பெரியார் திராவிடர் கழக கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் செயல் வீரர் தோழர் பழனி அவர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டம், 2-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3-00 மணிக்கு, கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. ஆந்திரா குழந்தைகள் கலைக்குழுவின் தெலுங்கு பாடல் களுடன் துவங்கிய இந்த பொதுக்கூட்டத்திற்கு, தேன்கனிக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் மைனர் (எ) வெங்கிடகிரியப்பா தலைமை ஏற்றார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.ஐ. (எம்.எல்) விந்தைவேந்தன், ஆந்தி ராவைச் சார்ந்த சி.பெத்தண்ணா முதலானோர் உரையாற்றிய இந்த நினைவேந்தல் பொதுக்கூட்டத் தில், பழங்குடியின இருளர் பாதுகாப்பு சங்கத்தை நிறுவி, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பாக நிற்பவரும், வீரப்பனால் கடத்திவைக்கப்பட்ட கன்னட நடிகர் இராஜ்குமார் மீட்புக்குழுவில் அரசு தூதராக சென்றவரும், தோழர் பழனி கொலை தொடர்பான உண்மையறியும் குழுவில் பங்கேற்று பணியாற்றியவரும், மனித உரிமைப் போராளியுமான பேராசிரியர் கல்விமணி அவர்கள், உண்மை அறியும் குழுவில் பங்கேற்றவர் என்ற அடிப்படையில் சாட்சியம் அளிக்க வந்துள்ளதாக சொல்லி தன் உரையை தொடங்கினார்.

“18-7-2012 அன்று முதல் (கொலை நடந்து இரண்டு வாரம்) எங்கள் ஆய்வை தொடங்கினோம், இந்த உண்மை அறியும் குழுவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் (நீண்ட காலமாக மனித உரிமை பிரச்சனைகளில் ஆர்வமாக செயல்பட்டு வருபவர்) சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் (political science) துறைத் தலைவர் மணிவண்ணன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் (இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பல்வேறு நாடுகளில் மனித உரிமை பணிகளில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்) மக்கள் கண்காணிப்பகத்தின் தமிழகப் பொறுப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன், பழங்குடியினர் சங்கத்தின் பொறுப்பாளராக இருக்கும் நான் ஆகியோர் ஆய்வு செய்தோம்.

இந்த அநியாயமான படுகொலையைக் கண்டித்து நடந்துகொண்டிருக்கும் இந்த கூட்டத்திற்கு இவ்வளவு பேர் ஆர்வமாக வந்திருப்பதை பார்த்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அளவிற்கு பெரிய அளவில் எந்த கூட்டத்திற்கும் திரண்டிருக்கமாட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் எந்த அளவிற்கு அடாவடித்தனமாக இருந்திருக்கிறார் என்ற உண்மையை இந்த கூட்டமே நமக்கு உணர்த்துகிறது. அடாவடித்தனத்தையும், அடக்குமுறையையும் யார் செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அது அரசாங்கமாக இருந்தாலும் சரி, காவல் துறையாக இருந்தாலும் சரி. பொதுவாக காவல் துறையின் மீது எல்லா மக்களுக்கும் வெறுப்பு இருப்பதற்கு காரணம், காவல் துறையின் அடக்குமுறை தான். அதே அடக்கு முறையை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் செய்யும்போதும், மக்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நம் நாட்டில் அவசரகால பிரகடனம் வந்தபோ தெல்லாம் அதை எதிர்த்து மக்கள் போராடி யிருக்கிறார்கள். அது தடா சட்டமாக இருந்தாலும் சரி, பொடா சட்டமாக இருந்தாலும் சரி, அடக்குமுறைகளை மக்கள் ஒப்புக்கொள்வதில்லை.

உண்மையை அறிய நாங்கள் வருவதற்கு முன்பாகவே, மக்கள் கண்காணிப்பகத்தைச் சார்ந்த நான்கு தோழர்கள், பலரையும் சந்தித்து, விசாரித்து ஒரு அறிக்கையை தயார் செய்திருந்தார்கள். அந்த அறிக்கையே சரியாக தயாரிக்கப்பட்டது தான், ஆனாலும் நாங்கள் மீண்டும் அனைவரிடமும் விசாரிக்க முடிவு செய்தோம். அந்த அறிக்கையில் இருப்பதைவிட மேலும் மோசமான செயலில் ஈடுபட்டிருந்த உண்மை விசாரித்த பின்பு தெரிய வந்தது. இராமச்சந்திரன் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர் என்று நீங்கள் கூட கற்பனை செய்யலாம். அந்த கற்பனைகளை விட அதிகமாக, மிகவும் மட்டமான, பெரிய அரசியல் ரௌடியாக இருந்திருக்கிறார்.

