‘திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ‘பி’ அறையை திறந்து பொக்கிஷங்களை மதிப்பிட்டால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும். திறப்பவரின் வம்சம் அழியும். திறப்பவர்கள் விஷ பூச்சிகளால் கடிபட்டு சாவார்கள்’ என்று மன்னர் சார்பில் தேவ பிரசன்னம் பார்த்த ஜோதிடர்கள் கூறினார்கள். இந்த தேவ பிரசன்னம் பொய் என்பதற்கு மன்னரின் குடும்பமே சாட்சியாக இருக்கிறது.

ஆம். ‘2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது மன்னர் குடும்பம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோவிலின் ஒற்றைக் கல் மண்டபத்தில்

தங்க முலாமும், கோவிலின் சில பகுதிகளில் வெள்ளி முலாமும் பூசப்பட்டன. இதற்கான தங்கமும், வெள்ளியும் ரகசிய அறைகளில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன.

இதுபோல் திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படி 3.8.07 அன்று ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, அவற்றிலிருந்த தங்கம், வெள்ளி போன்றவை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த சுற்றறிக்கை நகல் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இப்படி கோவிலின் ரகசிய அறைகள் பலமுறை திறக்கப்பட்டுள்ளன. புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மன்னரின் ஆணைப்படி செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மன்னர் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படவில்லை. புகைப்படம் எடுத்தவர்களும் சாகவில்லை. அப்படி இருக்கையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோவிலின் ரகசிய அறைகளை திறந்தால் எப்படி ஆபத்து ஏற்படும்?

மன்னரின் குடும்பம் கடந்த காலங்களில் கோவில் நகைகளை களவாடிச் சென்றுள்ளது. அதுபோல் இப்போதும் செய்யத் துடிக்கிறது. அதற்காகத்தான் தேவ பிரசன்னம் என்று சொல்லி எல்லோரையும் பயமுறுத்தி வருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரனும், “நீதிமன்றம் - இது குறித்து ஒரு கமிட்டியை நியமித்துள்ள நிலையில் ‘தேவபிரசன்னம்’ பார்த்தது, கண்டிக்கத்தக்கது” என்று மன்னர் குடும்பத்தைக் கண்டித்துள்ளார்.