தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ‘இந்து’ ஜூன் 5, நாளேட்டில் எழுதிய கட்டுரை:

இந்திய அரசியல் சட்டம் தூக்குத் தண்டனையை அனுமதிப்பதால், அதில் எந்தத் தவறும் இல்லை என்று பலரும் கருதுகிறார்கள். அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கே தூக்குத் தண்டனையில் உடன்பாடு உண்டு என்பதே இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்து. ஆனால், அரசியல் நிர்ணய சபையில் பல உறுப்பினர்கள் தூக்குத்தண்டனைக்கு எதிராகவே கருத்துகளை வலியுறுத்தியுள்ளனர். அரசியல் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களே, மக்கள் நடைமுறையில் அகிம்சையை பின்பற்றாவிட்டாலும் அகிம்சையை ஒரு தார்மீக நெறியாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த நாட்டில் மரணதண்டனையை முழுமையாக ஒழித்து விடுவதே சரியாக இருக்கும் என்று கூறினார்.

பேராசிரியர் சிபன்லால் சாக்சேனா, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். (ஆனால், தண்டனை நிறைவேற்றப்பட வில்லை) 1949, ஜூலை 3ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் அவர் பேசுகையில், தான் சிறையிலிருந்த காலத்தில், அப்பாவிகள் எப்படி தூக்கிலிடப்பட்டார்கள் என்பதை விவரித்தார். தூக்குத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு வசதி படைத்த பணக்காரர்களுக்குத்தான் கிடைக்குமே தவிர, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காது என்றார்.

தவறான தீர்ப்புகளால் தூக்குத் தண்டனைக்கு உள்ளாவதுதான் மிகவும் வேதனைக்குரியது. 21ஆம் நூற்றாண்டிலும்கூட இப்படி தவறான தீர்ப்பால் தூக்கிலிடப்படுவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சர்வதேச பொது மன்னிப்பு சபை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்ற அமைப்புகள் தூக்கிலிடுவோரை முடிவு செய்யும் நீதிமன்ற நடைமுறையில் விருப்பு வெறுப்புகள் தலைதூக்கி நிற்பதை சுட்டிக்காட்டியுள்ளன. தூக்குத் தண்டனை விதிப்பதிலுள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உச்சநீதிமன்றமே பலமுறை ஒப்புக் கொண்டிருக்கிறது.

1996 ஆம் ஆண்டிலிருந்து உச்சநீதிமன்றம் தவறாக 15 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளதை சுட்டிக்காட்டி 14 பிரபல நீதிபதிகளே குடியரசுத் தலைவருக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினர். இதில் இரண்டு பேருக்கு தூக்குத்தண்டனையே நிறைவேற்றப்பட்டுவிட்டது. “சுதந்திர இந்தியாவில் குற்றம் மற்றும் தண்டனை வரலாற்றில் இது மிக மோசமான தவறான தீர்ப்பு” என்று நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீதான குற்றத்தைத் தடுப்பதற்கு தூக்குத் தண்டனை தேவை என்று சிலர் வாதிடுகிறார்கள். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தூக்குத் தண்டனை குற்றங்களைத் தடுத்திடவில்லை. அதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆள் மாறாட்டத்தில் தவறாக தண்டிக்கப்பட்டவர்களை மரபணு சோதனை நடத்தி, உண்மைகளை வெளிக்கொணரும் சீர்திருத்த சட்ட அமைப்பு ஒன்று செயல்படுகிறது. அதன் பெயர் ‘அப்பாவிகளுக்கான செயலமைப்பு’ (Innocence Project). இந்த அமைப்பு, பல அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருப்பதை கண்டறிந்துள்ளது. அதில் ஒன்று கேமரான் டோட் வில்லிங்கம் என்பவர் தூக்கிலிடப்பட்டதாகும்.

அவருடைய மூன்று மகள்கள் மரணத்துக்கு காரணமானவர் என்ற முடிவு செய்யப்பட்டு 2004ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மறு விசாரணையின்போது இந்த வழக்கில் சாட்சியாக முன்வைக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்களில் பலத்த சந்தேகங்கள் எழுந்தன. நீதிபதி, அவர் தவறாக தூக்கிலிடப்பட்டதை ஒப்புக் கொண்டார். இளம்பெண் ஒருவரை கொலை செய்ததாக 1989இல் சார்லோஸ்டிலூனா என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்டார்.

2004இல் கொலம்பியா சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆய்வில், இவர் ஆள் மாறாட்டத்தில் தவறாக தூக்கிலிடப்பட்டார் என்பது உறுதியானது. குற்றங்களைத் தடுப்பதற்கு சமூகக் கல்வி, காவல் மற்றும் நீதித் துறை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தாமல், தண்டனையை கடுமையாக்கி விட்டாலே குற்றங்கள் குறைந்துவிடும் என்று நமது நாட்டு சட்டத் துறையினர், தங்களுக்கு வசதியாகக் காரணம் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். குற்றம் செய்கிறவர்களுக்கு உறுதியான தண்டனை உண்டு என்ற நிலை இருந்தாலே குற்றங்கள் குறைந்துவிடும். சட்டங்களை கடுமையாக்குவதால் குற்றங்கள் குறைந்துவிடாது.

தூக்குத் தண்டனை என்பதே நீதிமன்றத்தின் அனுமதியோடு நடக்கும் கொலைதான். ராஜீவ் கொலை வழக்கில் இப்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வழக்கில் தண்டனை விதித்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி கே.டி.தாமஸ். ஏற்கனவே 22 ஆண்டுகள் சிறையில் கழிந்த பிறகு, இந்த மூவருக்கும் மீண்டும் தூக்குத்தண்டனை விதித்தால், ஒரே குற்றத்துக்கு இரண்டு முறை தண்டித்ததாகிவிடும் என்று அவர் கூறுகிறார்.

கடந்த சில மாதங்களாக இந்திய அரசாங்கம் தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றுவதில் படுவேகம் காட்டி வருகிறது. ஒரு கொலைக்கு பழிவாங்க மற்றொரு கொலை என்பது தவறான பார்வை. பழிவாங்கும் போக்கு தான் நீதி என்ற மாறுவேடத்தில் அரங்கேறுகிறது. குற்றங்கள், கொலைகள் குறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க விரும்பும் அரசாங்கம், அதே தவறை நீதியின் பெயரால் செய்யக் கூடாது. தி.மு.க. தூக்குத்தண்டனையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 16 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். உலகம் முழுதும் தூக்குத்தண்டனை விடைபெற்று வருகிறது. அய்ரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு தன்னை இணைத்துக் கொள்ள தூக்குத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று முன் நிபந்தனை உள்ளது.

2010 டிசம்பரில் கூடிய 65ஆவது அய்.நா.வின் பொதுச் சபை, தூக்குத் தண்டனைக்கு எதிராக மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள தோடு, உலகம் முழுதும் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உலகில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமாக 140 நாடுகள், இனியும் தூக்குத்தண்டனையை பயன்படுத்தப் போவது இல்லை என்று அறிவித்துள்ளதை சர்வதேச பொது மன்னிப்பு சபை சுட்டிக்காட்டுகிறது. உலகத்தின் இந்தப் போக்கை இந்தியாவும் அங்கீகரித்து அந்த வழியில் செயல்பட வேண்டும்.

Pin It