நாடு மக்களுக்கு சொந்தம் என்பதுதான் உலக நியதி. ஆனால், நாட்டை கோயிலுக்கு உரிமையாக்கியதுதான் பார்ப்பனியம். திருவாங்கூர் சமஸ்தானமே பத்மநாப சாமிக்கே சொந்தமாம். அப்படித்தான் அந்த சமஸ்தானத்தின் மன்னராக இருந்த மார்தண்ட வர்மா, தனது மரணத்தின் போது தமது குடும்ப வாரிசுகளிடம் கூறினாராம்.

திருவனந்தபுரம் பத்மநாபன் கோயில் சுரங்கத்தில் புதைந்து கிடக்கும் தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம் என்று செய்திகள் வருகின்றன. உலக கத்தோலிக்கர்களின் தலைமை பீடமான போப் ஆட்சி செய்யும் ‘வாடிக்கன்’ (இது ஒரு தனி நாடு) சொத்தையும் விஞ்சி நிற்கிறது - திருவனந்தபுரம் கல் முதலாளி பத்மநாபனின் சொத்து. இந்தியாவிலுள்ள பல கோயில்களில் இப்படி பல லட்சம் கோடி முடங்கிப் போய்க் கிடக்கிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.42,000 கோடி; பூரி ஜெகநாதன் வசம் 90 கோடி; சாமியார்கள், ‘பாபா’க்களின் ஆசிரமங்களில் பல்லாயிரம்கோடி. புட்டபர்த்தி சாய்பாபா செத்துப் போன வுடன் அவரது அறையிலிருந்து கோடி கோடியாக பணம் கடத்தப்படுகிறது. இதுதான் ‘பார்ப்பன இந்தியா’.

சுரங்கத்துக்குள் புதைந்து கிடக்கும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள ஆபரணங்களை அப்படியே சுரங்கத்துக்குள் போட்டு மூடிவிட வேண்டும். அதை மக்களுக்கு பயன்படுத்துவது ‘தெய்வ குற்றம்’ என்கிறார், கொலை வழக்கு விசாரணையில் உள்ள காஞ்சி ஜெயேந்திரன். திருவிதாங்கூர் மன்னர்களின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கில் இந்த சொத்துக்களை ‘வேத பாடசாலை’ போன்ற அமைப்புகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மக்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கோரியுள்ளனர்.

கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி சொத்துக்களை மக்களுக்கு செலவிடக் கூடாது என்று கூறுகிறவர்களை நாம் கேட்கிறோம் - இந்த உடைமைகள் மக்களிடமிருந்து வந்தது தானே? மக்கள் காணிக்கையாகத் தந்தது தானே! கடவுள்களா இந்த உடைமைகளைக் கொண்டு வந்தன?

முதல் போட்டு உழைப்பாளர்களைச் சுரண்டும் முதலாளிகூட முதலீடு செய்ய வேண்டும்; தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்தாக வேண்டும். ஆனால் முதல் போடாமலேயே மக்களின் ‘அறியாமை’யைச் சுரண்டும் ‘கல் முதலாளி’களான கடவுள்களால் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்தார்களே தவிர, மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? ‘கல் முதலாளி’களின் சுரண்டலை எதிர்த்து குரல் கொடுத்த தலைவர் பெரியார், கூழுக்கு ஏழை அழும்போது, பாழும் கல்லுக்கு பாலாபிஷேகம் ஏன், என்று கேள்வி எழுப்பியதுதான் சுயமரியாதை இயக்கம்.

கோயில் வழிபாடு என்பதே பார்ப்பனருக்கு உரியது அல்ல. பார்ப்பனர்கள் நெருப்பை வழிபட்டவர்கள். அதனால்தான் பார்ப்பனர்கள் மட்டுமே ‘அக்னிஹோத்ரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். பார்ப்பனர்கள் யாகங்களை மட்டுமே நடத்தி வந்தவர்கள். யாகம் நடத்துவதும், ‘அக்னி’யை வணங்குவதும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ள உரிமை என்றாகிவிட்டதால், ஏனைய பார்ப்பனரல்லாதவர்கள் புத்தமதத்தில் உருவான மடாலயங்களைப் பார்த்த பிறகு கோயில்களை உருவாக்கத் தொடங்கினர். ‘கரையான் புற்றெடுக்க கருநாடகம் குடிபுகுந்தது போல்’ பிற்காலத்தில் கோயில்களில் குவிந்த செல்வத்தினால் பார்ப்பனர்கள் தங்கள் வேதகால கடவுள்களானஅக்னி, இந்திரன், வருணன் போன்றவற்றுக்கு விடை கொடுத்துவிட்டு கோயில்களை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டனர். கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியும், கடவுள் ‘பிராமணர்’களை மட்டுமே ஏற்றுக் கொள்வார் என்று அறிவித்து, கடவுளை தங்களது ‘மந்திரத்துக்கு’ மட்டுமே கட்டுப்பட்டவராக்கிக் கொண்டார்கள். கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்று பார்ப்பனர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் ‘இந்து அறநிலையத் துறை’ அமைக்கப்படும் வரை, கோயில்களின் சொத்துக்கள், செல்வங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் தனி உடைமைகளாகவே இருந்தன. பார்ப்பனர்கள் தான் அவற்றை அனுபவித்தார்கள். கோயில்களில் பார்ப்பனரைத் தவிர, பிற சாதியினரை நுழைய அனுமதித்த பார்ப்பனர்கள் கோயிலுக்குள் ‘தேவதாசி’களாக பெண்களை நியமித்துக் கொண்டு கோயில்களில் பெண்களுடன் பாலுறவு கொள்வதை புனிதமாக்கி, “வேஸ்யா தர்சனம்; புண்யம், பாபநாசனம்” என்று அதற்கு மந்திரத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

