இந்திய துணைக் கண்டத்தில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பாலக்காடு, இடுக்கி, பத்தனம் திட்டை, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக நெருக்கமாக தமிழர்கள் வசிக்கின்றனர் என்று கேரள அரசே அறிவித்துள்ளது. தமிழகத்தில் எவ்வாறு கல்லூரிகள், பள்ளிகளில் மலையாளம் விருப்பப் பாடமாகவும், சில பள்ளிகளில் பயிற்சி மொழியாகவும் உள்ள தோ, அதேபோல கேர ளாவில் மேற் சொன்ன மாவட்டங் களில் பல பள்ளி, கல்லூரிகளில் தமிழ் விருப்பப் பாடமாக வும், பயிற்சி மொழி யாகவும் உள்ளது. மேலும், மேற்கண்ட மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் தமிழ்த் துறை தனியாக இயங்கி வருகின்றது. ஆனால், மொழி வழி மாநிலமாக கேரளா பிரிக்கப்பட்டபின் தமிழர் திருநாளான அறுவடை திருநாளாகவும், தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப் படுகின்ற பொங்கல் நாளை விடுறை நாளாக  அறிவிக்காதது கேரள அரசின் தமிழர்களுக்கு எதிரான போக்காகவே இருந்தது. ஆனால், தமிழக அரசு மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட 1956-க்குப் பின் தமிழகத்தில் கணிசமாக மலையாளிகள் வாழ்கின்ற நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையை ஒட்டி விடுமுறை அளித்திருக்கிறது. தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாளுக்கு தை மாதம் முதல் நாள், ஆங்கில மாதம் சனவரி 14 அல்லது 15 நாளில் விடுமுறை அளிக்க வேண்டி கேரள மாநில தமிழர்கள் சார்பில் கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கமானது கேரளா முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்களை நேரில் சந்தித்து விண்ணப்பம் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட கேரள அரசு பொங்கலுக்கு விடுமுறை அளிக்க முடியாது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பதில் அளித்தது.

இதனைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றன.  கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் 8.1.2011 அன்று கோவையில் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கேரள முதல்வருக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில், தமிழர் திருநாளுக்கு விடுமுறை அளிக்க வற்புறுத்தி கடிதம் எழுதினார்.

கோரிக்கையை ஏற்று கேரள முதல்வர், தமிழர் அதிகம் வாழும் பகுதியில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை அறிவித்தார். கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்த கேரளா வாழ் தமிழர் இயக்கங்களுக்கும், கோவையில் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தோழர்களுக்கும், கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வருக்கும் கோவை இராமகிருட்டிணன் நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

Pin It