பெரியாரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத் தோடு சில தமிழ்த் தேசிய அமைப்புகள் ம.பொ.சி. என்று அறியப்பட்ட ம.பொ.சிவஞானத்தை - “தமிழ்த் தேசியத் தலைவராக” உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில் ம.பொ.சி.யின் தமிழ்த் தேசியம், பார்ப்பனியம் சார்ந்தே நின்றதை ஆதாரங்களுடன் விளக்கி, ஏப்ரல் மாத ‘சிந்தனையாளன்’ இதழில் வெளிவந்த கட்டுரையை இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம்.

‘சிலம்புச் செல்வர்’ என்று செந்தமிழ்நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் ஆவார். ‘மயிலாப்பூர் பொன்னு சாமி சிவஞானம்’ ஆகிய இவர், சுருக்கமாக ம.பொ.சி. என்றே எல்லோராலும் அறியப்பட்டார். அன்னாரின் சிலை திறப்பு விழா கடந்த 9.2.2011 அன்று சென்னை தியாகராயநகர் போக் சாலை சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ம.பொ.சி. சிலையைத் திறந்து வைத்தார். 13.2.2011 அன்று தலைமைச் செயலகத்தில் ம.பொ.சி. யின் குடும்பத்தினரை அழைத்து நிதி உதவியும் வழங்கினார்.

1906 சூன் 26 இல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்த ம.பொ.சி.யின் குடும்பம் கொடிய வறுமையில் சிக்கித் தவித்தது. பள்ளியில் மூன்றாம் வகுப்பை அடைந்த ம.பொ.சி. பாடப் புத்தகங்கள் வாங்கவும் காசில்லாமல் மூன்று மாதத்தோடு தன் படிப்பை முடித்துக் கொண்டார். பத்து வயது தொடங்கும் முன்பே பத்து ரூபாய் முன் பணம் கிடைக்கும் என்பதற்காகத் தன் பெற்றோரால் வேலைக்கு அனுப்பப்பட்டார்.

“என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட பெரிய விபத்து ஒன்று உண்டு என்றால், கல்வி பயில வேண்டிய பருவத்தில் பாட்டாளியாக மாறிய கொடுமையாகும்” என்று அவரே உளம் நொந்து கூறியுள்ளார்.

கட்டடத் தொழிலில் சிற்றாள் வேலை, பீடி சுற்றும் தொழில், நெசவு வேலை எனப் பல இடங்களில் அலைந்த ம.பொ.சி., இறுதியில் அச்சுக் கோக்கும் தொழிலாளி ஆனார். அஃது அவருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை தந்தது. அச்சுக் கூடத்தையே கல்விக் கூடமாக மாற்றிக் கொண்டு பற்பல நூல்களை அவர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் எல்லையற்ற ஈடுபாடு காட்டிச் சிலம்புச் செல்வராய் மிளிர்ந்தார். அவருடைய நாவன்மையும் எழுத்து வன்மையும் எல்லோர் மனங்களையும் கொள்ளைக் கொண்டது.

அவர் இந்திய தேசிய அரசியலில் காந்தியாரின் கருத்துகளால் கவரப்பட்டார். 1927 இல் முறைப்படி காங்கிரசுக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாடறிந்த முன்னணித் தலைவர்களில் ஒருவரானார். பலமுறை சிறைப்பட்டார்.

தமிழரசுக் கழகம்

காங்கிரசுக் கட்சியில் இருந்துகொண்டே 2.11.1946 அன்று ம.பொ.சி. ‘தமிழரசுக் கழகம்’ என்ற பொது அரசியல் அமைப்பைத் தோற்றுவித்தார். ‘சுதந்தர, சோசலிச, தன்னுரிமைத் தமிழ்க் குடியரசு’ என்பதைத் தன் அமைப்பின் அரசியல் கோட் பாடாக அவர் அறிவித்தார். ‘தமிழகத்தில் தமிழரசு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய அரசியல் கட்டுரையின் சில பகுதிகள் பின்வருமாறு:

“புதிய தமிழகத்தின் பொருளாதாரக் கொள்கை பொதுவுடைமையேயன்றித் தனிவுடைமை அன்று, இந்தப் பொதுவுடைமை இலட்சியமானது தமிழர் பண்பாட்டின்படியும், தற்கால விஞ்ஞான ரீதியாக வகுக்கப்பட்ட முறைகளின்படியும் நிறைவேற்றப்படும்.

மத விஷயங்களில் அரசாங்கம் பூரண நடுநிலை வகிக்கும். மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு கற்பிக் கும் பழக்க வழக்கங்கள் சட்டப்படி தடுக்கப்படும்...

