“புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் டிசம்பர் 22 அன்று ‘அக்னி பிரவேசம்’ நிகழ்ச்சியில் பேட்டியாளர் ஜென். ராம் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு விடையளித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கிய பேட்டியின் முழு வடிவம்.

ஜென்ராம் -        திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயர்களில் இருந்தாலும் - கொள்கை ஒன்றுதான். ஆனால், மூன்று அமைப்புகளில் நீங்க செயல்பட வேண்டிய நிலை வந்திருக்கிறது. என்ன காரணம்?

கொளத்தூர் மணி - மூன்று அமைப்புகளுக்கும் கொள்கை ஒன்றுதான். ஆனால் அணுகுமுறைகளிலும், எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்பதிலும் எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள்தான் புதிய புதிய அமைப்புகளை காண்பதற்கும் தோன்றுவதற்கும் காரணமாக இருக்கிறது.

ஜென்ராம் - அணுகுமுறைதான் என்று நீங்க ஒரே சொல்லில் சொல்லி முடிச்சுடறீங்க. ஆனால் அதற்கு பின்னால் தலைமைகள் குறித்து நீங்க வைத்திருக்கக் கூடிய விமர்சனம், கடுமையாக இருக்கு. கொள்கைகளை விட இயக்கமும் கட்டுப்பாடும் முக்கியம் என்ற நிலை தோழர் வீரமணி காலத்தில் உருவானது என்று நீங்க அங்கிருந்து வெளியே வரும்போது கூறியிருக்கிறீர்கள். அது இயல்பானதுதானே? கொள்கையை விட கட்டுப்பாடு முக்கியம் என்று சொல்ல முடியா விட்டாலும் இயக்கத்தின் கட்டுப்பாடு என்பது முக்கியமானதுதானே?

கொளத்தூர் மணி - நிச்சயமாக! கட்டுப்பாடு அவசிய மானதுதான். ஆனால் எங்களை நீக்குவதற்கெல்லாம் கொள்கை சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கவில்லை. அரசியல் சார்ந்த காரணங்களுக்காக நாங்கள் விலக்கப்பட்டோம்.

ஜென்ராம் - கட்சி அதிகாரம் தந்த மாயைதான் கொள்கை வழியில் செயல்பட்டத் தோழர்களை நீக்குவதற்கான தைரியத்தை வீரமணிக்குக் கொடுத்தது என்று சொல்றீங்க. இதுபோன்ற அமைப்பில் இருக்கக் கூடிய கட்சி அதிகாரம் என்பது எத்தகைய அதிகாரம்?

கொளத்தூர் மணி - பெரியார் இயக்கத்தைப் பொருத்த வரை தலைவருக்குதான் முழு அதிகாரம் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இருக்கிற பதவிகள் எதுவும் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் அல்ல. தேர்தலில் நின்று நாங்கள் வெற்றி பெற்று பதவிகளுக்கு வருவதில்லை. இயக்கத்தின் தலைமை ஆலோசித்து நியமிப்பதுதான் எல்லா பதவிகளும். எனவே அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் நான் விலக்கப்பட்டதற்கு காரணம் கொள்கை சார்ந்தது அல்ல. அந்த நேரத்தில் நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது ராஜ்குமாரை மீட்பதற்கு நான் போயிருந்தேன். திரு. வீரமணியோ போகக் கூடாது என்று கருதினார். அப்போது அவர் எடுத்த அரசியல் நிலையின் காரணமாக, இந்த முடிவை எடுத்தார். அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ள கூடாது என்று அவர் கருதினார். அப்போது அவர் தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து வந்தார். என்னைப் பொருத்த வரை, கர்நாடக தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்ற கருத்து என்னிடம் மேலோங்கி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அதில் என்னுடைய பார்வைதான் கொள்கைப் பார்வையாகவும் அவருடைய பார்வை வெறும் கட்டுப்பாடு அரசியல் பார்வையாகவும் இருந்தது. நான் விலகுவதற்கான காரணம் அதுதான்.

ஜென்ராம் - அதற்கு பிறகு, இன்று பெ.தி.க.விலும் கிட்டத்தட்ட அன்று வீரமணி இருந்த நிலையில் நீங்க இருந்தீங்க என்று சொல்லலாமா?

கொளத்தூர் மணி - ஆமாம். நான் தலைவராகத்தான் இருந்தேன்.

ஜென்ராம் - நீங்க தலைவராக இருந்தீங்க. பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் கோவை இராமகிருஷ்ணன் அணியினர் முட்டுக்கட்டை, எதிர்ப்புகள் காட்டியதாக சொல்றீங்க.

கொளத்தூர் மணி - ஆமாம்!

ஜென்ராம் - அவர்கள் கட்டுப்பாட்டை மீறினார்கள். அதனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கறீங்க அல்லது நீங்கள் நடவடிக்கை எடுக்காம ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் இன்னொரு அமைப்புக்கு வர்றீங்க... ஏதோ ஒன்று... ஆனா கட்சியினுடைய முக்கியத்துவத்தை நீங்க தலைவராக இருக்கும் போது வலியுறுத்துறீங்க இல்லையா?

கொளத்தூர் மணி - கட்சியின் முக்கியத்துவம் என்றல்ல. கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளைதான் நான் சொல்கிறேன். அதிகாரம் என்பதெல்லாம் இதில் இல்லை. கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சில தடங்கல்கள் இருந்தன. அவர்கள் புரிதல் வேறாகவும் எங்கள் புரிதல் வேறாகவும் இருந்தது. அதுதான் பிரச்னை.

ஜென்ராம் - ஒரு அமைப்பில் அல்லது ஒரு நிறுவனத்தில் ஒரு புள்ளியில சேர்ந்து வேலை செய்வதற்கான சாத்தியப் புள்ளிகளை பார்த்துட்டு கூடிய வரை இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகளை எடுக்கணும் அதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்?

கொளத்தூர் மணி - ஆம். உண்மைதான். நாங்கள் எல்லோரும் இணைந்தபோதுகூட எங்களின் சில கருத்து வேறுபாடுகளை நாங்கள் பேசி தீர்த்துக் கொண்டோம். பொதுவாக மேடைகளில் மற்ற பெரியார் அமைப்புகளை பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பது போன்ற குறைந்த பட்ச முடிவுகளை எடுத்துக் கொண்டுதான் நாங்கள் இணைந்து செயல்பட்டோம். இப்போது நாங்கள் உடனடியாக திடீரென்று விலகிவிடவில்லை. இப்போது பிரிந்த இந்த இரண்டு அமைப்புகளும் ஏறத்தாழ 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இருவரும் இணைந்து வேலை செய்வது சிக்கலாக இருக்கும் என்று கருதி அப்போதே நான் முன் வைத்ததுதான் இரண்டு இயக்கங்களாக இயங்கலாம். தேவைப்பட்ட போது கூட்டு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பது 2005 டிசம்பரிலேயே முன் மொழிந்தேன். ஆனாலும் எங்களுக்குள்ள, இயக்கத் திற்குள்ள தேவையை, அதன் வேலையை கருதிதான் 7 ஆண்டுகள் மெல்ல மெல்ல நாங்கள் பிரிந்து போய் விடாமல் அப்படியே அதை நீட்டித்துக் கொண்டு வந்தோம். நீங்கள் சுட்டிக்காட்டிய கருத்துதான் அதற்குக் காரணம்.

ஜென்ராம் - உங்களுடைய கொள்கையின்படி ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ள முரண்பாட்டை பகை முரண்பாடாக பார்க்கலாம். திராவிடர்களுக்கு இடையில் உள்ள முரண்பாடு நட்பு முரண்பாடாகத்தான் இருக்க முடியும். நட்பு முரண்பாடு இருக்கும் போது ஒரு கையால் அணைத்துக் கொண்டே ஒரு கையால் திருத்துவதற்கான முயற்சி தான் சரிங்கிறது சிலருடைய நம்பிக்கை. அந்த அணுகுமுறை தோற்று போச்சுன்னு நீங்க நினைக்கிறீங்களா?

கொளத்தூர் மணி - இல்லை. அப்படி இல்லை. முன்னுரிமை என்று இன்னொரு சொல்லை ஏற்கெனவே சொன்னேன். எதற்கு முன்னுரிமை தருவது? பெரியார் இயக்கம் என்பது பகுத்தறிவு இயக்கமா ஜாதி ஒழிப்பு இயக்கமா? இதில் இரண்டு கருத்துக்களையும் பெரியார் பேசினார். பகுத்தறிவும் பேசினார். ஜாதி ஒழிப்பும் பேசினார். நாங்கள் ஜாதி எதிர்ப்புக்கும் ஜாதி ஒழிப்புக்கும் முன்னுரிமை கொடுக்கிறோம். அதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறபோது, அதில் அவர்கள் பின் தங்கி நிற்கிற போது எங்கள் வேகம் குறைகிறது என்று நினைக்கிறோம் எனவே, வேகமாக முன்னெடுத்துச் செல்வதற்கு தனி அமைப்பு கண்டிருக்கிறோம்.

