கச்சத் தீவு இந்திரா காந்தி ஆட்சியில் இலங்கைக்கு ‘தாரை’ வார்க்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை சிங்கள கப்பல் படை சுட்டுக் கொல்வது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. ஆங்கில நாளேடான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (பிப்.2) - தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

•                     தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலி லிருந்து 1983 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் எண்ணிக்கை - 378.

•                     தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது 1975 ஆம் ஆண்டே தொடங்கி விட்டது.

•                     கடலோர மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்கள் மீனவர் கொல்லப்பட்டவுடன், முதல் தகவல் அறிக்கையைப்  (எப்.அய்.ஆர்.) பதிவு செய்கின்றன. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 307வது பிரிவின் கீழ் சிங்கள கப்பல் படையினருக்கு எதிராகவே பதிவு செய்யப்படுகின்றன. சம்பவம் நடந்த இடமும், கச்சத் தீவு அருகே உள்ள இந்திய கடல் பகுதி என்றே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படுகிறது.

•                     குற்றவாளி, சம்பவம் நடந்த இடம் தெளிவாகப் பதியப்பட்டிருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த அடுத்த சில மாதங்களிலேயே “நடவடிக்கை கைவிடப்படுகிறது” அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை கண்டறிய முடியவில்லை என்று கூறி வழக்குகள் முடிக்கப்பட்டுவிடுகின்றன.

•                     ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாசு கூறுகையில்:

“முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதால் ஒரே பயன், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கிடைப்பது தான். மற்றபடி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு எந்த சிறுதுரும்பையும் அசைப்பதில்லை” என்று கூறினார்.

•                     மக்கள் கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த கி.ஜே. இராசன் கூறுகையில்:

“மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல், மத்திய மாநில அரசுகளின் செயலிழந்து போன மலட்டுத்தனத்தையே காட்டுகின்றன. புதுடில்லிக்கு சிறீலங்கா நட்பு நாடு; பாகிஸ்தான் நாடுதான் எதிரி; ஆனால் பாகிஸ்தான் கடல் பரப்புக்குள் மீன் பிடித்த எந்த ஒரு இந்திய மீனவரையும் அந்த நாடு கொன்றதில்லை” என்று கூறினார்.

•                     இந்திய தேசிய பாதுகாப்புக் குழுவின் முன்னாள் ஆலோசகரான சூரிய நாராயணன் கூறுகையில்:

“உலகம் முழுதும் மீனவர்கள் கடல் எல்லைகள் பற்றி கவலைப்படுவதில்லை. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பரப்புக்குள்ளும் மாலத் தீவு கடல் பரப்புக்குள்ளும் மீன் பிடிக்கிறார்கள். இந்திய மீனவர்கள் இலங்கை, பாகிஸ்தான், கடல் பரப்புக்குள் நுழைகிறார்கள். வங்க தேச மீனவர்கள் மியான்மார் கடல் பரப்புக்குள் நுழைகிறார்கள். சர்வதேச கடல் எல்லைகளுக்கான அய்.நா. சட்டத்தின் 73 மற்றும் 145 வது பிரிவுகள் இப்படி எல்லை தாண்டுவதை சிவில் குற்றம் என்றே கூறு கின்றன. கிரிமினல் குற்றமாகக் கூறவில்லை.

•                     ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்மீது மீண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

•                     காவல் துறை கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டு, புகார் கொடுத்தவர் ஒப்புதலைப் பெறாமல், முதல் தகவல் அறிக்கையை நீதிபதி முடக்கியிருப்பாரானால், மீண்டும் மேல் நடவடிக்கையை சட்ட ரீதியாக தொடர முடியும் என்கிறார், மனித உரிமை வழக்கறிஞர் வி. கண்ணதாசன்.

•                     பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தங்களுக்கான உரிமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அரசு இலவச சட்ட உதவி மய்யம், தாமாக முன் வந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவிட வேண்டும்.

•                     உதாரணமாக நடுக்கடலில் ஒரு மீனவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, காவல்துறை வழக்கை விசாரிக்காமல், மூடியிருக்கு மானால், இறந்து போனவரின் நெருக்கமான உறவினர் மீண்டும் மறு விசாரணை நடத்துமாறு நீதிமன்றத்தை அணுக உரிமை உண்டு.

•                     முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, பிறகு அதை முடக்குவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரிடமோ அல்லது அவரது நெருங்கிய உறவினரிடமோ, சாட்சிகளிடமோ காவல்துறை இதுபற்றி கருத்து கேட்டு, பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை காவல்துறை பின் பற்றாத நிலையில் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குற்றப் பதிவை மீண்டும் விசாரிக்கலாம் என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

Pin It