விவசாயத் துறை இந்தியாவில் நலிவடைவதற்குக் காரணம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதை ‘மனு சாஸ்திரம்’ தடை போட்டுள்ளது. சாஸ்திரத்தை மீறி விவசாயம் செய்த இரண்டு “பிராமணர்களை” குடந்தையில் மூத்த சங்கராச்சாரி, ஜாதி நீக்கம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. விவசாயம் என்ற அறிவியலின் வளர்ச்சியை சமூகப் பார்வையில் முன் வைக்கும் இக்கட்டுரையை எழுதியவர் சமூக ஆய்வாளர் காஞ்சா அய்லையா.

நமக்கு உணவு தரும் உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது?

ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய அளவில் முன்னேற உதவியது.

ஆனால், அப்போது நிலம் வயலாக மாற்றப்பட் டிருக்கவில்லை. உழுவதற்கும் விதைப்பதற்கும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது. நிலங்களில் மரங்களும் பாறைகளுமே இருந்தன. பள்ளத் தாக்குகள், குன்றுகள் என்று ஏற்றத்தாழ்வான நில அமைப்பும் இருந்தது. மனிதர்கள் மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. ஏற்றத் தாழ்வான பகுதிகளைச் சமப்படுத்த வேண்டியிருந்தது.

மனிதர்கள் தங்கள் கடுமையான உழைப்பால் நிலத்தைப் பண்படுத்தினர். இப்படி மண்ணைப் பண்படுத்தி, உணவு உற்பத்தி செய்யும் முறையே விவசாயம். ஆதிகால விவசாயிகள் இயற்கையாக விளைந்த ஆயிரக்கணக்கான தாவர வகைகளில் இருந்து விவசாயத்துக்கு ஏற்றவற்றைக் கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பயிர் செய்து பெருக்கினர்.

இந்த வேலைகளைச் செய்வதற்கு மனித உழைப்பு மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமும் அறிவைப் பயன் படுத்தும் திறமையும் வேண்டியிருந்தது. விவசாயத்தை எளிமைப்படுத்தத் தேவையான கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் அவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது.

நிலத்திலிருந்து உணவுப் பயிர்களை விளை விக்கும் அறிவியல்தான் விவசாயம் என்று அறியப்படு கிறது. உலகில் அனைத்து நாகரிகங்களிலும் விவசாயத் துக்குப் பின்னரே எழுத்து கண்டுபிடிக்கப்பட் டிருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சி இயற்கையாக நடந்த ஒன்றல்ல; மற்ற அறிவியல் தொழில் நுட்பங்களைப் போல விவசாயமும் மனிதர்களின் கண்டுபிடிப்புதான்.

கி.மு. 2000க்கும் கிமு.3000க்கும் இடையே விவ சாயத்தையும் வீட்டு விலங்கு வளர்ப்பையும் சார்ந்து வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளைக் கல்லால் உருவாக்கினர். மரத்தாலும் தோலாலும் செய்யப்பட்ட கருவிகள் பின்னர் உருவாகின. அதற்குப் பிறகு இரும்பாலும் மற்ற உலோகங் களாலும் விவசாயக் கருவிகள் செய்யப்பட்டன.

விவசாயத்துக்கு இந்தியாவில் நீண்ட வரலாறு உண்டு.

மேய்ப்பவர்கள் விலங்குகளைப் பழக்கி வளர்க்கத் தொடங்கியபோது இறைச்சியும் பாலும் பால் சார்ந்த உணவுப் பொருள்களும், தோல் மற்றும் கம்பளி போன்ற மற்றப் பயன்பாட்டு பொருள்களும் கிடைத்தன. அதே நேரத்தில் காளைகளும் எருமைகளும் உழவுக்கும் வண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்டன.

ஐரோப்பாவில் குதிரைகளைக் கொண்டு உழுதனர். இந்தியர்களோ இந்தக் கடினமான வேலைக்கு மாடுகளைப் பழக்கினர். வண்டி இழுக்க ஐரோப்பாவில் குதிரைகளும் இந்தியாவில் மாடுகளும் உதவின. குதிரைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டபோது அவை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன.

