(கட்டுரையாளர் பெரியாரிய சிந்தனையாளர். பெரியாரியம் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதியவர். திருச்சி பாரதிதாசன் பல்கலையின் பெரியார் உயராய்வு மய்யத்தின் தலைவராக செயலாற்றியவர்.)

தமிழக அரசு, பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் நாட்டுடைமை ஆக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தமிழக முதல்வர் நேரடியாகக் கூறாமல், மூத்த பத்திரிகையாளரும், சமூகவியல் அறிஞருமான சின்ன குத்தூசி மூலம் இப்படி எழுத வைத்திருக்கிறார்:

“பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா என்பது பற்றிய வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆகவே, அது பற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.”

“பெரியார் உயிரோடு இருந்த காலத்தில் அவருடைய நூல்களையும் இயக்கப் பிரச்சார நூல்களையும் வெளியிடுவதற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை தொடங்கினார். 1920-களிலிருந்து அவர் ஆற்றிய பேருரைகள், எழுதிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் அந்த நிறுவனமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அது மட்டுமல்ல, அவரது நூல்களையும் அவர் கண்ட பகுத்தறிவு இயக்கத்தின் நூல்களையும் நகர்வுப் புத்தகக் காட்சி அமைத்து ஆண்டு முழுவதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பித்து வருகிறோம்” என்கிறார்கள் பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படையினர்.”

முதலாவதாக, உயர்நீதிமன்ற விசாரணையில் இருப்பது பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா, கூடாதா என்பது பற்றிய வழக்கு அல்ல. மாறாக, 1925 முதல் 1938 வரை ‘குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்த பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதைத் தடுக்கும்படியும், தனக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்கும்படியும் ஆணையிடுமாறு உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடுத்த வழக்குதான்.

இரண்டாவதாக, பெரியாரின் நூல்கள் என வெளியிடப்பட்டு வருபவை ‘மதம்’, ‘சாதி - தீண்டாமை’, கடவுள்’, ‘பெண்ணுரிமை’, ‘பகுத்தறிவு’, ‘ஏன், எதற்காக’ போன்ற தனித்தனிப் பகுதிகளாக, பல இடங்களில் பெரியார் தந்த தலைப்புகளை மாற்றிப்போட்டு - வெளியிடப்படும் கட்டுரைத் தொகுப்புகள் தாம். பெரியாரின் சிந்தனையில் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, பொருளாதார சமதர்மம் ஆகியன ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. மேலும், அது அவர் வாழ்ந்த சமூக, அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில் விளைந்ததேயன்றி சுத்த சுயம்புவாக அல்ல.

மூன்றாவதாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், தற்போது மேற்கொண்டுள்ள வெளியீட்டு முறையால் பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் முழுமையாக வெளியிட முடியாது. அந்த நிறுவனத்திடம் பெரியாரின் எழுத்துகளும், பேச்சுகளும் முழுமையாக இல்லை.

நான்காவதாக, பெரியாரின் கொள்கைகளை வீரமணி துணிந்து திரித்து வருவது தொடர்பாக எனது ‘பெரியார்: மரபும் திரிபும்’ நூல் உள்பட, தமிழகத்தில் ஏராளமான கட்டுரைகள் அசைக்க முடியாத சான்றாதாரங்களுடன் வெளிவந்துள்ளன. எப்படி இருப்பினும், பெரியாரின் எழுத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் வீரமணி சட்டரீதியான மரபுரிமையர் அல்லர் என்பதைத்தான் முதல்வர் இங்கு மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வீரமணி கொண்டாடும் மரபுரிமை என்னும் விஷயத்திற்குப் போகும்முன் வேறொன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்பினரால் நீண்டகாலமாக அரசாங்கத்திடம் முன் வைக்கப்படும் கோரிக்கை, பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்; அதுவும் கால வரிசைப்படியான தொகுப்புகளாக என்பதுதானேயன்றி பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதல்ல.