ஜென்ராம் - பார்வை இல்லாத 5 பேர் யானையை தடவிப்பார்த்து ஆளுக்கொன்றை சொல்வதுபோல பெரியாரை எங்களைப் போன்ற சாதாரண நிலையிலிருப்பவர்கள் புரிந்து கொள்வதிலேயே அந்த சிக்கல் இருக்கிறது. ஆனால் பெரியாருடைய தொண்டர்களாக அவருடைய இயக்கத்தின் வழி வந்தவர்களாக இருப்பவர்களிடையேகூட முன்னுரிமையில் பெரியாருடைய பார்வையில முன்னுரிமையில் சிக்கல் வருது என்றால் அதை எப்படி புரிஞ்சுக்கிறது

கொளத்தூர் மணி - இருக்கத்தான் செய்யும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938-இல் வந்தது. அப்போது பெரியாரோடு சேர்ந்து தமிழறிஞர்கள் எல்லாம் போராடினார்கள். அப்போது பெரியாரோடு இணைந்தவர் களுக்கு பெரியாருடைய மற்ற கொள்கைகளை விடவும் கூட தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் ஆதரவு என்ற சிந்தனை அதிகமாக இருந்தது. அடுத்து 57-இல் ஜாதியை காக்கிற சட்ட எரிப்புப் போராட்டம்.. அந்த நேரத்தில் பெரியார் இயக்கத்திற்கு வந்தவர்களுக்கு ஜாதி எதிர்ப்புக் கொள்கை கூடுதலாக இருக்கும். 80-களுக்கு பின்னால் வந்தவர்களுக்கு ஈழ ஆதரவு கொள்கை கூடுதலாக இருக்கும். கூடுதலாக இருக்கும் என்பதுதானே தவிர எல்லோருக்கும் அந்த கொள்கை உண்டு. எது கூடுதல், குறைதல் என்பதில்தான் சிக்கல்.

ஜென்ராம் - நீங்க இருந்த அமைப்புகள் எல்லாம், அதாவது பெரியாருடைய வழி வந்த அமைப்புகள் எல்லாமே திராவிடர் கழகம் என்ற அந்த சொற்களையே பயன்படுத்தறீங்க. தி.மு.க, அ.தி.மு.க, மறுமலர்ச்சி தி.மு.க எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் அப்படின்னுதான் சொல்றாங்க. திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தறது இல்லை. இந்த இரண்டுக்கும் உண்டான அடிப்படை வேறுபாடு என்ன?

கொளத்தூர் மணி - தி.மு.க பிரிந்தபோது, முதல் கூட்டம் ராபின்சன் பூங்காவில் நடந்தது. அந்த கூட்டத்தில்தான் அண்ணா அப்போதே பேசினார். ~எங்கள் கட்சியின் பெயரில் ~ர்| இல்லை என்பதை கவனியுங்கள்| என்பதை குறிப்பிட்டே பேசினார். திராவிடர் என்பது மக்களை குறிக்கும் சொல். திராவிடம் என்பது மண்ணை குறிக்கும் சொல் என்று பேசினார். ஆரியர், திராவிடர் என்று மக்களை பிரித்து அந்த பண்பாட்டுப் புரட்சிக்கு அடிகோலியவர் பெரியார்;. அண்ணாவைப் பொருத்தவரை திராவிடத்தை தெற்கு, வடக்கு என்பதாக பிரித்துதான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை வைத்தார். அவர்கள் வடவர் ஆதிக்கத்தில் இருந்து திராவிடத்தை, தமிழகத்தை முன்னேற்று வதற்கான செயல் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக தான் வெளிப்படுத்திக் கொண்டார்கள். பெரியார் கூறிய ~திராவிடர்| மக்களுடைய பண்பாட்டுப் புரட்சியைப் பொருத்தது. அண்ணா கூறிய ~திராவிட| அரசியல் வழிகளை பொருத்தது.

ஜென்ராம் - மக்களை பிரித்துப் பார்ப்பது என்று சொல்றீங்களே... எந்த அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது? பிறப்பின் அடிப்படையிலா?

கொளத்தூர் மணி - பிறப்பின் அடிப்படையில் என்பதை பெரியார் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆரியர் திராவிடர் என்பது குறித்து பெரியார் சொல்வார், ரத்த பரிசோதனை செய்து நாங்கள் மக்களை பிரிக்கவில்லை. எனக்கு தெரியும். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களுடைய நேரடி வாரிசுகள் இல்லை இப்போது இங்கு இருக்கிற ஆரியர்கள் என்பது நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் பண்பாட்டு தளத்தில், ஆச்சார அனுஷ்டானங்களில் பிரிந்து இருக்கிறார்கள் என்றுதான் பெரியார் சொல்வார்.. ஆச்சார அனுஷ்டானங்களில் உள்ள பிரிவினைதான் என்னை பிரித்துப் பேசச் சொல் கிறதே தவிர, ரத்தத்தைப் பார்த்து ரத்த சுத்தத்தைப் பார்த்தெல்லாம் நான் இனத்தைப் பிரிக்கவில்லை. அது கூடாது என்று சொல்பவன் நான் என்றுதான் பெரியார் சொல்லியிருக்கிறார். ஆரியர்களுடைய பண்பாடு என்பது மக்களை பிரிப்பதும், படிவாரியாக வைப்பதும், இழிவுப்படுத்துவதுமாக இருக்கிறது. அந்த பண்பாட்டுக்கு எதிரானதே பெரியார் போராட்டம்.

ஜென்ராம் - திராவிடர்களை இனம் என்று சொல்வதற்கு இல்லை. இனம் என்று சொன்னாலே, உலகத்தில் மூன்றே மூன்று இனங்கள்தான். வெள்ளை இனம், கறுப்பர் இனம், மங்கோலிய மஞ்சள் இனம் அப்படின்னு மூன்றுதான் இருக்கு. அதனால் அதை தாண்டிய எல்லா இனங்களும் கலப்பினங்களே அப்படிங்கிற வாதம் இப்ப தமிழ்நாட்டில்... அதிகமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்றீங்க அரசியல் தளத்தில?

கொளத்தூர் மணி - திராவிடர் என்பதை இதற்கான அடையாளச் சொல்லாக, குறிச் சொல்லாக பெரியார் குறிப்பிட்டார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த போது, அதில் வெறும் பார்ப்பன எதிர்ப்பு என்பது பதவிகளில், கல்வி நிலையங்களில், அரசியலில், பார்ப்பனர்கள் இருப்பதை பிடிக்காதவர்கள் மட்டும் செய்ததாகத்தான் அந்த பார்ப்பனர் அல்லாதார் என்ற குறிச்சொல் சொன்னது. பெரியார் சொன்ன திராவிடர் என்ற குறிச் சொல்லில் பண்பாட்டுத் தளங்களிலும் திருமணங்களில், புதிய முறைகளை கொண்டு வர வேண்டும் வாழ்வியலின் எல்லா நிலைகளிலும் நாம் புதிய பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு பெண்ணடிமை ஒழிப்பு ஜாதி ஒழிப்பு எல்லாவற்றையும் உள்ளடக்கிய சொல்லாக திராவிடர் என்பதை வைத்தார். பார்ப்பனர் அல்லாதார் என்பது வெறும் ஒரு பிரிவை ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் ஆட்சியில் உட்கார வேண்டும், பதவியில் உட்கார வேண்டும் என்பது போல தொனித்ததால் அதற்கு பதிலாக திராவிடர் என்ற இந்த குறிச்சொல்லை பெரியார் வைத்தார்.

ஜென்ராம் - பிற மொழி பேசறவங்களையும் நீங்க திராவிடர் என்ற பட்டியலுக்குள்ள சேர்த்துட்டு வந்துட்டீங்க.. அவர்கள் தமிழர்கள் என்று அறியப் படுபவர்களை அடிமைப் படுத்துவதற்காக அல்லது அவர் களையும் மீறி எல்லாப் பதவிகளையும் பிடிப்பதற்கான முயற்சியில் அவங்க இருக்கிறாங்க.. எனவே இப்ப திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்ற முழக்கத்தை முன் வைத்து அரசியல் இயக்கங்கள் இங்க வந்துட்டு இருக்கிறாங்களே...

கொளத்தூர் மணி - அப்படி பேசுவோரில் இரண்டு தரப்பினரைச் சொல்லலாம். ஒரு தரப்பு, நேரடியாக தி.மு.க. அண்ணா தி.மு.க என்று விமர்சிக்க தயங்குபவர்கள் அல்லது அஞ்சுபவர்கள் திராவிட எதிர்ப்பு என்று பேசுகிறார்கள். குறைந்த அளவு திராவிட அரசியல் கட்சிகள், தேர்தல் கட்சிகள் என்றாவது சொல்ல வேண்டும். அதையும் சொல்வதில்லை. பெரியாரை பொருத்த வரை அரசியல் விடுதலை என்று வந்தபோது தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசினார். சமூக விடுதலை என்று வருகிற போதுதான், ஆரியப் பண்பாடு திராவிடப் பண்பாடு என்று பிரித்துப் பேசினார். இன்னும் சொல்லப் போனால், ஆரிய புராணங்கள் சாஸ்திரங்கள் சொல்வதைப் போல சூத்திரர்களுக்கான மறு பெயராக திராவிடரை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கிறார்கள். கன்னடத்திலும் சூத்திரர்கள் உண்டு. இன்னும் சொல்லப் போனால், ஜெகஜீவன்ராம் ஒரு முறை அமைச்சராக இருந்த போது இங்கு வந்த போது சொன்னார்,“I am a Dravidian from Bihar” என்றுச் சொன்னார். பார்ப்பனப் பண்பாட்டால் அடிமைப்படுத்தப்பட்ட இழிவுபடுத்தப்பட்ட சமுதாயங் களை எல்லாம் குறிக்கிற சொல்லாக திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தி பெரியார் ஒரு புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்தார் என்று சொல்ல வேண்டும்.

