பெரியார் இயக்கத்தின் இளைய பேராளிகளே! உல்லாசங்களிலும் பொழுது போக்குகளிலும் காலத்தை விரயமாக்கிடாது, சமூகத்துக்கு உழைக்க வந்த கருத்துச் செல்வங்களே!

பதவிக்காக அலைமோதும் அரசியல் அதிகாரக் கும்பல்களில் கரைந்து போய்விடாமல் அவற்றைத் துச்சமென தூக்கி எறிந்தவர்களே!

பெரியாரைப் பார்க்காமலே அவரது கொள்கை களின் வாரிசுகளாக இலட்சிய முரசறையும் பாசறைத் தோழர்களே!

சாதி அமைப்பின் ‘இறுக்கத்தை’ உடைக்காமல் அதன் உற்பத்தி நிலமாய் புழுத்துக் கிடக்கும் பார்ப்பன-பார்ப்பனிய கொட்டத்தை முடக்காமல், இங்கே எந்த சமூக மாற்றமும் முளைவிடாது என்று காலமெல்லாம் நாம் கிளிப்பிள்ளைகளாக சொல்லி, சொல்லி வந்தபோது அது பலர் செவியிலும் விழவில்லை.

‘வேறு ஒரு அரசியல் புரட்சி எங்களிடம் இருக்கிறது. அதற்குள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் ‘காயகல்பம்’ அடங்கியிருக்கிறது’ என்று நம்மை எள்ளி நகையாடி யவர்கள்உண்டு. ஏளனம் பேசியவர்கள் உண்டு. அந்த எள்ளல்களையும் ஏசல்களையும் புறந்தள்ளி சமுதாயத்தின் உண்மையான நோய் தீர்க்க நாம் தொய்வின்றி  பயணம் தொடர்ந்தோம்.

இப்போது என்ன நடக்கிறது என்பதை நாம் களத்திலேயே காண்கிறோம். ஆம்; சாதியத்தை அதன் இறுக்கத்தை அதன் கோரமான வெறியை அவற்றை நிலைநிறுத்தும் பார்ப்பனியத்தை அதன் நிறுவனங்களை அசைக்காமல் ‘மயிரளவு’ மாற்றமும் வந்துவிடாது என்ற உண்மையின் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு முகாம்களிலிருந்து இதன் நியாயங்கள் வெடிக்கத் தொடங்கி யிருக்கின்றன.

இந்த நிலையில்தான் சாதி தீண்டாமைக்கு ஆணிவேராக நிற்கும் பார்ப்பன மனு சாஸ்திரத்தை தீயிட்டுப் பொசுக்க அதன் நச்சுக் கருத்துகளை ‘அக்குவேர் ஆணிவேராக’ கிழித்துப் போட ஈரோட்டில்கூட விருக்கிறோம்.

“நாங்கள் தீண்டாமை எதிர்ப்பைப் பற்றித்தான் பேச முடியுமேதவிர உங்களைப் போல் மனுசாஸ்திர எரிப்பு எல்லைக்குப் போக முடியாது. அது உங்களால்தான் முடியும்” என்று கூறுகிற, தோழமை சக்திகளையும் -

சாதியின் உயிர் நாடியை அதன் மூக்கணாங் கயிரைப் பிடித்திருக்கிறீர்கள் என்று பாராட்டு வோரையும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் ‘மனுசாஸ்திரம்’ என்ற உலகிலேயே கொடூரமான ஒரு மனித விரோத பாசிசத்தின்  தாயான பார்ப்பனியத்தை நியாயப்படுத்திக் கொண்டு அந்த குப்பைகளை அச்சுப்போட்டு பரப்பிக் கொண் டிருக்கிற ‘அக்கிரகாரக் கும்பல்’ இப்போது அவை அம்பலமாகி வருவதைக் கண்டு திகைத்து நிற்கின்றன.

நாம் நடத்தப் போகும் மாநாடு - அதில் வடிக்க விருக்கும் தீர்மானங்கள் - ‘மனு’வை நேரடியாகக் கட்டிப் பிடித்துப் புரளுவோருக்கும் அதன் தூதுவர்களாக புறப்பட்டிருக்கும் சாதிவெறியர்களுக்கும் விடும் சரியான எச்சரிக்கையாக அமையும்!

மாநாட்டுப் பந்தலுக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் தனது குத்தீட்டி எழுத்துக்களால் இனத்தின் பகைவர்களை திணறடித்த குத்தூசி குருசாமியின் பெயர்.