மேற்சொன்ன வகையில் ஒரு புதிய தமிழகத்தைச் சிருஷ்டிக்கத் தமிழரசு ஒன்றினால் தான் முடியும். அத்தகைய  அரசு வேண்டுமென்று முரசு கொட்டு வோம்!” (தமிழ்முரசு, மே 1946)

பொதுவுடைமை இலட்சியம், தமிழர் பண்பாடு, மனிதரிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் தத்துவங் களுக்குத் தடை, மத விஷயங்களில் நடுநிலை என்றெல் லாம் ம.பொ.சி. பேசினாலும் இத்தனைக் கொள்கை களுக்கும் எதிராக இருந்த இராச கோபாலாச்சாரி யுடன்தான் அவர் அரசியல் நடத்தினார். அவரைத் தான் தன்னுடைய ஞான குருவாக ஏற்றுக் கொண் டார். தன்னைப் போல் எளிய குடும்ப நிலையும் சமூகப் பின்னணியும் கொண்ட காமராசருக்கு எதிராகவே எப்போதும் களத்தில் நின்றார்.

தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று ம.பொ.சி.யால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட எல்லா வற்றையும் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் குல்லுகப் பட்டர் இராசகோபாலாச்சாரி ஆவார். தான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியையும் பார்ப்பனிய மேலாதிக்கத் தின் நலனுக்காயும், தமிழினத்தின் அழிப்பிற்காயும் செலவிட்ட தன்னிகரற்ற ஆரியப் பார்ப்பனர் அவர்!
அதனால்தான் தந்தை பெரியார் ‘ஆச்சாரியார் தான் பிடித்த முயலுக்கு நான்கு கால் என்றால், மூன்று கால் என்று சொல்லுங்கள். அவர் வடக்கே நடக்கச் சொன்னால் நீங்கள் தெற்கே செல்லுங்கள்’ என்று தமிழர்களுக்கு அறிவுறுத்தினார்.

குலக் கல்வித் திட்டத்திற்கு ஆதரவு
இராசாசியின் வஞ்சக மூளையில் வடிவெடுத்த கொடிய திட்டந்தான் ‘குலக் கல்வித் திட்டம்’ என்பது. ‘பாதி நேரம் படிப்பு. மீதி நேரம் அப்பன் குலத் தொழில்’ என்னும் பச்சையான மனுதரும நெறிக்குப் பாதைப் போட்ட ஆச்சாரியாரின் இந்தக் கொடிய கல்வித் திட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. வஞ்சகப் பார்ப்பன ஆட்சியை ஒழிக்காமல் தமிழர்க்கு வாழ்வில்லை என்று முடிவோடு வரிப்புலியாய்ச் சீறிப் பாய்ந்தார் பெரியார்.

குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது, அந்தக் கல்வித் திட்டத்தை ஆதரித்து ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆச்சாரியாரின் நிலையை அரணிட்டுக் காக்க நாடெங்கும் ஊர்வலங்கள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்தது. தி.க., தி.மு.க. மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த காம ராசரும் குலக் கல்வித் திட்டத்தைக் கண்டித்தார். ம.பொ.சி. அந்தக் காமராசரைக்கூட விட்டு வைக்கவில்லை.

“புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசினார் காமராசர். கல்வித் திட்டம் சரியா, தவறா என்பதில் அவருக்குக் கவலையில்லை. இராசாசி ஆட்சியை வெளியேற்றித் தான் அதிகாரத்திற்கு வர அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.” (ம.பொ.சி. ‘எனது போராட்டம்’. பகுதி 2: பக்கம் 392)

ஆனாலும், அலைகடலெனத் தோன்றிய மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் இராசாசி ஆட்சியை விட்டு ஓடினார். அவரின் கேடான குலக்கல்வித் திட்டம் சவக்குழிக்குப் போனது. தமிழகத்தில் கல்வி மறுமலர்ச்சிக்குக் கால்கோளிட்ட காமராசரின் ஆட்சி மலர்ந்தது.

திராவிட இயக்க எதிர்ப்பு

வருணாசிரம தருமத்தை வேரோடு கிள்ளி எறிதல், சாதி ஏற்றத் தாழ்வுகளைத் தரைமட்ட மாக்குதல், மானுட சமத்துவம் பேணுதல் உள்ளிட்ட உயரிய குறிக்கோள்களுடன் உருவானதே திராவிட இயக்க மாகும். ஆனால் ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரில் இயக்கங்கண்ட ம.பொ.சி. பார்ப்பனியத் திற்குப் பாலூட்டுதல், பழமைக்கும் மூட நம்பிக்கைக்கும் பட்டுக் கம்பளமும் விரித்தல், ஆரியத்திற்கு அடிமைத் தொண்டு புரிதல் போன்ற வீடண ஆழ்வார் வேலைகளை ஆரவாரத்தோடு மேற்கொண்டார்.

“ம.பொ.சி. 1951 இல் திராவிட இயக்கப் பிரச் சாரத்தை எதிர்த்து மாநாடு நடத்தினார். ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு’ எனும் பெயரில் 1951 மார்ச்சு முதல் 1951 நவம்பர் வரையில் மாநாடுகளை நடத்தினார். இந்த மாநாடுகள் தமிழரசுக் கழகம், காங்கிரசு பெயரால் நடத்தப்படாமல் ‘திராவிட இயக்க எதிர்ப்பு முன்னணி’ சார்பாக நடத்தப்பட்டன.

