டில்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டப் படிப்பு பாடத் திட்டத்தின் பகுதியாக இருந்த ராமாயணம் குறித்த ஆய்வுக் கட்டுரை இந்துத்துவவாதிகள் சார்புடையவர்களின் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டுள்ளது. இதை நாட்டின் முன்னணி வரலாற்று அறிஞர்கள் கண்டித்துள்ளனர்.

மறைந்த ஏ.கே.ராமானுஜத்தால் எழுதப்பட்ட ‘300 இராமாயணங்கள் - ஐந்து உதாரணங்கள் - மொழி பெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகள்’ என்ற புத்தகத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் இராமாயண கதைகளில் உள்ள மாறுபாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதில் வரும் கருத்துக்கள் இந்துக்களை புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி ஒருவர் வழக்கு தொடுத்தார். இது குறித்து பல்கலைக்கழகம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு இந்த இராமாயணப் பாடத்தை நீக்க முடிவு செய்துள்ளது. கல்விக் குழுவில் இருந்த 120 பேரில் வெறும்  9 பேர்தான் இந்த பாடத் திட்டம் நீக்கப்படுவதை எதிர்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அ.மாரியப்பன், இராமாயணத்தில் வரும் ‘அகல்யையின் சாபம்’ என்ற கிளைக் கதையில் வரும் சம்பவம் தொடர்பாக ஏ.கே.ராமானுஜத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

வால்மீகி இராமாயணத்தில் அகல்யை தானே விரும்பி இந்திரனை அழைத்ததாகவும், அதன் பின் இந்திரன் உடல் ஆயிரம் பெண் குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் இது வேறு சில இராமாயணங்களில் ஆயிரம் கண்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏ.கே. ராமானுஜன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பெண் பேராசிரியர்கள் இது போன்ற விடயங்களை வகுப்பறையில் பேசுவது தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று கருதுவதாகவும் அ.மாரியப்பன் தெரிவித்தார். அப்படிப்பட்ட இராமாயணம் எப்படி புனித காவியமாகும் என்ற கேள்வி எழுகிறது!

ஏ.கே.ராமானுஜம் இராமாயணம் குறித்து எழுதிய சிறப்பான கட்டுரை டில்லி  மத்தியப் பல்கலைக் கழகத்தால் தடை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் வெட்ககரமான செய்தி என்று சாகித்ய அக்காடமி விருது பெற்றுள்ள முன்னணி கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி கூறினார்.
(உள்ளே: இராமன் எத்தனை இராமனடி கட்டுரை)

‘இராமன்’ எத்தனை ‘இராமன’டி?

300க்கும் மேற்பட்ட இராமாயணக் கதைகள் இருக்கின்றன என்பதிலிருந்தே இராமாயணம் வரலாறு அல்ல; கற்பனை; பார்ப்பனப் புனைவு என்ற முடிவுக்கு வந்து விடலாம். இந்த உண்மையை பாடமாக வைப்பதற்கே டெல்லி பல்கலையில் பார்ப்பன இந்துத்துவ சக்திகள் எதிர்த்து பாடத்தை நீக்கச் செய்துவிட்டன. பல்வேறு இராமாயணக் கதைகளை இங்கு தொகுத்துத் தந்துள்ளோம்.

காட்டுமிராண்டி காலத்து கற்பனைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வடிவம்தான் இராமாயணம். இது நடந்து முடிந்துவிட்ட சரித்திரக் கோவை அல்ல, சனாதானிகள் தங்களின்  சதிச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு கருவி. வீதி ஓரத்துக் கூத்துக் களிலே, வீட்டுத் திண்ணைகளில் கூறப்படும் பாட்டிக் கதைகளிலே, கருவாக விளங்கிய இந்தக் கற்பனை பிறகு உருபெற்றது நூலாக! மதவாதிகளின் மன ஓட்டம், கதையாசிரியர்களின் கை வண்ணத்துக்கு ஏற்ப, இந்தக் கற்பனை பெற்று வந்துள்ள உருமாற்றங்கள் ஏராளம்.

உலக நாடுகளிலே எத்தனையோ மொழி இலக்கி யங்கள் அந்நாட்டு மக்களால் போற்றப்படுகின்றன; படித்துப் பாராட்டப்படுகின்றன. ஆனால் பூஜை அறையிலே வைத்து வணங்கப்படுவதில்லை. இந்த நாட்டிலேதான், இந்தக் கற்பனைக்கு தெய்வமுலாம் பூசி அதை வழிபாட்டுப் பொருளாகவும் ஆக்கிய அருவருப்பான நிலை.

