இராமாயணத்தையோ மதநூல்களையோ சமூகப் பார்வையில் ஆய்வு செய்து ஏதேனும் நூல் வந்தால், உடனே அதைத் தடை செய்ய பார்ப்பனர்களும் இந்துத்துவா அமைப்புகளும் மத அமைப்புகளும் கூக்குரலிடுகின்றன. ஆனால், ‘பிராமணனை’ உயர்வுபடுத்தி ‘சூத்திரனை’ பார்ப்பனரின் வைப்பாட்டி மகன் என்று இழிவுபடுத்தும் ‘மனுதர்மம்’ தடைபோடப்படவில்லை. ‘மனுதர்மத்தின்’ புதிய பதிப்புகள் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பார்ப்பன ஏடுகள் அதற்கு மதிப்புரை எழுதி பாராட்டுகின்றன.

எந்த ஒரு நூலுக்கும் தடை கோரும்போது கண்மூடித்தனமாக ஊடகங்கள் அதற்கு ஆதரவாக கருத்துகளை உருவாக்குவது சரிதானா? என்ற கேள்வியை மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் எழுப்பியுள்ளார். “இந்த நூல் எங்கள் மதத்தினரின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாகப் புண்படுத்துகிறது என்று எதிர்ப்பு வந்தால், ஊடகங்கள் அப்படிப் புண்படுத்துவது என்று கூறப்படுவது உண்மையா என்பதை ஆய்வு செய்ய வேண்டாமா? எதிர்ப்பு தெரிவிக்கும் மத அமைப்பு எது? அந்த மதத்தில் குறிப்பிட்ட எந்தப் பிரிவினரின் உணர்வு பாதிக்கப்பட்டுள்ளது?

இது குறித்து ஆராய்வது கிடையாது. ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. ஒரு பிரிவினர் இத்தகைய நூல்களை மற்றொரு பிரிவினரைத் தாக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளே அதகம் இருக்கின்றன” என்று ரொமிலா தாப்பர் கூறியுள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சியளிக்கும் பத்திரிகை பயிற்றிக்கான ‘ஆசிய கல்லூரி’ அறக்கட்டளை சொற்பொழிவுக்காக ரொமிலா தாப்பர் ஆற்றிய உரையின் பதிவு, கடந்த மே 3 ஆம் தேதி மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. ‘இந்து’ நாளேடு (மே 4) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த உரையில்

“கடந்த கால இந்திய வரலாற்றை எழுதுவது என்பதும் சவாலாக உள்ளது. காரணம், கடந்த கால வரலாற்றை எழுதிய ஆசிரியர்களின் கண்ணோட்டத்தையும் நோக்கத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியிருக்கிறது” என்றார் ரொமிலா தாப்பர். “வரலாற்று காரணங்கள் ஏதுமின்றி ஒரு நூலை தடை செய்ய வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் வேதம் நூலில் என்ன வரலாற்றுப் பிழை வந்து விட்டது? சிவாஜியின் பிறப்பு பற்றி தனது நூலில் மறைமுகமாகக் குறிப்பிட்ட ஜேம்ஸ் லேய்ன் நூலுக்கு ஏன் தடைபோட வேண்டும்? பல்வேறு இராமாயணங்கள் இருப்பதை எடுத்துக்காட்டிய பேராசிரியர் இராமானுஜம் எழுதிய நூலை ஏன் டில்லி பல்கலைக்கழகம் பாடத்திலிருந்து நீக்க வேண்டும்?” அரவிந்தர் பற்றி சில கருத்துகளை தனது நூலில் எழுதியதற்காக எழுத்தாளர் பீட்டர் ஹீஸ் என்பவரை ஏன் இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்? என்று கேட்டார் ரொமிலா தாப்பர். மேற்குறிப்பிட்ட நூல்களைத் தடை செய்யக் கோரியவர்கள் பா.ஜ.க. பார்ப்பன இந்துத்துவ சக்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடனே இப்படி பேசு கிறார்கள் என்று கூறிய ரொமிலா தாப்பர் மற்றொரு முக்கிய கேள்வியை எழுப்பினார்.

இந்தியர்களின் அடையாளம் என்பதே சாதிகள் மதங்களின் அடையாளங்கள்தான் என்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டதை இவர்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஒரு மத நிறுவனம் அந்த மதத்துக்குள் அடங்கியுள்ள அனைத்து சமூகக் குழுவினருக்குமான அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அனைத்துப் பிரிவினருக்கும் பேசக் கூடிய அதிகாரம் தங்களுக்கே உண்டு என்று உரிமை கோருவதை ஏன் எதிர்ப்பதில்லை?” என்ற கேள்விகளை அவர் முன் வைத்தார். இந்து மதத்தின் அதிகாரத்தை பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டதையே அவர் கூறுகிறார். ஒவ்வொரு சாதிக் குழுவுக்கும் சமூகப் பிரிவுக்கும் தனித்தனியே உரிமை களைக் கேட்பதை நிறுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த மக்களின் சமூக நீதிக்கு முன்னுரிமை தரப்பட வேண்டியதே அவசியம்” என்று ரொமிலா வற்புறுத்தினார். அதே குரலைத்தான் பெரியார் திராவிடர் கழகமும் இப்போது எழுப்புகிறது.

இந்து மதத்தின் சமூக அமைப்புக்கான அதிகாரத்தை பார்ப்பனர்களே எடுத்துக்கொண்டு ‘சூத்திர-பஞ்சம’ மக்களை இழிவுபடுத்தும் அடக்கியாளும் ‘மனுதர்மத்தை’த் திணிக்கும் அதிகாரத்துக்கு எதிராக கழகம் குரல் எழுப்புகிறது. ரொமிலா தாப்பர் வலியுறுத்தும் சமூகநீதிப் பார்வையில் மனுதர்மத்துக்கு வேண்டும் என்று முழங்குகிறோம். அதை வலியுறுத்த நவம்பர் 26 இல் தீயிட்டுப் பொசுக்கப் போகிறnhம். தோழர்களே தயாராவீர்! 

Pin It