சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம், திருப்பூரில் அக்.20 ஆம் தேதி நிகழ்ந்த திராவிடர் வாழ்வியல் விழா, உணவு விழாவையொட்டி ‘திராவிடர் பண்பாட்டு மலர்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாழ்வியலின் மூலக் கூறுகளான திருமணம், மறுமணம், கல்யாண விடுதலை, குழந்தைப் பேறு, கர்ப்பத் தடை, சோதிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரியாரின் ஆழமான கட்டுரைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பது மலரின் தனிச் சிறப்பாகும். ‘வாஸ்து’ மூடநம்பிக்கை, பெயர் சூட்டல் குறித்து - கொளத்தூர் மணி கட்டுரைகளும், சங்க இலக்கியங்களிலேயே பார்ப்பனியம் ஊடுருவியதை விளக்கும் - விடுதலை இராஜேந்திரன் கட்டுரையும் நல்ல கருத்து விளக்கங்களை முன் வைக்கின்றன.

‘திராவிடர் உடை’ என்ற கட்டுரை, வேட்டி சேலை அணிவதும், இந்து மதப் பண்பாடு என்று சங்கராச்சாரி கூறுவதை எடுத்துக்காட்டி, அதையே தமிழர்களின் அடையாளமாக தமிழ்ப் பண்பாடு பேசுவோரையும் சுட்டிக்காட்டி, தமிழர் அடையாளம் இந்துப் பண்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவு மற்றும் உடையைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரப் பார்வையைத் தவிர்த்துவிட்டு, அவரவர் வசதி விருப்பத்தைச் சார்ந்தது என்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். பெரியார், உடையில் பெண், ஆண் வேறுபாடு இருப்பதே தேவையில்லை என்றார். இந்திய வைத்தியக் கல்லூரி ஒன்றை நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் தொடங்கியபோது, சமஸ்கிருத அடிப்படையிலான ஆயுர்வேதத்துக்கு மட்டுமே கல்லூரி தொடங்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி பார்ப்பனர்கள் பேசியதும், மத சாஸ்திரங்களுக்கு விரோதமில்லாத வைத்தியமுறை ஆயுர்வேதம்தான் என்றும், நாத்திகர்களுக்கு வைத்தியமே செய்யக்கூடாது என்றும், மூத்த சங்கராச்சாரி கூறியிருப்பதும் மலரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியாரின் ஒழுக்கம் குறித்த மதிப்பீடுகளை ஆழமாக திறனாய்வு செய்துள்ள சுகுணா திவாகரின் கட்டுரை நல்ல வெளிச்சத்தைத் தருகிறது. கிராம சீர்திருத்தம் என்பதே கிராமங்களை எல்லாம் அழித்து, கிராம மக்களை நகரத்துக்குக் குடியேற்றுவதுதான் என்று பெரியார் கூறும் கிராம சீர்திருத்தக் கட்டுரை, ‘மாட்டுக் கறி’ உணவு பற்றிய மீனா மயிலின் அரிய கட்டுரை, மாற்றுத் திரைப்படம் பற்றிய பாமரன் சிந்தனை என்று மலர் பக்கத்துக்கு பக்கம் கருத்துச் செறிவுடன் விளங்குகிறது. பெரியார் பண்பாட்டுப் புரட்சியின் வாழ்வியல் கூறுகளை விரிவாக அலசும் திராவிடர் பண்பாட்டு மலர் ஒவ்வொருவரும் வாங்கிப் படித்து, பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலம்.

மலர் கிடைக்குமிடம் : தலைமையகம், திராவிடர் விடுதலைக் கழகம், 95 டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், சென்னை-600041. பேசி : 044-24980745

பக். : 175; விலை : ரூ.150. கருந்திணை : திண்டுக்கல். பேசி : 9786889325

- இந்திரஜித்

Pin It