நடந்த கதையல்ல இராமாயணம் என்பதற்கு அடுக்கடுக்கான ஆராய்ச்சிக் கணைகளை அள்ளி வீசியவர் தந்தை பெரியார். உண்மை வரலாறு என்றிருந்தால், ஒன்றுதானே இருந்திருக்க முடியும். வரலாறுகள் தனி மனிதனின் மூளையிலே உதிக்கக் கூடிய கற்பனை நிகழ்ச்சிகள் அல்ல! ஆனால் இராமாயணத்திலே காலத்துக்கு ஒருவிதம், இடத்துக்கு ஒருவிதம் புனையப்பட்டிருப்பதி லிருந்தே இது அவிழ்த்து விடப்பட்டுள்ள பொய் களின் மூட்டை என்பதற்குப் போதிய சான்றாகும்.

எத்தனை இராமாயணங்கள்?

இந்துக்களில் வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணங்களின் பட்டியலே நீண்டது. சமண இராமாயணம், வால்மீகி இராமாயணம், வசிட்ட இராமாயணம், ஆனந்த இராமாயணம், அத்யாத்ம இராமாயணம், லகு இராமாயணம், அற்புத இராமாயணம், பார்த்துவாஜ இராமாயணம், சோர இராமாயணம், பால இராமாயணம், இரகு வம்ச  இராமாயணம், போதாயன இராமாயணம், அக்னிவேஸ்ய இராமாயணம், யோக வசிட்ட இராமாயணம், சஸ்கிரத இராமாயணம் - இவைகள் குறிப்பிடத் தகுந்தவைகள் மட்டும்; இன்னும் பட்டியல் நீண்டு கொண்டு போகும். இவைகளிலே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான கதைகள் கூறப்படுகின்ற வினோதத்தைப் பார்க்கிறோம்.

சமணர்கள் கன்னட மொழியில் எழுதியுள்ள இராமாயணங்களின் பட்டியல் - பம்ப இராமாயணம், குமுதேந்து இராமாயணம், ஜைன இராமாயணம், இராமவிஜயதரிசம், இராம கதாவதாரம், திரிசஷ்டி மகாபுருகுண அலங்காரம், ஜீவ சம்போதனை - இப்படிப் பட்டியல் நீண்டு போகும். இன்னும் பவுத்த இராமாயணம், கிறிஸ்துவ இராமாயணம், வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் - இப்படிப் பலவகை.

இராமனும் சீதையும் கணவன் மனைவியாக ஒரு இராமாயணம்! அவர்களே சகோதர சகோதரி களாக ஒரு  இராமாயணம்! சீதை இராமனின் சகோதரியாக இருந்தும், அவளையே திருமணம் செய்து கொண்ட தாக ஒரு  இராமாயணம்! இராமன் மகாவீரனாக ஒரு இராமாயணம்! இராமன் குஷ்டரோகியாக ஒரு  இராமாயணம்! இப்படி குழப்பங்கள், முரண் பாடுகள், மாறுபாடுகள். இவைதான்  இராமாயணம்! ஒரு சில  இராமாயணத்தின் கதைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

சமண  இராமாயணம்!

சமண இராமாயணத்தில் கூறப்படும் கதை இது:

1)    தனக்கு யாரால் சாவு வரும் என்று நாரதனிடம் இராவணன் குமாரன் கேட்கிறான். அயோத்தி மன்னன் தசரதனாலும், ஜனகன் மகளாலும் சாவு வரும் என்று நாரதன் கூற, அந்த அரசர்களுக்குக் குழந்தையே பிறக்காமல் தடுக்க அவர்களைக் கொலை செய்ய தனது சகோதரன் விபீடணனை அனுப்புகிறான் இராவணன்.

2)    நாரதன் இந்த வரத்தை தசரதன், ஜனகன் ஆகியோரிடமும் சென்று கூற, அந்த மன்னர்கள் தங்கள் உருவத்தை சிம்மாசனத்தில் செய்து வைத்துவிட்டு யாத்திரைப் போய் விடுகிறார்கள். பொம்மை உருவத்தை உண்மை மன்னர்கள் என்று நம்பி வெட்டிச் சாய்த்து விட்டு, இராவணனிடத்தில் வெற்றிச் செய்தியைக் கொண்டு வந்தான் விபீடணன்.

