இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு, இலங்கையில் தமிழ் பகுதிக்கு ராஜீவ் காந்தி, ‘இந்திய அமைதிப் படை’ என்ற பெயரில் அனுப்பி வைத்த ராணுவம் நடத்திய அத்துமீறல்கள், போர்க் குற்றங்களை நேரில் சென்று ஆய்வு நடத்தி, 1989 ஆம் ஆண்டு மே மாதம் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

விசாரணைக்காக இந்திய அமைதிப்படையினர் மேற்கெண்ட சித்திரவதை நடவடிக்கைகளில் பலர் இறந்திருக்கின்றனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த குலசேகரம் சுந்தரேசன் என்ற இருபது வயது எஸ்டேட் சூபர்வைசர் 1987 டிசம்பர் 22 ஆம் தேதியன்று மாலை சுமார் 5 மணிக்கு இந்திய அமைதிப் படையினரால் கைது செய்யப்பட்டார். அதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னால்தான் இந்திய அமைதிப் படை வாகனம் ஒன்று கண்ணி வெடிக்குப் பலியானது. மறுநாள் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்பட வில்லை. 22-ந் தேதியன்று அந்தப் பகுதியின் முக்கிய பிரமுகர் ஒருவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைந்திருக்கும் இந்திய அமைதிப்படை முகாமில் விசாரித்தார். அவரிடம் வெகு விரைவில் சுந்தரேசனை விடுதலை செய்வதாகக் கூறப்பட்டது. 25 ஆம் தேதியன்று உறவினர்கள் சென்று விசாரித்தபோது அன்று காலையே குலசேகரன் சுந்தரேசனை விடுதலை செய்துவிட்டதாகக் கூறினர்.

சுந்தரேசன் வீட்டுக்கு வராத காரணத்தினால் நாவற்குழி, பலாலி, மட்டுவில் ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாம்களிலும் தேடினர். கடைசியில் சனவரி ஐந்து 1988 அன்று இந்திய இராணுவத்தினர் கண்ணப்பிடி கல்லறைக்கு அவரது உறவினரை அழைத்துச் சென்று குலசேகரன் சுந்தரேசனின் பிணத்தை அடையாளம் காட்டும்படி கூறினர். வயிற்றில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும், இடது காலில் தீக்காயங்களும், முகத்தின் வலப் பக்கத்தில் பெரிய வீக்கமும் இருந்ததை உறவினர் கவனித்தார். அவர் விளக்கம் கேட்டபோது யாரோ ஒருவர் குலசேகரனின் வாயில் சைனைட் போட்டு விட்டதால் உடனடி மரணம் சம்பவித்துவிட்டது என்று அந்த அதிகாரி கூறினார். சடலத்தை அவர்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டு அந்த இடத்திலேயே ஈமச் சடங்கை நடத்தும்படி கூறினார். மட்டுவில் இந்திய அமைதிப்படை முகாம் கமாண்டர் மறுநாள், குலசேகரம் சுந்தரரேசனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று தமக்குத் தெரியாது என்றும் அவரது இறப்புக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைக்கும்படி பிரார்த்திக்குமாறு உறவினர்களைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

