‘தினமலர்’ (செப் 5), பார்ப்பனக் கொழுப்போடு அரைவேக்காட்டுத்தனமாக சில கேள்விகளை எழுப்புகிறது.

கேள்வி: “மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மூவரும் தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது; ராஜீவோடு இறந்தவர்கள் மட்டும் சிங்களர்களா?”           - தினமலர்

நமது பதில் : தூக்கு தண்டனை ஒழிப்பை தமிழர்கள் என்பதற்காக மட்டும் கேட்கவில்லை. நேர்மை - நீதி - மனித உரிமை அடிப்படையில்தான் கேட்கப்படுகிறது என்பதை ‘தினமலர்’ புரிந்து கொள்ளட்டும்.

•     ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனையை பூந்தமல்லி ‘தடா’ நீதிமன்றம் விதித்தபோது, அப்போதே 26 பேரையும் உடனே தூக்கில் போட வேண்டும் என்று எழுதியது, இதே ‘தினமலர்’ தான்.

•     உச்சநீதிமன்றம், 22 பேரை தூக்கிலிருந்து காப்பாற்றியபோது, ‘தினமலர்’ அய்யோ தப்பி விட்டார்களே என்று கண்ணீர் வடித்தது. மீண்டும் இந்த 3 தமிழர்களும் தப்பி விடுவார்களே என்ற கவலை ‘தினமலரை’ வாட்டி எடுக்கிறது. ஒன்றை புரிந்து கொள்ளட்டும்; இப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் இந்தக் குற்றத்தில் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல.

•     நேரடி தொடர்புடைய சிவராசன், தாணு, சுபா - ஏற்கனவே இறந்து விட்டார்கள். குற்றம்சாட்டப்பட்டு, போலீசாரால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டபோது 12 பேர் தற்கொலை செய்து இறந்துவிட்டனர்.

•     இப்போது, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் குற்றத்தில் மட்டுமல்ல, சதியிலும் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல; சதிச் செயலுக்கு உதவியவர்கள் என்றே நீதிமன்றம் கூறியுள்ளது. அதுவும் ராஜீவ் கொலை செய்யப் போகிறார் என்ற ரகசிய சதித் திட்டம் பற்றி எதுவுமே தெரியாமல் உதவிகளை செய்தவர்கள் என்று நீதிமன்றம் கூறுகிறது. இதற்காக இவர்களை தூக்கில் போட வேண்டுமா?

•     ராஜீவ் கொலை வழக்கு ‘தடா’ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், ‘தடா’ சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே நீதிமன்றம் ஏற்க முடியும் என்ற ‘தடா’ சட்டப் பிரிவை மட்டும் ஏற்றுக் கொண்டு அந்த ‘வாக்குமூலம்’ அடிப்படையில் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. - இது நியாயம் தானா?

•     ‘தடா’ சட்டம் - இவ்வழக்குக்கு பொருந்தாது என்று கூறிய உச்சநீதிமன்றம், நியாயமாக உயர் நீதிமன்ற விசாரணைக்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். காரணம் ‘தடா’ சட்டப்படி விசாரிக்கப்பட்ட வழக்கு என்பதால் தான் அச்சட்டத்தின்படி உயர்நீதிமன்ற விசாரணை மறுக்கப்பட்டு நேராக உச்சநீதிமன்ற விசாரணைக்குப் போனது.

       சிறப்புப் புலனாய்வு விசாரணை மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் சி.பி.அய்.யின் பல்நோக்கு விசாரணை (m.D.m.a.) அமைப்பு - ராஜீவ் கொலையில் தொடர்புடைய நபர்கள் மீதான விசாரணையையே தொடங்கவில்லை. முடிவுறாத ஒரு விசாரணையில் அவசரப்பட்டு, தூக்கில் போட வேண்டுமா? இது நேர்மையா?

