இந்துஏட்டின் மதிப்புரை சுட்டிக் காட்டுகிறது

பெரியார் திராவிடர் கழகம் ‘குடி அரசு’ தொகுப்புகளை வெளியிடுவதற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிய கி.வீரமணி, கழகத்துக்கு போட்டியாக, அவசர அவசரமாக ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டார். இதுவரை 11 தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். கி.வீரமணி வெளியிட்ட தொகுப்புகள் பற்றிய மதிப்புரையை ‘இந்து’ நாளேட்டில் (ஆக.17) ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதி எழுதியுள்ளார். அதில் கி.வீரமணியை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ‘குடிஅரசு’ தொகுப்புகளில் ஒவ்வொரு தொகுப் பிலும் அதன் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து அறிமுக உரை எழுதப்படாததை சுட்டிக் காட்டியுள்ளதோடு, தொகுப்புகளை படிப்போருக்கும், ஆய்வாளருக்கும் அது மிகவும் இன்றியமையாததாகும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். (பெரியார் திராவிடர் கழக தொகுப்பு ஒவ்வொன்றிலும் அறிமுக உரை எழுதப்பட்டுள்ளது)
 
பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள தொகுப்புகளையும், வே. ஆனைமுத்து வெளியிட்ட தொகுப்புகளையும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தொகுப்புகளோடு அவசரமாக ஒப்பிட்டுப் பார்த்ததாகக் குறிப்பிடும் ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதி, கி.வீரமணி வெளியிட்ட முதல் தொகுப்பில், வ.வே.சு. அய்யர், கிருஷ்ணசாமி சர்மா, சுப்ரமணிய சிவா மறைவு குறித்து, பெரியார் எழுதிய இரங்கல் உரை இடம் பெறாததையும், அது பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அவசர கோலத்தில் அள்ளி வீசியதைப் போல் கி.வீரமணி வெளியிட்ட தொகுப்பு, ஏதோ சடங்குக்காக வெளியிடப்பட்ட தொகுப்பாகவே இருப்பதை, ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள். கி.வீரமணி வெளியிட்ட ‘குடிஅரசு’ முதல் தொகுப்பில் இடம் பெற்ற பெரியார் கட்டுரைகள் 88. ஆனால் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெரியார் கட்டுரைகளின் எண்ணிக்கையோ 152.
 
கி.வீரமணி, ‘விடுதலை’யில் தங்களிடம் நான்கு ஆண்டுகளுக்கான ‘குடிஅரசு’ தொகுப்புகளே இல்லை என்றும், வைத்திருப்போர் அனுப்பி உதவுமாறும் அறிக்கை வெளியிட்டார். இப்போது, அந்த நான்கு ஆண்டு தொகுப்புகளும் எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படையாக அவர் அறிவிப்பாரா?
 
பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளைத் திரட்டிய 30 நூலகம் - ஆய்வகங்களின் பட்டியலை நீதிமன்றத்தில் வழக்கு மனுவில் தெரிவித்திருந்தது. “இது அப்பட்டமான பொய்; இந்த நூலக ஆய்வகங்களில் ‘குடிஅரசு’ பத்திரிகைகளே கிடையாது; எங்களிடமிருந்து திருடியதைத் தான் வெளியிட்டிருக்கிறார்கள்” என்று கி.வீரமணி, நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். இப்போது அவரே, ‘குடிஅரசு’ முதல் தொகுதியில் பெரியார் திராவிடர் கழகம் குறிப்பிட்ட 30 நூலகங்களின் பெயர்களையும் பட்டியல் போட்டு, (இரத்தினகிரி என்ற  ‘பெரியார் வியாபாரி’ பெயரில்) நன்றி கூறியுள்ளார்.
 
‘குடிஅரசு’ ஏட்டை பெரியாருடன் இணைந்து தொடங்கியவர் வா.மு. தங்கபெருமாள் பிள்ளை. அவரது மறைவு குறித்து ‘குடிஅரசு’ எழுதிய தலையங்கத்தை கி.வீரமணி தொகுத்த குடிஅரசில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்கபெருமாள் பிள்ளை வழக்கறிஞராக தொழில் செய்து மாதம் ரூ.300 வருமானம் வந்து கொண்டிருந்தபோது, பெரியாருடன் வந்து விட்டார் என்ற செய்தியை ‘குடிஅரசு’ தலையங்கத்தில் இடம் பெற்றுள்ளதாக இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது:
 
“இரண்டொரு மாதங்களிலேயே மாதம் ரூ.300-க்கு மேல் வரும்படி வந்து கொண்டிருந்த நிலையில் தந்தை பெரியாருடன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.” (7-3-1926)
 
1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தலையங்கத்தில் எப்படி ‘தந்தை பெரியார்’ வந்தார்? அப்போது தந்தை என்றோ, பெரியார் என்றோ அழைக்கப்படாத கால கட்டம்; ஆனால் வீரமணி தொகுத்த ‘குடிஅரசு’ இப்படி, ஒரு தலையங்கம் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்ததாக எழுதியிருக்கிறது. அதற்கு அடுத்த வரியிலேயே “(வா.மு. தங்க பெருமாள் பிள்ளை) ஈரோடு கள்ளுக்கடை மறியலில் குற்றம் சாட்டப்பட்டு, நாய்க்கர்  உள்பட 40 தொண்டர்களோடு மாஜிஸ்திரேட்டால் தண்டிக் கப்பட்டு சிறைவாசம் இருந்தார்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
 
மிகவும் கூர்மையாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் தயாரிக்கப் பட வேண்டிய ஆய்வுத் தொகுப்புகளை பொறுப்பற்ற முறையில் தயாரித்திருப்பதற்கு இப்படி ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும்.
 
பெரியார் சிந்தனைகளை தொகுப்பதில் “திருவாளர் 15 லட்சம் குழுவினரின்” கவலையும், அக்கறையும் எந்த ‘லட்சணத்தில்’ இருந்தது என்பதற்கு ஆய்வாளர்களின் மதிப்புரைகளே இப்போது அம்பலமாக்கத் தொடங்கிவிட்டன!

Pin It