தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, மரண தண்டனை எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் சென்னையி லிருந்து வேலூர் சிறை நோக்கி இரு சக்கர வாகனப் பேரணியை கடந்த 18 ஆம் தேதி நடத்தினர். நடிகர் சத்தியராஜ், இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய பேரணி, பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர் சென்றடைந்தது. வழி நெடுக பேரணிக்கு ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், காஞ்சி மக்கள் மன்றம் போன்ற அமைப்புகள் வரவேற்பு தந்தன. கூட்டமைப் பின் பிரதிநிதிகளும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேரறிவாளன் தந்தை குயில்தாசன், மாணவர் நகலகம் அ. சவுரிராசன் உள்ளிட்டோர் சிறையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை சந்தித்தனர். தமிழக முதல்வர் தூக்குத் தண்டனைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வருவார் என்று தங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது என்றும் அது ஒன்றுதான் தங்களை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றக்கூடிய வழி என்றும் பேரறிவாளன் கூறினார்.