உலக நாடுகளில் விடைபெறும் தூக்குத் தண்டனை

கடந்த 10 ஆண்டுகளில் 22 நாடுகள் தூக்குத் தண்டனையை தங்கள் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கி விட்டன. இப்போது 95 நாடுகளில் தூக்குத் தண்டனை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அய்ரோப்பிய ஒன்றியம் முழுதும் (பெலாரஸ்என்ற நாட்டைத் தவிர) தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கையும் 58 ஆக குறைந்துள்ளது. இந்த நாடுகளிலும்கூட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தூக்குத் தண்டனை அமுலில் உள்ள சீனாவில் அந்நாட்டின் உச்சநீதி மன்றம் தவிர்க்கவே முடியாத வழக்குகளில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதிக்கும் முறையை மாற்றி, விஷ ஊசியைப் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சில மாநிலங்களில் தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அமெரிக்காவின் சட்டத்தில் 8வது திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இனி விஷ ஊசி போடும் முறையையே பயன்படுத்த வேண்டும். ரஷ்யா நாட்டில் தூக்குத் தண்டனை சட்டத்தில் இருந் தாலும் 2009 ஆம் ஆண்டு வரை அமுல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவும் உலக நாடுகளின் மாற்றத்தை ஏற்று, தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற முன் வருமா?

அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு

20 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும் என்று துடிக்கிறது, காங்கிரஸ்ஆட்சி. 2005 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி, அப்போது உள்துறை அமைச்சராக சிவராஜ்பட்டீல் இருந்தபோது இம் மூவரின் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று குடி யரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பரிந்துரைக் கப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யுமாறு மீண்டும் உள்துறை அமைச்சகத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் ப. சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம், மூவரையும் தூக்கிலிட பரிந்துரைத்து, கடந்த மார்ச் 8, 2011 இல் குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீலுக்கு அனுப்பி வைத்தது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை எற்று குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை இப்போது நிராகரித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரபால் சிங், அசாம் மாநிலத்தைச் சார்ந்த மகேந்திரநாத் ஆகியோரின் கருணை மனுக்களை உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் நிராகரித் துள்ளார். ஆனாலும், அவர்களின் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையிலும், அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் இப்போது நிராகரித்துள்ளார். ஆனால், அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க., இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ்கட்சிக்குள்ளேயே உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ்கட்சியின் செயலாளரான பிரவீன்தவார் நடத் தும் காங்கிரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சுப்ரீம் சேவியர்’ என்ற பத்திரிகை, குடியரசுத் தலைவர், இந்தப் பிரச்சினையில் உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று எழுதியுள்ளது. காங்கிரஸ்கட்சியின் பல மூத்த தலைவர்கள் அப்சல் குருவை தூக்கிலிடுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித் துள்ளனர். அப்சல் குருவை தூக்கிலிட்டால் ஜம்மு காஷ்மீரில் மோசமான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்றும், உ.பி. சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் எதிர்ப்பை காங்கிரஸ்சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்

குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனைக்கான கருணை மனுவை தள்ளுபடி செய்த பிறகு கேரளத்தில் சி.ஏ.பாலன் என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர், தூக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வரலாறும் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிபதியாவதற்கு முன் கேரளாவில் உள்துறை அமைச்சராக இருந்தார். அவரது சட்டப் போராட்டத்தினால் சி.ஏ. பாலன், தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார். இது பற்றி நீதிபதி கிருஷ்ண அய்யரே திருவனந்தபுரத்தில் நடந்த மரண தண்டனைக்கு எதிரான மாநாட்டைத் தொடங்கி வைத்தபோது பேசினார். அவரது உரையிலிருந்து:

“நீண்ட பல்லாண்டு முன்பு இந்தத் திருவனந்தபுரம் நகரத்தில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது... நாங்கள் பதவியேற்ற சிறிது காலத்திற்கெல்லாம் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அவர் பெயர் சி.ஏ. பாலன் என்று நினைவு. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நான் மரண தண்டனையை எதிர்ப்பவன். இந்த பாலன் முன்பே மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அது மறுக்கப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதுவும் மறுக்கப்பட்டது. பிறகு தான் 1957 ஏப்ரலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். உள்துறை அமைச்சர் என்ற முறையில் என்னிடம் இந்த வழக்கு மறுபடியும் கொண்டு வரப்பட்டது. நான் சொன்னேன், இந்த மனிதரைத் தூக்கிலிடக்கூடாது. தூக்கைத் தூக்கிலிடு! இது என் உறுதியான நிலைப்பாடு.

உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் நான் இந்த வழக்கை ஆளுநரின் பார்வைக்கு அனுப்பினேன். பாலனின் மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று எழுதி அனுப்பினேன். இதற்கிடையில் தில்லியிலிருந்து கடிதம் வந்தது. பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் முன்பே நிராகரித்து விட்டதால் ஆளுநர் இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று!

மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் எனக்கு எழுதினார். நான் அவருக்கு விடை எழுதினேன். வழக்கறிஞர், சட்டவியல் அறிஞர் என்ற முறையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருங்கே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் இந்த அதிகாரம் உள்ளது. ஆனால்இந்த அதிகாரம் இப்போதும் தீர்ந்து போய்விடவில்லை. மறுப்பதற்குப் பயன்படுத்திய அதே அதிகாரத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் பயன்படுத்தலாமே! தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பரிந்துரைக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சராகிய எனக்குள்ளது. அந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று வாதிட்டேன். இதையொட்டிப் பெரும் சர்ச்சை எழுந்தது. தூக்கிலிட ஆணையிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உரியது என்பதால் அதை ஆளுநர் மாற்ற முடியாது என்பதற்கு எம்.சி. சத்தல்வாடு என்ற சட்ட வல்லுநரின் கருத்து எனக்கு எடுத்துக் காட்டப் பட்டது. மாற்ற முடியும் என்பதற்கு நான் எங்கள் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.வி.சூர்ய நாராயணய்யாவின் கருத்தைப் பெற்று அனுப்பி வைத்தேன். இது பெரும் சட்ட மோதலும் அரசியல் மோதலும் ஆகிவிட்டது.

நான் இதில் விடாப்பிடியாக உள்ளேன் என்பதை சி.பி.பந்த் பார்த்தார். அன்று நான் இளைஞன், கட்டுக்கடங்காதவன், அவர் அதற்கு ஒரு தீர்வு கண்டார்.

சொன்னார்: கிருஷ்ணய்யர், நீங்கள் எங்கள் பெயரைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கிறோம். மரண தண்டனையைக் குறைக்கும்படி நீங்கள் எனக்கு எழுதுங்கள். நான் அதனை என் பரிந்துரையோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுவது தவிர குடியரசுத் தலைவருக்கு வேறு வழியில்லை. இப்படித்தான் உள்துறை, சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் என் பதவிக் காலம் தொடங்கியது. குடியரசுத் தலைவரே தூக்கிலிட ஆணையிட்டுவிட்ட ஒருவரின் உயிரை, மரணப் பிடியிலிருந்து மீட்டுவர முடிந்தது. இது ஒரு வரலாற்றுப் பதிவு.

- ‘மாண்டொழிக மரணதண்டனை’ நூலிலிருந்து

முடிவுறாத விசாரணை

1. ராஜீவ் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்டது.

2. ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப்பட்டது.

3. மறு விசாரணை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

4. உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ண அய்யர், பேரறிவாளனின் மடலையும், வழக்கையும் படித்துவிட்டு, பேரறிவாளன் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனை குறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னாள் சனாதிபதிகளுக்கும், பிரதமருக்கும், சோனியாகாந்திக்கும், இன்னாள் சனாதிபதிக்கும், பிரதமருக்கும் மேலும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.

5. முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம்ஜெத் மலானி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும்போதே அறிவித்தார்.

6. முன்னாள் மும்பை உச்சநீதிமன்ற நீதிபதி எச்.சுரேஷ், பேரறிவாளனை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.

7. சோனியா காந்தி, எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் விருப்பமில்லை. உங்களிடம் (சனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.

8. இந்த வழக்கைப் பயன்படுத்தி ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்துவதுமே டில்லியின் நோக்கம்.

Pin It