“இன்றைய கட்சிகளுக்கு ரௌடிகள் தேவைப்படுகிறார்கள். பெரும்பாலான கட்சிகளில் ரௌடிகளை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இங்கு ரௌடியே அரசியல் தலைவராக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் இது போன்ற செயலில் நேரடியாக இறங்குவாரா? அவரின் நெருங்கிய உறவினர்களே நேரடியாக இறங்குவார்களா? என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது” என்று கூறிய கல்விமணி அவர்கள் கொலை நடந்த முழு விபரங்களையும் விரிவாக விளக்கினார்.     

பின்னர்… “மனித உரிமை தளத்தில் இயங்குகிற நாங்கள், யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறவர்கள். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக பேசவேண்டிய அவசியம் இல்லை. அதே போல கம்யூனிஸ்ட் கட்சியை குறை சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்கள் ஆய்வின் மூலம் நாங்கள் கண்டறிந்த உண்மையை மீண்டும் உறுதியாக சொல்கிறேன், குறிப்பாக இராமச்சந்திரன் என்பவர் இந்த கொலையை செய்த, ஒரு ரௌடிதான். இதுமட்டுமல்ல பல கொலைகளை இங்கு இதுவரை செய்து கொண்டிருந்திருக்கிறார். இங்குள்ள காவல் துறையை கையில் வைத்திருந்திருக்கிறார். (பணம் இருந்தால் காவல் துறையை மட்டுமல்ல, நீதிபதியை கூட, நம் நாட்டின் ஜனாதிபதியைக் கூட விலைக்கு வாங்கலாம் என்ற சூழல் தான் இப்போது நிலவுகிறது.)

மேலும் இவர், மக்களிடம் நிலங்களை வாங்கி ஜி.எம்.ஆர் என்ற நிறுவனத்திற்கு விற்று கொண் டிருந்திருக்கிறார். சரியான சாலை வசதி இல்லாத இந்த பகுதியில் அந்த நிறுவனத்திற்காக ஹெலிப் பேட் அமைத்திருந்தார்கள். 18-7-2012 அன்று அந்த இடத்திற்கு சென்ற போது அங்கு இரண்டு வழக்கறிஞர்கள் இருந்தார்கள். ஒருவர் சென்னையை சார்ந்தவர் மற்றொருவர் மதுரையை சார்ந்தவர். இருவரும் இந்த ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள். அந்த வழக்கறிஞர் களிடம், உங்களுக்கும் இராமச்சந்திரனுக்கும் என்ன உறவு என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் He is our agent. (ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஏஜண்ட்) மேலும் அவர்கள் சொன்னார்கள் இப்போது அவருக்கும் எங்களுக்கும் கொஞ்சம் பிரச்சனை. ஏஜண்ட்டாக இருந்தவர் வெண்டராக (vendor) மாறி விட்டார். (ஏஜண்ட் என்றால் வாங்கி கொடுக்கும் நிலத்திற்கு ஒரு கமிசன் பெற்றுக்கொள்பவர், வெண்டர் என்றால் வாங்கி அதிக விலைக்கு விற்பவர்)

இன்னொரு பக்கம் நிலத்தை இவருக்கு விற்றவர்கள் சொன்னார்கள், எங்களிடம் பேசிய முழுத் தொகையை தரவில்லை என்று, இப்படிப் பட்டவர் தான் இராமச்சந்திரன்.   எனவே ….

இங்குள்ள காவல்துறை விசாரிக்காமல் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். நிலங்களை பறிகொடுத்தவர் களிடம் மனுக்களை பெற்று நிலமோசடி வழக்கில் கைது செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தொப்பி குமார் உள்பட இதுவரை பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.  சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜி.எம்.ஆர் நிறுவனத்தோடு உள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பொது விசாரணை ஒன்று நடத்த வேண்டும் - என நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என்று தோழர் கல்வி மணி பேசினார்.

Pin It