இதே ஈரோடு நகரில்தான் நமது ‘கொள்கைவேள்’ குத்தூசி ‘தீண்டப்படாதவர்களாக’ இழிவுபடுத்தப்பட்ட சகோதரர்களை அழைத்துக் கொண்டு ஈசுவரன் கோயில் கருவறைக்குள் நுழைந்தார். அந்த நாள் 21.4.1929. ஆத்திரமடைந்த அர்ச்சகப் பார்ப்பனர்கள் கோயில் கர்ப்பக் கிரகத்தையும், பிறகு கோயிலையும் இழுத்துப் பூட்டிவிட்டார்கள். 15 நாட்கள் பூட்டப்பட்ட கோயிலுக்குள்ளேயே நமது தோழர்கள் அடைபட்டுக் கிடந்தார்கள்.  பிறகு ஈசுவரன், கருப்பன், பசுபதி என்ற ‘தீண்டப்படாதவர்கள்’ பட்டியலில் இருந்த தோழர்கள் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டது. பார்ப்பன நீதிபதி ஒருவர் முன்  அவர்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது ஆத்திரத்தின் எல்லைக்குப் போய் தோழர்களிடம் அந்த நீதிபதி வெறுப்பைக் கொட்டினார். “நீதிபதி அவர்களே! நீங்கள் ஒரு பார்ப்பனர். உங்களிடம் இந்த வழக்கை நடத்த நாங்கள் தயாராக இல்லை. வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுங்கள்” என்று முகத்தில் அடித்தாற்போல் முழங்கினார்கள் அந்தக் கொள்கை உறுதியாளர்கள்.  அந்த வரலாற்றின் நினைவாகவே மாநாட்டுப் பந்தலுக்கு குத்தூசி குருசாமி பெயரை சூட்டியுள்ளோம்.

அதே போன்று, மாநாட்டு அரங்கிற்கு நாம் சூட்டியுள்ள பெயர் அஞ்சா நெஞ்சன் - தமது நெருப்புரைகளால் எதிரிகளை நடுங்க வைத்த சிம்மம் பட்டுக்கோட்டை அழகிரியின் பெயர்! இதே ஈரோட்டில் 1948 அக்.23, 24 தேதிகளில் நமது அறிவு ஆசான் பெரியார் நடத்திய திராவிடர் கழக 19வது “மாகாண சிறப்பு மாநாட்டில்” உடல்நலம் குன்றிய நிலையில் பட்டுக்கோட்டை அழகிரி பங்கேற்றார்.   அதுவே அவரது இறுதி உரையாகவும் அமைந்து விட்டது.

“என் உடல்நிலையைக் கவனித்தால் எனக்கு இதுவே இறுதி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு  இறுதி வணக்கத்தைச் செலுத்தவே இன்று வந்தேன்”

என்று உருக்கமுடன் பேசி பிரியா விடை பெற்றது அந்த சிம்மக் குரல்! அழகிரியின் குரல் அத்துடன் ஒடுங்கிப் போய்விடவில்லை. ஆயிரமாயிரமாய் அழகிரியின் குத்தூசியின் கொள்கை வாரிசுகள் இதோ அணி வகுத்து நிற்கிறார்கள் என்பதை ஈரோட்டில் நாம் நிரூபிக்கப் போகிறோம்.

திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்டது இலட்சிய உறுதிக்காக - அவற்றை தடையின்றி முன்னெடுக்கவே  என்ற உணர்வை உள்ளத்தில் பதிய வைத்துள்ளவர்கள், நாம்!

அந்த தனித்துவ அடையாளத்துடனே உரிய கவனத்தோடு நமது மாநாட்டு நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். கூடிக் கலைந்த மாநாடாக அமைந்துவிடாது, கொள்கைகளுக்கான முன்னெடுப்பாக, இதை நடத்திக் காட்டுவதில்தான், நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

நம் ஒவ்வொருவருக்கும் இதே உணர்வுதானே... தோழர்களே! அதிலென்ன சந்தேகம்? கொள்கைத் தோழமையை பெரியாரிய எழுச்சியை தியாகத்துக்கு தயாராகிவிட்ட படையணியை நாம் அடையாளம் காட்டப் போகிறோம்!  வாருங்கள்! ஈரோட்டில் சந்திப்போம், தோழர்களே!

- விடுதலை இராசேந்திரன்

Pin It