கொலைக் குற்ற வழக்கிலிருந்து விடுதலை பெறுவதற்கு பார்ப்பனர்கள் ‘லோக குருவாக’ சித்தரிக்கும் காஞ்சி ஜெயேந்திரன் நீதிபதிக்கு லஞ்சம் தர முயன்ற செய்தி ஏற்கனவே அம்பல மாகியுள்ளது. தனக்கு நெருக்கமான ஒரு பெண் வழியாக  நீதிபதியிடம் ஜெயேந்திரன் நடத்திய அலைபேசி உரையாடல் அம்பலமாகி, உயர்நீதிமன்றத்திலும் சுந்தர் ராசன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந் துள்ளார். உயர்நீதி மன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்று சங்கராச்சாரி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. சங்கராச்சாரியும், பார்ப்பன வட்டாரங்களும் அதிர்ச்சியடைந்து நிற்கின்றன. இந்த நிலையில் கொலையுண்ட சங்கர் ராமனின் மனைவி தந்துள்ள புகார் மற்றொரு திருப்பமாக இந்த வழக்கில் உருவாகியுள்ளது.

சங்கராச்சாரியை கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்து நடவடிக்கை எடுத்தது ஜெயலலிதா தலைமையில்தான் நடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி சங்கர்ராமன் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயி லுக்குள் கொலை செய்யப்பட்டார். சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணைக்குப் பிறகு இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரனைக் குற்றவாளி என்று கண்டறிந்து 2005 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி ஆந்திராவில் கைது செய்தது. மடத்தின் அடுத்த இளைய பார்ப்பன சங்கராச்சாரி விஜயேந்திர சரசுவதி மற்றும் 16 பேரையும் காவல் துறை கைது செய்தது. காஞ்சி மடத்துக்கு உரிய 183 வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டன. ஜெயேந்திரன் தன் வழக்கின் மீது தமிழக நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காது என்று கூறி, வேறு மாநிலத்துக்கு விசாரணையை மாற்றுமாறு உச்சநீதி மன்றத்தை அணுகினார். உச்சநீதி மன்றம் வழக்கு விசாரணையை புதுவைக்கு மாற்றி உத்தரவிட்டது. அரசு தரப்பு சாட் சிகள் பிறழ்சாட்சிகளாகி, சங்கராச் சாரியை தப்பிக்க வைக்க உதவினர். காவல்துறையின் 77 சாட்சிகள் ‘பல்டி’ அடித்து விட்டனர். தி.மு.க. ஆட்சியின் காவல்துறை சங்கராச்சாரியை காப் பாற்றவே முடிவு செய்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் ஜெயேந்திரன் நீதிபதியுடன் பேரம் பேசிய ‘அலை பேசி’ உரையாடல் அம்பலமானது.  அதனைத் தொடர்ந்து, கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மற்றும் வழக்கறிஞர்வி.இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்புத் துறையிடம் இது குறித்து புகார் தந்தனர். வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கை மீண்டும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். தொடர்ந்து வழக்கறிஞர் பி.சுந்தர்ராசன் வழக்கு தொடர்ந்தார். இப்போது அடுத்த திருப்பமாக கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் மனைவி, தனக்கும் தனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் வந்ததாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெயேந்திரனுக்கு எதிராக தாம் சாட்சியளித்த நாளில், உணவு இடைவெளி நேரத்தில் ஜெயேந்திரனுக்கு எதிராக சாட்சி கூறினால், தமது பிள்ளைகளை அமி லத்தில் போட்டு எரித்து விடுவதாக மிரட்டி தன்னை சாட்சி யத்தை மாற்றிக் கூற வைத்து விட்டார்கள் என்றும், தனக்கும் தனது குடும்பத்துக் கும் பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியுள்ளார். இதனால் தி.மு.க. ஆட்சியில் காவல்துறை ஆதரவில் தப்பித்துவிட காய் நகர்த்திய ஜெயேந்திரனும் பார்ப்பன வட்டாரங்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Pin It