ஜூன் 11, 1988 அன்று மல்லாகத்தில் இந்திய அமைதிப்படை காவலில் சுப்பன் நடராஜா இறந்து போனார். இந்திய அமைதிப் படை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி அவர் மாரடைப்பினால் இறந்து போனார். ஆனால் அம்னஸ்டி இன்டர்நேஷனலுக்குக் கிடைத்த தகவல்களின்படி அவர் சித்திரவதை காரணமாக இறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சுப்பன் நடராசன் தெல்லிப்பளையில் வசிக்கும் கள் இறக்கும் தொழில் செய்யும் 38 வயதான இளைஞன். 1988 ஜுன் 11 அன்று கைதான ஒரு உறவினரை விசாரிக்க மல்லாகம் இந்தியப்படை முகாமிற்கு அவர் சென்றார். அங்கு அவரே கைது செய்யப்பட்டார். அன்றிரவு சுமார் 8 மணிக்கு இந்திய அமைதிப்படையினர் சுப்பன் நடராஜன் மரணத்தைப் பற்றி அவரது உறவினருக்குத் தெரியப்படுத்தினர். மறுநாள் அவரது சடலம் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அவர் மாரடைப் பினால்தான் இறந்தார் என்று தமிழிலும் ஆங்கிலத் திலும் அச்சடிக்கப்பட்டிருந்த ஒரு படிவத்தில் கையொப்பமிடும்படி ஒரு உறவினர் நிர்பந்திக்கப் பட்டார். அவர் மறுத்தபோது சடலத்தை அப்புறப் படுத்தி விடுவதாக மிரட்டினர். அன்றே சடலத்தை அடக்கம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டனர். வீட்டில் சடலம் இருந்தவரையிலும் பின்னர் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் இந்திய அமைதிப் படையினர் கூடவே இருந்தனர்.

சுப்பன் நடராஜாவின் உடலில் கீழ்க்கண்ட அடையாளங்களும் காயங்களும் இருந்ததாக ஒரு சத்திய வாக்குமூலம் கூறுகிறது.

- இரண்டு கைகளிலும் கறுப்புக் கோடுகள்

- இடது கையில் தீக்காயங்கள்.

- இரண்டு தொடைகளிலும் தீக்காயங்கள்.

- முதுகில் ஆறு அங்குல நீளத்திற்கு ஒரு பெரிய தழும்பு.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிந்தவரையில், சுப்பன் நடராஜாவின் மரணத்திற்குப் பிறகு விசாரணையோ பிரேத பரிசோதனையோ நடத்தப் படவில்லை. ஆனால், வேறு பல இந்திய அமைதிப் படை காவலில் ஏற்பட்ட மரணங்களுக்குப் பிரேத பரிசோதனை நடத்த இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருக்கின்றனர்.

1988 ஜூன் 12 அன்று திருகோணமலைக்கருகில் உள்ள சம்பூரில் ராயப்பா யேசுராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். ஜூலை 18 ஆம் தேதியன்று அவர் இறந்துவிட்டதாக இந்திய அமைதிப் படையினர் கூறினர். அவரது உடலை மூதூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறினர். கட்டை பறிச்சான் மற்றும் சம்பூரில் இருக்கும் இராணுவ முகாமில் யேசுராஜாவைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோதெல்லாம் அனுமதி மறுக்கப்பட்டது. அந்தப் பகுதி நீதிபதி ஒருவரும், மருத்துவர் ஒருவர் மூதூர் மருத்துவமனை சவக்கிடங்கிற்கு வந்து பிரேதப் பரிசோதனையை நடத்தினர். அவர்களது அறிக்கையின்படி ஜூலை பதினாறாம் தேதியன்று யேசுராஜா தனக்குச் சுரம் இருப்பதாகக் கூறியவுடன், வாந்தி எடுக்கவும் செய்தார்; இருண்ட நிறத்தில் சிறுநீரும் வெளியேறியது. அவருக்குச் சிகிச்சை அளித்த இந்திய அமைதிப்படை அதிகாரி அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பதாகவும், திருகோண மலை மருத்துவமனைக்கு மாற்றப்படவேண்டும் என்றும் கூறினார். பிரேதப் பரிசோதனை அறிக்கை, போக்குவரத்துச் சிக்கலினால் அவரை அங்கு கொண்டு செல்வது தாமதப்பட்டது என்று கூறுகிறது. ஜூலை 18 அன்று யேசுராஜா இறந்தார். மருத்துவர் மேலும் கூறுகிறார்:

“உடல் முழுதும் பல சிராய்ப்புகளும், வீக்கங் களும் இருந்தன. தரையில் இழுத்துச் செல்லப்பட்ட காரணத்தினால் உடலின் பின்புறத்தில் சிராய்ப்பு களும் காயங்களும் இருந்தன. உடல் முழுவதும் மஞ்சள் நிறம் விரவிக் கிடந்தது. கல்லீரலுக்கருகில் நான்கு அங்குல நீளம் மூன்று அங்குல அகலத்திற்கு வீக்கம் காணப்பட்டது. இந்த வீக்கமே மஞ்சள் காமாலை வருவதற்கு ஒரு காரணம்.”