•     உலகம் முழுதும் தூக்குத் தண்டனை சட்டப் புத்தகத்திலிருந்து வேகமாக நீக்கப்பட்டு வருகிறது. காந்தியும், நேருவும், அம்பேத்கரும், தூக்குத் தண்டனையை எதிர்த்தார்கள். வழக்கை விசாரித்த சி.பி.அய். இயக்குநர் கார்த்திகேயன்கூட, தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார். தூக்குத் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ்கூட தூக்குத் தண்டனை வேண்டாம் என்கிறார்.

       இவ்வளவுக்குப் பிறகும் இந்த மூன்று தமிழர்களையும் தூக்கில் போட வேண்டுமா?

கேள்வி : அரிதினும் அரிதான வழக்கு களிலேயே தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமரையே கொன்று வீசியது, அரிதினும் அரிதான வழக்கு இல்லையா? -       ‘தினமலர்’

பதில்: கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி, அப்போது பிரதமர் பதவியில் இருக்கவில்லை. ‘அரிதினும் அரிதான வழக்கு’ என்று எந்த வழக்கை நிர்ணயிக்கலாம் என்பதற்கு எந்த அளவுகோலும் வழங்கப்படவும் இல்லை. அது நீதிபதிகளின் விருப்பு வெறுப்புகளையே சார்ந்து நிற்கிறது. இது பற்றி ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் தலைமை நீதிபதியான கே.டி.தாமஸ் அவர்களே கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி டெல்லியிருந்து வெளிவரும் ‘தி ஏசியன் ஏஜ்‘ ஏட்டில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

“பெரும்பாலான கொலைகள் கொடூரமாகவே நடக்கும்போது அதில் அரிதினும் அரிதான வழக்குகளை நீதிபதிகளே தங்கள் விருப்பப்படி தீர்மானிக்கிறார்கள். தீவிரவாதிகள் நடத்திய கொலைகள் தொடர்பான பல வழக்குகள் ‘அரிதிலும் அரிதாக’ கருதப்படவில்லை என்பது ஆச்சரியமானது. ஆனால், நாட்டில் பிரபல மானவர்கள் பலியாகும்போது மட்டும் அரிதிலும் அரிதான வழக்கு என்பதாக பட்டம் சூட்டப்பட்டு விடுகிறது. இந்திரா கொலை, ராஜீவ் கொலை, ஜெனரல் வைத்தியா கொலை - இவையெல்லாம் பிரபலங்களின் சாவு என்பதால், அரிதினும் அரிதான வழக்காகிவிட்டன! ஆனால், 1984 இல் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் எந்த ஒரு வழக்கும் அரிதிலும் அரிதான வழக்காகக் கருதப்படவில்லை” என்று கே.டி. தாமஸ் எழுதியுள்ளார்.

ஆக இறந்தது ராஜீவ் காந்தி என்பதற்காக -

•     நேரடி தொடர்பில்லாதவர்களை

•     நேரடி சதித் திட்டத்தில் ஈடுபடாதவர்களை

•     பகிரங்க நீதிமன்ற விசாரணை மறுக்கப்பட்டவர்களை

•     ‘தடா சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அதனடிப் படையில் குற்றவாளியாக்கப்பட்டவர்களை

•     தூக்கில் போட்டேயாக வேண்டுமா? இதுதான் ‘தினமலரின்’ ஆசையா?

•     கொலைக் குற்றவாளி சங்கராச்சாரிக்கு தூக்குத் தண்டனை தந்தால் அதை ‘தினமலர்’ ஏற்குமா? கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியை ‘தினமலர்’ கண்டித்து ஒரு வரியாவது எழுதியது உண்டா?