3)    யாத்திரை முடித்த தசரதன், தனது பத்தினிப் பெண்டிர்களோடு வசித்து வரும்போது தனக்கு மிகவும் உதவி புரிந்த பத்தினிப் பெண்டிர்களில் ஒருவளான கைகேயிக்கு இரண்டு வரம் அளித்தான்.

4)    தசரதனின் மூத்த மனைவிக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளில் மூத்தவனுக்கு தாரையின் பெயராக பத்மன் அல்லது ராமன் என்று பெயரிட்டான்.

5)    தசரதனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த வனுக்கு நாராயன் அல்லது லட்சுமணன் என்று பெயரிட்டான்.

6)    அதரங்கமண் என்பவன் ஜனகன் மீது படையெடுக்க, ஜனகனுக்கு உதவியாக தனது தந்தையின் ஆணைப்படி, இராமன் சென்று எதிரியைத் தோற்கடித்தான்.

7)    இராமனுக்குச் சீதையைத் திருமணம் செய்விக்க ஜனகன் விரும்பினான். சீதையைப் பார்க்க நாரதன் சென்றபோது, அவனது கோர உருவத்தைக் கண்டு சீதை ஓட நாரதன் ஆத்திர மடைந்து, பரமண்டலன் என்பவனைசீதையைக் கடத்திப் போகுமாறு தூண்டினான். இறுதியில் வில்லை உடைத்து இராமன் சீதையை மணந்தான்.

8)    லட்சுமணன் வித்யாவசம்பத்தில் பிறந்த 18 சகோதரிகளையும் திருமணம் செய்து கொண்டான்.

9)    பரதன் ஜனகரின் சகோதரன் மகளை திருமணம் செய்து கொண்டான். அதாவது சீதையின் ஒன்றுவிட்ட சகோதரி.

10)    கைகேயிற்கு தசரதன் கொடுத்த வரப்படி, இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் காடேகின்றனர்.

11)    இராமன் விஜயபுரம் என்ற இருட்டடிக்கப் பட்ட தோட்டத்தில் இருக்கையில், ஒரு பெண் தற்கொலை செய்யப் போவதைத் தடுத்து, காரணம் யாது என்று கேட்க, அந்தப்பெண் இலட்சுமணனை தான் அடைய விரும்புவதாகக் கூறவே, இலட்சுமணன் அவளையும் திருமணம் செய்து கொண்டு அவர்கள் பெற்றோர்கள் வீட்டிலே விட்டுவிடுகிறான். பிறகு ஜீதபத்மா என்ற இளவரசியை இலட்சுமணன் திருமணம செய்து, மலைப் பகுதியில் இருக்கும் இரண்டு பார்ப்பனர்களுக்கு மோட்சம் அளிக்கிறான்.

12)    சூர்ப்பனகை தன் மகன் கொல்லப்பட்டதை இராமனிடமே முறையிட வரும்போது இராமன் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்ட, இராமன் அவளை அலட்சியப்படுத்துகிறான். ஆத்திர மடைந்த சூர்ப்பனகை தனது சகோதரன் இராவணனிடம் சென்று முறையிட்டு இராமனையும், இலட்சுமணனையும் யுத்தம் செய்து கொல்லுமாறு வேண்டுகிறாள்.

13)    சூர்ப்பனகையின் மகன் சம்பூகன். இவன் விசேச சக்தியுள்ள ஒரு கத்தியை அடைய மூங்கில் புதரில் தவம் செய்கிறான். இலட்சுமணன் அந்த தவம் வெற்றிப் பெற்றால் நாட்டுக்கு கேடு உண்டாகும் என்று இராமனிடம் கூற, இராமன் அந்த கத்தியாலே சம்பூகனை கொன்றான்.

14)    இராவணன் சீதையைத் தூக்கிச் செல்கிறான்.

15)    சுக்ரீவன் மனைவியை அடைய, அவனைப் போல உருவமெடுத்து வந்தான் ஹைஜாதி என்பவன். சுக்ரீவன் இதைப் பார்த்து, உண்மையான சுக்ரீவனும் மாயா சுக்ரீவனும் சண்டையிட, இராமன் தலையிட்டு மாயா சுக்ரீவனைக் கொன்றான். நன்றிக் கடனாக சுக்ரீவன் இராமனுக்காக சீதையைத் தேட ஆரம்பித்தான்.

