பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான் நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. ஊழலுக்கு காரணமாக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர் கள்தான் என்று அஜீஸ் நந்தி என்ற எழுத்தாளர் வெளிப்படையாக பேசினார். ஆனால், உண்மை அதுவல்ல. பார்ப்பனர்கள் ஊழல் இப்போது அதிர்ச்சி யூட்டும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பவர் சீனிவாசன் என்ற பார்ப்பனர். ‘இந்தியா சிமெண்ட்’ என்ற தொழில் நிறுவனத்தின் உரிமையாளர். இவரது மருமகன் செட்டியார் சமூகத்தைச் சார்ந்த குருநாத் மெய்யப்பன். (ஏ.வி.எம். குடும்பத்தைச் சார்ந்தவர்) மெய்யப்பன் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புள்ளவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசன், சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியின் உரிமையாள ராகவும் உள்ளார். இந்த அணியின் தலைமை நிர்வாகியாக இருக்கும் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளன. அவசர அவசரமாக சீனிவாசன் தனது மருமகனைக் காப்பாற்றுவதற் காக சூப்பர் கிங்ஸ் அணியில் தனது மருமகனுக்கு பொறுப்பு ஏதும் இல்லை என்று உண்மையை மறைக்க முயலுகிறார். சீனிவாசன் கிரிக்கெட் வாரிய தலைவரான பிறகு, சர்வாதிகாரியாக செயல் படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தனது இந்தியா சிமெண்ட் நிறுவனத்தை அய்.பி.எல். போட்டியில் பங்கெடுப்பதற்காக கிரிக்கெட் வாரியத்தின் விதிகளையே திருத்தியவர், இந்தப் பார்ப்பனர். அவர் பதவி விலக வேண்டும், அப்போதுதான் மருமகன் மீதான ஊழல் பற்றி நேர்மையான விசாரணை நடக்கும் என்று மத்திய நாடாளுமன்ற அமைச்சர் கமல்நாத் வலியுறுத்தி யுள்ளார். ஆனால், பதவி விலக முடியாது என்கிறார் சீனிவாசன்.

‘அய்கேட்’ என்ற அய்.டி. நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்தவர் பன்னீஷ் மூர்த்தி எனும் கருநாடகப் பார்ப்பனர். அய்.அய்.டி.யில் படித்தவர். இப்போது தனது நிறுவனத்தில் தனக்குக் கீழே பணியாற்றிய பெண் ஒருவருடன் பாலியல் உறவு கொண்டிருந்தார் என்பதற்காக நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்ப்பம் அடைந்த அந்தப் பெண்ணை கருக்கலைப்பு செய்யுமாறு வற்புறுத்தினாராம். இதே பார்ப்பனர் ஏற்கனவே ‘இன்ஃபோசிஸ்’ என்ற அய்.டி. நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்தபோது இதேபோல் ‘பாலுறவு’ குற்றத்துக்காக பதவி நீக்கம் செய்யப் பட்டவர். அப்போது அவரது செயலாளராக இருந்த பல்கேரியாவில் பிறந்து, அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த ஒரு பெண், இவர் மீது பாலியல் குற்றச் சாட்டுகளைக் கூறினார். ‘இன்போசிஸ்’ நிர்வாகம், பிரச்சனை நீதிமன்றத்துக்குப் போனால், நிறுவனத் தின் பெயர் கெட்டுவிடும் என்பதால் அந்தப் பெண் ணுக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டு மூர்த்தியை பதவி நீக்கம் செய்தது.

1999 ஆம் ஆண்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மது ஊற்றிக் கொடுக்கும் ஜெசிக்காலால் என்ற பெண்ணை குடிபோதையில் மனுசர்மா என்ற பார்ப்பன இளைஞன் சுட்டுக் கொன்றான். இவன் ஒரு காங்கிரஸ் தலைவரின் மகன். அதிகார பலம், பணபலம் கொண்ட இந்த பார்ப்பனர், தனக்கு எதிரான சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக மாற்றி விட்டதால், நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட் டர். மக்கள் மன்றத்திலிருந்தும் பெண்கள் அமைப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் உருவான நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம், தீர்ப்பை மாற்றி ஆயுள் தண்டனை வழங்கியது. இப்போது இந்த வழக்கில் பிறழ்சாட்சிகளாக மாறிய இரண்டு பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் ஷியாம் முன்ஷி என்ற இந்தி நடிகர், மற்றொருவர் வெடி மருந்து ஆய்வாளர் பி.எஸ்.மனோச்சா. வழக்கு முடிந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி உயர்நீதி மன்றம் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சி ஜெயேந்திரன் மீதான கொலை வழக்கில் இப்படித்தான் அரசு சாட்சிகள் கடந்தகால தி.மு.க. ஆட்சியில் பிறழ் சாட்சிகளாகிவிட்டனர். அதிகாரம் படைத்த பார்ப்பனர்கள் கிரிமினல் குற்றம் செய்தால் கூட அவர்கள் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள் என்பதற்காகவே இதை சுட்டிக் காட்டுகிறோம்.

Pin It