பெரியாரின் நூல்கள் என இதுவரை வெளி வந்துள்ளவற்றில் பெரியாரின் ஆக்கங்கள் பத்து சதவிகிதம் கூடத் தேறாது. காந்தி, பாரதியார், மார்க்ஸ், லெனின் போன்றோரது ஆக்கங்களைப் போலவே பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் காலவரிசைப்படி தொகுத்து வெளியிட்டால்தான் அவரது சிந்தனையிலும் செயலிலும் ஏற்பட்ட பரிணாமத்தையும் அவற்றுக்கான சமூக, அரசியல் பின்னணிகளையும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், வீரமணியோ, ‘ஆனந்த விகடன்’ ஏட்டிற்கு கொடுத்த பேட்டியில், “மொத்தமாகப் பதிப்பிக்கும்போது, கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும்” என்னும் விநோதமான கருத்தைக் கூறியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குக்கான மனுவில் (26.8.2008) “தீவிர முயற்சிகள் மேற்கொண்டு, குடிஅரசு, ஜஸ்டிஸ், ரிவோல்ட், மாடர்ன் ரேஷனலிஸ்ட் முதலிய ஏடுகளில் பிரசுரிக்கப்பட்ட பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள், பேட்டிகள், இதர விஷயங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டி வைத்துள்ளதாக” வீரமணி கூறியுள்ளார். ஆனால், 20.12.2008-ம் தேதிய ‘விடுதலை’ இதழில் தன்னிடம் இல்லாத ‘குடி அரசு’ முதலிய ஏடுகள் பற்றிய நீண்ட பட்டியலை வெளியிட்டு, அவற்றைத் தனது இயக்க நூலகத்துக்குத் தந்துதவுமாறு ‘கழகத் தோழர்கள் மற்றும் கழகப் பற்றாளர்களுக்கு’ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரிடம் இல்லாதவைகளில் ஏறத்தாழ எட்டாண்டு கால ‘குடிஅரசு’, இரண்டாண்டு கால ‘விடுதலை’ ஆகியனவும் அடங்கும். 1989, 1990-ம் ஆண்டு ‘விடுதலை’ இதழ்கள்கூட அவரிடம் இல்லை! பெரியார் தன்னிடம் விட்டுச் சென்றதை வீரமணி உரிமை கொண்டாடும் ‘அறிவுசார் சொத்து’ அவரால் இப்படித்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெரியாரைத் தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டதும் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதுமான ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ என்னும் நிறுவனத்தின் தற்போதைய செயலர் என்னும் முறையில் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களில் கூறப்பட்டுள்ள கடமைகளையும், சொத்துகளையும் நிர்வகிக்கும் உரிமை வீரமணிக்கு மட்டுமே உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த சட்ட திட்டங்கள் பிரிவு 2 (b) (iஎ) மற்றும் (எ) ஆகியன.

மேற்சொன்ன நிறுவனத்தின் குறிக்கோள்களை எய்யும் பொருட்டு செய்தித்தாள்கள், ஏடுகள் ஆகியவற்றை நடத்துவதும் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றைப் பிரசுரித்து சுற்றுக்கு விடுவதும் இது போன்ற இதர நிர்மாணப் பணிகளைச் செய்வதும் ஆகும் எனக் கூறுகின்றன. ஆதரவற்றவர்களுக்கும், கணவரை இழந்தோர்க்கும் இல்லங்களும், கல்வி நிறுவனங்களும் கட்டுவது இந்த நிறுவனத்தின் பணிகளில் ஒன்று என மற்றொரு துணைப் பிரிவு கூறுகிறது. ஆனால், கல்வியை வணிக ரீதியாக்க வேண்டும் என்று எந்தப் பிரிவும் கூறுவதில்லை.

பெரியாரின் வாழ்வும், சிந்தனையும் இந்த நிறுவனத்தையும் கடந்து அரசியல், பண்பாட்டு, சமூகத் தளங்களில் இயங்கின. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களையும், கடமைகளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான செலவுகளுக்காகப் பெரியாரும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிறரும் சில சொத்துக்களை வாங்கினர். இது குறித்து மேற்சொன்ன சட்டதிட்டப் பிரிவு 22 கூறுகிறது.

“பெரியார் ஈ.வெ.ராமசாமியால், சுயமரியாதை சங்கத்திற்காக அதன் நிதிகளில் இருந்து அச்சங்கத்தின் தலைவர் என்னும் முறையில் அவர் பெயரிலும் அவரது சொந்தப் பெயரிலும், நிறுவனத்தின் தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமியால் ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துக்களுக்கும், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் ஆயுள்கால உறுப்பினர்களே அறங்காவலர்களாக இருப்பர்.”

தற்போது இந்த நிறுவனத்தின் செயலராக இருக்கும் வீரமணி, இதனுடைய சொத்துக்களுக்கான மரபுரிமை கொண்டாடுவது சட்டப்படி சரியானதே! ஆனால், இந்த சொத்துக்களில், பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமையும் அடங்கும் என்னும் அவரது கூற்று விவாதத்திற்குரியது. இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பொன்றில் ‘சொத்து’ என்பதற்குத் தரப்பட்டுள்ள விளக்கமொன்றினைக் கூறுகிறார். இந்த விளக்கத்தின்படி, ‘சொத்து’ என்பது ‘கண்ணுக்குப் புலப்படுகிற, புலப்படாத, தொட்டுணரக்கூடிய, தொட்டுணர முடியாதது என்பது அவரது விளக்கம்.

