போர்க்குற்றங்கள் - அய்.நா. விவாதிக்குமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவிலுள்ள அய்.நா. அவையில் (அமெரிக்காவின் நியுயார்க்கிலும் அய்.நா. மன்றம் உள்ளது) தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்று வருகிறது. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரலாம் என்று தெரிகிறது. அய்.நா.வில் எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் நிகழலாம் என்பதால்  அந்தத் தீர்மானம் கொண்டு வரப்படும்போதுதான் அது உறுதியாகும். ஆனாலும், அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் நகல், மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள

47 உறுப்பு நாடுகளுக்கும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கூட இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணையை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நகல் தீர்மானம் கூறுவது என்ன? இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற படிப்பினை மற்றும் பாதிப்பிலிருந்து மீட்டல்’ என்ற (எல்.எல்.ஆர்.சி.) விசாரணை ஆணை யத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயல் படுத்த வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று, இலங்கை அரசு நியமித்த ஆணையத்தின் அறிக்கை யில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள், மீறப் பட்டது குறித்து போதுமான கவனம் செலுத்தப் படாததால் அது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். இரண்டு கோரிக்கையுமே இலங்கை அரசிடம் முன் வைக்கப் பட்டதுதான். குற்றவாளிகளிடமே விசாரணை நடத்தும் வாய்ப்புகளை வழங்கும்போது நீதி கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இதைக்கூட இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. போர் முடிந்து 3 ஆண்டுகளாகியும் தமிழர்களின் மறு வாழ்வுக்கு சிங்கள ஆட்சி தமிழர்களின் அரசியல் உரிமைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது தான். இப்போது, உலகநாடுகளின் கவனத்தை, இலங்கைக்கு எதிராகத் திருப்பியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா, மீண்டும் இனப் படுகொலைக்குத் துணை போகும் துரோகத்தையே செய்கிறது. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மார்ச் 1 ஆம் தேதி ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், “குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள், மனித உரிமைக் குழுவின் ஆக்கபூர்வமான பேச்சுகளையும் அனைத்துத் தரப்புகளில் ஒத்துழைப்புடனான அணுகுமுறையையும் வலுவிழக்கச் செய்துவிடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  எந்த ஒரு நாடு போர்க் குற்றங்களைச் செய்தாலும் இனப் படுகொலை செய்தாலும் அந்த நாட்டை எதிர்க்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் அடியோடு துடைத்தெறியப் பட்டுவிடும் என்ற அச்சத்தினாலும் கூடங்குளத்துக்கு ஆதரவாக காங்கிரசார் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டு விடலாம் என்பதாலும் மத்திய அமைச்சர்கள் நாராயணசாமியும், ஜி.கே. வாசனும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி யுள்ளதாகவும், பிரதமரும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ள தாகவும், தமிழ்நாட்டில் பேட்டி அளித்துள்ளனர். இது உண்மையாக நடக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும். அமெரிக்காவின் தீர்மானமே அய்.நா.வில் வராமல் போகும் வாய்ப்புகள் இருப்பதும் இவர்கள் இப்படிப் பேட்டி அளிப்பதற்கான காரணமாக இருக்கலாம். காரணம், அய்.நா.வில் இப்போது நடக்கும், மனித உரிமைக் கவுன்சில் செயல் திட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை மீதான தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது பற்றி குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் அய்ரோப்பா முழுதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தனிப் பேருந்து களிலும் சிறப்பு இரயில்களிலும் அய்.நா. அவை முன் குவிந்து வருகிறார்கள். இலங்கையின் போர்க் குற்றங் களுக்கு சர்வதேச விசாரணை கோரி, ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். சர்வதேசப் பிரச்சினையாக விவாத அரங்கிற்கு இலங்கையின் போர்க் குற்றங்கள் நகர்த்தப்பட்டிருப்பதே தமிழர்களுக்குக் கிடைத்த  வெற்றியாகும். நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் மய்யம் என்ற சர்வதேச தமிழர் அமைப்புகள் - தங்கள் கருத்து மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஜெனிவாவில் ஒன்றாக திரண்டு நிற்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான செய்தியாகும்.