ஜென்ராம் - தலித் விடுதலையை தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிடர் இயக்கம். தலித் விடுதலை இயக்கத்தில் இருக்கக் கூடிய போர்க் குணத்தை நீர்த்துப் போகச் செய்தது திராவிடர் இயக்கம் என்கின்ற விமர்சனத்தை நீங்க எப்படி பார்க்கறீங்க?

கொளத்தூர் மணி - எப்படி என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பெரியாருடைய இயக்கம் 27-இல் தொடங்கியது என்றாலும் கூட... 1950-களில் ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடைய இழி தொழில்களை கைவிட்டு விட வேண்டும் பறையடிக்கச் செல்லக் கூடாது, சாவுச் செய்தி சொல்லக் கூடாது என்று திராவிடர் கழகம்தான் அந்தப் பகுதிகளில் எல்லாம் பரப்புரை செய்தது. இன்னும் சொல்லப் போனால் அப்படி ஒரு பரப்புரையின் காரணமாக மாதிரிமங்கலம் என்றப் பகுதியில் திராவிடர் கழகத் தோழர் .. அவர் தாழ்த்தப் பட்டவர் அல்ல.. அந்த போராட்டத்தை முன்னெடுத்ததால் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்டார். அப்படி இழிவான செயல்களை எல்லாம் செய்யக் கூடாது என்று பேசி வந்த இயக்கம். போராடி வந்த இயக்கம். அதை ஒழித்த இயக்கம்... பெரியார் இயக்கம். இன்னும் சொல்லப் போனால். தலித் இயக்கங்கள்கூட அப்படிப்பட்ட முயற்சிகளில் எதுவும் ஈடுபடுவதாக நான் அறியவில்லை.

ஜென்ராம் - 1920-இல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போதிலிருந்துதான் தலித் உரிமைகளுக்கானப் போராட்டமும் தொடங்கியது என்று சொல்வதே அதற்கு முன்னர் தலித் விடுதலைக்காகப் போராடிய தலைவர் களை அவமதிப்பதாகும் என்று சொல்லப்படுகிறதே.

கொளத்தூர் மணி - அப்படி இல்லை. இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக.. நீண்ட காலமாக இருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. போராட்டம் என்பது திடீரென்று ஒரு புள்ளியில் தொடங்க முடியாது. முன்னோர்கள் எடுத்துச் சென்றதின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும். வீச்சாக எடுத்துச் சென்ற காலம் என்று சொல்லலாமே தவிர அப்போதுதான் தொடங்கியது என்று சொல்வது சரியான செய்தி அல்ல.

ஜென்ராம் - அயோத்திதாசப் பண்டிதர், .இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா ஆகிய தலித் தலைவர்களுடைய அயராத உழைப்பை திராவிடர் இயக்கத்தவர்கள் மறைக்க முயற்சிக்கிறார்கள் அப்படின்னு அவங்க எழுதறாங்க.

கொளத்தூர் மணி - அதை நான் தவறு என்று சொல் வேன். இன்னும் சொல்லப் போனால் அயோத்திதாசரைப் பற்றி, இரட்டை மலை சீனிவாசனே, இத்தனைக்கும் இவர் அயோத்திதாசரின் மைத்துனர்தான். அவர் வாழ்க்கைக் குறிப்பில் எங்கும் அயோத்திதாசரைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை. திரு.வி.க. எழுதியிருக்கிறார் அயோத்திதாசரைப் பற்றி.. பலக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரை ஒரு மருத்துவர் என்பதாகத்தான் எழுதியிருக்கிறாரே தவிர அவருடைய இயக்க செய்திகளை அவர் பதிவு செய்யவில்லை. திட்டமிட்டு மறைத்ததாக அல்ல. அவர்கள் எந்த பார்வையில் பார்த்தார்களோ அதை மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள். பெரியார், அதற்கு பின்னால் அயோத்திதாசருடைய தமிழன் பத்திரிகை மீண்டும் வந்த போது ~அயோத்திதாசர் எழுதி வந்த தமிழன் பத்திரிகை மீண்டும் வருகிறது| என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அயோத்திதாசரின் மாணாக்கராக இருந்த அப்பாதுரையார், பெரியாருடன் நெருக்கமான நட்பு வைத்திருந்து, அவர்கள் இருவரும் இணைந்து பல வேலைகள் செய்திருக்கிறார்கள. அப்படிப்பட்டப் பார்வையோ மறைக்க வேண்டுமென்றோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் அண்மைக் காலங் களில்தான் அயோத்திதாசரைப் பற்றி தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களே கூட பேசத் தொடங்கியிருக்கின்றன. அதற்கு முன்பு அவர்கள் கூட பேசவில்லை. காரணம் அயோத்திதாசர் நடத்திய ஏடுகள் வெளியே வரவில்லை. அவருடைய எழுத்துக்கள் மக்களுக்குத் தெரியவில்லை. பெயர் தெரிந்தது. அவருடைய சிந்தனையும் எழுத்தும் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின்னால் எல்லோரும் பேசுகிறார்கள், அவ்வளவுதான்.

ஜென்ராம் - கீழ்வெண்மணியில் 42 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட காலத்திலும் கூட திராவிடர் கழகம் தலித் மக்களுடைய பக்கம் நிற்கவில்லை. ~கம்யூனிஸ்டுகள் அங்கு கலகம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்கள் தூண்டிய கலகத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டார்கள்| அப்படின்னு திராவிடர் கழகம் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது

கொளத்தூர் மணி - ஆனால் உண்மை நிலை என்னவென்றால், அதற்கு பின்னால் அந்த கொடுமைக்குக் காரணமாக இருந்த கோபால கிருஷ்ணன்... கோபால கிருஷ்ண நாயுடு வெட்டிக் கொல்லப்பட்டார். அதில் 13 தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆறு மாதத்தில் கைது செய்யப் பட்டார்கள். அதில் 12 பேர் திராவிடர் கழகத்துக்காரர்கள். ஒருவர் மட்டும்தான் கம்யூனிஸ்ட். 12 பேருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் போய் தண்டனை தள்ளுபடியாகி, வழக்கே தள்ளுபடியாகி விடுதலை ஆனார்கள். அந்த இயக்கத்திற்கு, அந்த கொலைக்கு முன்னின்று செய்தவர் என்பதற்காக கைது செய்யப்பட்ட காலாக்குடி மதி என்கிற திராவிடர் கழக இளைஞர் அணித் தலைவர், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அல்ல. கைது செய்யப் பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் சமுதாயத்தைச் சேராதவர்களாக இருந்தார்கள். திராவிடர் கழகம் வேலை செய்தது. ஆனால் வரலாற்றில் பதிவு செய்யத் தவறிவிட்டது. இப்போது நாங்கள் அந்த வேலையை களப்பணி செய்து செய்திகள் சேகரித்து விரைவில் அந்த வரலாறுகளை நூலாக வெளிக் கொண்டுவர இருக்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதை பற்றிய முழு விவரங்களோடு நூலைக் கொண்டு வர இருக்கிறோம்.

ஜென்ராம் - கூலியை உயர்த்துறோம் வாழ்வை வளமாக்குறோம் என்று சொல்லி உங்க உயிரை பலி வாங்கிக்கிட்டு இருக்காங்க. கலகம் செய்ய தூண்டுது கம்யூனிஸ்டுக் கட்சி. அது போக.. இரண்டணா கூலி அதிகமா கொடுத்துட்டா நாலணா பொருளில் விலையை கூட்டிருவான் முதலாளி. அதனால் கூலி உயர்வுப் போராட்டங்கள் ஏற்க கூடியதல்ல. அதை நீங்க புரிஞ்சு நடந்துக்கணும் அப்படின்னு பெரியார் பேசியதாகவும் அவர்கள் பதிவு செய்யறாங்க.