கோயிலுக்குள் நுழைய முடியாத பிறசாதியினர், வீதியிலிருந்து தரிசிப்பதற்காகவே கோபுரங்களை கட்டி, அதில், கடவுள் பொம்மைகளை வைத்தனர். இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கத் திமிரின் சின்னமாகவே இந்த ஆகம கோயில்கள் விளங்குகின்றன.

திருவாங்கூர் சமஸ்தானம் என்பது பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம கோட்டையாகவே திகழ்ந்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த மண்ணின் மைந்தர்கள் தான், அங்கே அரசர்கள். ஆனால் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள்.’கிராந்தி’ என்ற உருது பத்திரிகை, சாதியை எதிர்த்து எழுதியது என்பதால், அங்கே நடந்த மன்னராட்சி, அந்த ஏட்டுக்கு தடை போட்டது. கோயில் சொத்துகள் எல்லாம் பார்ப்பனரே அனுபவிக்க, மன்னராட்சி அனுமதித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியே ‘ஒட்டுப்புரா’ என்ற பெயரில் சாப்பாடு கூடங்களை உருவாக்கி, இலவசமாக அவர்களுக்கு மட்டும், மன்னர்கள் சாப்பாடு போட்டு வந்தார்கள். அதற்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பிற சாதியினர் பட்டினியால் தவித்தாலும் அங்கு போய் சாப்பிட முடியாது. பார்ப்பனர்கள் வீதியில் நடக்கும்போது சத்தம் எழுப்பிக் கொண்டே போவார்கள். சத்தம் கேட்டால், மற்ற சாதியினர் வீதிகளில் வந்தால், ஓடி மறைந்து கொள்ள வேண்டும்.

திருவிதாங்கூர் சமஸ்தான கோயில்களில் காந்தி, லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் தரிசனத்துக்குப் போனபோது அவர்கள், ‘கடற்பயணம்’ செய்தவர்கள் என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அனுமதி மறுத்தார்கள். அந்த சமஸ்தானத்துக் கோயிலில் தான் இப்போது ‘புதையல்கள்’ வெளியே வந்திருக்கின்றன. இப்போதும் பார்ப்பனர்கள் அதே ‘வர்ணத் திமிரோடு’ மக்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்க்கிறார்கள்.

கேரளத்தில் ஆட்சியிலிருந்த பொதுவுடைமை கட்சி கூட இந்த சொத்துகளை மக்கள் உடைமையாக்க வேண்டும் என்று கூற அஞ்சுகிறது. இதில் பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒரே நிலை எடுப்பதுதான் வேடிக்கை. இவர்கள் தான் இந்த நாட்டில் ‘புரட்சி’யை கொண்டு வரப் போகிறார்களா?

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி திருட்டுப் பணத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்று முழங்கும் ஊழல் எதிர்ப்பாளர்களும் சரி, உச்சநீதிமன்றமும் சரி, கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி உடைமைகளை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறத் தயங்குவது ஏன்? வறுமைக் கோட்டுக்குக் கீழே 50 சதவீதத்துக்கும் அதிகமாக மக்கள் வாழ்வதாகக் கூறப்படும் ஒரு நாட்டில் கல் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ஆபரணங்களும், சொத்துகளும் தேவை தானா?

‘கடவுள்’ என்ற அச்சத்தைக் காட்டியே இப்படி நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் நிலையில் கடவுள் மறுப்பை பேசாமல் இருக்க முடியுமா? பகுத்தறிவு சிந்தனை வெகு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டிருக்கு மானால், இப்படி ‘கல் முதலாளிகள்’ பெயரில் சொத்துகள் முடக்கப்படும் நிலை தொடருமா? பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு - பொதுவுடைமையாளர்களும், ‘புரட்சி’க்கட்சிக்காரர்களும் முன் வராமல், ஒதுங்குவது ஏன்?

பார்ப்பான் ஆதிக்கமும், கல் முதலாளிகள் சுரண்டலும் இப்பொழுதும்தொடருகிறது என்பதையே ‘பத்மநாபன் சுரங்கக் கதைகள்’ உறுதிப்படுத்துகின்றன.

Pin It