16)    இலங்கைக்கு சீதையிடம் தூது போன அனுமானை இராவணன் பிடித்துக் கொள்ள, அனுமான் இராவணனை வசைபாடி, அவன மகுடத்தை உடைத்து இலங்கையை அழித்து விட்டு திரும்பினான்.

17)    இராம, இராவண யுத்தத்தில் இராவணன் தோற்றான். விபீடணன் இலங்கை அரசனானான். இராமன் அயோத்தி அரசனாகி சீதை, பிரபாவதி, ரதீனியா, ஸ்ரீதாமா என்ற பெண்களை மனைவியாகக் கொண்டு குடும்பம் நடத்தினான்.

18)    இலட்சுமணன் அரசாளவில்லை. எட்டு மனைவிகளுடனும் அவர்களுக்குப் பிறந்த 250 குழந்தைகளுடனும் குடும்பம் நடத்தி வந்தான்.

இதுதான் சமண இராமாயணக் கதை.

பவுத்த  இராமாயணம்: பவுத்தத்திலேயே பல இராமாயணக் கதைகள் உள்ளன. அதில் புத்தர் தனது சீடர்களைப் பார்த்துக் கூறியதாக கீழ்க்கண்ட கதை கூறப் படுகிறது.

ராமன் - சீதை சகோதரர்கள்!


1)    காசி நாட்டை ஆண்ட தசரதனின் பதினாயிரம் மனைவிகளில் மூத்த மனைவிக்கு இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் பிறந்தனர்.

2)    மூத்த மனைவி இறந்த பிறகு இன்னொரு மனைவியை ராணியாக்கியதும், அவனுக்குப் பரதன் பிறந்தான்.

3)    பரதன் தாய், தசரதன் கொடுத்த வரத்தைக் காட்டி பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று கூறுகிறாள். (இராமனைக் காட்டுக்கு அனுப்புமாறு கூறவில்லை)

4)    இவனால் தனது மூத்த மனைவியின் மக்களுக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சிய தசரதன், அவர்களைக் காட்டுக்கு அனுப்பினான். சோதிடன் தசரதனுக்கு  12 ஆண்டுகள் ஆயுளை நிர்ணயிக்க, 12 ஆண்டுகள் கழித்து, தான் இறந்த பிறகு வந்து நாட்டை ஆளுங்கள் என்று தசரதன் கூறினான்.

5)    தசரதன் 9 ஆண்டுகளில் இறக்கவே (சோதிடம் பொய்த்தது) பரதனுக்கு முடிசூட்ட ஏற்பாடுகள் நடந்தது. அமைச்சர்கள் ஆலோசனைப்படி, பட்டாபிஷேகத்திற்கு ராமனை அழைக்க பரதன் காட்டுக்கு வருகிறான்.

6)    தனது தந்தை இறந்த செய்தி கேட்டு இராமன் கலங்கவில்லை. சீதை, இலட்சுமணர்களிடம் தந்தை இறந்த செய்தியை தண்ணீரில் நிற்க வைத்து (அப்போதுதான் அதிர்ச்சி அடைய மாட்டார்களாம்) கூறவே, அவர்கள் மயக்க முற்றனர். இராமன் மட்டும் அதிர்ச்சி அடையாததற்குக் காரணம் ஏன் என்று பரதன் கேட்க, சாவு என்பது இயற்கை என்று இராமன் உபதேசம் செய்கிறான். (இது புத்தமதக் கொள்கை. அதைப் பரப்பவே இந்தக் கதை என்பது விளங்கும்)

7)    இராமன் தன்னுடைய சகோதரி சீதை, சகோதரன் இலட்சுமணன் ஆகியோரை பரதனோடு நாட்டுக்கு அனுப்பி தான் மட்டும் தந்தைக்கு வாக்குறுதி அளித்தபடி 12 ஆண்டுகள் கழித்து வருவதாகவே கூறுகிறான். (செருப்பைக் கொடுத்து அனுப்பவில்லை) ராமன் நாடு திரும்பிய பிறகு சீதையை நாட்டுக்கு அரசியாக் கினான்.

(தொடரும்)

Pin It