கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து செய்தார். எம்.ஆர்.இராதா நாடகத்தின் வழியாக இராமாயண எதிர்ப்பு செய்யும்போது, பெரிய கலவரம் ஏற்படுகிறது. அப்போது காங்கிரஸ் காரர்கள் தான் எதிர்த்தார்கள். ஒரு அவதாரத்தை போட்டதற்கே இவ்வளவு கூச்சலிடுகிறார்களே, பத்து அவதாரத்தையும் காட்டியாக வேண்டும் என்று குத்தூசி குருசாமியிடம் சொன்னாராம் இராதா. அதன் பிறகு, குத்தூசி குருசாமி எழுதிய ‘தசாவதாரம்’ என்ற நாடகத்தை எம்.ஆர். இராதா நடித்தாராம். புராணம் என்ற பெயரால், அவர்கள் புரட்டுகளை நம்ப வைத்து நம் மீது பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதற்கு எதிரானதுதான் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம்.

இராமர் பாலம் என்பதை எங்களுடைய மத நம்பிக்கை என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்கிறோம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது என்பதுதான் காந்தி சொல்லிக் கொடுத்த மதச் சார்பின்மை. அரசின் எந்த கடமைகளிலும் மதத்தைச் சார்ந்து அல்லது மதத்தின் நுழைவு இருக்கக் கூடாது என்பது தான் பெரியார் சொன்ன மதச்சார்பின்மை. நிர்வாணமாக இருக்கலாம். குளியலறையில், படுக்கை அறையில் மட்டும். வீதியில் வரக் கூடாது. கடவுளை வணங்கலாம். உன் வீட்டில் மட்டும். அலுவலகத் திற்கு வர வேண்டாம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது தான் மதச்சார்பின்மை என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது பெரியார் சொன்னார், “எந்த ஆணுடனும் தொடர்பில்லாத பெண் தான் கன்னிப் பெண் என்று நான் சொல் கிறேன். அனைத்து ஆண்களையும் சமமாக பாவிப் பவள் தான் கன்னிப்பெண் என்று நீ சொல்கிறாயே” என்று. அவர்கள் சொல்கிறபடி அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது என்றாலும் கூட...

ஆடம் பிரிட்ஜ் என்பது ஆதாம் பாலம். இஸ்லாம் மதத்திலும், கிருத்துவ மதத்திலும், இரண்டு மதத்திலுமே ஆதாம் ஏவாள் தான் முதல் மனிதர்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாம் மதப்படி ஏசுநாதரும் ஒரு நபி (கடவுளின் தூதர்). இஸ்லாமியர் களின் கதைப்படி ஆதாம் கடவுளிடம் சென்று தன் பாவத்திற்காக மன்னிப்புக் கேட்டு ஆயிரம் ஆண்டு தவம் இருக்கிறான். இலங்கையில்  உள்ள ஆதாம் சிகரம் என்ற மலையின் மீது நின்று. இங்கிருந்து இலங்கை செல்லும்போது சென்ற பாலம் தான் ஆதாம் பாலம். இந்துக்களுக்கு நம்பிக்கைப்படி இராமர் பாலம் என்றால், இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி அது ஆதாம் பாலம். இந்து மத நம்பிக்கைப்படி மட்டும் தான் என்றாலும்.

வால்மீகி இராமாயணம், துளசிதாச இராமா யணம், கம்ப இராமாயணம். இப்படி இந்தியாவில் பல இராமாயணங்கள் உள்ளது. வால்மீகி இராமாயண காலத்திலேயே பவுத்த இராமாயணம், சமண இராமாயணம் என்று உள்ளது. பவுத்த இராமாயணப்படி, காசி மன்னனின் மகன்தான் இராமன். இராமனின் தங்கை சீதை என்று சொல்லப்படுகிறது. சமண இராமாயணத்தில் - தநதையால் துரத்தப்பட்ட இராமன், இமயமலை சென்று விடுகிறான். ஆந்திராவில் ஒரு இராமாயணம் பெண்களால் நடத்தப்படுகிறது. அதில் இராமனை அயோக்கியனாகவும், பெண்களை மதிக்கத் தெரியாதவனாகவும், பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தியவனாகவும், இன்றளவிலும் அதுவும்  பார்ப்பன பெண்களால் கிராமியப் பாடல்களாக பாடி நடத்தப்படுகிறது. அனைத்து இராமாயணங் களையும் தொகுத்து, பலாரிக்ஸ்மன் என்ற ஒரு பெண்மணி, மெனி இராமாயணாஸ் Many Ramayanas என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். ஆக, அந்த இராமாயணப்படி, இராமன் கீழே வரவில்லை. இமயமலை சென்று விடுகிறான். ஆக அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பவர்கள் என்றால் சமண இராமாயணத்தையும் தானே ஏற்றுக் கொள்ள வேண்டும்?

