மும்பை செய்தியாளர்களிடையே விடுதலை இராசேந்திரன் - திருச்சி வேலுச்சாமி  விரிவான பேட்டி

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முழுமையாக நடத்தப் பெறாததையும், சந்திராசாமி, சுப்பிர மணியசாமிக்கு உள்ள தொடர்புகளை ஜெயின் ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும், அது பற்றி மத்திய காங்கிரஸ் ஆட்சி கவலைப் படாது, அலட்சியப் படுத்தியதையும் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் விரிவாக விளக்கினர். ராஜீவ் கொலை நடந்த 1991 ஆம்ஆண்டு மே 21க்கு முதல் நாள் வரை அப்போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்த சுப்ரமணியசாமியுடன் தேர்தல் பிரச் சாரத்தில் பங்கேற்றவர் வேலுச்சாமி. ராஜீவ் கொலையில் சுப்ரமணியசாமி யின் செயல்பாடுகள் சந்தேகத்திற் குரியதாக இருந்ததை ஜெயின் ஆணையத்திடம் வேலுச்சாமி நேரடி சாட்சியம் அளித்துள்ளதோடு, சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் கொலை பற்றிய விசாரணை இப்போதும் முழுமையாக முடிவடையவில்லை. ‘எம்.டி.எம்.ஏ.’ (பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையம்) என்ற அமைப்பு, மத்திய புலனாய்வுக் குழுவால் (சி.பி.அய்.) நியமிக்கப்பட்டு, அதன் விசாரணை தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில், இந்த விசாரணைக் குழு வுக்கு தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களின் சாட்சியங்கள் தேவைப்படும் நிலை வரலாம். இந்த நிலையில் அவர்களைத் தூக்கிலிடுவது நியாயமாகுமா என்ற கேள்வியை முன்வைத்தனர்.

ராஜீவ் காந்தி கொலை நடந்த மே 21 ஆம் தேதியன்று காலை தமிழக காங்கிரஸ் கட்சியினர் அப்போது தமிழக ஆளுநராக இந்த பீஷ்ம நாராயண சிங்கை சந்தித்து, ஸ்ரீபெரும் புதூர் கூட்டத்தில் ராஜீவ் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். எனவே அந்த கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மனு அளித்ததை கழகப் பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.  அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள் இதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டபோது, அடுத்த நாளே இந்து உள்ளிட்ட பல தமிழக நாளேடுகளில் இந்த செய்தி வெளி யானது என்று விடுதலை இராசேந் திரன் சுட்டிக் காட்டினார்.

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் சுப்ரமணிய சாமி, தானே என்று ஒரு செய்தியாளர் கேட்ட போது, சுப்ரமணியசாமியின் ஊழல் எதிர்ப்பு நேர்மையானதல்ல; அவரது ஊழல் எதிர்ப்பு, அவரது ‘சார்பு அரசியலை’ அடிப்படையாகக் கொண்டதே தவிர, மக்கள் நலன் சார்ந்தது அல்ல; வி.பி.சிங் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ராஜீவ் காந்தி ஆதரவுடன் சதி செய்து, ஆட்சியைக் கவிழ்த்து, ராஜீவ் ஆதரவுடன் சந்திரசேகர் அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பதவியைப் பரிசாகப் பெற்றவர் சுப்ரமணியசாமி. சட்ட அமைச்ச ரானவுடன் ராஜீவ் காந்தி மீதான போபோர்ஸ் பீரங்கி பேர ஊழல் ஒழிப்பு வழக்கை சீர்குலைக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்” என்று பொதுச் செயலாளர் பதில் கூறினார்.

