ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது

மக்கள் கடலில் கழகக் கூட்டம்

ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் மே 16, 17, 18 தேதிகளில் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களுக்கும், தமிழ் ஈழத்தில் ராணுவத்தால் மரணத்தைத் தழுவிய பல லட்சம் தமிழர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு உருக்கத்துடனும் உணர்வலைகளுடனும் கடந்த 19 ஆம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் திராவிடர் கழக சார்பில் நடைபெற்றது.

“இனப்படுகொலை ஆட்சியின் கீழ் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது! அய்.நா.வே! இந்திய அரசே! ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து” என்ற முழக் கத்தை முன் வைத்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டத் தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். பெரும் மாநாடு போல் காட்சி அளித்தது.

தேனிசை செல்லப்பா குழுவினரின் எழுச்சி இசையோடு தொடங்கிய நிகழ்ச்சிக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை முன்னின்று மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த  கரு. அண்ணாமலை வரவேற் புரையாற்றினார். வழக்கறிஞர் குமாரதேவன், பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை. இராமகிருட்டிணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  இனமான நடிகர் சத்யராஜ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினர்.

நடிகர் சத்தியராஜ் தனது உரையில்:

“ஈழத் தமிழர்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் அய்தராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அதற்காக அனைத்து நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்களிடமும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து நிகழ்ச்சிகளின் சார்பில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே நான் அய்தராபாத்திலிருந்து படப்பிடிப்பு நிகழ்ச்சிக்கு இடையே வந்துள்ளேன். பெரியார் திராவிடர் கழக மேடையில் நான் நின்று பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் திராவிடர் கழக நிகழ்வுகளை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். இந்த இயக்கம் மிகச் சிறந்த சிந்தனையாளர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவைப் பகுதியில் நான் எனது ஊருக்குப் போகும் போதெல்லாம் பல கிராமங்களில் தீண்டாமைக்கு எதிராக இரட்டை குவளை முறைகளுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களின் சுவரொட்டிகளைப் பார்க்கிறேன். ஈழத்திலே வாக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் என்பதை விளக்கி இந்த கூட்டத்துக்கான துண்டறிக்கையின் பின்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றே போதும். இதைவிட சிறப்பாக வாக்கெடுப்புக்காக காரணங்களைக் கூற முடியாது. உலகத் தரம் மிக்கதாக இந்த கருத்துகள் அமைந்துள்ளன.

இங்கே இந்தக் கழகத்தின் சார்பில் பேசிய அதன் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருமே மிக அருமையாகப் பேசினார்கள். மிகச் சிறப்பாக செயல் பட்டு வரும் இந்த இயக்கத்துக்கு ஆதரவைத் தெரிவித்து உற்சாகப்படுத்த வேண்டியது எங்களது கடமை. அதற்காகவே இதில் பங்கேற்க வந்தேன். பிரபஞ்சத்தில் உலகம் உருவானபோது இத்தனை நாடுகள் கிடையாது. பல்வேறு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை பெற்றுள்ளன. அதேபோல் ஈழமும் ஏன் தனி நாடாக விடுதலை அடையக் கூடாது? உண்மையில் சொல்லப் போனால், தமிழ் ஈழம் தமிழர்களிடமிருந்து சிங்களர்களால் அபகரிக்கப்பட்ட, திருடப்பட்ட நாடு. திருட்டுக் கொடுத்த நாட்டை திரும்பக் கேட்கிறோம். அதற்காக அய்.நா. என்ற காவல் நிலையத்தில் புகார் செய்கிறோம். நமது நாட்டை திருடியவனிடமிருந்து நாம் திரும்பக் கேட்பது தவறா?” என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.

இறுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எழுச்சியுரையாற்றினார் வைகோ.  பெரியார் திராவிடர் கழகம் போர் வீரர்களின் பாசறை என்று கூறிய அவர், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டக் களத்தில் இணைந்து செயல்படுவோம் என்று அறைகூவல் விடுத்தார்.

ஈழத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய பாலியல் வன்முறைகள் இனப் படுகொலைகளை விரிவாக எடுத்துரைத்தார். இறுதி வரை கடல் போல் திரண் டிருந்த மக்கள் கருத்துரைகளைக் கேட்டனர். மு.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Pin It