்க முடியாது. அதே வேளை, உலகில் ஏற்படும் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு, சர்வதேசம் சுதந்திரத் தமிழீழ கோரிக்கையை புறந்தள்ளிவிடாத வழிமுறையில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு ‘சுதந்திர தமிழீழ அரசு’ எனும் கோட்பாட்டை வெளிப்படுத்தி ராஜ தந்திர வழியில் போராட்டப் பாதையை நெறிப்படுத்த வேண்டும்.

“ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் நலன் என்ற பார்வையோடு செயல்படும் சூழ்நிலையில் உடனடியாக தமிழீழத்துக்கு ஆதரவு காட்ட முன் வர மாட்டார்கள்தான். ஆனாலும் சர்வதேச அரசியலில் நிகழும் மாற்றங்கள் தமிழ் ஈழத்துக்கான சூழலை உருவாக்கும். முரசறையப்பட இருக்கும் இந்த சாசனம் இந்தப் புதிய அணுகுமுறைக்கு ஏற்ப இருக்கும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையாக அறிவித்துள்ளது.

சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் இந்த விளக்கத்தை முன் வைத்து பலரும் உரையாற்றினர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். எழுத்தாளர் சூரிய தீபன், மு.சாத்தப்பன், தியாகு, பேராசிரியர் ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் உரையாற்றினர். ஆவணப்பட இயக்குனர் வழக்கறிஞர் பாண்டிமாதேவி ஆவணப் படத்துக்கு உதவியோருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

நிறைவாகப் பேசிய செந்தமிழன் சீமான், “ஏற்கனவே ‘சோஷலிசத் தமிழ் ஈழத்தை நோக்கி’ என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் ஒரு ஆவணத்தை வெளியிட்டப் பிறகு இந்த ஆவணம் தேவையா என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு கருத்தரங்கின் தலைவர் பேராசிரியர் சரசுவதி மேடையிலேயே விளக்கமளித்தார். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் பிரகடனம் வெளிவந்தது. அதே சுதந்திர தமிழ் ஈழ பிரகடனத்தைத்தான் இப்போது மீண்டும் உறுதி செய்து கொள்வதற்கும் மாறியுள்ள சூழலில் உலக அரங்கில் முன்னெடுப்பதற்கும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், ஒரு செயல் திட்டமாக முன் வைக்கப்படுகிறது. ஏற்கனவே முன் வைக்கப்பட்ட பிரகடனத்தின் மறு உறுதியாகவும் தொடர்ச்சியான செயல்பாடாகவுமே இதைப் பார்க்க வேண்டும்” என்று விளக்கமளித்தார். 10 மணியளவில் கருத்தரங்கம் நிறைவடைந்தது. அரங்கம் நிரம்ப பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.

(குறிப்பு: சாசன உருவாக்கத்திற்கான கேள்விகளை ww.tamileelamfreedom charter.org என்ற இணையதளத்தின் வழியாக தங்கள் பதிலைத் தெரிவிக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.)

Pin It