பகுத்தறிவுவாதம், மூடநம்பிக்கைகளை ஒழித்தல், இனவுணர்ச்சி என்ற பெயரால் தமிழகம் மரபு, பண்பாடு, ஆன்மிகம் ஆகியவற்றில் இருந்து திசை தவறிச் செல்லாமல் கட்டிக் காத்தன திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகள்”. (நூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள்; ம.பொ.சிவஞானம் - பெ.சு.மணி, பக்.14)

தமிழரசுக் கழகத்தின் கொள்கைகளில் ஒன்றாக ‘மத விஷயங்களில் அரசாங்கம் பூரண நடுநிலை வகிக்கும்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்தாலும் ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்துத்துவக் கருத்தியலையே பற்றி நின்றார்.
சங்ககால இலக்கிய மரபுகள், பெரும்பாலும் ஆரியக் கருத்தியல்கள் அதிகம் சாராத தனித் தன்மை கொண்டவை. எனினும் வேத மதக் கலப்பும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்னும் வருணக் கலப்பும் தாம் தொல் தமிழ் மக்களின் இயற்கை சார்ந்த பண் பாட்டுக் கூறுகளைத் தகர்த்தன. இக் கோட்பாட்டை ம.பொ.சி. ஏற்க மறுத்தார்.

தமிழ், சைவம், வைணவம், வைதீகம், இராமாயணம், பெரிய புராணம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், தெய்வீகம் இறை நம்பிக்கை என்பவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து, ம.பொ.சி. மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் திருப்பணியைச் சிறப்பாகவே செய்தார்.

“தமிழருக்கே உரிய சங்க காலத்து இலக்கிய மரபுகளும் வாழ்க்கை நெறிகளும், ஆரிய மொழியும் மரபும் தமிழில் கலந்த சமய சகாப்தத்திலே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டனவென்பது தவறாகும்.

தமிழ்ப் பற்றும், தமிழினப் பற்றும் சமய சகாப் தத்திலே புறக்கணிக்கப்பட்டு மூடநம்பிக்கைகள் நிரம்பிய சமயவாதமே தமிழர் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பது இலக்கிய ஆய்வாளர்கள் சிலருடைய தவறான வாதம். இதுவும் தவறு.

இனக்கலப்பும் மதக்கலப்பும் ஏற்பட்ட சமய சகாப்தத்திலே தமிழருடைய பண்பாடு அழிந் தொழிந்துவிட்டது என்று இலக்கிய ஆய்வாளர் களிலேயும் சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு.” (மேற்படி நூல், பக்.107)

(அதாவது தமிழ்ப் பண்பாட்டில் பார்ப்பனர் பண்பாடு ஊடுருவியதால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்.  - ஆர்)

3.3.1976 இல் சென்னையில் உள்ள சங்கர மடத்தில் மறைந்த ‘பெரிய பெரியவாள்’ சந்திரசேகர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்து மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ம.பொ.சி. தன்னை ஒரு தமிழனாக எண்ணுவதைவிட இந்துவாக எண்ணுவதில் அதிகப் பெருமிதங் கொண்டார்.

“நான் தமிழன் என்னும் இனவுணர்வுடையவன். தமிழ்ப் பேசும் எல்லா மக்களுக்கும் இந்த உணர்வு வேண்டுமென்றும் எண்ணுபவன். ஆயினும், தமிழன் என்ற வகையிலே எனக்கு இந்த உலகிலுள்ள உறவினர்கள் சுமார் நாலரைக் கோடிப் பேர்தான்... நாம் இந்துவாக இருப்பதால் ஐம்பது கோடிக்கு மேற்பட்ட மக்களோடு உறவு கொள்ள முடிகிறது. என்னைப் பொருத்தவரையில் இந்த உறவுக்காகத் தான் நான் இந்துவாக இருக்கிறேன். இனியும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.” (ம.பொ.சி. ஆன்மீகமும் அரசியலும், பக்.73)

அப்படியானால் உலகில் அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட மதம் புத்த மதந்தான். ம.பொ.சி. புத்த மதத்தில் சேர்ந்திருந்தால் இன்னும் கோடிக்கணக்கான மக்களோடு உறவு கொண் டிருக்க முடியுமே! ஆனால் இந்துத்துவ மாயைக்கு ஆட்பட்டுவிட்ட ம.பொ.சி.க்கு அப்படிச் செய்ய முடியாது.

“வேதா கமங்களென்று வீண்வாத மாடுகின்றீர்
வேதா கமத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னதலால் உண்மைவெளி தோன்ற உரைத்தலிலை
என்ன பயனோ இவை?”

என்று பார்ப்பனியத்தை நத்தி வாழ்ந்த பழமைக் குருட்டு நம்பிக்கையாளர்களைப் பார்த்து வேதனை யோடு பாடினார் வடலூர் இராமலிங்க வள்ளல்.
(தொடரும்)