மரணத்தைப் பற்றி நீதிபதி விசாரணை நடத்திய போது இந்திய அமைதிப்படை அதிகாரியும் மருத்துவரும் வாக்குமூலம் தர மறுத்துவிட்டு வெளிநடப்புச் செய்தனர். நீதிபதி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேற்கொண்டு என்ன நடந்தது என்று அம்னஸ்டிக்குத் தகவல் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாண தேவாலயத்தைச் சேர்ந்த ஜுட் அக்காரியா சந்திரகுமார் என்ற பியானோ வாசிப் பவரும் இந்திய அமைதிப்படைக் காவலில் இறந்துள்ளார். 1988 நவம்பர் 26 அன்று தேவால யத்தின் வளாகத்திற்குள் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டின்போது அவர் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது அவர் தேவாலயத்தில் மறைந்திருந்தார். அங்கு வந்த இந்திய அமைதிப் படையினர் யாழ்ப்பாண ரயில் நிலையத்திலுள்ள முகாமிற்கு அவரை அழைத்துச் சென்றனர். மாலை சுமார் ஆறு மணி அளவில் சில சாட்சிகள் அவரை முகாமிற்குள் இருந்த இரயில்வே பிளாட்பாரத்தில் அவர் கிடத்தப்பட்டிருந்ததைப் பார்த்தனர். சந்திரகுமாரைப் பார்க்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டபோது மறுநாள் வரும்படி உறவினர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர். ஆனால் மறுநாள் அதிகாலை துப்பாக்கிச் சூடுகளுடன் அவரது பிணம் அவர் வீட்டருகே கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி துப்பாக்கிச் சூட்டில் மூளையில் ஏற்படுத்தப்பட்டகாயத்தினாலும், தீக்காயங்கள் அளித்த அதிர்ச்சியினாலும் அவர் இறந்திருக்கிறார். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவரின் கூற்றின்படி:

“நான் இறந்தவரின் உடலின் பரிசோதனை செய்த போது பல வெளிக் காயங்களைக் கவனித்தேன். மார்பில் இரண்டு காயங்கள், வயிற்றுப் பகுதியில் மூன்று காயங்கள், முகத்தின் இடது பகுதியில் இரண்டு காயங்கள், தலையில் ஒரு காயம், இடது தொடையில் ஒரு காயம் மற்றும் கைகால்களில் வீக்கம் காணப்பட்டன.”

இந்திய அமைதிப் படையின் காவலில் வைக்கப்பட்டவர்களைக் கொல்வதற்கு “மூன்று நட்சத்திரம்” இயக்கத்தைச் (இது இந்திய ராணுவம் உருவாக்கிய அமைப்பு-ஆர்) சார்ந்தவர்களின் உதவியும் கிடைத்ததாகத் தெரிகிறது. உதாரணமாகக் காங்கேசன் சிமெண்ட் தொழிற்சாலையில் உள்ள வைத்தி டேனியல் என்பவரின் மரணத்தில் மூன்று நட்சத்திரத்தினரின் பங்கு அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. தெல்லிப்பளை இந்திய அமைதிப்படை முகாமைச் சார்ந்த சிப்பாய்கள் அவரைக் கைது செய்தனர். இதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன. மறுநாள் அவரது உடல் விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது.

ஒரு உறவினர் இந்திய அமைதிப்படை முகாமிற்குச் சென்று வைத்தி டேனியல் கைது பற்றி விசாரித்தார்.

