மத்தியில் ஆளும் ஆட்சி மக்களுக்காகக் கவலைப்படுவதைவிட, பார்ப்பன-பன்னாட்டு நிறுவனங்களின் நலன் காக்கவே துடிக்கிறது. மக்கள் வாழ்க்கையில் மருத்துவ நலன் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் ஒரு காலத்தில் இந்தியாவில் அமலில் இருந்த காப்புரிமைச் சட்டத்தினால் மருந்துகள் குறைவான விலையில் கிடைத்து வந்தன- பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக இந்த சட்டத்தை விலக்கிக் கொண்டுவிட்டது, இந்திய பார்ப்பன ஆட்சி.  இதனால் மருந்துகள் விலை கடுமையாக உயரத் தொடங்கி விட்டன.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஒரு கேள்வியை அரசிடம்  வைத்தது.  இந்தியாவில் இன்றியமையாத மருந்துகள் விலை, ஏழை எளிய மக்கள் பயன்படுத்துமளவுக்கு அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே அந்தக் கேள்வி. இதற்கு பதிலளிக்காமல் அரசுத் துறைகள் மவுனம் சாதித்து வருகின்றன. இந்திய ஆட்சி, மருத்துவத் துறையில் 100 சதவிதம் அன்னிய மூலதனத்தை அனுமதித்துவிட்டதால், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாக இந்தியா மாற்றப்பட்டுவிட்டது. இன்றியமையாத  மருந்துகளாக 348 மருந்துகளை இந்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில் விலைக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 37 மருந்துகளுக்கு மட்டும்தான்.  மற்ற 311 மருந்துகளை என்ன விலையிலும் விற்கலாம்.

சந்தையில் தங்கள் உற்பத்தி மருந்துகளை விற்பதற்கு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கோடி கோடியாக பணத்தை லஞ்சமாக வாரி இறைக்கின்றன. ‘ராணிடின்’ என்ற குடல் புண்ணுக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனம், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 466 மருத்துவர்களை துபாய்க்கு உல்லாசப் பயணம் அழைத்துச் சென்று, ரூ.233 கோடி செலவிட்டுள்ளது. ‘டிரக்கோ’ எனும் அல்சருக்கான மாத்திரையை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைத்து எழுதித் தருவதற்காக ஒரு மருத்துவருக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் ரூபாயை இந்நிறுவனம் செலவிட்டுள்ளது. இந்தச் செலவுகள் எல்லாம் மக்கள் தலையில்தான் விழுகிறது. உயிர் காக்கும் மருந்தான ‘மெரோபனம்’ என்ற மருந்து அதிகபட்ச விலையாக ரூ.2300-க்கு விற்கப்படுகிறது. ஆனால், மருந்து கடைகளுக்கும், மருத்துவர்களுக்கும் இது ரூ.470 க்குத்தான் விற்கப்படுகிறது.

மற்றொரு அதிர்ச்சியான செய்தி இது. ம.பி. மாநிலத்தில் நடந்த சம்பவம்; ஆண்களின் ‘செக்ஸ்’ உணர்ச்சியைத் தூண்டுவதற்கான ‘தடாலில்’ எனும் மருந்தை இரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆராய ஒரு மருந்து நிறுவனம் திட்டமிட்டது. சில மருத்துவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அப்பாவி மக்களிடம் பரிசோதித்துப் பார்த்தது. இதில் இரத்த அழுத்த நோய்க்குள்ளான பலர் இறந்து விட்டார்கள். எவ்வளவு பெரிய கொடுமை! இந்தக் கொடூரமான கொலைக்குக் காரணமான மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மீது, இந்திய ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறைகேடான சோதனையை நடத்திய மருத்துவர்களுக்கு மட்டும் ரூ.5000 அபராதம் விதித்து மூடி மறைத்து விட்டார்கள். 

இப்படி மக்களை சுரண்டி சாகடிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் தொழிலாளர்கள் சட்டங்களையும் மதிப்பதில்லை. ‘பைசா’ எனும் அமெரிக்க நிறுவனம், ‘பிகாசில்ஸ்’ எனும் சத்து மாத்திரைகளை தயாரிக்கிறது. இந்தியாவில் தனது நிறுவனத்துக்கு தொழிலாளர்களோ, விற்பனை பிரதிநிதிகளோ ஒருவர்கூட கிடையாது என்று அப்பட்டமாக பொய் கூறுகிறது, இந்த நிறுவனம். ஆனால், தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் இந்நிறுவனத்துக்காக 1985 தொழிலாளர்கள் பணிபுரிவதாக உறுதி செய்துள்ளனர். தொழிலாளர்களுக்கான சட்டப்படியான சலுகைகள், உரிமைகளை வழங்காமல் இருப்பதற்கே இந்தப் பொய். இப்படித்தான் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மருந்து நிறுவனங்கள், இந்தியாவின் சட்டங்களையே மதிக்காமல், கோடி கோடியாய் சுருட்டுகிறார்கள். இந்திய ஆட்சி இதற்கு பச்சைக் கொடி காட்டுகிறது.

(தகவல்கள்: 4.2.2012 ‘தீக்கதிர்’ ஏட்டில் வெளி வந்த கட்டுரை)

Pin It