திராவிடர் விடுதலைக் கழக மாநில மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் 23.3.2013 அன்று திருச்சியில் ‘தமிழ்நாடு சோசியல் சர்வீஸ் சொசைட்டி’யில் காலை 11 மணியளவில் தொடங்கியது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்கள், மண்டல அமைப்புச் செயலாளர்கள், கழக முன்னணி அமைப்புகளான அறிவியல் மன்றம், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தவிருக்கும் மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் பல்வேறு பகுதிகளில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை, சேலம், மேட்டூர், ஈரோடு, கோபி, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, விழுப்புரம், புதுவை, சிதம்பரம், நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் தனித்தனியாகவும், காஞ்சி மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, திருவாரூர் மற்றும் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் இணைந்தும் போராட்டத்தை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

மனு சாஸ்திர எரிப்புக் கொள்கையில் உடன்பாடுடைய அமைப்புகள் இயக்கங்களின் ஆதரவைப் பெற்று, அவர்களையும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பது என்றும், அதற்கான ஆதரவு கோரும் கடிதங்களை எழுதவும் முடிவு செய்யப்பட்டது.

ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளில் கழக சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று ஜாதி பெயரில் உள்ள வணிக நிறுவனங்களின் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கழக சார்பில் அத்தகைய நிறுவனங்களுக்கு ஜாதிப் பெயரை நீக்கக் கோரி வேண்டுகோள் கடிதங்களை முதலில் அனுப்பி, பிறகு நேரிலும் வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. நடந்து முடிந்த மண்டல மாநாடுகள் குறித்து அதன் நிறை குறைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

Pin It