இறக்குமதியான குதிரைகள் மீது சவாரி செய்த படைவீரர்களும் தேரோட்டிகளும் இன்றும் புகழப்படுகின்றனர். ஆனால், மாடுகளை நுகத்தில் பூட்டி உழுத உழவர்களுக்கு இன்றைக்கு மதிப்பில்லை. நிலத்தை உழுது உணவு தந்த சாதியினரும் சமூகக் குழுக்களும் ‘சூத்திரர்’ என்று அழைக்கப்பட்டுச் சமுதாயத்தின் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டனர். பண்டிதர்கள் (பார்ப்பனர்கள்) எனப்பட்டவர்கள் விவசாய வேலையை அறிவிலிகள் செய்யும் தொழிலாகக் கருதினர். பயிர்களை உணவாக மாற்றியவர்களுக்கு, அவர்களது மனசில் மரியாதை இல்லை. நிலத்திலிருந்து உணவு தயாரிக்கிற உழைப்பையும் அது சார்ந்த திறன்களையும் மதிக்காத மதமும் தத்துவமும் ஒரு சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை அழித்துவிடும்.

யாகத்தில் கொல்லப்பட்ட மாடுகள்

தொடக்கத்தில் விவசாய வேலைகள் அனைத்தையுமே மனிதர்களே முழுமையாகச் செய்து வந்தனர். கவுதம புத்தர் வாழ்ந்த காலத்தில் விலங்குகள் விவசாய வேலைகளுக்குப் பழக்கப்பட்டன. இது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. அதே நேரம், கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் வேத யாகச் சாலைகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. பவுத்தர்களின் ஆதரவுடன் இந்த யாகப் பலிகளை விவசாயிகள் எதிர்த்தனர். மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவதையும் பால் பொருள்களின் உற்பத்திக்காக வளர்ப்பதையும் பவுத்த மதம் ஊக்குவித்தது.

இன்று விவசாயம் ஓர் அறிவியலாக அறியப்பட்டுப் பல்கலைக் கழகங்களில் பாடமாக இருக்கிறது. ஆனால் விவசாயிக்கு காலங்காலமாக நிலத்தை எப்போது, எப்படிப் பண்படுத்துவது என்று தெரிந்திருந்தது. கட்டாந்தரையில் மாடுகளை ஏரில் பூட்டி உழுவதற்குக் கடுமையான பயிற்சி தேவை. பல தலைமுறைகளாக விவசாயிகள் தங்கள் சந்ததிகளுக்கு இதுபோன்ற திறமைகளைப் பயிற்றுவித்து வந்தனர்.

அதே நேரம் அந்த விவசாயிகளின் குழந்தை களுக்குப் பள்ளிகளில் படிக்கப் பல நூற்றாண்டு களாக அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தடை செய்யப்பட்டன. விவசாய வேலைகளில் பெற்றோர் தந்த பயிற்சி மட்டுமே அவர்களுக்குக் கல்வியாக இருந்தது. விவசாயிகளுக்கு எழுதவோ, படிக்கவோ முடியாததால் அவர்களது பாரம்பரிய அறிவு, அறிவாக மதிக்கப்படவில்லை.

வயலை உழுவற்கு அறிவும் திட்டமிடும் திறனும் தேவை. கடலை விதைக்கும்போது ஆழ உழுத சால் (கரசசடிற) அவசியம் என்று விவசாயிகளுக்குத் தெரியும். பச்சைப் பயிற்றுக்கு அவ்வளவு ஆழமான சால் தேவையில்லை. அதேபோல, பருவத்துக்கு உகந்த பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்ய வேண்டும்.

விவசாயிக்குத் தன் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை தெரியும். தான் பழக்கும் விலங்குகளின் இயல்பு தெரியும். உடலும் மனமும் சார்ந்த திறன்களை விவசாயம் ஒருசேரப் பயன்படுத்துகிறது. சொல்லப்போனால், எல்லா உடல் உழைப்புக்கும் மூளை உழைப்பும் அவசியம் தேவை. ஆனால், மூளை உழைப்புக்கு உடல் உழைப்புத் தேவையில்லை.

விவசாயிகள் பல்வேறு பயிர்களைக் கவனமாகப் பயிரிட்டு, அறுவடை செய்திருக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பட்டினி கிடந்திருப்போம்.

விவசாயிகளும் அவர்களுடன் வயல் வேலை செய்பவர்களும் சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறியப்படுகிறார்கள். இவர்களும், தலித்துகளும், பழங்குடியினரும்தான் நிலத்தைப் பண்படுத்தி நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுடைய உழைப்பில் விளைந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, அவர்களை மதிக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும்?