கேள்வி : 11 ஆண்டுகாலம் கழித்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், தூக்குத் தண்டனை போடக் கூடாது என்று கூறுகிறவர்கள், கருணை வழங்கப்பட்டிருந்தால் ஏற்க மறுத்திருப்பார்களா? -                     ‘தினமலர்’

நமது பதில்: இது முட்டாள்தனமான கேள்வி! ஒருவரைத் தூக்கில் போட்டு சாகடிப்பதற்கு 32 விநாடிகள் போதும். இந்த ‘32 விநாடி’ மரணத்தை சந்திப்பதற்கு 11 ஆண்டுகள் 4 மாதம், “எப்போது சாகப் போகிறோமோ?” - என்ற பதட்டத்துடன் காக்க வைத்திருந்தது, கொடூரத் தண்டனை அல்லவா? என்பதுதான் கேள்வி. சட்டத்தின் அடிப்படையான நோக்கமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைவிட நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான்! இவ்வளவு கால தாமதத்துக்குப் பிறகு ஒருவரை தூக்கில் இடக்கூடாது என்ற ஒரே கோரிக்கை மட்டுமே இங்கு அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது. காரணம், இது நீதிமன்றம் விதித்த தண்டனையைவிட கூடுதலான தண்டனையைத் தந்து விட்டது. இது அரசியலமைப்பின் 21வது பிரிவுக்கே எதிரானது என்று பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமே எடுத்துக்காட்டியிக்கிறது. ஒரு மருத்துவரின் தவறான சிகிச்சையால் நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய நிவாரணம் கேட்கிறோம். “அப்படி எல்லாம் கேட்கக் கூடாது; சரியான சிகிச்சை செய்திருந்தால், நிவாரணம் கேட்பீர்களா?” என்று மனநலம் பாதிக்கப்பட்டவன்கூட கேட்கமாட்டான்; ஆனால் நெஞ்சத்தில் ஈரமே இல்லாத ‘மனு தர்மத்தை’ லட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள ‘தினமலரால்’ தான் இப்படி கேட்க முடியும்.

‘மனுதர்மத்தை’ ஆதரிக்கும் ‘தினமலர்’

“சிலர் எண்ணுவதுபோல மனுதர்ம சாஸ்திரம் சாதிகளை அடிப்படையாகக் கொண்ட நூல் அல்ல. இந்த மனுதர்ம சாஸ்திரம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளான ஈரான், எகிப்து, பாலஸ்தீனம், கிரேக்கம், பர்மா, மலேயா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பரவியிருக்கிறது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் மனுதர்ம சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன.” - (‘தினமலர்’ ஜூலை 17, 2011 - இதழில் இப்படி எழுதியது!)

- கொலை செய்த ‘பிராமணரின்’ மயிரை மட்டும் சிரைக்க வேண்டும். ஆனால் கொலை செய்த “சூத்திர”னின் தலையை வெட்ட வேண்டும் என்று கூறுகிறது, ‘மனுதர்மம்’. மனுதர்மத்தை வாழ்க்கைக்கு வழி காட்டும் நூலாக ஏற்றுக் கொண்ட ‘தினமலர்’ இப்படித்தான் எழுதும்.    

தினமலர்நாளேடு எரிப்பு: கழகத்தினர் கைது 

3 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று பார்ப்பன ‘தினமலர்’ தொடர்ந்து எழுதி வருகிறது. வீரமங்கை செங்கொடியின் உயிர்த் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் 5 ஆம் தேதியிட்ட நாளிதழில் ஒரு முழுப் பக்கத்துக்கு, தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடி வரும் தலைவர்களையும் இயக்கங்களையும் இழிவுபடுத்தி எழுதியுள்ளது.

செய்தியைப் படித்த பலரும் கொதித்துப் போன நிலையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அண்ணா சாலையிலுள்ள ‘தினமலர்’ எனும் பார்ப்பன மலர் அலுவலகம் எதிரே தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரன், செயலாளர் உமாபதி, ஒருங்கிணைப்பாளர் சுகுமார் உட்பட 43 தோழர்கள் திரண்டு, பார்ப்பன தினமலர் ஏட்டுக்கு எதிராக முழக்கமிட்டு, அந்த ஏட்டை தீயிட்டுக் கொளுத்தினர்.

அண்ணாசாலை பரபரப்பானது. 30 நிமிட நேரம் போக்குவரத்து நிலைகுலைந்தது.

அனைத்து தோழர்களையும் காவல்துறை கைது செய்தது.