இராமன் விந்திய மலையை தாண்டி வரவில்லை என்பதுதான், பல ஆய்வாளர்கள் சொல்கிற உண்மை. விந்திய மலைக்கு அந்தப் பக்கம், சுற்றிலும் நீர் சூழ்ந்த ஒரு சமவெளிப் பகுதி இருக்கிறது. லங்கா என்ற பெயரில் இன்னும் அந்த பகுதி இருக்கிறது. அதேபோல் சுயலா மலை என்ற மலை ஒன்றும் இருக்கிறது. இந்த மலையில் இருந்து தான் இராமன் படையை நடத்திச் சென்றான் என்று சொல்லப்படுகிறது. மகேந்திரமலையில் இருந்துதான் அனுமன் ஒரே தாவாக தாவிச் சென்றான் என்று இராமாயணம் சொல்கிறது. மகேந்திர மலையும் அங்கு இருக்கின்றது. லங்கா, சுயலாமலை, மகேந்திர மலை ஆகிய மூன்றும் அருகருகில் உள்ளது. எனவே தான் அவர்கள் சொல்கிறார்கள்... “மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பெயர் தமிழில் தாமிரபரணி என்றும், கிரேக்க, இத்தாலிய இலக்கி யங்களில் தாம்ரோன் என்றுதான் அழைக்கப்பட் டிருக்கிறது. பின்னாளில் சிங்களத் தீவு என்று சொன்னார்கள். அது சிலோன் ஆனது. ஆக வரலாற்றில்  இலங்கை என்று அழைக்கத் துவங்கியது ஒரு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான். இராமாயணம் நடந்ததாக சொல்லப்படுகிற காலத்தில் அது தாமிரபரணி - தாம்ரோன் தான்.

தமிழ்நாட்டைச் சார்ந்த பரமசிவ அய்யர் என்பவர் ஆய்வு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டிருக் கிறார். அதன் பிறகு அவருடைய தம்பி அமிர்தலிங்கம் அய்யர் (சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளராக இருந்த திண்டுக்கல் ஏ.பாலசுப்ரமணியம் அவர்களின் தந்தை) கிரிட்டிக் ஆன் இராமாயணா Critic on Ramayana-இராமாயணத்தின் மீதான விமர்சனங்கள்) என்ற புத்தகத்தை எழுதுகிறார். அவரோடு சங்காலியா என்ற இன்னொரு ஆய்வாளர் ஆய்வு செய்தார். இப்படி பல ஆய்வாளர்கள் செய்த ஆய்வுப்படி இராமன் விந்தியமலையோடு நின்று விட்டான் என்று சொல்கிறார்கள். அமிர்தலிங்க அய்யர், இலங்கா, சுயலாமலை, மகேந்திர மலை ஆகிய மூன்றும் அருகருகில் இருப்பது பற்றி வரைபடம் வெளியிட்டார். அதை அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர். பல அறிஞர் களின் கட்டுரைகளைத் தொகுத்து, கே.முத்தையா (சி.பி.எம். கட்சியை சார்ந்தவர்) அவர்கள் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இராமன் எப்போதும் தெற்கே வரவில்லை என்று இவரும் சொல்கிறார். மேலும் அந்த நூலில்... இராஜராஜ சோழன் இலங்கைக்கு படையெடுத்துப் போனதற்கு பின்னால், சோழர்கள் அதை நியாயப்படுத்துவதற்காக, கம்பரை வைத்து இராமாயணம் எழுதி, எங்களுக்கு முன்னரும் பலர் இலங்கையின் மீது படையெடுத்துள்ளார்கள் என்று காட்டுவதற்காக செய்யப்பட்ட முயற்சிதான் சிங்களத் தீவை இலங்கை என்று சொல்லி, இராமன் இங்கு வந்ததாகச் சொல்லி கதைகளை உண்டாக்கி விட்டார்கள் என்று சொல்கிறார்.

ஆறாயிரம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் (கி.மு.4000-5000) கடல் மட்டம் இப்போதையவிட பதினேழு மீட்டர் குறைவாக இருந்தது என்று, பழங்காலத்தை ஆய்வு செய்யும் தொல்புவியல் துறையின் இயக்குநர் சொல்கிறார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நீர் மட்டம் இப்போது இருப்பதைவிட அறுபது மீட்டர் குறைவாக இருந்தது. டுயளவ உடயளளiஉயட அயஒiஅள என்று அழைக்கப் படுகிற ஒரு காலகட்டத்தில், ஒரு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் (கி.மு.18000) நூற்றி பதினெட்டு மீட்டர் கடல் மட்டம். இப்போது இருப்பதைவிட குறைவாக இருந்தது என்று தான் தொல்புவியல் ஆய்வு சொல்கிறது. அதன்படி கி.மு.18000 ஆண்டு வரை இலங்கையும் இந்தியாவும் இணைந்த நிலப்பகுதிகளாகத் தான் இருந்தது. ஆக, தண்ணீர் இல்லாதபோது பாலம் கட்ட வேண்டிய அவசியம் இராமனுக்கு இருந்திருக்க முடியாது.