இந்தத் தீர்ப்பு, சொத்து பற்றிய வேறு சில வரையறைகளையும் குறிப்பிடுகிறது. “ஏற்கெனவே உள்ள செல்வத்தைப் பெருக்கும் தன்மையுடையது; பரிவர்த்தனை மதிப்புடையது” என்பன இந்த வரையறைகளில் அடங்கும். அதாவது, வீரமணி உரிமை கொண்டாடும் பெரியாரின் அறிவுசார் சொத்து, அவரிடம் ஏற்கெனவே உள்ள செல்வத்தைப் பெருக்கும். பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டிருக்கும். ‘அறிவுசார் சொத்துரிமை’ கொண்டாடும் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தைத் துணைக்கு அழைப்பதில் ஆச்சரியமில்லை!

சொத்துரிமை தொடர்பான இந்திய சட்டங்களின்படி இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியப்பாடு உண்டு என்பதை வாதத்திற்காக நாம் ஒப்புக் கொண்டாலும், வேறு சில சிக்கல்களை வீரமணி எதிர்கொண்டாக வேண்டும். மேற்சொன்ன நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் பிரிவு 22, ‘பெரியாரால் ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துகள்’ பற்றிக் கூறுகின்றது. அவை பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமையையும் உள்ளடக்கும் என்னும் வீரமணியின் வாதத்தைப் பின்பற்றினால், பெரியார் தனது எழுத்துகளையும், பேச்சுகளையும் தானே விலை கொடுத்து வாங்கினார் என்பதுதான் தர்க்கரீதியான அர்த்தமாக இருக்க முடியும்! இந்த அபத்தத்தைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வீரமணி விரும்புகிறார் போலும்!

மேற்சொன்ன பிரிவு 22, “சுயமரியாதை சங்கத்திற்காக, சுயமரியாதை சங்கத்தின் நிதியிலிருந்து பெரியார் வாங்கிய சொத்துகள்” என்று தான் கூறுகிறது. பெரியார் கட்டுரைகள் எழுதி வந்த ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’, ‘ஜஸ்டிஸ்’ முதலிய ஏடுகள் ஏதும் ‘சுயமரியாதை சங்கத்தால்’ வெளியிடப்பட்டவை அல்ல; அந்த சுயமரியாதை சங்கம் பதிவு செய்யப்பட்ட சங்கமும் அல்ல.

வீரமணி தற்போது செயலாளராக இருக்கும் நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கோ, தனி நபர்களுக்கோ பெரியார் விட்டுச் சென்றவை தவிர வேறு ஏதேனும் சொத்துகள் இருக்குமேயானால், அவை சட்டப்படி அவரது துணைவியார் மணி அம்மையாருடைய ரத்த உறவுகளில் யாரேனும் ஒருவருக்குத்தான் போய்ச் சேரும்.

தவிரவும், இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் படி, ஒருவர் தனது எழுத்துகளுக்கும் (அச்சில் வந்தவை, வராதவை) பேச்சுகளுக்கும் (அச்சில் வந்தவை) வேறு யாருக்கேனும் பதிப்புரிமை வழங்குவதாக இருந்தால் அது அவராலோ, அவரது அத்தாட்சி பெற்ற பிரநிதியாலோ, எழுத்துப்பூர்வமாகத் தரப்பட்ட ஒப்புதலாக இருக்க வேண்டும். பெரியார், தனது எழுத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் வீரமணிக்குப் பதிப்புரிமை வழங்க எழுத்துப்பூர்வமான ஒப்புதலைத் தந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை. அம்பேத்கரின் பேச்சுகளும், எழுத்துகளும் இந்தியாவில் நூற்றுக்கணக்கானோரால் பதிப்பிக்கப்படுகின்றன. எனினும், காலவரிசைப்படி இல்லாவிட்டாலும் அவற்றை முழுமையாகத் தொகுத்து மலிவு விலையில் வெளியிடும் பணியை மகாராஷ்டிரா அரசாங்கம்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் அவர் இறந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகாவது முழுமையாக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள்.

(‘தினமணி’ நாளேடு 26.2.2009-ல் வெளியிட்ட கட்டுரை)

பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க பத்திரிகையாளர்கள் வலியுறுத்தல்

மார்ச் 3 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் ‘இசட்-தமிழ்’ தொலைக்காட்சியில் - நூல்கள் நாட்டுடைமை பற்றிய விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பத்திரிகையாளர்கள் சிகாமணி, ‘தீக்கதிர்’ பொறுப்பாசிரியர் க.பொ. அகத்தியலிங்கம் ஆகியோர் - “பெரியார் எழுத்து-பேச்சு நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.