கொளத்தூர் மணி - அப்போது அல்ல. அதற்குப் பின்னால்தான் பெரியார் பேசியிருக்கிறார். அந்த நேரத்தில் சொல்ல வில்லை. கலகத்தை உண்டாக்குவதற்காக சில பேர் செய்கிறார்கள் என்று எழுதுகிறார். கடைசி வரைக்கும் பெரியார் அதைத்தான் சொன்னார். கூலி உயர்வு என்பது எந்த விதத்திலும் தொழிலாளர்களுக்கு பயன்படாது என்ற கருத்து பெரியாருக்கு இறுதி வரை இருந்தது. காரணம்.. அந்த கூலி உயர்வின் போது முதலாளிகள் விலையை உயர்த்தி விடுகிறார்கள். அந்த கூலி உயர்வே பயனற்றுப் போகிறது. நீங்கள் பங்காளிகளாக முயற்சி செய்யுங்கள் என்று பெரியார் வலியுறுத்தினார். தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்கள்; தொடங்கிய போதுகூட கலைஞரிடம் வேண்டுகோள் வைத்தார். நீங்கள் தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக மாற்றுங்கள். அவர்களுக்கு பொறுப்பும் இருக்கும். அவர்களுக்கு உரிமையும் இருக்கும் என்று பேசியவர் பெரியார். கலைஞர், சேரன் போக்குவரத்துக் கழகத்தில் அப்படி செய்தார்;. அப்படிப்பட்ட பார்வையே பெரியாருக்கு இருந்தது. அதையேதான் அப்போதும் சொல்லியிருக்கிறார்.

ஜென்ராம் - உழைப்பின் உபரி மதிப்புதான் இலாபம் அப்படிங்கிற கோட்பாட்டை முன் வைத்தவர்களை நீங்க ஏற்கலை?

கொளத்தூர் மணி - நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறோம். அதில் கருத்து மாற்றமில்லை. ஆனால், அப்படிப்பட்டப் பொருளாதாரச் சட்டங்களில் கட்டுப்பட்டு இருக்கவில்லை. நம்ம இந்திய பொருளாதாரம் இந்திய சமூகம் என்பது அந்த தத்துவத்துக்குள் கட்டுப்பட்ட சமூகமாக இருக்க வில்லை. மற்ற நாடுகளில் தொழிலாளி முதலாளி மட்டும் இருந்தார்கள். பெரியார் கூட மார்க்சினுடைய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை மொழிப் பெயர்த்து வெளியிட்டார்... தனது ~குடிஅரசில|;. இந்திய மொழிகளில் தமிழில்தான் முதலில் அது மொழிப் பெயர்க்கப்பட்டது. மொழிப் பெயர்த்தவர் பெரியார். வெளியிட்ட ஏடு குடிஅரசு. அதில் ஒன்றை எழுதுகிறார். கூடுதலாக இங்கு ஜாதி என்ற ஒன்றும் இருக்கிறது.. என்ற முன்னுரையை எழுதிவிட்டுதான் அதை வெளியிட்டார். எனவே அந்த கூடுதலாக இருக்கிற ஜாதியத்தை அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற குறை உண்டே தவிர.. நாங்கள் பொதுவுடைமை கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள்தான்.

ஜென்ராம் - பொதுவுடைமை கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறீர்கள். பெரியார் முன் வைத்த மாதிரி சாதி இருக்கு என்பதையும் சாதிய முரண்களை தீர்ப்பதற்கான கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் முன் வைக்கவில்லை. இணைத்து செயல்படவில்லை என்பது ஒரு புறம் இருப்பது மாதிரி, சமூக சீர்;திருத்த இயக்கங்கள் பொருளாதார பார்வையை தங்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை என்ற பார்வை சரியானதா?

கொளத்தூர் மணி - உண்மைதான். அந்த குற்றச்சாட்டு உண்மைதான். இடைக்காலத்தில் அது இல்லாமல் போய் விட்டது. ஆனால் எங்கள் காலத்தில் நாங்கள் பார்ப்பனிய இந்திய தேசிய பன்னாட்டுச் சுரண்டலுக்கு எதிரான அமைப்பாக எங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தைக் கொண்டுச் செல்கிறோம்

ஜென்ராம் - திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பார்வையில் இருக்கிறது. சரி. ஆனால் பிற பெரியார் இயக்கங்கள் பழைய பார்வையிலேயே...

கொளத்தூர் மணி - இல்லாமல்தான் இருந்தது. பெரியார் காலத்தின் இறுதி காலத்தில் கூட இதுபற்றி கூடுதலாக பேசப்படவில்லை என்பது உண்மைதான்.

ஜென்ராம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா தி.மு.க. தற்போது விஜயகாந்த் தொடங்கிய கட்சி என எல்லாக் கட்சிகளிலும் திராவிட என்னும் சொல் இருக்கிறது. இந்த கட்சிகளைதான் தமிழ்நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரிக்கிறார்கள். இந்த தலைவர்களை தான் நம்பறாங்க. இந்த கட்சிகளுக்குதான் வாக்களிக் கிறாங்க. இவர்கள் எல்லோரும் திராவிட என்ற கோட் பாட்டைப் புரிந்து கொண்டு ஆதரிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

கொளத்தூர் மணி - இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக திராவிடர் கழகமே கூட ஒரு தனி அமைப்பாகத் தொடங்கி விடவில்லை. ஏற்கெனவே அதை சுயமரியாதை இயக்கமாக பெரியார் நடத்தினார். காலப்போக்கில் பெரியார் நீதிக்கட்சிக்கும் தலைவராக வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏற்கெனவே தேர்தலில் ஈடுபட்டு அமைச்சர் பதவிகளில் எல்லாம் இருந்த கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டினார்கள். தலைமையை கொடுத்தார்கள் பெரியாரிடம். அதுவும் நீதிக்கட்சி தோல்வியடைந்த பின்னால் இவரிடம் கொடுத்தார்கள். நீதிக்கட்சி என்கிற அரசியல் கட்சியையும்.. சுயமரியாதை இயக்கம் என்கிற பண்பாட்டுப் புரட்சி இயக்கத்தையும் ஒன்றாக இணைத்துதான் அவர் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார்.

49-இல் தி.மு.க பிரிந்த போது, பழைய நீதிக்கட்சி பாரம்பரியம்.. தேர்தல் அரசியலில் அக்கறை உள்ளவர்கள், ஈடுபாடு உள்ளவர்கள்... அவர்கள் அந்த அமைப்பாக போய்விட்டார்கள். சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் தொடர்ச்சியாக திராவிடர் கழகமாக இருக்கிறார்கள். அப்ப முற்று முழுதாக அவர்கள் தேர்தல் அரசியல் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இவர்கள் பண்பாட்டுப் புரட்சியில் அக்கறை கொண்டவர்களாகவும் இரண்டு இயக்கங்களும் தனித்தனியாகதான் இயங்குகின்றன. பெயரில் திராவிட என்று இருக்கிறதே தவிர அவர்களுக்கு பெரியாருடைய தத்துவங்களை பண்பாட்டுப் புரட்சி செயல்பாடுகளை எதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டவர்களாக இல்லை. அண்ணா காலத்தில் தேர்தலில் ஈடுபடுகிற வரைக்கும் பேசினார்கள். அதற்கு அப்புறம் பேசவில்லை. அவர்களுக்கு தேர்தல் வெற்றி முக்கியமாக இருந்தது. கொள்கை முக்கியமாக இருக்கவில்லை. பெரியாருடைய பண்பாட்டுப் புரட்சிக் கொள்கை முக்கியமாக இருக்கவில்லை.

ஜென்ராம் - பெரியாருடைய பிற கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறார்களா?

கொளத்தூர் மணி - அதாவது... இவர்கள் தமிழர் முன்னேற்றம் என்பது, பார்ப்பனர் அல்லாத மக்களின் முன்னேற்றம் என்பதில், இட ஒதுக்கீட்டில் அக்கறை கொண்டு செயல்பட்டார்கள். அடித்தட்டு மக்களுக்கான நல உதவித் திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதெல்லாம் செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பண்பாட்டுப் புரட்சியில் அவர்கள் ஈடுபடவில்லை.

ஜென்ராம் - 1967-இல் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட திராவிட இயக்க வழி வந்தவர்களின் ஆட்சியில் 11 சட்டமன்றங்கள் இருந்திருக்கிறது. அந்த 11 சட்டமன்றங்களும் நினைத்தால் பண்பாட்டுத் துறையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை அப்படின்னு நீங்க சொல்வீங்களா?

கொளத்தூர் மணி - சொல்லலாம். அதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பது உண்மைதான். அண்ணா காலத்தில் சில சட்டங்களை.. சுயமரியாதை திருமணம் என்பது செல்லாமல் இருந்த திருமணத்தை சட்டப்பூர்வ திருமணமாக்கினார். பெரியார் சொன்னார், தமிழர்கள் மட்டும் தனியாக வசிக்கிற பகுதியை பிரித்த பின்னாலும் சென்னை ராஜ்ஜியம் என்று ஏன் பெயர் இருக்க வேண்டும்? அதை தமிழ்நாடு என்று ஏன் ஆக்கக் கூடாது என்று பெரியார் குரலெழுப்பி வந்தார். அதை ஏற்றுக் கொண்டு அண்ணா தமிழ்நாடு என்று மாற்றினார். இப்படிப்பட்ட மாற்றங்கள் அண்ணா காலத்தில் செய்யப் பட்டது. அதற்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்திட்டங்களில் அக்கறை கொண்டார்களே தவிர பண்பாட்டுப் புரட்சியில் ஈடுபட வில்லை. கலைஞருடைய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தைத் தவிர வேறு ஏதும் குறிப்பிடத்தக்கதாய் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

ஜென்ராம் - தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறாங்க. வாக்களிக்கிறாங்க. அந்த கட்சிகளுடைய தலைமைகள் கூட பெரியார் கொள்கையை பெரிதாக பண்பாட்டுத் தளத்தில் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இன்றைய சமூகச் சூழலில் பெரியாருடைய தேவை, பெரியாருடைய கொள்கைகளுடைய தேவை இன்னும் தீவிரமாக தேவை அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க?