சென்னையில் கடந்த 28.2.2012 அன்று ‘நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம் ‘போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை’ தொடர்பான ஆவண நூலை வெளியிட்டது. இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கான குறிப்புகள் பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகளிலிருந்து தொகுக்கப்பட்டு, நூலாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் வல்லுனர் குழு உலகம் முழுதும் இந்த நூலை வெளியிட்டுள்ளது. மய்யத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பேராசிரியர் தீரன், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பேராசிரியர் இராணி செந்தாமரை, இயக்குநர் சாத்தப்பன், ஊடகவிய லாளர் டி.எஸ்.எஸ். மணி ஆகியோர் உரையாற்றினர். வெளியிடப்பட்ட ஆவணத்தில் இடம் பெற்றுள்ள சில குறிப்புகள்:

எல்.எல்.ஆர்.சி.

இலங்கை அரசு தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ஆணையத்தின் (எல்.எல்.ஆர்.சி.) முக்கிய பரிந்துரைகள்:

1.             2002 ஆம் ஆண்டு நார்வே முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உருவான போர் நிறுத்த உடன்பாடு தோல்வி அடைந்தமைக்கு நார்வேயும் இலங்கை அரசும் காரணமாக இருந்துள்ளது.

2. இறுதிக் கட்டப் போரில் சிறிலங்கா ராணுவத்தின் நடவடிக்கைகள் மக்களைக் காப்பாற்றுவதாகவே இருந்தது மிகவும் திருப்தி தருகிறது.

3. போரில்லாத பகுதியில் ராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்குமானால், அது திட்ட மிட்டு நடத்தப்பட்டதல்ல; தவிர்க்க இயலாத சூழ்நிலையின் காரணமாகவே அப்பகுதியில் திரண்ட பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டிருக்கலாம். மருத்துவமனையில் ஷெல் வீசப் பட்டது உண்மைதான். அதனால் சிவிலியன்கள் உயிரிழந்ததும் உண்மைதான். ஆனால், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பதற்கு திட்ட வட்டமான ஆதாரம் இல்லை. எந்தத் தரப்பி லிருந்து ஷெல் வீசப்பட்டது என்பது தெரிய வில்லை.

4. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. ஆனாலும் மருந்துகளும், மருத்துவ உதவிகளும் தேவையானஅளவு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

5. சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக பொது மக்களை கேடயங்களாக விடுதலை புலிகளே பயன்படுத்தினர். போரில் இறந்தவர்கள் எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடிய வில்லை. முறையான சரிபார்ப்பு ஏற்பாடுகள் இல்லாமையே காரணம்.

6.             ‘சேனல் 4’ தொலைக்காட்சி ஒளிபரப்பிய ‘கொலைக்களம்’ (ராணுவம் நடத்திய பாலியல் வன்கொடுமை - படுகொலை காட்சிகள்) காட்சிகள் உண்மையானதா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

7. ஆணையத்தின் முன், ஆள் கடத்தல், காணாமல் போனவர்கள் பற்றி ஏராளமான புகார்கள் கூறப் பட்டன. அது தொடர்பாக அரசு எந்த நட வடிக்கையும் அதிகாரபூர்வமாக எடுக்கப்பட வில்லை.

8. இந்த இனமோதலுக்கு தமிழர்களின் தீர்க்கப் படாத பிரச்னைகள்தான் காரணம்.

9. சட்டம் ஒழுங்கை திறமையாக அமுல்படுத்த ஒரு சுதந்திரமான காவல் ஆணையம் தேவைப்படு கிறது.

10. தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசிய மாகிறது. அதற்கான கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது.

பரிந்துரை

ஆணையம் அரசுக்கு வழங்கியுள்ள முக்கிய பரிந்துரைகள்:

1. ராணுவம் நடத்திய கொலை தொடர்பாக நான்கு முக்கிய சம்பவங்களில் மேலும் அரசு விசாரணை நடத்த வேண்டும்.

2. சரணடைந்த பிறகோ அல்லது கைது செய்யப் பட்ட பிறகோ,’காணாமல் போய்விட்டதாக’க் கூறப்படும் குறிப்பிட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3. சரணடைந்த விடுதலைப் புலிகள் மீது ஏதேனும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

4. பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் நேரில் சென்று வீட்டில் கொல்லப்பட்டவர்கள்; காயமடைந்த வர்கள்; மற்றும் சொத்து இழப்பு பற்றி முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

5.             ‘சேனல்-4’ தொலைக்காட்சி காட்சிகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

6. காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுவோர் குறித்து விசாரிக்க சிறப்பு ஆணையர் நியமிக்கப் பட வேண்டும். தேவைப்படும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவியாக அரசு வழக்கறிஞருக்கு தேவையான ஆவணங் களைத் தரவேண்டும்.

