இந்தியாவில் அய்ந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு தேசியக் கட்சி களுக்கும் எதிராகவே வந்துள்ளன. உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்தி, சமாஜ்வாடி கட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளது.  இராகுல் காந்தி களமிறங்கியும் உ.பி.யில் காங்கிரஸ், நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சாபில் அகாலிதளத்தின் பிரகாஷ்சிங் பாதல், ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க., அகாலிதளத்தின் கூட்டணி கட்சியாகும். கடந்த முறை ஊழல் புகார்களில் பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி விலகிய நிலையிலும் ஆட்சியின் எதிர்ப்புகளை காங்கிரஸ் கட்சியால் அறுவடை செய்ய முடியவில்லை. முலாயம்சிங் மகன் அகிலேஷ், உ.பி. தேர்தலுக்கு பொறுப்பேற்றதுபோல் பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் மகன் சுக்பீர்சிங் பாதல் தேர்தல் பொறுப்பை ஏற்று செயல்பட்டார்.

இந்து வாக்கு வங்கி, பா.ஜ.க.வுக்கும் ஜாட் சீக்கியர் வாக்கு வங்கி அகாலிதளத்துக்கும், பிற்படுத்தப்பட்ட சீக்கியர், ஜாட் அல்லாத சீக்கியர், தலித் சீக்கியர் வாக்கு வங்கி காங்கிரசுக்கும் இருந்த நிலையை மாற்றி, சுக்பீர்சிங், அகாலிதளத்தில் ஜாட் அல்லாதவர்களுக்கும் போட்டியிடும் வாய்ப்புகளை வழங்கினார். அகாலிதள எதிர்ப்பு ஓட்டுகள் காங்கிரசுக்குப் போகாமல், அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று போட்டியிட்ட பஞ்சாப் மக்கள் கட்சிக்குப் போய்விட்டது. 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் உருவான பிறகு, எந்த ஒரு ஆட்சியும் இரண்டாவது முறை பதவியில் நீடித்த வரலாறு இல்லை. இப்போது தான் நடந்திருக்கிறது. உத்தரகாண்ட்டில் ஆட்சி செய்த பா.ஜ.க.வின் அதிருப்தி ஓட்டுகளை காங்கிரஸ் பெற்று முன்னணியில் இருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு  போதுமான பலம் இல்லை. பா.ஜ.க. 31 இடங்களையும், காங்கிரஸ் 32 இடங்களையும் பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு இன்னும் 4 இடங்கள் தேவைப்படுகிறது. கோவாவில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், பா.ஜ.க.விடம் அதிகாரத்தைப் பறிகொடுத்துவிட்டது. 40 உறுப்பினர்களடங்கிய கோவா சட்டமன்றத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கு கிடைத்த இடம் 9 மட்டுமே. பா.ஜ.க. - எம்.ஜி.பி. கூட்டணிக்கு 24 இடங்கள் கிடைத்துள்ளன. கோவாவில் காங்கிரஸ் குடும்ப அதிகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. போட்டியிட்ட 12 முன்னாள் அமைச்சர்களில்

8 பேர் தோல்வியை தழுவினர். குடும்ப அரசியல் நடத்தியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மணிப்பூரில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் அதிகாரத்தைத் தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 60 இடங்களில 42 இடங்களை காங்கிரஸ் பிடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்

7 இடங்களிலும, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் உருவாக்கிய மக்கள் ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தையும், மற்ற இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றியுள்ளன. காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் எவரும் மணிப்பூர் தேர்தல் களத்தைத் திரும்பிப் பார்க்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியிருக்கிறது. மணிப்பூரில் தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் 7 போராளிக் குழுக்கள் ‘கோர்கோம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து, காங்கிரஸ் கட்சியை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளன. இந்திய ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் இதே காங்கிரஸ் ஆட்சி, மணிப்பூரில் அதிகாரத்தைப் பிடித்தும், போராளி இயக்கங்களால் தடை செய்யப்பட்ட கட்சியாகவே  இருக்கிறது. அதன் காரணமாகவே காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் இங்கே பிரச்சாரத்துக்கு வரவில்லை. மலைப் பகுதியிலும் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓட்டு கேட்பதற்கு போராளிகள்அமைப்புகள் தடை செய்துவிட்டன.

காங்கிரஸ் - பா.ஜ.க. இரண்டு ‘தேசிய’ கட்சிகளையும்விட மாநில உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கட்சிகளிடமே மக்கள் செல்வாக்கு தங்கியுள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. வர இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற முடியுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

இந்தியாவிலும் ஒரே கட்சி ஆட்சி என்ற காலம் முடிந்துவிட்டது. மாநில கட்சிகளின் ஆதரவின்றி எந்த தேசியக் கட்சியும் பதவிக்கு வந்துவிட முடியாது.

இந்த அரசியல் உண்மையை கவனத்தில் கொள்ளாமல், மத்திய ஆட்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை வரிசையாகக் கொண்டுவர முயற்சிப்பது மோசமான எதிர் விளைவுகளையே உண்டாக்கும்.

இங்கிலாந்தின் ஆட்சி செயற்கையாக உருவாக்கிய ‘இந்தியா’ என்ற கட்டமைப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இங்கே ‘இந்தியர்’ என்ற உணர்வுடன் எவரும் இல்லை. எனவேதான் தேசியக் கட்சிகளும் அதன் முக்கியத்துவத்தை இழந்து நிற்கின்றன.

தேசிய இனங்களின் விடுதலைக்குப் போராடும் இயக்கங்கள், மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டி எழுப்பி, கூர்மைபடுத்துவதற்கு சரியான அரசியல் களம் உருவாகி வருகிறது. இது வரலாற்றுக் கட்டாயமும் கூட!

Pin It