10 ஆண்டுகாலமாக கோயிலில் ‘அர்ச்சகராக’ செயல்பட்டு வந்த தலித் அர்ச்சகர் இப்போது அதே கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று உள்ளூர் சாதி வெறியர்களால் தடை செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டி கிராமத்தில் இந்த சமூக அவலம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

டி.கல்லுப்பட்டியிலுள்ள கைலாசநாதன் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகராக இருந்து வருபவர் நல்லமுத்து. அவர் ஒரு தலித். நான்கு மாதங்களுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே 5 ஆம் தேதி கோயில் நிர்வாகக் குழுவில் இருந்த தலித் அல்லாத சாதியினர், நாகமுத்துவை அழைத்து, இனி கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் பூஜைசெய்வதை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்றும் கூறினர். 10 ஆண்டுகாலத்துக்கும் மேலாக என்னை ஏற்றுக் கொண்டவர்கள், இப்போது எதிர்ப்பது ஏன் ஏன் நாகமுத்து கேட்டார். உடனே நாகமுத்துவை சாதிவெறியர்கள், அடித்து உதைத்துள்ளனர்.

இது பற்றி நாகமுத்து கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரச்சினை தொடங்கிவிட்டது. முக்கியமான பண்டிகை  மற்றும் “புனித” நாட்களில் என்னை பூசை சடங்குகள் நடத்த அனுமதிக்காமல், அன்று மட்டும் “பிராமண” (பார்ப்பன) அர்ச்சகர்களை அழைத்து வந்து அவர்களுக்கு, கூடுதலாக ஊதியம் தந்து பூசைகளை செய்ய ஏற்பாடு செய்தனர். இதைக்கூட நான் ஏற்றுக் கொண்டு, ஏனைய நாட்களில் நான் பூசைகளை செய்து வந்தேன். இப்போது நான் கோயிலுக்குள்ளேயே வரக்கூடாது; பக்தர்கள் பலர் நான் பூசை செய்வதை ஏற்கவில்லை என்று கூறினர். இதை நான் கேள்வி கேட்டபோது, இழிவாகப்பேசி, என்னைத் தாக்கினர்” என்று கூறினார்.

நாகமுத்து காவல்துறையை அணுகியபோது, காவல்துறை, தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் மனித உரிமையாளர்கள் ஆதரவோடு, உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தென்கரை காவல் நிலைய அதிகாரிகள் ‘எப்.அய்.ஆர்.’ மட்டும் ஆகஸ்டு 2 ஆம் தேதி பதிவுசெய்தனர். எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.

“இந்த வழக்கில் சாதிப் பிரச்சினை இருப்பதால் எங்களால் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோயில் நிர்வாகத்தினருக்கு அர்ச்சகரை பதவி நீக்கும் அதிகாரம்உண்டு. அதே நேரத்தில் நாகமுத்து தாக்கப்பட்டது உண்மை தானா என்று விசாரித்து வருகிறோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி கூறினார்.

“இந்தக் கோயில் பற்றி எவருமே கவலைப்படாத காலத்தில் நாகமுத்து என்ற தலித் எந்த எதிர்ப்பும் இன்றி அர்ச்சகராக இருந்தார். இப்போது சுற்றுப் பகுதியிலுள்ள செல்வாக்குள்ள பிரமுகர்கள் கோயிலைப் புதுப்பித்தப் பிறகு, கோயில் புதுப் பொலிவு பெற்றவுடன் இப்போது அவர்களுக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் தேவைப்படுகிறார். இது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது” என்று ‘எவிடென்ஸ்’ இயக்குனர் கதிர் கூறினார். அர்ச்சகர் தொழில் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த நாகமுத்து குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது - என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

Pin It