வங்காளப் பார்ப்பனர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவரானவுடன் தனது பார்ப்பனியக் கடமைகளை படு உற்சாகத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். திருப்பதி அர்ச்சகப் பார்ப்பான் காலடியில் உட்கார்ந்து சட்டைகூட போடாமல் பூணூல் மேனியுடன் ஆசீர்வாதம் வாங்கினார்.

இப்போது ‘ராமலீலா’ கொண் டாட்டத்துக்கும் தயாராகி வருகிறார். ‘இராவணன்’, ‘மேகநாதன்’, ‘கும்ப கர்ணன்’ என்று இராமாயணத்தில் ‘அசுரர்’களாக சித்தரிக்கப்படும் திராவிடர்களை தீ வைத்துக் கொளுத்தி அவமதிக்கிறார்கள் புதுடில்லியில் இதற்குப் பெயர் இராமலீலாவாம்! இந்த ‘இராமலீலா’ கொண்டாட்டத் தில் ராமன், அனுமன், லட்சுமணன் வேடம் போடும் நடிகர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்துள்ளனர். ராமன் வேடம் போட்ட நடிகரை ‘ராம பகவனாகவே’ கருதி, பிரணாப் முகர்ஜி வணங்கி நிற்கிறார். நாட்டில் நடப்பது ‘ராம ராஜ்யம்’தான் என்பதை உணர்த்துவதற்காக பார்ப்பனர் ஒருவர், குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட இந்த புகைப்படத்தை ஏடுகள் வெளியிட்டுள்ளன. இராமா யணத்தில் வரும் குரங்குப் பாத்தி ரமாகிய அனுமான் ஒரு “பிராமணச்” சிறுவனாக வேடம் போட்டு ராமன் முன் தோன்றியபோது உடனே ராமனே அனுமான் காலில் நெடுஞ் சாணாய் வீழ்ந்து, ‘நமஸ்காரம்’ செய்தாராம். அப்போது ‘ராமா, நான் காட்டினில் வாழும் குரங்கு வம்சம்; பிராமணனாக வேடமணிந்துள் ளேன் என்பது தெரிந்தும் இப்படி காலில் விழலாமா என்று கேட்ட தாம். அதற்கு ராமன், “நீ பிராமணன் வேடம் போட்டிருக்கலாம். ஆனால், பிராமணனைக் கண்டவுடன் வணங்குவது எனது கடமை” என்றானாம். இது இராமாயணத்தில் வரும் நிகழ்ச்சி. பிரணாப் முகர்ஜிக்கு இராமன் வேடம் போட்ட நடிகர்கூட ‘இராம பகவான்’ தான் போலும்.

இதையும் தாண்டி நாட்டின் முதல் குடிமகன் அர்ச்சகர் வேலையைப் பார்க்கப் போகிறார், என்ற செய்தியும் வந்திருக்கிறது. பிரணாப் முகர்ஜியின் சொந்த கிராமம், கல்கத்தாவிலிருந்து 240 கி.மீட்டரிலுள்ள மிரித்தி என்ற கிராமம். தனது மூதாதையர் வாழ்ந்த இக்கிராமத்திலுள்ள வீட்டுக்கு துர்கா பூஜை கொண்டாடுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் பிரணாப் முகர்ஜி தவறாமல் வந்து விடுவாராம். அவரது குடும்பக் கோயிலான துர்காதேவிக்கு அருகிலுள்ள குட்டையிலிருந்து குடத்தில் நீர் எடுத்து தலையில் சுமந்து வந்து, அவரே வேத மந்திரங்களை ஓதி அர்ச்சனை செய்வதும் வழக்கமாம். இப்போது குடியரசுத் தலைவரான நிலையில் முதல் குடிமகன், அர்ச்சகர் தொழிலை செய்வாரா என்று அதிகார வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. குடியரசுத் தலைவரானாலும், நாட்டின் முதல் குடி மகனாக இருந்தாலும் பார்ப்பனியக் கடமையிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்று பிரணாப் முகர்ஜி, துர்காதேவிக்கு தானே தலையில் குடத்தில் நீர் சுமந்து வந்து, அபிஷேகம் செய்து வேத மந்திரம் ஓதி, அர்ச்சனை செய்யப் போகிறாராம். இதற்காக அவரது பழைய வீடும், துர்காதேவி கோயிலும் புதுப்பிக்கும் வேலைகள் தொடங்கி விட்டதாம். குடியரசுத் தலைவருக்கென்று பின்பற்ற வேண்டிய நடைமுறை மரியாதைகள், பாதுகாப்புகள் எல்லாம் ஓரம் கட்டப்படுகின்றன. தனது பெயருக்கு முன்பு, ‘மேதகு’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், ‘ஸ்ரீ’ என்ற சமஸ்கிருதச் சொல்லையே பயன்படுத்துமாறு ஏற்கனவே பிரணாப் முகர்ஜி அறிவித் துள்ளதையும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

இராஜேந்திர பிரசாத் என்ற வைதீக உயர்சாதிப் பழமைவாதி குடியரசுத் தலைவரானவுடன் கஜினி முகம்மது படையெடுத்த சோமநாதபுரம் கோயிலைப் புதுப்பித்து ‘கும்பாபிஷேகம்’ நடத்த, அவர் செல்ல விரும்பியபோது அன்றைய பிரதமர் நேரு அதற்கு, எதிர்ப்பு தெரிவித்தார் என்பது - ஒரு வரலாறு. அதையும் மீறி ராஜேந்திர பிரசாத் சோமநாதபுரம் சென்றார். இப்போது பிரணாப் முகர்ஜிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. பார்ப்பன தர்பார் ‘மனுதர்மம்’ காட்டிய பாதையில் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. இது மதச்சார்பற்ற நாடா? மனு நீதி ஆட்சி செய்யும் நாடா?

Pin It