கொளத்தூர் மணி - நிச்சயமா அதிகமாக உழைக்க வேண்டும். வேலை செய்தாக வேண்டும். அண்மைக் கால நிகழ்வுகள் இன்னும் அதை உறுதிப்பட செய்கிறது.

ஜென்ராம் - அந்த அண்மைக்கால நிகழ்வுகளுக்குதான் போகத் தூண்டுது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலைமை வரும்னு நீங்க ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் நினைச்சுப் பார்த்திருப்பீங்களா?

கொளத்தூர் மணி - நினைத்துப் பார்க்கவில்லை யாரும். இவ்வளவு மோசமான ஒரு சூழல் ஏற்படும். இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்று நாங்கள் கருதி பார்க்கவில்லை. வழக்கமாக ஒரு சமுதாயம், எந்த இயக்கமும் இல்லை என்றாலும் அது முன்னேற்றப் பாதையில்தான் முன்னோக்கிதான் சென்று கொண் டிருக்கும். எங்களைப் போன்ற சமுதாய இயக்கங்கள் அந்த வேகத்தை விரைவு படுத்துவதற்குதான் ஆகுமே தவிர இயல்பாக எல்லா சமுதாயத்திலும் முற்போக்கு திசையில் மாற்றங்கள் நடக்க வேண்டியதுதான். ஆனால் இந்த கட்சிகள், சில ஜாதிக் கட்சிகள், சில அமைப்புகள் இப்போது சமுதாயத்தின் காலை பிடித்து பின்னோக்கி இழுக்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னும் நாம் வேகமாக அழுத்தமாக பணியாற்ற வேண்டும் என்பதைதான் அது நமக்குச் சொல்கிறது.

ஜென்ராம் - அவர்கள் தமிழ்த் தேசியம் பேசறாங்க. திராவிடத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்றாங்க. அவங்க பேசற தமிழ்த் தேசியத்திற்கும் நீங்க பேசற தமிழ்த் தேசியத்திற்கும் இடையில என்ன வேறுபாடு?

கொளத்தூர் மணி - பெரியாரை பொருத்த வரை தேசியம் என்ற சொல்லை தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை என்ற அர்த்தத்தில் சில இடங்களில் பயன்படுத்தி யிருந்தாலும் கூட அவரைப் பொருத்தவரை அவர் பேசியது தனித்தமிழ்நாடுதான். ஜாதி ஒழிந்த சமுதாயம் அமைவதற்கு ஒட்டுமொத்த இந்தியம் என்பது தடையாக இருக்கும் என்று அவர் கருதினார். இந்தியா என்ற துணை கண்டத்தில் இருந்து தமிழ்நாடு பிரிந்து வந்துவிட வேண்டும். அதுதான் ஒரு சமத்துவ சமுதாயத்தை படைப்பதற்கு வழி வகுக்கும் என்று கருதினார். அதற்காக அவர் பேசினார். எழுதி வைக்கப்பட்டத் தத்துவங்கள் சிலவற்றைக் கொண்டு தேசிய இனங்களைப் பற்றி தத்துவம் இருக்கிறது. அதன்படி நமக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். என்று பேசுபவர்கள் இப்போது அதையே பேசுகிறார்கள். அவர்களிடம் எங்களுக்கும் கேள்வி இருக்கிறது. நாங்கள் கூட பேசுவது உண்டு. இந்தியா விடுதலை பெற்றால் எல்லாம் தீர்ந்து விடும் என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். அன்னியனை விரட்டிவிட்டால் போதும் என்று சொன்னார்கள். இப்போதும் சொல்கிறார்கள். இந்தியனை விரட்டிவிட்டால் போதும். தமிழனாகிவிட்டால் வந்துவிடும் என்று.

சமுதாயத்தில் மாற்றத்தைப் பற்றிய அக்கறை இல்லாத விடுதலை என்பதே தேவையற்றது என்றே நாங்கள் கருதுகிறோம். சமூக விடுதலையோடு கூடிய தேசிய இன விடுதலைதான் சரியானதே தவிர வெறும் தேசிய இனம் மட்டும் விடுதலைப் பெற்றால் அடிமைகள் தொடர்ந்து அடிமை களாகத்தான் இருப்பார்கள். நாங்கள் கூட அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசுகிற போது ஒரு ஜாதியவாதி கேட்டார்.... தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பற்றி பரப்புரை செய்கிற போது நீங்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை பற்றிப் பேசுங்கள், கடவுள் இல்லை என்று பேசுங்கள், இட ஒதுக்கீடை பற்றி பேசுங்கள்.. எப்போது பெரியார் இரட்டைக் குவளைக்கு எதிராக பேசினார் என்று கேட்டார். காவிரி நீர் உரிமைக்கு பேசுங்கள் என்றார். அப்போது நாங்கள் சொன்னோம். காவிரி நீர் உரிமைக்கு போராடத் தயார். கர்நாடகக்காரன் காவிரி நீர் தரவில்லை என்பதற்குப் போராடுகிறோம். நீங்கள் உங்கள் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர் தர மறுக்கிறீர்கள். நான் பேசிய அந்த கிராமத்தில் அந்த பஞ்சாயத் தினுடைய தலைவராக இருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். அவர் தன்னுடைய பகுதிக்கு அரசு செலவில் அமைத்திருந்த குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர் ஆதிக்க சாதியினர். உள்ளுரில் இருக்கிற தண்ணீரை உள்ளுரில் உள்ள இன்னொரு தமிழனுக்கு கொடுக்க மறுக்கிற உங்களுக்கு கர்நாடகத்துக்காரன் தண்ணீர் தரவில்லை என்பதற்காக எதிர்த்துப் போராடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் பேசினோம். நாங்கள் பேசுவது... மற்றவர்களிடமிருந்து வெறும் விடுதலை பெறுவது அல்ல. ஒட்டுமொத்த மக்களும் விடுதலை பெற்ற விடுதலையை தான் பெரியார் தனித்தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். எங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகள் பேசும் தமிழ்த் தேசியத்துக்கும் வேறுபாடு இருக்கிறது.

ஜென்ராம் - கடவுள் நம்பிக்கை தொடர்பாக இருக்கக் கூடிய தமிழ்ச் சூழலை இன்று எப்படி நீங்க பார்க்கறீங்க.

கொளத்தூர் மணி - கடவுள் நம்பிக்கை என்பது இருக்கிறது. ஆனால் அதனுடைய தன்மை குறைந்து விட்டது. Quality குறைந்துவிட்டது என்பதுதான். Qualitative change இருக்கிறது. அந்த காலத்தில் கடவுளை நம்பியதைப் போல இப்போது நம்பத்தயாராக இல்லை. அய்யப்பன் கோயிலுக்கு போகிறார்கள். 48 நாள் விரதத்தை, முப்பதாக குறைத்து பதினைந்தாக குறைத்து இரண்டு நாள் விரதம் என்று போகத் தொடங்கி யிருக்கிறார்கள். ஆக அந்த அளவில் குறைந்திருக்கிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம். நம்பிக்கை இருக்கலாம். தன்மை குறைந்திருக்கிறது.

ஜென்ராம்- தமிழ்த் தேசியம், தமிழ், தமிழர் விடுதலை இதைப் பற்றி பேசக்கூடியவர்கள் மத்தியிலே கூட கடவுள் நம்பிக்கை இருக்கிறதையும் பார்க்க முடிகிறது.

கொளத்தூர் மணி - இருக்கலாம். இருக்கும். இருக்கிறது.

ஜென்ராம் - நீங்கள் ஒத்த கருத்துள்ளோரோடு ஒரே அணியாக செயல்படும் போது அந்த தளத்தில் செயல்படுவதற்கான சாத்தியம் எவ்வளவு தூரம்? இல்லை வேறுபடும் புள்ளிகளை பற்றி பேசுவதில்லையா?

