பெரியார் திராவிடர் கழகம் கடந்த ஏப்ரல் 14  அன்று வெளியிட்ட "தமிழ்நாட்டு எல்லைப்போராட்டம்- பெரியாரும் ம.பொ.சி. யும் "  என்ற நூலில் இருந்து சில பக்கங்கள்...

‘வடநாட்டுச் சுரண்டல் தடுப்புப் போர்’ என்னும் பெயரில், பார்ப்பன - பனியா எதிர்ப்புப் போரைத் தந்தை பெரியார் தொடங்கினார். மார்வாரிகள் தமிழ்நாட்டின் பொருளாதார வளத்தைச் சுரண்டுவதைத் தடுப்போம் என்பது முதன்மையான முழக்கமாக இருந்தது.

சென்னை ஆரியபவன் சிற்றுண்டிச்சாலை, செல்லாராம் துணிக்கடை ஆகியனவற்றின் முன், அன்று மாலை மறியல் தொடங்கியது. அது ஒரு வேறுபட்ட போராட்டம். ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு போராடுவதில்லை. தினந்தோறும் எட்டு அல்லது பத்துப்பேர் மட்டும், கடைவாசலில் கைகூப்பி நின்றபடி, மார்வாரி கடைகளைப் புறக்கணியுங்கள் என்று அக்கடைக்கு வரும் மக்களைக் கேட்டுக் கொள்வதும், துண்டறிக்கைகள் கொடுப்பதும். அவ்வளவுதான்.

முதலில் ‘இது ஒரு பெரிய போராட்டமா?’ என்றுதான் மார்வாரிகள் கருதினர். ஆனால் இப்போராட்டம் மாதக் கணக்கில் தொடர்ந்து நடந்தபோது. அதன் பாதிப்பை அவர்கள் உணர்ந்தனர். ‘பெரிய நியுசென்சாகப் போய்விட்டது’ என்று அவர்களே பிறகு கூறினர். ‘அந்தக் கடைக்குப்போனால், கடை வாசலில் பிரச்சினையாக இருக்கும், வேறு கடைக்கே போய்விடலாம்’ என்று மக்கள் கருதத் தொடங்கியபோது, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், வருமானமும் குறைந்தது.

மார்வாரிகள், காவல்நிலையம் சென்றனர். மறியல் செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றனர். காவல்துறையும், திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்தது. டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் உள்ளிட்ட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்கள் மீது பெரிய வழக்கு எதனையும் தொடுக்க இயலவில்லை. போராட்ட வீரர்கள், எந்த வன்முறைச் செயலிலும் ஈடுபடவில்லை. யாரையும் கைநீட்டி மறிக்கவில்லை. குறுக்கே படுத்துத் தடுக்கவில்லை. வெறுமனே, கைகூப்பி வேண்டுகோள் விடுத்தனர். இதற்கென்ன வழக்குப் போடுவது? மூன்று மணி நேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்தபின், நிபந்தனையின்றி விடுதலை செய்துவிட்டனர்.

ஒவ்வொரு நாளும் இதே நிகழ்வுகள் அரங்கேறின. மாலை 5 மணியானால், தொண்டர்கள் கடை வாசலுக்கு வந்துவிடுவர். காவல்துறை 6 மணிக்கு வந்து கைது செய்யும். 9 மணிக்கு விட்டுவிடும். பார்ப்பனர்களாலும், மார்வாரி களாலும் இதனைச் சகிக்க முடியவில்லை. ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று உள்ளுக்குள் உறுமினார்கள். ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்று எழுதியது ஆனந்த விகடன்.

தீபாவளி நெருங்கியது. மற்ற எல்லாக் கடைகளிலும் விற்பனை பெருகிக்கொண்டே இருந்தது.

09.11.1950 அன்று மாலை, புகழ்பெற்ற வழக்கறிஞர் ரங்கசாமி அய்யங்கார் தன் குடும்பத்துடன், செல்லாராம் மார்வாரிக் கடைக்குத் துணி எடுக்க வந்தார். அவரிடமும் தி.க.தோழர்கள் நெருங்கிச் சென்று, தங்கள் வேண்டுகோளை வைத்து, துண்டறிக்கைகள் கொடுத்தனர்.

“சீ...நாயே, கையை நீட்டாதே” என்றார் ரங்கசாமி அய்யங்கார். பட்டென்று பற்றிக்கொண்டது போராட்டம். பார்ப்பனத் திமிர் அந்தப் போராட்ட நெருப்பிற்குப் புது எண்ணெய் வார்த்தது.