இராமாயணப்படி இராமன் இலங்கைக்கே வரவில்லை. விந்திய மலையோடு நின்று விட்டான். அயோத்தியில் இருந்து காட்டிற்குப் போகச் சொன்னால், இமயமலைதான் பக்கத்தில் இருக்கிறது. அதைவிட்டு விட்டு இரண்டாயிரம் மைல் தூரம் வரவேண்டிய அவசியம் இல்லை. அப்படியே வந்தாலும் கங்கை, யமுனை, கோதாவரி ஆகியவற்றை கடந்து வந்திருக்க வேண்டும். ஆனால், அங்கெல்லாம் பாலம் கட்டாமல் இங்கு மட்டும் தான் கட்டியதாக சொல்வது நம்பும்படியாக இல்லை. இராமாயண கதையின்படியேகூட, வால்மீகி சொல்வது... “இராமன் பாலம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறபோது, தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் கட்ட முடியவில்லை. உள்ளே உள்ள கற்களின் மீது ராம் ராம் என்று அனுமன் எழுதுகிறார். உடனே அந்த கற்களெல்லாம் தண்ணீரில் மிதக்க ஆரம்பிக் கின்றது. மிதக்கும் கற்களை பாலமாக பயன்படுத்தி தான் அந்தப் பக்கம் செல்கிறார்” என்பதுதான். இது வடநாட்டு தொலைக்காட்சி நாடகத்திலும் உள்ளது.  பின்னர் எழுதப்பட்ட இராமாயணக் கதைகளில் தான் பாலம் கட்டியதை, அணில் உதவியதை எல்லாம் சேர்த்து எழுதியுள்ளார்கள்.       (தொடரும்)

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்

உள்நாட்டுப் பாதுகாப்புகளில்கூட மத்திய அரசு நேரடியாக தலையிடுவதை மாநில அரசுகள் எதிர்க்கின்றன. அரசியல் சட்டம் உருவாக்கிய காலச் சூழல் வேறு; இப்போதைய நிலை வேறு; அரசியல் நிர்ணய சபை, வலிமையான மத்திய அரசையே விரும்பியது. பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா போராடியதையும் சமஸ்தான மன்னர்கள் தங்களின் ஆளும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்ததை யும் கவனத்தில் கொண்டு, மாநிலங்கள் வலிமையாகி விடக் கூடாது. மத்திய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்பியது. நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பலரும் தங்கள் துறைகளுக்கான முழு அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்று விரும்பினர்.  1950 ஆம் ஆண்டு நேரு உருவாக்கிய திட்டக் கமிஷன்கூட இதே கண்ணோட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது.

இது பேரதிகார மிக்க அமைப்பாக எதிர்காலத்தில் மாறிவிடும் என்று சர்தார் பட்டேல்கூட அச்சம் தெரிவித்தார். அதுதான் நடந்தது. திட்டக் கமிஷன் பற்றி அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிதி ஆணையம், தேசிய வளர்ச்சிக் கவுன்சிலைவிட திட்டக் குழுதான் அதிகாரம் செலுத்துகிறது. ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு திட்டக் குழு முன்புதான் கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது. 1960 ஆம் ஆண்டில் இந்தியா ‘கூட்டுறவு கூட்டமைப்பாக’ செயல்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போது அந்த நிலையும் போய், மாநிலங்கள் நகரசபைகளாக மாற்றப்பட்டுவிட்டன. இந்தியாவுக்கு இத்தகைய வலிமையான மத்திய அரசு தேவை இல்லை என்று அரசியல் கட்டுரையாளர் சுவப்பன் தாஸ் குப்தா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (ஏப்.22) எழுதியுள்ளார்.

மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து வரும் டில்லி ஆட்சி, இப்போது மாநிலங்களின் சட்டம் ஒழுங்குகளிலும் தலையிடத் தொடங்கிவிட்டது. ‘பயங்கரவாத தடுப்பு மய்யம்’ என்ற மத்திய அரசின் தீவிர முயற்சிக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்டம் வேண்டும்; அதில் மாநில உரிமைகள் பறிக்காதவாறு திருத்தங்கள் வேண்டும் என்பதே பல மாநில அரசுகளின் கோரிக்கை. இத்தகைய சட்டமே தேவையற்றது என்பதே நமது கருத்து. இந்தியா என்ற அமைப்பை கட்டிக்காக்க முடியாமல், பல்வேறு தேசிய இனங்களின் முரண்பாடுகளுக்கு இடையே பலவீனமாகிக் கொண்டிருக்கும் மத்திய அரசு ‘பயங்கரவாத ஆபத்துகள்’ என்ற அச்சத்தையூட்டி, இந்தியாவை உடையாமல் இணைத்து வைக்க நடக்கும் பார்ப்பனிய சிந்தனை இதில் அடங்கியிருக்கிறது. ‘பயங்கரவாதம்’ என்று இவர்கள் கூறிவரும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே இந்தியா என்ற கட்டமைப்புதான் என்பதே உண்மை!

Pin It