கொளத்தூர் மணி - ஒன்றுபடும் புள்ளிகளை இணைத்துதான் ஒரு பொது செயல்திட்டத்தில் செயல்பட முடியும். இப்போது முல்லைப் பெரியாறுக்காக போராடிய போது அதை மட்டும் முன்னிறுத்திதான், அந்த கருத்துள்ளவர்கள் எல்லாம் இணைந்துக் கொண்டோம். காவிரி உரிமைன்னா அந்த கருத்து உள்ளவர்கள்.. ஈழப் பிரச்னைனா அந்த கருத்தில் ஒற்றுமை உள்ளவர்கள் எல்லாம் கலந்து பேசுகிறோம். அப்போது நாங்கள் கடவுள் நம்பிக்கையை ஒரு தடையாக வைப்பதில்லை. அப்ப எல்லோரும்.. இந்த கருத்தில் ஒற்றுமை உள்ளவர்கள் வாருங்கள் போராடலாம். அடுத்தடுத்து செயல்படும்போது ஒற்றுமை இல்லை யென்றால்.. அவர்களை தவிர்த்துவிட்டு நாங்கள் வேறணி அமைத்துக் கொள்கிறோம்.

ஜென்ராம் - பெண்ணடிமைத்தனத்தை போக்குவதற்காக பெண் விடுதலை அல்லது பெண்ணை சமமாக சமூகத்தில் நடத்துவது போன்ற விஷயங்களில் இன்றைய தமிழ்ச் சூழல் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

கொளத்தூர் மணி - படித்த பெண்கள் மத்தியில் அந்த கருத்து வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான். இப்போது சமூக இடைவெளி இருக்கிறது. முதல் தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் இடையில் சில உரசல்களும் நடந்து கொண்டிருக்கிறது என்பதே கூட இவர்கள் உரிமையின் பால் சென்று கொண்டிருக் கிறார்கள். உரிமையை அவர்கள் கைப்பற்றுவதை விடாமல் தடுக்க பெற்றோர்கள் மூத்தவர்கள் எல்லாம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. இப்போதைய பெண்களுக்கு சுதந்திர உணர்வு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள் என்பது என்னுடைய கருத்து.

ஜென்ராம் - தமிழ்த் தேசியம் திராவிடர் வேறுபாடு பற்றி பேசிக் கொண்டிருந்த இயக்கங்கள் நேரடியாகவே பெரியார் என்ற மனிதன், பெரியாரியல் என்ற கருத்தியல் தமிழர்களிடம் ஏற்படுத்திய சிந்தனை தாக்கம்தான் தமிழர்களின் வீழ்ச்சிக்கே காரணம் அப்படின்னும் பேசத் தொடங்கறாங்க

கொளத்தூர் மணி - பேசலாம். அதை விளக்க வேண்டும். எது எது தமிழர் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது என்று விளக்க வேண்டும். நேரடியாக பெரியாரை பிடிக்காதவர்கள், பெரியாரை திட்ட விரும்புபவர்கள்தான் திராவிடம் என்று ஒட்டுமொத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலோர் அப்படிதான். ஒரு சிலரை தவிர. பெரியாரை நேரடியாக திட்ட முடியாது திராவிடர் இயக்கம் என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று பேசுபவர்கள் இருக்கிறார்கள். சில பேர் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூட பேசுவதில்லை. வேறு சிலர் அதை பேசத் தொடங்கி யிருக்கிறார்கள். அவர்கள் ஒரு வேளை எல்லோரும் பேசுவதை விட நாம் மாற்றி பேசினால் பிரபலமாவோம் என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியாது. சில பேர் தமிழன்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று பேசுகிறார்கள். நான் கூட கேட்க விரும்புவது உண்டு. சிதம்பரம் நல்ல தமிழர்தான். நாராயணசாமி நல்ல தமிழர் தான். அவர்கள் தலைமையை ஏற்றுக் கொள்வார்களா என்று எனக்குத் தெரியாது.

தமிழர்களாக இருந்தால் மட்டும் போதும் என்று பேசுபவர்களுக்கு நான் வைக்கிற கேள்வி. கொள்கை அளவில் தமிழர்களுக்கு எதிரான, தமிழர் வளர்ச்சிக்கு எதிரான தமிழர்களுடைய தன்மானத்துக்கு எதிரான எந்த செயல்பாட்டை செய்தாலும் அவனை எதிரி என்று சொல்ல வேண்டும். அவன் தமிழனாகக்கூட இருக்கலாம். எங்களைப் பொருத்தவரை நாங்கள் வீட்டு மொழியை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. சமுதாயத்தில் எப்படி இருக்கிறான். அவன் கல்விக்கோ பிறரோடு தொடர்பு கொள்வதற்கோ என்ன மொழியை பயன்படுத்துகிறானோ அவனாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஆனால் இவர்கள் அதை கூட வீட்டுக்குள் நுழைந்து அங்கு பேசுவதை பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். தமிழர் என்று பிறப்பை மட்டும் வைத்து பேசுவதை எப்போதும் திராவிடர் இயக்கம், பெரியார் இயக்கம் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் எடுத்துச் செல்கிற சிந்தனைதான் முக்கியம் என்று நாங்கள் பார்க்கிறோம்.

ஜென்ராம் - 400-500 வருடங்களாச்சு. இந்த பூமியில் இருக்கீங்க. இந்த காற்றை சுவாசிக்கிறீங்க. இன்னும் உங்களுடைய வீட்டில பேசக் கூடிய தாய்மொழியை மாற்றாமல் இருக்கிறீங்க. தமிழர்களுடன் நீங்க கரையாமல் இருக்கிறீங்க. அப்பறம் உங்களுக்கு எப்படி ஆளும் உரிமை அப்படிங்கிற வாதத்தை அவங்க முன் வைக்கிறாங்க

கொளத்தூர் மணி - எல்லோரும் தமிழ் பேசினால்கூட சென்னைத் தமிழ் பேசுபவர்களை ஒத்துக்கொள்ள மாட் டோம் என்று கூட அவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். இவர்களே கர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று பேசுகிறார்கள். இதே குற்றச்சாட்டை தமிழர்கள் மீது கன்னடர்களும் வைக்கிறார்கள். கர்நாடகத்தில் வாழ்ந்தால் கூட எங்கள் நாட்டில் வாழ்ந்து கொண்டு இன்னும் நீங்கள் வீட்டில் தமிழ்தான் பேசுகிறீர்கள். தமிழ்ப் பள்ளி வேண்டும் என்று கேட்கிறீர்கள். தமிழ் வழியில் பயில வேண்டும் என்று கேட்கிறீர்கள். நீங்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு துரோகி என்பதாக அந்த நாட்டுக்காரர்கள் பேசுகிறார்கள். அதை எப்படி பார்ப்பது என்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒற்றை அளவுகோல் வேண்டும். எதை சொன்னாலும் சரி. ஒற்றை அளவு கோலை வையுங்கள். எல்லோரும் மாநில மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று வையுங்கள். எல்லோரும் தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று வையுங்கள். நாங்கள் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துபவர்கள். மாநில மொழி என்பதை விட தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறோம். அரசு பதவிகளுக்குப் போவதற்கு மாநில மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.. தொடக்கக் கல்வியை தாய்மொழியில்தான் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. அது கர்நாடகத்தில் இருக்கிற தமிழனுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் இருக்கிற தெலுங்கனுக்கும் பொருந்தும்.

ஜென்ராம் - வேற்று மொழி பேசுபவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியிலிருந்து விலகிக்குங்க. எங்களுக்குள்ள நல்ல தமிழனை தேர்ந்தெடுக்கிறது. மோசமான தமிழனை ஒதுக்கிறது அப்படிங்கிறதை நாங்க பார்த்துக்கிறோம், என்று....

கொளத்தூர் மணி - அப்படி சொல்பவர்களிடம் நான் வைக்கிற கேள்வி ஒன்று இருக்கிறது. அவர்கள் தமிழர்களாக பிரிந்த பின்னால் அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்களை பார்த்து நாங்கள் வெற்றி பெறச் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் ஏன் பிறமொழியாளர்களை ஒதுக்கி விடுங்கள்.. அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பேசி மக்களை இணங்கச் செய்யலாமே. பிரித்த பின்னால் பேசுபவர்கள் இப்போதே பேசத் தொடங்கலாம். எங்களுக்கும் உங்கள் வாக்கு வேண்டியதில்லை. தெலுங்கன் வாக்கு எனக்கு வேண்டாம். கன்னடன் வாக்கு எனக்கு வேண்டாம். எனக்கு தமிழன் வாக்கு மட்டும் போதும். எனக்கு தமிழர்கள் வாக்களித்தால் போதும். என்று சொல்லட்டுமே! ஒன்று அப்படிச் சொல்ல வேண்டும். அல்லது இதில் இருக்கிற தமிழ்மொழி பேசாதவனை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று மக்களிடம் போய் அவர்களிடம் பரப்புரை செய்து மக்களையே அப்படி தேர்ந்தெடுக்க செய்து விடலாம். ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. தமிழர்களாக பிரிந்த பின்னால் பேசி அவர்களை வெற்றி பெறச் செய்யக் கூடியவர்கள் ஏன் இப்போதே பேசி செய்யலாமே

ஜென்ராம் - 2016 சட்டமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட அந்த நிலையை நோக்கி போகிற மாதிரிதான் இப்ப இருக்கிற சில அரசியல் கட்சிகள் பேசிட்டு இருக்கிறத பார்க்கும்போது ஒரு தோற்றம் வருது. அவங்க இப்பவே அதேபோல்தான் பேசறாங்க. உதாரணமா நாம் தமிழர் கட்சி 2016-ல தேர்தலை சந்திக்கிறதுன்னு முடிவெடுத் திருக்காங்க. பாட்டாளி மக்கள் கட்சி திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை அப்படின்னு சொல்லியிருக்காங்க. அவங்க இரண்டு பேருடைய நிலைப்பாடும் கிட்டத்தட்ட ஒரே நிலைப்பாடாக இருக்கிறது.