காந்தி மற்றும் இந்திரா காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனைக்குள்ளானவர்கள் கருணை மனு போடவில்லையே என்று ஒரு செய்தியாளர் கேட்டார். இதற்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பதிலளிக்கையில், “பெயரால் அது கருணை மனு என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் அது மரணதண்டனைக்குள்ளாக்கப் பட்டவருக்கு அரசியலைமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமை மனுதான். நீதிமன்றங்கள் சட்டத்தின் பார்வை யில் மட்டுமே விசாரணை நடத்தி வழங்கப்பட்ட மரணதண்டனையில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ‘மனிதப் பிழைகள்’ இருக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால், சட்டத்துக்கும் அப்பால் குடியரசுத் தலைவருக்கு அப்படி ஒரு உரிமையை அரசிய லமைப்பு வழங்கியிருக்கிறது. எனவே அரசியலமைப்பு சட்டம் வழங்கி யுள்ள ‘கருணை மனு’ என்ற உரிமையை இந்த வழக்கில் பாதிக்கப் பட்டவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர, கருணையின் அடிப்படையில் தண்டனையிலிருந்து விலக்கு கோர வில்லை” - என்று விளக்கினார்.

வழக்கை விசாரித்த புலனாய்வுத் துறை தலைமை அதிகாரி கார்த்தி கேயன், வழக்கை விசாரித்து தண்டனை வழங்கிய தலைமை நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோரே இந்த மூன்று தமிழர்களை தூக்கிலிட வேண் டாம் என்று கருத்து தெரிவித் துள்ளதையும், சோனியா காந்தியும் இதே கருத்தை வலியுறுத்தி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாரா யணனுக்கு கடிதம் எழுதியதையும் விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார். நீதிபதிகள் வர்மா, ஜெயின் விசாரணை ஆணையங்களை மத்திய காங்கிரஸ் ஆட்சி செயல்பட விடாமல் முடக்கிய சதிகளையும் விளக்கினார்.

ராஜீவ் கொலை நடந்த முதல் நாளில் சுப்ரமணியசாமியின் செயல் பாடுகள் மர்மமாக இருந்ததை விரிவாக விளக்கினார் திருச்சி வேலுச் சாமி. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் குண்டு வெடிப்புக்கு உள்ளானபோது எடுத்த வீடியோ படம், உளவுத் துறை இயக்குனர் எம்.கே. நாராயணனிடம் இருந்த நிலையில், அதை, விசாரணை ஆணையங்கள் முன் சமர்ப்பிக்க மறுத்தது ஏன்? ராஜீவுக்கு மாலை போடும் வரிசையில் நின்ற தாணுவின் படத்தில் இல்லாத நெற்றிப் பொட்டு பிணமாகிக் கிடக்கும் தாணுவின் புகைப்படத்தில் வந்தது எப்படி? சந்திரசாமியின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன. இந்தக் கொலைக்கு அவர் வழியாக பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்று ஜெயின் ஆணையத்தின் விசாரணையில் வந்த குற்றச் சாட்டுகளை விசாரிக்காதது ஏன்? என்ற கேள்விகளை திருச்சி வேலுச்சாமி எழுப்பினார்.

“நான் இப்போதும் ஒரு காங்கிரஸ் காரர்தான்; காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டுதான் கேட்கிறேன்; ராஜீவ் கொலை விசாரணை நேர்மையாக முழுமையாக நடத்தப் பெறவில்லை. இதற்கு மறுவிசாரணை நடத்த வேண்டும்.  இந்த மூன்று தமிழர்களையும் தூக்கிலிடத் துடிப்பது உண்மைக் குற்றவாளிகளை மறைக்கவே உதவும். இந்த அநீதியை எனது மனசாட்சி ஏற்கவில்லை. எனவே மனம் திறந்து பேசி வருகிறேன்” - என்று கூறினார். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. பேட்டியின்போது தெரிவித்த கருத்துகள் பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள் தரப்பட்டன. மே 17 இயக்கத்தின் சார்பில் அதன் அமைப்பாளர் திருமுருகன் இந்த நிகழ்வை  ஒழுங்கு செய்திருந்தார்.  மும்பாய் ‘விக்டோரியா முனையம்’ பகுதியில் அமைந்துள்ள பத்திரிகையாளர் அரங்கில் 1.11.2011 அன்று மாலை 3.15 மணியிலிருந்து 5 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. மும்பாய் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் கதிரவன் இந்த நிகழ்வுக்கு உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.