“நான் தெல்லிப்பளை இந்திய அமைதிப்படை முகாமிற்குச் சென்று ஒரு அதிகாரியைப் பார்த்தேன். அவர் டேனியலை விசாரணை முடிந்தவுடன் மறுநாள் விடுதலை செய்வதாகக் கூறினார். ஆனால் என்னை டேனியலைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதற்குள் மாலை 6.45 மணி ஆகிவிட்டதால், இரவு 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வருவதற்குமுன் நான் அவசரமாக வீட்டிற்குத் திரும்பினேன்.”

மறுநாள் வைத்தி டேனியல் உடல் விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதாகச் செய்தி வந்தது. அந்த இடத்தில் இருந்த ஒரு டாக்டர், கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“அவருடைய தலையில் தோட்டா பாய்ந்த அடையாளம் இருந்தது. விளக்குக் கம்பத்தில் மூளையின் பகுதிகள் படிந்திருந்தன. உடையிலோ, அல்லது தரையிலோ ரத்தத் துளிகள் காணப்பட வில்லை. அங்கு உள்ள மக்களிடத்தில் இதைப் பற்றி விசாரித்தேன். ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தபோதிலும், முந்திய இரவு சுமார் 9.30 மணி அளவில் ஒரு மோட்டார் வண்டி வந்து கம்பத்திற்கு அருகே வந்து நின்ற சப்தத்தைக் கேட்டதாகக் கூறினர். உடனடியாக ஒரு துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து, வண்டி கிளம்பிச் செல்லும் ஓசை கேட்டதாகவும் கூறினர்.

தலையில் தோட்டா பாய்ந்த காயத்தைத் தவிர, முதுகிலும், நெற்றியிலும், கழுத்தின் பின்புறத்திலும், உடைகளிலும் சிராய்ப்புகள் காணப்பட்டன...... வைத்தி டேனியல் வேறு எங்கோ இதற்கு முன்னால் கொல்லப்பட்டு, இந்த இடத்திற்கு அவரது உடலை எடுத்து வந்து சுட்டு இருக்க வேண்டும் என்று திடமாக நான் நம்புகிறேன். தோட்டா பாய்ந்த இடத்தில் ரத்தம் கசியாத காரணத்தினால், அவர் 9.30க்கு 5 மணி நேரம் முன்னாலேயே கொல்லப் பட்டிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.”

ஒரு உறவினர் விவரிக்கிறார்:

“இவளாலையில் உள்ள பெரியவிளான் இந்திய அமைதிப் படை முகாமிற்குச் சென்று சம்பவம் பற்றிக் கூறி, உடலை அப்புறப்படுத்த அனுமதி கேட்டேன். காமண்டன்ட் ஒரு மைல் தூரம் தள்ளி யிருக்கும் பண்டத்தரிப்பு இந்திய அமைதிப்படை முகாமிற்குச் சென்றிருப்பதாகக் கூறப்பட்டது. நான் காலை சுமார் 8 மணியளவிற்கு அந்த முகாமிற்குச் சென்றேன். வந்த காரணத்தைக் கூறியவுடன், ஒரு அதிகாரியைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. வைத்தி டேனியல் இந்திய அமைதிப் படையால் முந்தைய தினம் கைது செய்யப்பட்டதையும், இன்று அவருடைய பிணம் விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பதையும் கூறிப் பிணத்தை அப்புறப்படுத்த எழுத்து மூலமான அனுமதியைக் கோரினேன். இந்திய அமைதிப்படை இதுபோன்ற ஒரு வேலையை செய்திருக்காது என்று கூறிய அந்த அதிகாரி, எழுத்து மூலமான அனுமதி தேவை யில்லை என்றும், தான் அனுமதி கொடுப்பதாகக் கூறினால் போதும் என்றும் கூறினர்.

