நிகர்நிலை பல்கலைக் கழகத்துக்கான அங்கீகாரம் பெறுவதையே இலட்சியமாகக் கொண்டு நீண்டகாலப் போராட்டத்தை நடத்தினார் - அறக்கட்டளை ஆயுள் செயலாளர் கி. வீரமணி! அந்த ஒரு ‘லட்சியத்தை’ முன் வைத்தே தமிழகத்தில் ஆட்சிகளுக்கான ஆதரவு எதிர்ப்பு என்ற முடிவுகளைக்கூட அவர் எடுத்தார். ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்ததற்கும் அதுவே பின்னணியாக இருந்தது. ஒரு வழியாக நிகர்நிலை பல்கலைக்கழக அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால் திடீரென 44 நிகர்நிலை பல்கலையின் அங்கீகரிப்பை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. அதில் தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப மய்யமும் ஒன்று.

உச்சநீதிமன்றத்தில் முறையாக செயல்படாத நிகர்நிலை பல்கலைகளுக்கு எதிராக விப்லவ் யாதவ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் பி.என். தாண்டன் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து நிகர் நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்தது. அந்தக் குழு 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் முறையாக செயல் படவில்லை என்று கண்டறிந்து அறிக்கை தந்தது. அந்த அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித் துள்ளது.

“இந்தப் பல்கலைக் கழகங்களில் விரும்பத்தகாத நிர்வாகம் நடக்கிறது. தகுதி வாய்ந்த பேராசிரியர் குழுவுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களால் பல்கலை நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகிறது. வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை” என்று விசாரணைக்குழு குற்றச் சாட்டுகளை சுமத்தியுள்ளது.

கி.வீரமணியின் நிகர்நிலைப் பல்கலையிலும் குடும்ப உறுப்பினர்கள் உண்டு. கழகத்தை குடும்பக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது போலவே அதற்கு முன்னோட்டமாக பல்கலைக்கழகத்திலும் மகன், குடும்பத்தினரை நிர்வாகிகளாக்கினார்கள். பல்கலைக்கழக நிர்வாக அதிகாரங்கள் - மகன் அன்புராஜூக்கு அளிக்கப்பட்டு, அதை, ‘விடுதலை’ ஏடுகள் வழியாக படங்களாக வெளியிட்டு, விளம்பரப்படுத்தினார்கள். ஆயுள் செயலாளராக பெரியார் அறக்கட்டளையை தனது பிடிக்குள் வைத்துள்ளதுபோல் - அரசு நிதி உதவி பெறும் பல்கலைக் கழகத்தையும் மாற்றிட துடித்தார்கள். இப்போது அங்கீகாரம் ரத்தாகிவிட்டது.

வேந்தர், துணைவேந்தர் என்ற பட்டங்களோடு, அதற்கான ஆடைகளோடு பவனி வந்து, படங்களைப் போட்டுக் கொண்டு, பெரியாரின் ‘தனித் தமிழ்நாடு’ லட்சயத்தை அடைந்துவிட்டதாகவே பூரித்தார்கள். ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்று விழாக்களில் பேசிக் கொண்டு பல்கலைக்கழகத்தை குடும்பமாக்க முயற்சித்தார்கள். ஆனாலும் தி.க. தலைவர் கி.வீரமணி விடமாட்டார். நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி ‘நீதி’யை நிலை நாட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்! சூத்திர இழிவு ஒழிப்பை விட நிகர்நிலைப் பல்கலைதானே அவருக்கு முக்கியம்!

- விடுதலை இராசேந்திரன்