7. மரணமடைந்தோருக்கு முறையான இறப்புச் சான்றிதழ் மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

8. தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர்கள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க சுதந்திரமான ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

9. கட்டாய வன்முறைகள் - முறைகேடாக காணாமல் போகுதல் போன்றவற்றைத் தடுக்க சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும்.

10. கைது செய்து காவலில் வைக்கப்பட்டோர் குறித்த தகவல்களைத் திரட்டி, கணினியில் பதிவு செய்து, நெருங்கிய உறவினர்களுக்கு இத்தகவல்களை கிடைக்கச் செய்யவேண்டும்.

11. சட்ட விரோதமான ஆயுதம் தாங்கிய குழுக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க வேண்டும்.

12. நிலப் பிரச்சனை தீர்க்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான நில உரிமைப் பட்டாவை வழங்க வேண்டும்.

13. போர் பாதிப்புப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

14. பெண்கள், குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நிர்வாக காவல்துறை மற்றும் தொடர்புடைய துறையினரைக் கொண்ட அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும்.

15. நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக தேசிய வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். குறுகிய அரசியல் நலனுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது.

16. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்பட வேண்டும். முன்னாள் விடுதலைப்புலிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இது பொருந்தும்.

17. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் ராணுவத்தை சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது. தனியார் நிலங்களை ராணுவம் பயன்படுத்துவதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

18.           1990 ஆம் ஆண்டு நடந்த இலங்கை போலீஸ் படுகொலை சம்பவம் தொடர்பாக கருணா, பிள்ளையான் ஆகியோர் பங்கு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

19. ஈழ ஜனநாயக முன்னணி (டக்ளஸ் தேவானந்தா அமைப்பு) என்ற அமைப்பு நடத்திய ஆள் கடத்தல் பற்றி முழுமையான விசாரணை வேண்டும்.

20. ராணுவத்தை கவசமாகப் பயன்படுத்தி மேஜர் சீலன் தலைமையில் செயல்பட்ட கும்பல் நடத்திய திருட்டு, கொள்ளை, கொலை போன்ற வன்முறைகளுக்கு நியாயம் வழங்கவேண்டும்.

21. காவல்துறை நடத்தும் விசாரணைகள் கைதுகள் குறித்து முறையான ஆலோசனைகளை வழங்கி வழிகாட்ட அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் தனிப் பிரிவை அமைக்க வேண்டும்.

22. அரசு வேலை வாய்ப்புகளில் தலையீடுகளைத் தவிர்க்க தேர்வாணையம் தேவை; தமிழர்களோடு மிகக் கூடுதலான அளவில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

23. சிங்களர் தமிழும், தமிழர் சிங்களரும் படிப்பதை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்.

24. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் பேசும் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். தமிழ் - சிங்கள குழந்தைகள் ஒன்றாக படிக்கும் பள்ளிகளை உருவாக்க வேண்டும்.

25. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் ஆட்சியாளர்கள் பேச வேண்டும். அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.

26. தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் இலங்கை தேசிய கீதத்தை ஒரே நேரத்தில் பாட வேண்டும்.

27. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வெறுப்புக்குரிய பேச்சுகளைத் தடுக்கும் கடுமையான சட்டம் வேண்டும்.

28. பிப்.4 அம் தேதி தேசிய தினமாக அறிவிக்கப்பட்டு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கரம் கோர்த்து... ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று உறுதி ஏற்க வேண்டும்.

- என்ற பரிந்துரைகளை இலங்கை அரசு நியமித்த ஆணையம் முன் வைத்துள்ளது. அரசின் ராணுவப் போர்க் குற்றங்களை மூடி மறைக்க முயன்றாலும் முழுமையாக குற்றங்களை மறைக்க முடியாமல்  ஒப்புக் கொள்ள நேரிட்டுள்ளது என்பதை ஆணையத்தின் அறிக்கை மற்றும் பரிந்துரையிலிருந்து அறிய முடிகிறது.

இலங்கை அரசு எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், எல்லாவற்றுக் கும் காரணம் விடுதலைப்புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட தேசியவாதிகளும் பார்ப்பன ஏடுகளும் துரோக சக்திகளும் கூறி வந்தன. இலங்கை அரசே தனது குற்றங்கள் சிலவற்றை மறைக்க முடியாது திணறுவதைக் கவனிக்க வேண்டும்.

Pin It