மனித எலும்புகளையும் மாட்டுக்கறியையும் கலந்து மருந்து தயாரிப்பவர்!

‘பசுவதை’க்கு தூக்குத் தண்டனை தரவேண்டும் என்று நாடு முழுதும் இயக்கம் நடத்தி வரும் பாபாராம் தேவ், அவர் நடத்திவரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மருந்துகளில் விலங்குகளின் உறுப்புகள் மட்டுமல்ல; மனித எலும்புகளும் சேர்க்கப் படுவது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாபா ராம தேவ் என்ற இந்து மதவெறியாளர் ‘பாரத ஸ்வாபிமான் யாத்ரா’ என்ற பெயரில் யோகாப் பயிற்சி என்ற போர்வையில் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து, ‘பசுவதை’ செய்வோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கவேண்டும் என்றும், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து 3 மாதத்துக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் பேசி வருகிறார்.

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து உணவு மாட்டுக்கறி. இதில் பசுவை கொல்வது பாவம் என்ற பார்ப்பன சிந்தனையைப் புகுத்தி, மாட்டிறைச்சி உண்ணும் ஏழை எளிய மக்களை ‘தூய்மையற்றவர்கள்’ என்று இழிவுபடுத்துவதோடு, மாட்டுக்கறி உண்ணும் இசுலாமியர்களுக்கு எதிராக பகை உணர்வுகளைத் தூண்டி வருகிறார். இந்த ராம் தேவ் பாபா நிகழ்ச்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், மாட்டுக்கறி உணவை மத அரசியலாக்கும் உள்நோக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் பெரியார் திராவிடர் கழகம் தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 22 அன்று சென்னையிலும், மார்ச் 26 அன்று சேலத்திலும் கழகத் தோழர்கள் மாட்டுக்கறியுடனும் மாட்டு எலும்புகளுடனும் ராம்தேவ் நிகழ்ச்சி நடக்கும் விளையாட்டுத் திடல்களில் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்ச் 30 அன்று கோவையிலும் மாட்டுக்கறியுடன் நுழையும் போராட்டமும் நடந்தது.

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் மற்றொரு முகமூடிதான்இந்த ராம்தேவ். யாதவ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக கருதப்படும் இந்த சாமியாருக்கு வட மாநிலங்களில் பெரும் வாக்கு வங்கி இருக்கிறது.  காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் பல வட மாநில அரசியல் கட்சிகள் இந்த ராம்தேவிடம் இருக்கும் வாக்கு வங்கிக்கும், ஆர்.எஸ்.எஸ். பலத்துக்கும் அடங்கியே இயங்குகின்றன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகாசோனி, ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவ், 2006 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த முலாயம்சிங் யாதவ், சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், உத்ராஞ்சல் முதல்வர் என்.டி.திவாரி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர், உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் மற்றும் அமர்சிங், காங்கிரஸ் முக்கியத் தலைவர் அகமது படேல், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் போன்ற பலரும் இந்த சாமியார் ராம்தேவ்வின் முக்கிய சீடர்கள்.

பசுக்களைக் கொல்லக் கூடாது என நாடெங்கும் குரல் கொடுக்கும் பசுநேசன் ராம்தேவுக்குச் சொந்தமாக “திவ்ய யோக பார்மசி” என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் மிகப் பெரும் மூலத்தனத் துடன் இயங்கி வருகிறது. ஆயுர்வேத மருந்து களைத் தயாரித்து பலகோடி ரூபாயில் வியாபாரம் நடந்து வருகிறது. கடந்த 2006 ஆம் வருடம் இந்த பசுநேசனின் நிறுவனம் தயாரித்த மருந்துகளில் விலங்குகளின்பாகங்களும், மனித மண்டை ஓட்டின் துகள்களும், மனித எலும்புத் துகள்களும் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டது.

மனித எலும்புகளைக் கலந்து மருந்து தயாரித்த இந்த விலாங்காபிமானியைக் கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் பிருந்தாகாரத் 2006 இல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியிடம் கோரிக்கை வைத்தார். சுகாதார அமைச்சகம் திவ்ய யோக பார்மசி தயாரித்து விற்பனை செய்த மருந்துகளைப் பரிசோதித்தது. ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் நவீன ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ராம் தேவ் தேயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் பாகங்களும், மனித மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளும் கலந் திருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போதைய அமைச்சர் அன்புமணி அந்த ஆய்வுக் குறிப்புகளை உத்ராஞ்சல் மாநில அரசு வழியாக அங்குள்ள மாநில அரசு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். ராம் தேவின் நண்பர் என்.டி.திவாரி தலைமையிலான உத்ராஞ்சல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அகில இந்திய மருந்து சட்டங்களின்படி ((Drugs & Cosmetic Act, Drugs & Magic Remedies Act)) இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை பெறும் அளவிலான குற்றங்களைச் செய்தவர் இந்த ராம்தேவ். தனியார் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் போலியான மருந்துகளை விற்பனை செய்தவர் என்ற குற்றச்சாட்டிலும் சிறைச் செல்ல வேண்டியவர்.

இவரது மருந்து விற்பனை மோசடிகளையும், விலங்குகளின் பாகங்கள் - மனித எலும்புக் கலப்படங்களையும் அம்பலப்படுத்தியதற்காக தோழர் பிருந்தாகாரத் அப்போது அனைத்து அரசியல் கட்சிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் குரல் என்றும் குற்றம்சாட்டப்பட்டார். சங்பரிவார் கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அலுவலகமான ஏ.கே.ஜி. பவனை முற்றுகையிட்டு தாக்குதலையும் நடத்தியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட்டுகள் மீது அரசியல் ரீதியாகவும், நேரடியாகவும் மிகப் பெரும் தாக்குதலைத் தொடுத்த மருந்து மோசடி சாமியார் ராம்தேவ் தற்போது தமிழ்நாட்டுக்கு வரும்போது சிறு எதிர்ப்பைக்கூட பதிவு செய்யாது, மார்க்சிஸ்ட்டுகள் அமைதியாக இருப்பது வியப்பாக இருக்கிறது.

தான் தயாரிக்கும் மருந்துகளில் மாடு மற்றும் பல மிருகங்களின் பாகங்களையும், மனித எலும்பு களையும் கலந்து பல கோடி சம்பாதிக்கும் ராம்தேவ், மாட்டுக்கறி ஏழை எளிய மக்களுக்கு உணவாகப் பயன்படக் கூடாது. அப்படி உண்பவனை 3 மாதத்திற்குள் தூக்கில் போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார் என்றால் இப்பிரச்சாரத்தில் உள்ள நேர்மையற்ற தன்மையை யும், இந்தப் பிரச்சாரங்களின் பின்னணியில் இருக்கும் மனுதர்ம - பார்ப்பன அரசியலையும் ஒடுக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும்.

Pin It