சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த 24 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் கூட்டத்தில், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தி.க. தலைவர் கி.வீரமணி பேசும்போது, இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் கல்வீசி, கலவரம் செய்த செய்தியைப் பார்த்து கொதிப்படைந்தோம். இந்து முன்னணியின் இந்த வன்முறை அடாவடியைப் பெரியார் திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் பெரியார் கருத்துகளைப் பரப்புவதை கலவரத்தால் தடுத்து நிறுத்தும் கயமைத்தனங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. கலவரம் விளைவித்தவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

அரசு அலுவலகத்தில் ஆயுத பூசை சட்ட விரோதம்: தலைமைச் செயலர் காவல்துறை இயக்குனருக்கு கழகம் கடிதம்


அரசு அலுவலகங்களில் சரசுவதி, ஆயுத பூசைகளுக்காக கடவுள் படங்களை வைத்து வழிபடுவது, அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளில் தடைசெய்யப்பட் டுள்ளது. இதை வலியுறுத்தியும், அதற்கான தமிழ்நாடு அரசாணைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு ஊழியர் நன்னடத்தை விதிமுறைகளையும், இணைத்து கழக சார்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர், மத்திய அரசு ஊழியர்களுக்கான மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பதிவுத் தபாலில் கடிதங்கள் அனுப்பப்பட்டன. கடிதம் பெற்றுக் கொண்டதற்கான ஏற்பு கிடைத்துள்ளது.

பெரியார் சிலை அவமதிப்பு: காவல் நிலையத்தில் கழகம் புகார்

சென்னை அண்ணா சாலையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு விஷமிகள் பூணூல், காவி மாலை அணிவித்து அவமதித்துள்ளனர். இது குறித்து சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் (எப்.1) கழக சார்பில் தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி புகார் தந்துள்ளார்.

வடசேரியில் பெரியார் பிறந்த நாள்

ஒரத்தநாடு வட்டம் வடசேரியில் கழக சார்பில் பேருந்து நிலையம், சுயமரியாதை சுடரொளி குஞ்சிதபாதம் சதுக்கம், வடக்கு வீதி, க.சொ.சிவ சுப்பிரமணியன் கடை ஆகிய இடங்களில் பெரியார் படங்களுக்கு மாலை அணிவிக்கப் பட்டது. அ.இ. அ.தி.மு.க. மூத்த தலைவர் நெம்மேலி ஜெகநாதன் மற்றும் பிரபு, கழகத் தோழர்கள் கா.மா. கார்த்திகேயன், கு.க. மனோகரன் (ம.தி.மு.க.) படங்களுக்கு மாலை அணிவித்தனர்.

போடியில்

செப்டம்பர் 17 போடிநாயக்கனூரில் வ.உ.சி. அருகில் தந்தை பெரியார் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் திராவிடர் கழகத்தால் சிறப்பாக கொண்டாடப் பட்டது. போடி நகரிலுள்ள கழகக் கொடியை போடி நகர கழகத் தலைவர் மு. இராசு கொடியேற்றினார். நகர கழகச் செயலாளர் சி.கா. இராசேந்திரன், பெரியார் படத்தைத் திறந்து வைத்தார். ஞான. சரவணன் இனிப்புகளை வழங் கினார். கழகத் தோழர்கள் பொது மக்களுக்கு இனிப்பு களையும், பெரியார் கொள்கைகளை விளக்கும் துண் டறிக்கைகளையும் வழங்கினர். க. சரவணன், ஜெயக்குமார், கே.டி. இரத்தினவேல், முருகானந்தம், மாரியப்பன், தீன், முருகன், பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொமாரபாளையத்தில்

பெரியார் பிறந்த நாள் விழா நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்தில் மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது. தோழர்கள் சோமசுந்தரம், மாதேஸ் உரையைத் தொடர்ந்து மூன்றாவது தொகுதி நகராட்சி உறுப்பினர் பெரியார் படத்தை திறந்து வைத்து, மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி உரையாற்றினார். செல்வம் நன்றி கூறினார். நாமக்கல் மாவட்ட தலைவர் தி.க. கைலாசம், ர.ச. மணிராசு, சரவணன், ஆலா. கணேசன், செ. பிரபாகரன், சு. கதிரேசன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Pin It