அடுத்தநாள் முதல் பெண்கள், கைக் குழந்தைகளோடு வந்து மறியலில் கலந்து கொண்டனர். பத்துப் பேருக்கு மேல், ஒரே நாளில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுப்பது பெரும் பாடாகி விட்டது. வேறு வழியின்றி, முதல் 10 பேர் கைதானவுடன், அடுத்த 10 பேர் களத்திற்கு வந்தனர். அலை அலையாகத் தோழர்கள், ஆண்களும், பெண்களுமாய் வந்தபடி இருந்தனர்.

“வடமாநிலங்களுக்கு இனிமேல் நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்” என்றார் வரதராஜுலு நாயுடு.

எதிர்பாராத விதமாக, இன்னொரு மூலையிலிருந்து இப்போராட்டத்திற்கு ஆதரவு கிளம்பியது. சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள், மார்வாரிக் கடை மறியலுக்கு ஆதரவு தெரிவித்தனர். பேரணியாய்ப் புறப்பட்டுச் சென்னை சென்று, தாங்களும் மறியலில் கலந்துகொள்ளப் போகிறோம் என்று அறிவித்தனர். நாடக விரைவில் காட்சிகள் அரங்கேறின.

மார்வாரிகளுக்கு ஆதரவாய்த் திடீரென்று கிளம்பியது ஒரு ‘தமிழ்க்குரல்’. அது தமிழரசுக் கழகத் தலைவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் குரலாக இருந்தது. மார்வாரிகளை எதிர்க்கும் திராவிடர்களை நாம் எதிர்க்க வேண்டும் என்றார் அவர். அப்படிக் கூறியதோடு நில்லாமல், 19.11.50 அன்று, வடசென்னைப் பகுதியில் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் கூட்டினார். அதில் பெருந்தலைவர் காமராசரையும் கலந்து கொள்ள வைத்தார்.

அடுத்தநாள் (நவம்பர் 20) செய்தித்தாள்களில், ‘காமராசர், கிராமணியார் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்’ என்று செய்தி வந்துள்ளது. ஏன் தெரியுமா? ம.பொ.சி.யின் பேச்சே அதற்கு வித்திட்டிருந்தது.

“மார்வாரிகளின் கடை முன்னால் மறியல் செய்து, அவர்களின் வணிகத்தைக் கெடுப்பது என்ன நியாயம்? இனியும் தொடர்ந்து மார்வாரிக் கடைகள் முன்னால் மறியல் நடந்தால், திராவிட வியாபாரிகள் கடைகள் முன்னால் நாம் மறியல் செய்வோம்” என்று அவர் பேசியபோதுதான், கூட்டத்தில் எதிர்க்குரல் எழும்பியிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில்தான், சினத்தின் நுனிக்கொம்பு ஏறிய சிலம்புச் செல்வர், “இனிமேல் திராவிட இயக்கத்தை ஒழிப்பதே என் வேலை” என்று சபதம் செய்தார். அதனை நிறைவேற்றுவதற்காகவே, 1951 ஆம் ஆண்டு முழுவதும், தமிழ்நாடெங்கும், ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை’ அவர் நடத்தினார். அக்கூட்டங்களில், விபூதி வீராசாமி, அணுகுண்டு அய்யாவு போன்றவர்களைக் கொண்டு, தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்திப் பேச வைத்தார்.

பிற்காலத்தில், ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே அவர் போட்டியிட்டதும், தி.மு.கழக அரசில் பதவிகள் பெற்றதும் வேறு கதை.

பார்ப்பன ஆதரவு மட்டுமின்றி, மார்வாரி ஆதரவும், திராவிட இயக்க எதிர்ப்பாக உருக்கொண்டு எழுந்துள்ளதை இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

(கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1, 2010 )

"தமிழ்நாட்டு எல்லைப்போராட்டம்- பெரியாரும் ம.பொ.சி. யும் "  என்ற நூல் கிடைக்குமிடங்கள் :

பெரியார் படிப்பகம், பேருந்து நிலையம் அருகில் ,மேட்டூர் அணை - 636 401  செல் 9786316155

பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம்
காந்திபுரம் -  கோவை, 9843323153

பெரியார் படிப்பகம் , தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம்
73 / 1 இலாயிட்ஸ் சாலை , சென்னை - 600 014

இராவணன் படிப்பகம், இராதாகிருட்டிணன் நகர், அரியாங்குப்பம்
புதுச்சேரி - 7  செல்  9443045614

பெரியார் புத்தக நிலையம், மெக்டனால்டு  சாலை, கண்டோன்மெண்ட், ஸ்டேட்பேங்க் மண்டல அலுவலகம் எதிரில்
திருச்சி - 620001 செல் 9865596940

நன்கொடை: ரூ.30.00

Pin It