1988 பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று காலை சுமார் 9 மணிக்கு, நான் வீட்டில் இல்லாதபோது, ஒரு செய்தி தெல்லிப்பளை இந்திய அமைதிப்படை முகாமிலிருந்து வந்தது. அதன்படி, நான் யாராவது ஒரு நண்பருடன் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போகலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.”

உறவினர், ஒரு பாதிரியார் உட்பட நான்கு பேருடன், முகாமிற்கு சென்றேன். அங்கு:

“என்னுடன் பிப்ரவரி 5 அன்று பேசிய அதே அதிகாரி இருந்தார். அவர் வைத்தி டேனியலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கே விடுதலை செய்துவிட்டதாகக் கூறினார். நான் அன்று மாலை 6.45 வரையில் அவருடன் பேசிக் கொண்டு இருந்ததை நினைவுபடுத்தி, அவர் என்னை வைத்தி டேனியலைச் சந்திக்க அனுமதி தர மறுத்ததையும் எடுத்துக் கூறினேன். அவர் இரவு விசாரணை முடிந்தவுடன் மறுநாள் காலை வைத்தியை விடுதலை செய்வதாகக் கூறியதையும் எடுத்துக் கூறினேன். பொது மக்ள் இந்த சம்பவத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா என்று அதிகாரியைப் பார்த்து பாதிரியார் கேட்டார். “உங்கள் முன்னிலையில் உங்களது நட்சத்திரக் கூட்டம், உங்கள் ஆதரவோடு இதைச் செய்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்” என்று அவர் கூறினார். அதற்கு அந்த அதிகாரி பதில் ஏதும் கூறவில்லை.

வைத்தி டேனியலின் முதலாளியிடம், இந்தச் சம்பவம் குறித்து இந்திய அமைதிப் படை விசாரணை ஒன்று நடத்தும் என்று கூறியுள்ளது. அதன் முடிவு, இந்த அறிக்கை எழுதப்படும்வரை தெரியவில்லை.

சிறீலங்காப் பெண்களை இந்திய அமைதிப் படையினர் பலாத்காரம் செய்துள்ளதாக நிறைய தகவல்கள் அம்னஸ்டி இன்டர்நேஷனலுக்குக் கிடைத்தள்ளது.1988 டிசம்பர் 18 ஆம் தேதியிட்ட ‘சண்டே அப்சர்வர்’ என்ற ஆங்கில நாளேட்டில் (பம்பாயிலிருந்து வருகிறது), பலாத்காரம் உட்பட பல குற்றங்களுக்காக, சிறீலங்காவில் இருக்கும் இந்திய அமைதிப்படையினர் சிலர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும், சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாகவும், ஒரு கட்டுரை வெளிவந்தது. இவ்வழக்குகள் உடனடித் தீர்ப்பு வழங்கும் இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. 14 சிப்பாய்கள் பாலுறவுக் குற்றங்கள் புரிந்துள்ளதாக அக்கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்

வடகிழக்கு சிறீலங்காவில், இந்திய அமைதிப் படையினராலும், தெற்கு மாநிலங்களில் சிறீலங்கா இராணுவத்தினராலும் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனலுக்குப் புகார்கள் வந்துள்ளன. இக்கொலைகளுக்கு நேரடியான சாட்சிகள் இல்லாதபடியால், எத்தகைய சூழ்நிலையில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைத் துல்லியமாக நிரூபிப்பது மிகவும் கடினம். மற்றவர்களைப் பொறுத்தவரை, குறிப்பாக வடக்கில், துப்பாக்கிச் சூடு நடக்கும்போது இடையில் மாட்டி பலியாகி விட்டனர் என்று இராணுவம் கூறுகிறது. தெற்கைப் பொறுத்தவரை, சந்தேகிக்கப்படும் எவரையும், அவரிடம் ஆயுதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேண்டுமென்றே கொல்வது, இராணுவத்தினரின் போக்காக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pin It