டெல்லி, அரியானா போன்ற வட மாநிலங்களில் வருடத்திற்கு சுமார் 100 கவுரவக் கொலைகள் நடப்பதாக ஊடகங்கள் தகவல் தருகின்றன.

 

வேறு வேறு சாதியினர் குறிப்பாக வேறு வேறு மதத்தினர் காதலித்து திருமணம் செய்து கொண்டால் அடிப்படை மதவாதிகளுக்கு பொறுக்காது. உடனே குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில் காதலர்களின் அதிலும் குறிப்பாக உயர் சாதிப் பெண் தாழ்த்தப்பட்ட ஆண் மகனை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் பெண்ணின் குடும்பமே அவர்களை கொடூரமாக கொன்று விடுகிறது. அதற்கும் கவுரவக் கொலை என்ற பெயர் வேறு.

 

வேறு வேறு மதத்தினர் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் 1957 இல் இயற்றப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி தான் பதிவுத் திருமணம் செய்ய முடியும். இந்த  சட்டத்தின் மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால் பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்தால் 1 மாதம் காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் திருமணச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

இந்த ஒரு மாத கால அவகாசம் சாதி மத வெறியர் களுக்கு மிகவும் வசதியாய் இருக்கிறது. அதற்குள் காதலர்களை கொன்று கவுரவத்தை நிலைநாட்டி விடுகின்றனர். தற்போது வடநாட்டு அரசியல்வாதிகள் பலரும் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். குறிப்பாக ஒரு மாத கால அவகாசத்தை நீக்க வேண்டும் என ஓங்கி குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் ஒரு சட்டம் 2009 இல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. (தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டம்-2009)

 

அதன்படி எந்த சாதியினரும் வேறு வேறு மதத்தினரும் ஒரே நாளில் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடியும். 30 நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் வசிப்பவர் ஆயினும் எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்தல் போதுமானது.

 

சாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களைக் கொள்கையாக செய்து வைக்கும் பெரியாரிஸ்டு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு இது மிகவும் வசதியான தாகும். இதற்கு முன் திருமணத் தரப்பினரின் வசிப்பிடத் திற்குட்பட்ட பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்ததால் பெற்றோர்கள் எளிதாக காதலர்களைத் திருமணம் செய்ய விடாமல் தடுத்து விட முடியும்.

 

பதிவுத் திருமணத்திற்கு வழியில்லாததால் தான் கோயிலையும் கடவுளையும் பூசாரியையும் நம்பி தாலி கட்டித் திருமணம் முடித்தனர். பிற்காலத்தில் பெண்கள் ஏமாற்றப் படுவதற்கும் இந்தக் கோயில் கல்யாணங்களே காரணமாயின. எந்தச் சாமியும் முப்பத்து முக்கோடி நபர்களும் இது வரை எந்த நீதிமன்றத்திலும் சாட்சி சொன்ன தில்லையே. திருமணத்தை நடத்தி வைத்த அல்லது திருமண நிகழ்ச்சியில் பங்கெடுத்த யாரும் மதகுரு என்ற இடத்தில் கையொப்பமிடலாம்.

 

மிக முக்கியமாக திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற கறாரான விதிமுறைகள் ஏதும்  இல்லை என்பதால் எந்த முறைத் திருமணமும் செல்லும். ஒப்பந்தம் போல அல்லது மாலை மாற்றி சீர்திருத்த முறை திருமணம்கூட இதன்படி செல்லுபடி ஆகும்.  2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டம் கூறுவது என்ன?

 

பிரிவு-2 பொருள் வரையறைகள்:

 

2(சி) திருமணம் என்றால் அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதுவானாலும் அல்லது எந்த வடிவத்திலும் அல்லது முறையிலுமான வழக்கம் அல்லது வழக்காறு எதனின்படியும் எந்த சாதியினரையும் அல்லது சமயத்தினரையும் சார்ந்த நபர்களால் நடத்தப்படும் அனைத்துத் திருமணங்களையும் உள்ளடக்குவதோடு மறு திருமணத்தையும்கூட உள்ளடக்கும்.

 

2(c) - Marriage includes all marriage performed by persons belonging to any caste or religion under any law for the time being in force or as per custom or usuage in any form or manner and also includes remarriage.

 

2(இ) - மத குரு என்றால் 1955 ஆம் ஆண்டு இந்து திருமணம் சட்டத்தின் 7ஏ எனும் பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ள திருமணத்தை நடத்தி வைக்கும் நபர் எவரும் அல்லது அத்திருமணத்தில் முன்னிலையாகும் நபர் எவரும் என்று பொருள்படும்.

 

2(e) - Priest means any person who performs a marriage or any person present in the marriage referred to in sec-7 of the Hindu Marriage Act, 1955.

 

பிரிவு - 5 திருமண தரப்பினர்கள் வடிவமைக்கப்பட்ட படிவத்தில் 2 படிகளைத் தயாரித்து திருமணத் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் எந்தப் பகுதியில் திருமணம் நடைபெறுகிறதோ அந்தப் பகுதியின் பதிவாளருக்கு அதனை நேரடியாகவோ படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகளிலோ ஒப்படைத்தல் வேண்டும்.

 

பிரிவ - 6 குறிப்பாவணத்தில் திருமணத் தரப்பினர் களும் மத குருவும், இரண்டு சாட்சிகளும் கையொப்பம் இடுதல் வேண்டும்.