அரசு சுகாதார நிலையத்திலே இந்த மூடச் சடங்கு நடந்ததற்கு கொளத்தூர் பெரியார் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. அரசு அலுவலகங்களில் கடவுள் - மதம் தொடர்பான படங்களை மாட்டக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை இணைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனருக்கு கொளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஈசுவரன் 10.2.2011 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

 

சேலம் மாவட்டம், கொளத்தூர் சத்யா நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக 25 பிரசவம் நடந்தது. சேலம் மாவட்டத்தில் சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக சத்யா நகர் சுகாதார நிலையம் திகழ்ந்தது. ஒகேனக்கல், ஊட்டமலை பகுதியை சேர்ந்த பிரபு மனைவி பிரியா (20), கர்ப்பிணியான அவர், பிரசவத் துக்காக சத்யாநகர் அடுத்த கோட்டையூரில் உள்ள தாய் வீட்டில் தங்கினார். கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சத்யா நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிரியா, டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாலை பிரசவம் முடிந்த வுடன் இறந்து போனார்.

 

அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர். அதன் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆவி உலா வரக்கூடும் என கருதி, சுற்றுப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக கொளத்தூர், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல துவங்கினர்.

 

எனவே, சத்யாநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முந்தைய மாதங்களைவிட பிரசவ விகிதம் குறைய துவங்கியது. இரவு நேரத்தில் பிரசவ வார்டு, சுகாதார நிலைய வளாகம் ஆகிய இடங்களில் ஆவி நடமாட்டம் இருப்பதாக, ஊழியர்களும் பயந்தனர். இரவு பணி நர்ஸ்களும் பீதியோடு பணி புரிந்தனர்.

 

பிரசவ விகிதம் சரிவுக்கு திருஷ்டியே காரணம் என ஊழியர்கள் நம்பினர். சுகாதார வளாகத்தில் ஆவிகள் நுழைய விடாமல் தடுக்கவும், திருஷ்டியை போக்கவும் சுகாதார வளாகத்தில் ஓமகுண்டம் வளர்த்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. திருஷ்டி போக்கவும், துஷ்ட சக்திகளை விரட்டியடிக்கவும் பிரசவ வார்டு, சுகாதார நிலைய வளாகத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின், சுகாதார நிலைய வாயிலில் ஆட்டுகிடா வெட்டி பரிகார பூஜை நடந்தது. கிடாவின் ரத்தம் மருத்துவ மனை நான்கு மூலைகளிலும் தெளிக்கப்பட்டது. யாகம் மற்றும் பரிகார பூஜைகளில் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்

Pin It