கொளத்தூர் மணி - ஒரே நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் ஒருவர் இது திரிந்த பால் என்கிறார். மற்றொருவர், நான் கறந்த பால் அவர் திரிந்த பால் என்கிறார். எனவே அவரோடும் அவர் சேரப் போவதில்லை. தனித்தனியாக இரண்டு பேரும் போட்டியிடலாம்.

ஜென்ராம் - தனித்தனியாக போட்டியிடலாம். ஆனால் இந்த கருத்தை வந்து இரண்டு பேரும்..

கொளத்தூர் மணி - முற்று முழுதாக தமிழர்களாக மட்டுமே இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களை பாட்டாளி மக்கள் கட்சி என்னவென்று சொல்கிறது என்பதை இப்போது நாம் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏன்னா அவர்கள் தமிழர்கள்தான். அவர்கள் வேற்றுமொழி பேசு பவர்கள் அல்ல. ஏன்னா அருந்ததியர்களை கூட விலக்கி விடலாம். மற்ற இரண்டு தாழ்த்தப்பட்ட பெருங் குழுக்களும் தமிழ் மொழி பேசுபவர்கள். தாய் மொழியாக தமிழைக் கொண்டவர்கள் தான். அவர்களோடு இணங்கிப் போவார்களா, அவர்களோடு இணைந்து கொள்வார்களா என்பதை அந்தத் தலைவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.

ஜென்ராம் - தமிழர்கள் ஆள வேண்டும் என்கிறார்கள் அவர்கள். திராவிடர் என்று நீங்கள் பேசுகிறீர்கள். அது என்ன ஒரு அடையாளம். மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒரு அடையாளம்தானா! ஒற்றை அடையாளத்தோட ஒருவனுடைய வாழ்க்கை முடிந்து போகுதா என்ன?

கொளத்தூர் மணி - முடியவில்லை. நான் வழக்கமாக சொல்வது உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் பல அடையாளங்கள் உண்டு. எனக்கு வீட்டில் என் மகளிடம் அப்பா என்ற அடையாளம் உண்டு. என் அம்மாவிடம் மகன் என்ற அடையாளம் உண்டு. என் மனைவிக்கு நான் கணவன் என்ற அடையாளம் உண்டு. வெளியே நான் வருகிறபோது என்னுடைய தொழிலுக்கு  அடையாளம் உண்டு. அப்படிதான் சமூக விடுதலைப் போராட்டத்தில் திராவிடர் என்ற அடையாளத்தோடு ஆரிய பண்பாட்டுக்கு எதிராகப் போராடுவோம். அரசியல் விடுதலைக்கு தமிழன் என்ற அடையாளத்தோடு தமிழ்நாட்டு விடுதலைக்குப் போராடுவோம். ஏன் ஒற்றை அடையாளத்துக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி. அப்படி பெரியார் இதையெல்லாம் இணைத்தச் சொல்லாகப் பார்த்திருந்தால்.. ஆந்திரா விலகிய போது மகிழ்ச்சியை வெளியிட்டார். ஆந்திரா விலகியது மகிழ்ச்சி என்று சொன்னார். கன்னடமும் கேரளாவும் பிரிந்த போது இவர்களுக்கு ஆரிய எதிர்ப்புணர்வும் இல்லை. இந்திய எதிர்ப்புணர்வும் இல்லை, இவர்கள் போய் தொலைந்தால் நல்லது என்று கருதினேன். நல்ல வாய்ப்பாகப் போய் விட்டார்கள் என்று மகிழ்ச்சிதான் தெரிவித்தார். உண்மையிலேயே இவர்களை எல்லாம் இணைத்தச் சொல்லாக திராவிடரை வைத்திருந்தால் அவர்கள் எல்லாம் பிரிந்த போது அவர்கள் எல்லாம் போகக் கூடாது இணைந்திருக்க வேண்டும் என்றல்லவா பெரியார் சொல்லியிருப்பார். அதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இதைச் சொல்லுகிற தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஜென்ராம் - பிறப்பின் அடிப்படையில் ஒருவரை அடையாளப்படுத்திச் செய்யக் கூடிய அரசியல் எவ்வளவு தூரம் சரியானது என்பதுதான் கேள்வி. ஏன்னா ஒரு மனிதனுக்கு பிறப்பு தற்செயலானது. நாம் விரும்பி ஏற்றுக் கொள்வது அல்ல. அப்படி இருக்கும் போது அரசியல் தளத்தில் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செய்வது என்பது எவ்வளவு தூரம் சரியானது.

கொளத்தூர் மணி - சரியானது அல்ல என்றுதான் நான் சொல்கிறேன். யாரையும் பிறப்பின் அடிப்படையில் ஒதுக்க வேண்டியதில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து.

ஜென்ராம் - பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களை திராவிடர் கழகத்திற்குள் சேர்க்கிறது இல்லை?

கொளத்தூர் மணி - உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. அவர்கள் இணைந்து போராடுவதில் தடையில்லை.

ஜென்ராம் - இணைந்து போராடுவதில் தடையில்லை. ஆனால் உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை?

கொளத்தூர் மணி - ஆம். பெரியாரோடு சேர்ந்து தி.ராஜ கோபாலாச்சாரியார் என்பவர் போராடி இருக்கிறார். அவரோடு சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து போராடி இருக்கிறார். உறுப்பினராக சேர்ப்ப தில்லை என்று சொல்வதற்கு காரணம் ஏற்கெனவே புத்த மதத்தில் நேர்ந்தது எல்லாம் எச்சரிக்கைக் கொடுக்கிறது. புத்த மதத்தில் புத்தருடைய தத்துவங்கள் தாழ்ந்த வழியாக சொல்லப்பட்டது. ஹீனயானமாக சொல்லப்பட்டது. பார்ப்பனர்கள் சேர்ந்த பின்னால் அவர்கள் கொண்டு வந்த புத்தரை கடவுளாக்கிய வழிதான் மஹாயானமாக குறிப்பிடப்பட்டது. புத்தருடைய நேரடி கொள்கைகள் ஹீனயானமாக  - அதாவது சின்ன வழியாகவும் புத்தருக்கு மாறான கொள்கைகள் பெரிய வழியாகவும் மஹாயானமாகவும மாற்றிவிட்டார்கள். ஒரு இயக்கத்தில் நுழைந்து செய்கிற சிதைவுகளை பார்த்த எச்சரிக்கை உணர்வு, அவர்களை இணைக்க வேண்டாம். அமைப்புக்குள் உறுப்பினராக கொண்டு வர வேண்டாம். போராடுவதில் நமக்கு ஒன்றும்... தடையில்லை. தாராளமாகப் போராடட்டும். இன்னும் சொல்லப் போனால் நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏன் நாங்கள் கட்டி வளர்த்த இயக்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று துடிக்கிறீர்கள். பார்ப்பனியம் தவறானது பார்ப்பனர்கள் தவறானவர்கள் என்று கருதினால் அந்த இளைஞர்களே ஒன்றாக சேர்ந்து அவர்கள் இனத்திடம் கேள்வி கேட்கட்டும்;. ஏன் சமுதாயத்தை பிளவுப்படுத்துகிறீர்கள்? ஏன் அடிமைப்படுத்துகிறீர்கள் என்று கேளுங்கள். கைவிடச் சொல்லிப் போராடுங்கள் என்று நாங்கள் கேட்பதுண்டு.

ஜென்ராம் - தனியாக அங்க ஒரு அமைப்பைக் கட்டி அவங்க ஏன் போராடணும்? நீங்க ஒரு அமைப்புக் குள்ள சேர்த்துட்டு, அல்லது உங்களுடைய வழி காட்டுதல்ல அந்த அமைப்புக்குள்ள அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அவர்களை ழுpநசயவந பண்ணலாம்ல. அவர்களை அமைப்புக்குள்ளேயே அரசியல் தளத்திலிருந்தே நீங்கள் விலக்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன?

கொளத்தூர் மணி - அரசியல் தளத்திலிருந்து விலக்க வில்லை. உறுப்பினராக சேர்த்துக்கொள்வதில்லை. படையில் சேர்த்துக் கொள்வதில்லை. எதிரியோடு போராடினால் மகிழ்ச்சி. வரட்டும் என்று சொல்கிறோம்.

ஜென்ராம் - நீங்கள் இப்ப உதாரணத்துக்கு சொன்னீர்கள் எடுத்துக்காட்டாகச் சொன்னீர்கள் புத்த மதத்திற்கு போய் அவர்கள் செய்த வேலைன்னு... அப்ப அவர்களுடைய பிறப்புதான் அந்த குண நலன்களை தீர்மானிக்குதுன்னு நீங்க சொல்றீங்களா?

