“ஜனநாயகமும்-சாதி அமைப்பும், ஒன்றையொன்று சார்ந்து பயணிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனநாயகம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி அமைப்போ, சமூகத்தில் மேலானவர், கீழானவர் என்ற வேறுபாடுகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏதேனும் ஒன்று சாகடிக்கப்பட வேண்டும். இன்றைக்கு நாம் ஒன்றுபட்டு, ஜனநாயகத்தின் பெருமைகளை முழுமையான மகிழ்ச்சியில் கொண்டாடுகிறோம். அதே நேரத்தில் நாம் சாதி அமைப்பை நம்மிடமுள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி, வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.”

- இவ்வாறு நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டிருப்பவர் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் திருமதி மீரா குமார். நாடாளுமன்றம் தொடங்கி 60 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் அதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் (மே 13, 2012) தமது உள்ளக் குமுறலை சமூகத்தின் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஜாதி அமைப்புக்கும், பார்ப்பனிய இந்து மதத்துக்கும் எதிராக வாழ்நாள் இறுதிவரை உறுதியாகக் குரல் கொடுத்த பாபு. ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் மீராகுமார். எனவே, தந்தை வழி வந்த சிந்தனை மரபு அவரைப் பேச வைத்திருக்கிறது. அவரைத் தவிர, இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வேறு எவரும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அவர் தொடங்கி வைத்த விவாதத்தைத் தான் சரத் (யாதவ்), லல்லு பிரசாத் (யாதவ்) வழி மொழிந்திருக்கிறார்கள்.

அவரே குறிப்பிட்டதுபோல, ஜனநாயகமும்-சமத்துவமும், ஒன்றுக் கொன்று முரணாக இருந்தும், ஜனநாயகத்தின் நோக்கத்தையும், சாதியமைப்பு சீரழித்துவிட்டது. ஜனநாயகத்தை உறுதி செய்யும் தேர்தலில் ‘ஜாதி’ தான் முதன்மையாக பங்காற்றுகிறது. வேட்பாளர் தேர்வுக்கும் கட்சிகளில் தலைவர்களின் அரசியல் வலிமைக்கும் அடித்தளமாக சாதியே பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய உறுப்பினர்களைக் கொண்டே நாடாளுமன்றமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தமதத்தை செரிமானம் செய்த பார்ப்பனியம், ஜனநாயகத்தையும் ஜாதி நாயகமாக்கிவிட்டது. இதனால்தான் பெரியார், “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாவிட்டால், இந்தியாவில் எதிர்கால ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகிவிடும்” - என்று 1925 ஆம் ஆண்டிலேயே எச்சரித்தார்.

தீண்டாமை - ‘ஜாதி’ எதிர்ப்பு என்பது சாதி அமைப்பையே  முழுமையாக எதிர்ப்பதில் தான் முழுமை பெற முடியும் என்பதே, பெரியாரும், அம்பேத்கரும் முன் வைத்த உறுதியான கருத்து. மீரா குமார் அவர்களும் தமது உரையிலே இதை துல்லியமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். (We should also root out caste system with all the might at our command)

ஜாதி அமைப்பை வேரோடு அழித்தொழிப்பது என்பதற்கான அர்த்தம் என்ன? அது மனுஸ்மிருதியில் இருந்தாலும் பகவத்கீதையில் இருந்தாலும் இராமாயணத்தில் இருந்தாலும் எதிர்த்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். சாதி அமைப்பைப் பாதுகாக்கும் மேற்குறிப்பிட்ட “புனிதங் களை” கேள்விக்குள்ளாக்கினாலேயே  “மதத்தைப் புண்படுத்துகிறார்கள்” என்று பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் கூக்குரலிடுகின்றன. அரசியலமைப்பின் சிவில் சட்டத் தொகுதிகளில் இந்துக்களுக்கான பிரிவுகளில் பலவும் சாதியமைப்பைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. காலங்காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது (customs and usage) என்ற பிரிவும் சாதியமைப்புக்கு உறுதியான பாதுகாப்பை வழங்கி யுள்ளது. சமூகத்தில் தீண்டாமை சட்டப்படி குற்றம் என்று கூறும் சட்டம், இந்து மதத்தில் மட்டும் நிபந்தனைக்குட்பட்ட “தீண்டாமை”யைப் பாது காத்துக் கொண்டிருக்கிறது. கோயில் கர்ப்ப கிரகத்தில் “சூத்திரர்களும் பஞ்சமர் களும்” இன்று வரை தீண்டப் படாதவர்களாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இப்படி ‘பழக்க வழக்கங்களின்’ பெயரால் சாதியை பார்ப்பனியத்தைப் பாதுகாப்பதை ஒழித்துக் கட்ட அம்பேத்கர்  1948 இல் இந்து சட்டத் திருத்த வரைவை முன்மொழிந்தார். அவர் தயாரித்த வரைவு, இந்தப் “பழக்க வழக்கங்கள்” தொடாந்து கடைபிடிக்கப்படுவதை தடை செய்தது. வைதீக வெறியரான அன்றைய குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத், பார்ப்பனிய நிறுவனத் தலைவர் காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள், பிரதமர் நேருவை மிரட்ட, நேருவும் பார்ப்பனியத்துக்கு பணிந்து, அந்த ‘வரைவு’ சட்டமாகாமல் தடுத்து விட்டார். அம்பேத்கர் அதனாலேயே தனது சட்ட அமைச்சர் பதவியை உதறித் தள்ளினார். இதே இந்திய நாடாளுமன்றம் தான் இந்த வரலாற்று நிகழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறது. பெரியாரும் அரசியல் சட்டம் உருவாக்கப்படும்போது இது குறித்து கவலையுடன் சுட்டிக் காட்டினார்.

“இப்போதுள்ள பிரிட்டிஷ் ஆதிக்கம் நீங்கின. இந்திய யூனியன் அமைப்பு முறையிலும் ஜாதி வகுப்பு விஷயமாய் செய்யப்படப் போகும் விதிகளில்  பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்கிற வார்த்தைகளுக்கு இடமளிக்கப்படுமா? இந்து மத சமுதாய ஆதாரங்கள், இடங்கள் முதலியவைகளில் பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்கிற வார்த்தைகள் இருக்க இடம் அளிக்கப்படுமா? அந்தப்படி இருப்பவைகளை சர்க்கார் அங்கீகரிக்குமா? என்கிற விஷயம் இதுவரை தெளிவாக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார். (குடிஅரசு 24.4.1948)

பெரியாரும் அம்பேத்கரும் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடிய சாதியமைப்புக்கான பாதுகாப்புகள் சட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நியாயமாக ‘திராவிட அரசியல்’ கட்சிகள் இந்தச் சாதி எதிர்ப்புக் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். ஆனால், கொள்கை அடையாளத்தை இழந்து நிற்கும் அக்கட்சிகள் வாய் திறக்காத நிலையில் ஒற்றைக் குரலாய் நின்று ‘சாதியமைப்பை’ச் சாடிய மீராகுமார் அவர்களைப் பாராட்டுகிறோம்!

Pin It