7.3.2011  திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தொல்குடி மக்களின் பாரம்பரிய பண்பாட்டு மாட்டுக்கறி உணவு திருவிழா விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் இளமாறன் தலைமையேற்றார். தாய்மண் கல்வி பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் நெப்போலியன், மாட்டுக் கறியின் பயன்கள் பற்றியும், மாட்டுக்கறி எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தால், பார்ப் பனர்களுக்கு பால் கிடைக்காது என்பதால் தான் வணங்கச் சொல்கிறார்கள். பசுவதை தடை கேட்பவர்கள்தான், கோமாதா யாத்திரை என்ற பெயரில் மாட்டை வெய் யிலில் இழுத்து வந்து வதை செய்கிறார்கள் என்று பேசினார். அண்ணல் அம்பேத்கர் அமைப்புச் சாரா தொழிலாளர் சங்கத் தலைவர் அரங்க செல்லதுரை, “பார்ப் பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். புத்தர் பவுத்த மதத்தை பரப்பும் போதுதான், பார்ப்பனிய வீழ்ச்சியைத்தடுக்க, கறி சாப்பிடுவதை நிறுத்தும் நிலை ஏற் பட்டது” என்று பேசினார். ஸ்பீடோ அமைப் பின் தலைவர் சார்ப் முரளி, “நமக்குள்ளே தாழ்த்தப்பட்டவர் - பிற்படுத்தப்பட்டவர் என்ற பிரிவினையை உண்டாக்கிய பார்ப் பனர்கள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலைமை பொறுப்புகளில் இருந்து கொண்டு இந்த அரசையே இயக்கிக் கொண்டிருக் கிறார்கள். பாபர் மசூதி அரசியல் செய்தவர்கள் இப்போது மாட்டுக்கறி அரசியல் செய்ய புறப்பட்டு விட்டார்கள்” என்று பேசினார்.

 

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாட்டுக்கறியின் அரசியல் என்ற தலைப்பில் பேசினார். எருமை, ஆடு, கோழி, பன்றி, மீன் கொல்லப்படுவதைப் பற்றிக் கேள்வி கேட்காத பார்ப்பனர்கள், பசுவுக்கு மட்டும் பதறுவது ஏன் என்று கேட்ட அவர், இது பற்றி விவேகானந்தர் கூறிய கருத்தையும் சுட்டிக் காட்டினார். ஒரு முறை பசு பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்கள், விவேகானந்தரின் ஆதரவு கேட்டு வந்தனர். பீகாரில் பஞ்சம், பூகம்பத்தால் மக்கள் பாதிக்கப்படுவது பற்றி கவலைப்படாமல், பசுவைப் பாதுகாப்பது தானா உங்களுக்கு முக்கியம் என்று விவேகானந்தர் திருப்பிக் கேட்டார்.

 

“சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி வழி யாக செலுத்தப்படும் ‘இன்சுலின்’ மருந்தே மாட்டின் கணையத்திலிருந்துதான் தயாரிக் கப்படுகிறது. அதற்காக எத்தனை பார்ப் பனர்கள், ‘இன்சுலின்’ போட மறுக்கிறார்க ள்?” என்று கேட்ட கழகத் தலைவர் கொளத் தூர் மணி, பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப் பிட்டதையும், சோமபானம் குடித்ததையும் வேதங்கள் கூறுவதையும் சுட்டிக்காட்டினார். சேரன்மாதேவியில் காங்கிரஸ் கட்சிப் பணத்தில் குருகுலம் நடத்திய வ.வே.சு. அய்யர், அங்கே பார்ப்பன மாணவர்களுக்கும் பார்ப் பனரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனி இடத்தில் தனித்தனியான தரத்தில் உணவு வழங்கியதை எதிர்த்து பெரியார் போர்க் கொடி உயர்த்தினார் என்ற வரலாறுகளை படிக்கிறோம். அப்படி ‘வர்ணாஸ்ரமத்தை’ செயல்படுத்திய இதே வ.வே.சு.அய்யர், லண்டனில் படித்த போது, அங்கே விலை குறைவாகக் கிடைக்கும் உணவு  என்பதற்காக மாட்டுக் கறியைத்தான் சாப்பிட்டுள்ளார். லண்டனில் இருக்கும் வரை மாட்டுக்கறிச் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று சக பார்ப்பன மாணவருக்கு அவர் எடுத்துக் கூறியிருக்கிறார் என்பதையும் கழகத் தலைவர் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.