கொளத்தூர் மணி - இல்லை. தனக்கு.. இந்த சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதால் மேலாண்மை கிடைக்கிறது... பல அனுகூலங்கள் கிடைக்கிறது என்று கருதுகிற போது அதை கைவிடுவதற்கு எளிதில் யாருக்கும் மனம் வராது என்ற சிந்தனைதான் இதற்கு காரணம்.

ஜென்ராம் - அதிகாரத்தை சுவைத்துக் கொண் டிருப்பவர்கள்..

கொளத்தூர் மணி - அதை விடுவதற்கு எளிதில் மனம் வராது என்பதுதான் அதற்கு பின்னால் இருக்கிற கருத்து.

ஜென்ராம் - ஆனால் சரியான காரணத்திற்காக சரியான நோக்கத்திற்காக சமூக முன்னேற்றத்திற்காக தங்களுடைய வர்க்க நலனை அல்லது தங்களுடைய சாதி நலனை புறந்தள்ளிட்டு போராட்டக் களத்தில் இணைந்தவர்களும் இருக்கிறார்கள் அப்படிங்கிறத நீங்க ஏத்துக்கிறீங்களா?

கொளத்தூர் மணி - இருக்கிறாங்க.. இருக்கிறார்கள்.

ஜென்ராம் - அவர்களை நீங்கள் இணைத்துக் கொள்ள லாமே. அந்த புத்த மத எடுத்துக்காட்டுதான் நீங்க.

கொளத்தூர் மணி - அதைத்தான் நான் சொல்கிறேன். ஏன் தன்னுடைய இனத்தை எதிர்த்து அவர்களே போராடக் கூடாது?  அவர்களுக்கு இப்படி போராட எங்களைவிட அதிக உரிமை உண்டு. எங்களைக்கூட எதிரியாக பார்க்கக் கூடும். ஆனால் தங்கள் சமுதாயத்தில் பிறந்த இளைஞர்களே தங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றால் மாறக் கூட வாய்ப்பு இருக்கிறது. ஏன் அப்படி ஒரு பார்ப்பன அமைப்பு காலம் பூராவும் தோன்றவில்லை. இது வரை தோன்றவேயில்லை. தமிழர்கள் கட்டி வைத்த அமைப்பில் போய் அவர்கள் இணைவார்கள். அதிலும் உறுப்பினராக சேர மாட்டார்கள். சுவரொட்டி ஒட்டப் போக மாட்டார்கள். மேடை போட போகமாட்டார்கள். கட்சியினுடைய பெரிய பொறுப்பில் வேண்டுமானால் போய் சேர்ந்து கொள்வார்கள். குறைந்தது ஒரு மாவட்டத் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் என்று போய் சேர்ந்து கொள்வார்கள். அப்படி இணைந்த பார்ப்பனர்கள் யாரையும் இயக்கத்தில் அடிமட்டத் தொண்டனாய் நான் பார்த்ததே இல்லை. குறைந்தது ஒரு மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் இணைகிறார்கள். ஏன் அப்படி தொண்டராக இணையவில்லை என்பதுதான் எங்களுக்கு இன்னும் அய்யத்தை உண்டாக்குகிறது.

ஜென்ராம் - ஈழம் தொடர்பான விசயத்தில ஒரே ஒரு விளக்கம் மட்டும் நான் உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்க ஆர்வமாக இருக்கிறேன். பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது என்று நீங்க சொல்றீங்க.

கொளத்தூர் மணி - ஆமாம்!

ஜென்ராம் - உயிரோட இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது என்று சொல்வதற்கு என்ன காரணம். அப்ப உயிரோட இருக்கிறார் என்பதற்கான ஒரு வாய்ப்பையும் நீங்க மறுக்கலை?

கொளத்தூர் மணி - ஆமா.. எனக்கு சில யூகச் செய்திகளும் சில உண்மைச் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால்தான் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. இல்லை என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இருக்கிறார் என்பதற்கு எனக்கு ஆதாரம் இல்லாத காரணத்தால் ஒரு பகுத்தறிவுவாதி சரியான ஆதாரம் இல்லாமல் ஒன்றை சொல்லக் கூடாது. எனவே அவர் உயிருடன் இருப்பதைப் பற்றிக் கேட்டால் என்னுடைய பதில் தெரியாது என்றுதான் சொல்கிறேன். இருக்கிறார் இல்லை என்று என்னால் சொல்ல முடியாததற்கு அதுதான் காரணம்.

ஜென்ராம் - அதாவது இந்திய ஊடகங்களும் இலங்கை ஊடகங்களும் அவர் இறந்து போயிட்டார் அவர் கொல்லப்பட்டார் என்று பிரச்சாரம் செய்யும் போது அல்லது அதை நிறுவிக் கொண்டிருக்கும் போது அவர் உயிரோடு இருக்கிறார் என்று சில தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதே இன்னும் தமிழர்களுக்கு எதிராக ஒரு போர் தொடுப்பதற்கு தயாராக இராணுவ இயந்திரத்தை பலப்படுத்திக் கொண்டே போவதற்கான வாய்ப்பை இலங்கை அரசுக்கு சிங்கள பேரினவாதத்திற்கு கொடுப்பதாக ஒரு பார்வை இருக்கு

கொளத்தூர் மணி - அது தவறானது. ஏன்னா 89-ஆம் ஆண்டு அப்படிதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது. எல்லா ஊடகங்களும் அதை போட்டன. எல்லா ஊடகங்களும். இன்னும் சொல்லப் போனால்.. உடல் வைத்திருக்கிறார்கள். சந்தனம் வைத்திருக்கிறார்கள். மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றெல்லாம் கூட செய்தி வந்தது. ஆனால் அது பொய்யென்று பின்னால் உறுதி ஆனது. இரண்டாவது சுனாமியின் போது பிரபாகரன் உடல் அடித்துச் செல்லப் பட்டது. உடல் ஒதுங்கியிருந்தது. கரை ஒதுங்கியிருந்தது. பிரபாகரனுக்கு பெட்டி செய்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்தி வந்தது. ஆனால் அதற்கு பின்னால் பார்க்கிறோம். எல்லா ஊடகங்களும் இலங்கை அரசும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். பொய்யாக போய்விட்டது. அப்ப அவர்கள் இவரை ஒரு முறை கொல்லவில்லை. பலமுறை கொன்றிருப்பதால் அய்யம் வருகிறது. அதனால் உறுதியாக நம்பமுடியவில்லை என்றுதான் சொல்கிறோம்.

ஜென்ராம் - உங்க மேல குண்டர் சட்டம் தேசிய பாதுகாப்புச் சட்டம் எல்லாமே போட்டாங்க. அவ்வளவு ஆபத்தான நபரா நீங்க. அப்படி என்ன குற்றத்திற்காக அந்த சட்டம் எல்லாம் போட்டாங்க?

கொளத்தூர் மணி - குண்டர் சட்டம் என் மீது போட வில்லை. தேசிய பாதுகாப்புச் சட்டம் இரண்டு முறை போட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஒரு முறை கைது செய்திருக்கிறார்கள். அப்புறம் வேறு வழக்குகளை போட்டு ஓராண்டிற்கு மேலாக இரண்டு முறை சிறையில் வைத்திருக்கிறார்கள். அதற்கு என்ன பயம் என்றால் அவர்கள் கருத்துக்கு எதிராக இருக்கிறோம். பிரபாகரன் உலக ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணலை பற்றி ஒரு விமர்சனக் கூட்டம் போட்டதற்கே ஒன்றரை ஆண்டு நெடுமாறன், சுப. வீர பாண்டியன் உள்ளிட்டோரை சிறையில் வைத் திருந்தார்கள். என்ன பயங்கரவாதம் செய்தார்கள்? அரசின் பார்வைக்கு பயமாக இருப்பவர்கள் எல்லாம் பயங்கர வாதிகளாக அவர்கள் கருதுகிறார்கள். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல.

ஜென்ராம் - சேது சமுத்திரத் திட்டத்துக்கு நீங்கள் ஆதரவாளரா?

கொளத்தூர் மணி - சேது சமுத்திரத் திட்டம் என்பதை இரண்டு வகையாக நாங்கள் பார்க்கிறோம். அதை மதத்தின் காரணத்தால் நிறுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். சுற்றுச் சூழல் காரணமாக மறுக்கிறார்கள் என்றால் அது ஆய்வுக்குரியது. ஆய்வு செய்து பார்க்கட்டும். சுற்றுச் சூழல் காரணமாக இருந்தால் விட்டு விடலாம். ஆனால் மத காரணங்களை சொல்லித்தான் இதை நிறுத்துகிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம்.

ஜென்ராம் - இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

கொளத்தூர் மணி- இந்த தொலைக்காட்சியின் வழியாக பல்வேறு செய்திகளை விளக்கங்களை சொல்வதற்கு வாய்ப்பளித்ததற்கு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நானும் நன்றி சொல்கிறேன்.

தொகுப்பு : பூங்குழலி