(பகவானை நம்பிப் பயணம் புறப்பட்டவர்கள் பகவானுக்கு சேவை செய்வதாக  கூறிக் கொள்வோர் எவரையும் கடவுள் காப்பாற்றுவது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு நாளும் இதை உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் நடந்த பிறகும், பக்தி மடமையிலிருந்து விடுபடவே முடியாது என்று ‘சத்தியம்’ செய்து கொண்டு நிற்பவர்களை என்ன செய்வது? கடந்த பிப். 19 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் ஏடுகளில் வந்துள்ள செய்திகள் இவை.)

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டையில் ‘மாசி மக’ திருவிழாவுக்குப் போய் ‘சாமி தரிசனம் செய்து விட்டு 30 பேர் தனி வேனில் பரங்கிப்பேட்டை திரும்பியபோது குட்டியாண்டவர் கோயில் பிரதான சாலையில் வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. 3 பெண்கள் பலியானார்கள். வேனில் இருந்த மற்ற அனைவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அர்ச்சகருக்கு கத்திக் குத்து

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு இலவச சாப்பாடு சாப்பிடச் சென்ற ஒருவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறி கோயிலில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். ஆத்திரமடைந்த அவர், கச்சசேசுவரர் கோயில் அருகே நின்று கொண்டு, தன்னை வெளியேற்றியவர்களை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமாட்சியம்மன் கோயில் அர்ச்சகரான நடன சாஸ்திரி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த போதை மனிதர் அருகே பூ விற்ற பெண்ணிடமிருந்த கத்தியை எடுத்து அர்ச்சகரைக் குத்தினார். படுகாயமடைந்த அர்ச்சகர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘கிரிவலம்’ சென்றவர்கள் மரணம்

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சார்ந்த நான்கு நண்பர்கள் கட்டிடத் தொழிலாளர்கள். ஒவ்வொரு மாதமும் ‘பவுர்ணமி’க்கு திருவண்ணாமலை சென்று கோயிலை சுற்றி நடக்கக்கூடிய விரதமான ‘கிரிவலம்’ வருவார்கள். வழக்கம்போல் கடந்த 18 ஆம் தேதி பவுர்ணமிக்கு கிரிவலம் சுற்றி, ‘சாமி தரிசனம்’ முடித்து ஊர் திரும்புவதற்கு பேருந்தை பிடிக்க சாலையைக் கடந்தபோது நாமக்கல் நோக்கி வந்த பேருந்து, அவர்கள் மீது மோதி நான்கு பேரும் உயிரிழந்தனர்.

சாமி ஊர்வலத்தில் மோதல்

கடலூர் மாவட்டம் கம்பளி மேடு கிராமத்தில் மாசி மகத் திருவிழா பிப். 18 ஆம் தேதி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்து வந்தபோது தியாக வள்ளி கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கும் கம்பளிமேடு கிராமத்தினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. அம்மன் சிலைக்கு முன்னால் இரு கிராமத்தினரும் பயங்கர மோதலில் ஈடுபட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். வீடுகள், உடைமைகள், அடித்து நொறுக்கப்பட்டன. காவல் துறை குவிக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாசாணியம்மன்

திருப்பூர் மாவட்டத்தில் ‘மாசாணியம்மன்’ கோயில் இப்போது பெரும் வர்த்தக நிறுவனமாகிவிட்டது. சுடுகாட்டு எலும்புகளை பக்தர்கள் கடித்து விழுங்கும் காட்டுமிராண்டி சடங்கு இந்த கோயிலில் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஓடாக்கூர்கிராமத்திலிருந்து மாசாணியம்மன் தரிசனத்துக்கு 18 பேர் கடந்த 17 ஆம் தேதி இரவு வேன் ஒன்றில் சென்றனர்.

18 ஆம் தேதி அதிகாலை கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதி பக்தர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.

இவை ஒரே நாளில் நிகழ்ந்த ‘பக்தி’ விபத்துகள். சாமி சக்தி என்ற ஒன்று இருந்திருந்தால் தன்னை நம்பிய பக்தர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டுமா? இல்லையா?

Pin It